பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

கோபால் ராஜாராம்


புனைகளம்

இந்தப் புதிய சிற்றிதழ் ‘ புனைகளம் ‘ நேர்த்தியான அச்சமைப்பும், சிறப்பான உள்ளடக்கமும் கொண்டுள்ளது. இதன் ஆக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தப் பட்டிருப்பது இதை மற்ற சிறு பத்திரிகைகளிலிருந்து மிகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது. பொதுவாக சிறு பத்திரிகைகள் குறிப்பான ஒரு நோக்கத்தை வரையறை செய்து கொள்ளாமலேயே, கதம்பமான அமைப்புடன் வெளிவருவது ஒரு வழமுறையாகிவிட்டது. ‘புனைகளம் ‘ முழுக்க முழுக்க இந்தப் போக்கிற்கு எதிரானது என்பது முதல் இதழிலேயே தெரிகிறது. லக்ஷ்மி மணிவண்ணனின் சிறுகதை, பா வெங்கடேசனின் நெடுங்கதை , குட்டி ரேவதியின் கவிதைகள் தமிழ்ப் படைப்புலகைத் தொட்டுச் செல்கின்றன. ஹ்ஊலியோ கோர்தஸாரின் பேட்டியும், சிறுகதைகளும் உள்ளன. மிலான் குந்தேராவின் சிறுகதையும் மொழிபெயர்ப்பில் இடம் பெறுகின்றன. மனநோயின் மொழி பற்றி ஒரு கட்டுரை உள்ளது.

நவீன கலைகள் என்ற பகுதியில் சிற்பி தனபால் பற்றியும் ஓவியர் சி டக்ளஸ் பற்றியும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர்களின் படைப்புகள் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படியே ஃப்ரேம் செய்து கொள்ளக் கூடிய அளவு தெளிவான அச்சாக்கம் ஓவியம் மற்றும் சிற்பங்களின் உயிர்ப்பைச் சிதைக்காமல் வெளிக் கொணர்ந்திருப்பது மிகுந்த பாராட்டிற்கு உகந்த செயல். நாட்டார் கலைகள் பற்றிய பதிவில் , தொ பரமசிவன் ‘பழையனூர் நீலி ‘ கதை பற்றி எழுதியுள்ளார். வில்லுப் பாட்டுக் கலைஞர் முத்துசாமிப் பாவலருடன் ஓர் உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வெங்கட் சாமிநாதன் 1988-இல் எழுதிய ‘ சோழர் காலச் சிற்பங்களும் ஹென்ரி மூரும் ‘ என்ற மிக முக்கியமான கட்டுரையும் பிரசுரமாகியுள்ளது. இது எழுப்பும் கேள்விகள் இப்போதும் உயிர்ப்புக் கொண்டவை. ஆகம விதிகளுக்குட்பட்டு வார்க்கப் பட்ட சிற்பங்கள் எப்போது, எப்படி கலைப் படைப்புகளாய் உருமாற்றம் பெறுகின்றன என்ற கேள்வி அது. முத்துசாமிப் பாவலருடன் உரையாடல் படிக்கும் போது இதே கேள்வி வேறுவடிவத்தில் என்னுள் எழுந்தது. இந்த உரையாடலின் நோக்கம் என்ன ? வில்லுப்பாட்டை கலைவடிவம் என்று நிறுவுவதா ? வில்லுப்பாட்டுக் கலைஞனின் ஒரு தனித்த வாழ்க்கைப் பார்வைக்கு – அந்தப் பார்வையுடன் நவீனப் பார்வைகள் முரண்படும் எனினும் – சாளரம் அமைத்துத் தருவதா ? இதற்குப் பதில்கள் இல்லையெனும் பட்சத்தில் வெறும் curiosity value-கொண்டு நின்று விடுகிறதா ?

ஒரு முழுமையான ஏடாகக் கொண்டு வரும் முயற்சியில் சி மோகன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். ஓவிய சிற்பக் கலைஞர்கள் அறிமுகம் போன்றே மற்ற படைப்பாளிகள் பற்றியும் அறிமுக தரப்பட்டால் நல்லது. முதன் முதலாக ஒரு சிறு பத்திரிகையை வாசிப்பவர்களுக்குக் கூட இந்த அறிமுகங்கள் பயன் தரும்.

முகவரி : MIG 259 , இரண்டாவது தெரு, முகப்பேர் ஏரித் திட்டம், சென்னை 600058. மின்னஞ்சல் : punaikalam@hotmail.com .

************

கதை சொல்லி

கி ராஜ நாராயணனின் ஆசிரியத்துவத்தில் வருகிற ‘கதை சொல்லி ‘யின் பத்தாவது இதழ் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் கி ராவின் நாட்குறிப்புகள் , பாசாங்கற்ற விதத்தில் கி ராவின் பார்வைகளைப் பதிவு செய்கின்றன. ஆசிரியர் குழுவில் பேரா க பஞ்சாங்கம், தங்கர் பச்சான், ரமேஷ்-பிரேம் இடம் பெற்றுள்ளனர்.

தன் தந்தையாரான பீமப் படையாச்சி பற்றி பீம தனஞ்செயன் எழுதியுள்ளார். எழுதத் தெரிந்தவர்கள் தம்முடைய அப்பா-அம்மா-சூழல் பற்றி நேர்மையாய்ப் பதிவு செய்தாலே அவை இலக்கியமாகிவிடும். ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் ஒரு ராமாயணம்- மகாபாரதம் இருக்கிறது. அதிலும் இந்தியா போன்ற நாடுகளின் தனிமனித வாழ்க்கையே குடும்பத்தை அச்சாணி கொண்டு தான் சுழல்பவை.

‘சாதியச் சமூகமும் தமிழ்த் திறனாய்வும்: தொ மு சி ரகுநாதனை முன்வைத்து ‘ என்று க பஞ்சாங்கம் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கிறார். மிக முக்கியமான பல பிரசினைகளை அவர் எழுப்புகிறார். ‘இன்றும் உயர்சாதியினர் போடுகின்ற வட்டத்திற்குள் நின்று கொண்டுதான் , அவர்கள் காட்டுகிற விதிமுறைகளோடு ஒத்தோ அல்லது எதிர்த்தோ மற்ற சாதியினர் விளையாட வேண்டியிருக்கிறது. ‘ என்று சொல்கிறார். இதில் உள்ள தவறு இன்று பாவிக்கப்படும் இலக்கியப்பார்வைகள் பலவும் வெளிநாட்டுப் பார்வைகள் ரகுநாதனின் சோஷலிசப் பார்வை உட்பட. எனவே சாதிப் பார்வை என்று அவற்றைச் சொல்ல முடியாது. இதே போன்ற ஒரு கேள்வி வெளிநாட்டில் வேறொரு விதத்தில் எழுப்பப்படுகிறது. வெள்ளை இலக்கிய கர்த்தாக்கள் ஸ்தாபித்த இலக்கியக் கோட்பாடுகள் தாம் விதிகள் ஆகிப் போயின என்று சொல்லி அவற்றுக்கு எதிர்ப்பு எழுந்ததுண்டு.

கிராமிய எழுத்தும் , வாய்மொழிக் கதைகளும் வெளிவருகின்றன.

வருடாவருடம் ஒரு சிறுபத்திரிகையை அங்கீகரித்து பரிசு வழங்குகிறார் கி ரா. இந்த வருடம் தஞ்சையிலிருந்து வெளிவரும் ‘சுந்தர சுகன் ‘ இதழுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

முகவரி : பேரா. க பஞ்சாங்கம் , 25/20-வது குறுக்குத் தெரு, அவ்வை நகர், புதுச்சேரி – 605 008 தொலை பேசி : (0413)253236.

************

அட்சரம்

அட்சரம் இரண்டு இதழ்கள் வெளி வந்துள்ளன. தமிழ் புனைவியலின் வரைபடம் என்ற துணைப் பெயர் கொண்ட இந்தச் சிற்றிதழின் மிக முக்கியமான பகுதி ‘அக்காலம் ‘. ஒரு நூற்றாண்டுக்கு முந்திய தமிழ் வாழ்க்கை பற்றிய சித்திரங்கள் அந்தக் கால ஆவணங்களிலிருந்து தரப்பட்டுள்ளது . மொழி அடையும் மாறுதல்கள் ஒரு சமூகத்தின் மாறுதல்களுடன் பின்னிப் பிணைந்தவை. ‘தென்னிந்தியா ரயில்வே என்னும் கர்நாடகப் புகைவண்டிச் சிந்து ‘ : ‘மகாபலிபுரம் பற்றிய விவெக சிந்தாமணி குறிப்புகள், மேல்பறக்கும் மோட்டார் கார் கும்மி, ஐந்தாம் ஜார்ஜ்-க்கு ட்ராம்வண்டியின் அலங்காரக் கும்மி என்று பல பதிவுகள் தொகுக்கப் பட்டுள்ளன. இது போன்றவை தொடர்ந்து பதிவு செய்யப் படவேண்டும்.

மொழிபெயர்ப்புகள் அதிகமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் ஜே பி சாணக்யா, எஸ் ராமகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் ஆகியோரின் சிறுகதைகள் உள்ளன. மிலான் குந்தேரா பேட்டியும், அவர் கட்டுரையும் உள்ளன. கவனிக்கப் படவேண்டிய பத்திரிகை .

ஆசிரியர்கள்: எஸ் ராமகிருஷ்ணன், வெளி ரெங்கராஜன்

முகவரி : 1415 இரண்டாவது தெரு , முதல் செக்டார், கே கே நகர், சென்னை 600 078. மின்னஞ்சல் : tamilatchara@yahoo.com

இந்தச் சிற்றேடுகள் நம் எல்லோருடைய ஆதரவைக் கோரி நிற்கின்றன.

*************

Series Navigation