பிறந்த மண்ணுக்கு – 4

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

அ முகம்மது இஸ்மாயில்


6

தேவிகா தமிழ்வாணனிடம் ஒரு வாரமாக பேசவேயில்லை முகம் கொடுக்க வில்லை. தமிழ்வாணனுக்கு ஒரு காரணமும் புரியவில்லை. பேசவும் வாய்ப்பு கிடைக்க வில்லை. எதிரியின் கையில் ஈட்டியை கொடுத்து குத்தச் சொன்னாலும் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் பிரியமான ஒரு பெண் பார்ப்பதில்லை என்றால் பேசுவதில்லை என்றால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

நோக்கினாளா நோக்க வில்லையா என்றே தெரியாது.. அப்படி ஒரு ஓரப்பார்வை.. சிரித்தாளா சிரிக்க வில்லையா என்றே தெரியாது.. அப்படி ஒரு புன்னகை.. எல்லாம் எங்கே ? தேடிப் பார்த்தான் தமிழ்வாணன்.

பேச வாய்ப்பு கிடைக்காததால் ஒரு கடிதம் எழுதி கொடுத்து விடலாமா என்று கூட யோசித்தான். கடைசியில் அது தான் சரி என்றும் தீர்மானித்தான். உட்கார்ந்து சிந்தித்து ஒரு கடிதம் எழுதி மடித்து வெளியே வந்தான். அன்று மல்லிகாவே அடுப்படியில் வேலையாக இருந்தார்.

தமிழ்வாணன், “ஏன் பெரியம்மா.. தேவிகா வரலையா ?” என்றான்.

மல்லிகா திரும்பாமலே, “அவளுக்கு லேசா தலை வலியாம் அதான்.. நீ வேண்ணா போய் தான் பாரேன்” என்றார்.

சொன்னது தான் போதும் என்று சிட்டாக பறந்து விட்டான் பக்கத்து வீட்டுக்கு.

தமிழ்வாணன், “சார்..” என்று குரல் கொடுத்தான்.

தேவிகா எதிர்பார்க்க வில்லை, “உள்ளே வாங்க.. அப்பா வெளியே போயிருக்காங்க..” என்று முகத்தை பார்க்காமல் சொன்னாள்.

தமிழ்வாணன் உள்ளே வந்தான். சிறிது நேரம் மெளணம்.

தமிழ்வாணன் மெளணத்தை கலைத்தான், “உட்காருங்கன்னு சொல்ல மாட்டாயா தேவிகா..” என்றான்.

தேவிகாவுக்கு வார்த்தை வரவில்லை, “ உட்காருங்க..” என்றாள்.

தமிழ்வாணன், “எங்கே ? மேலேயா கீழேயா ?” என்றான்.

தேவிகா, “நியாயமா நீங்க உட்காருகின்ற அளவுக்கு எங்க வீட்டுக்கு எந்த தகுதியும் இல்ல” என்றாள்.

தமிழ்வாணன், “ஏன் இப்படி பேசுறே ? நான் உன்னை பார்க்க தான் வந்தேன் தெரியுமா ?.. நீ எங்கிட்டே சரியா பேசறதில்லை.. என்னை வெறுக்குற மாதிரி என்ன நடந்தது ?.. பாரு உனக்காக லட்டர்லாம் எழுதி வந்திருக்கேன்” என்று தன் சட்டை பைக்குள் கையை விட்டு கடிதத்தை எடுத்தான்.

தேவிகா அதிர்ந்தாள், “லட்டரா ?” என்று

தமிழ்வாணன்”ஆமாம்” என்று கூறி கடிதத்தை அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு “படித்து பாரு” என்று கூறி விட்டு திரும்பி பார்க்காமல் புறப்பட்டான்.

தேவிகாவுக்கு கடிதத்தை தொடவே நடுக்கமாக இருந்தது ஆனால் உடனே படிக்கணும் போலவும் இருந்தது. கடிதத்தை கையில் எடுத்தாள். படித்தாள்.

தேவிகா..

இது என்ன புதிர் போடுகிறாய் ?

புதிதாக இருக்கிறது..

பார்ப்பதில்லை.. பேசுவதில்லை..

நாம் இதுவரை வெளிப்படையாக பேசிக் கொள்ளாத நம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் உள்ளன. இனிமேலும் பேசாமல் விட்டால் நான் நஷ்டமடைந்து விடுவேன். இன்று மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் என் கிளினிக்கிற்கு நீ எப்படியாவது வந்து விடவும். நீ வந்தாலே நான் வெற்றி பெற்று விட்டதாக அர்த்தமாகி விடும்.

மாலை 4 மணிக்காக இப்போதிருந்தே காத்திருக்கப் போகிறேன்..

எல்லாம் உனக்காக..

தமிழ்வாணன்

தமிழ்வாணனின் பயிற்சி மருத்துவமனையில் காலையிலிருந்தே கூட்டம் இருந்து வந்தது. மதியம் சாப்பிட செல்ல வில்லை. நடேசன் சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தார்.

“நீங்க ஏன் பெரியப்பா எனக்காக அழையறீங்க” என்று கேட்டதற்கு

“உங்க பெரியம்மாட வேலைப்பா, புள்ள பசி தாங்க மாட்டான்னு பறந்து துடிக்கிறாளே” என்று கூறி சிரித்து விட்டு சற்று நேரம் அங்கு அமர்ந்து தன் மகன் சேவை செய்வதை பார்த்து கண்கள் கலங்கி விட்டு “நான் வர்ரேன்” என்று கூறி விட்டு வெளியேறினார்.

மாலை 3:45 மணிக்கு கூட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. 4 மணி இருக்கும் வெளியூரிலிருந்து ஒரு கூட்டம் வந்தது. எல்லோரையும் முகம் சுளிக்காமல் மருத்துவருக்கு கட்டாயம் இருக்க வேண்டிய பொறுமையுடன் காக்க வைக்காமல் சேவை செய்தான்.

அதன் பிறகு யாரும் வரவில்லை.

மணி 4:15

வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தான்.

மணி 4:30

வாசலில் எட்டிப் பார்த்து விட்டு உள்ளே சென்றான்.

மணி 4:45

மனம், நிச்சயம் வந்து விடுவாள் என்றது

மணி 5:15

மனம், வராமல் எங்கே போக போகப் போகிறாள் என்றது.

மணி 5:45

மனசு கடந்து அடித்துக் கொண்டது. வருவாளா ? மாட்டாளா ?

மணி 6:00

அவள் வரவில்லை.

தமிழ்வாணன் சோர்ந்து விட்டான். அந்த நேரத்தில் தான் கதவு தட்டப்படும் சத்தம்.

தமிழ்வாணன் ஆர்வமாக, “யாரது ?” என்றான்.

“நான் தான் தேவிகா” என்றது குரல்.

சொல்லவா வேண்டும். சந்தேஷத்துடன் ஓடி கதவை திறந்தான். வாசலில் தேவிகாவுடன் அவளின் தந்தை கந்தசாமியும் நின்றிருந்தார். தமிழ்வாணன் ஒரு கனம் ஆடிப் போய்விட்டான்.

“உள்ளே வாங்க” என்று அழைத்து செல்லும் போது அவன் மனதில் ஒரு குழப்பம் “ஒரு வேலை சாரிடம் சொல்லியிருப்பாளோ ?”. உள்ளே வந்ததும் அமரச் சொன்னான்.

தேவிகா அவன் குழப்பத்தை தீர்த்தாள், “அப்பா வெளியூர் போயிட்டு வந்தாங்க ஒரே தலைசுத்துது மயக்கம்னு அப்படியே கீழே சாய்ஞ்சுட்டாங்க, அதான்..” என்று இழுத்தாள்.

“அதான் வர முடியலைங்கறாளா ? இல்ல அதான் இங்கே வந்தேங்கறாளா ?” மறுபடியும் தமிழ்வாணனுக்கு குழப்பம்.

கந்தசாமியை கவனித்தான். மருந்து மாத்திரை இவனே எடுத்து ஒரு பையில் போட்டான். வெயிலில் ஒரு 2, 3 நாளைக்கு அலைய வேண்டாம் என கேட்டுக் கொண்டான்.

தேவிகாவிடம் திரும்பி, “பார்த்துக்க..” என்றான்.

தேவிகா, “நான் பார்த்தேன்” என்றாள்.

கந்தசாமிக்கு கொஞ்சம் மயக்கமாக இருந்தது. சிறிது நேரம் அங்கேயே ஓய்வு எடுக்குமாறு ஒரு கட்டிலை காண்பித்து சற்று சாயும் படி கேட்டுக் கொண்டான். மின் விசிறியை இயக்கி விட்டு காற்று வருகிறதா என்று பார்த்து விட்டு திரும்பினான். தேவிகா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தேவிகாவிடம், “அப்பாக்கு ஒண்ணுமில்லை.. பயப்பட வேண்டியதில்லை” என்றான்.

தேவிகா, “நான் பயப்படலை”என்று கூறி விட்டு சிறிது இடைவெளி விட்டு, “ஏன் தெரியுமா ?” என்றாள்.

தமிழ்வாணன் புரியாமல், “ஏன் ?” என்றான்.

தேவிகா,”அதான் நீங்க இருக்கீங்களே” என்றாள்.

தமிழ்வாணன் சிரித்தான்.

தேவிகா தொடர்ந்தாள், “ஏன் என்னைய வரச் சொன்னீங்க ?” என்றாள்.

தமிழ்வாணன், “ஆமாம்.. வரச் சொன்னேன்..” என்று மென்று முழுங்கினான்.

தேவிகா, “அதான்.. ஏன்னு கேட்டேன்” என்று கூறியது சீக்கிரம் காதலை வெளிப்படுத்துங்கள் என்று சொல்வது போல் இருந்தது.

தமிழ்வாணன் எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்த விநாடி

தேவிகா கேட்டாள், “நீங்க சின்ன வயசுல இங்கேந்து போன உடனே எங்களையெல்லாம் எப்பவாவது நினைச்சீங்களா ?” என்று.

தமிழ்வாணன், “நினைக்காமலா ?” என்றான்.

தேவிகா, “அப்ப ஒரு தடவை கூட இந்த பக்கம் திரும்பி பார்க்கலையே” என்றாள்.

தமிழ்வாணன், “அது தப்பு தான். ஆனா.. நான் தெரிஞ்சே செஞ்ச தப்பு அது” என்றான்.

தேவிகா, “சரி.. நீங்க இப்ப என்னவோ சொல்லணும்னீங்களே.. சொல்லுங்களேன்” என்றாள்.

தமிழ்வாணன், “ சொல்றேன்.. இப்ப நீ என்னய.. கேள்வி கேட்டே இல்லயா இதே மாதிரி என் கூடவே இருந்து எப்பவும் என்னை கேள்வி கேக்கணும்.. அதுக்கு என்ன செய்யணும் ?” என்று கேட்டான்.

தேவிகா வெட்கத்துடன், “ம்.. தெரியும்.. அதுக்கு..” என்று ஏதோ சொல்ல வந்து வார்த்தைகள் வராமல் தலையை குனிந்தாள்.

தமிழ்வாணன் ஒரு வழியாக சொல்லி விட்டான், “நீ எனக்கு வாழ்க்கையில துணையா எப்போதுமே என் கூட வருவீயா ?” என்று.

தேவகி தலை நிமிர்ந்து பார்த்தாள்.

தமிழ்வாணன் தொடர்ந்து பேசினான், “நான் இங்கேயே தங்கி இந்த சுற்று வட்டாரத்துல இருக்கிற எல்லோருக்கும் சேவை செய்யற மாதிரி ஒரு ஹாஸ்பிடல் கட்டலாம்னு இருக்கேன். நான் பெரியம்மா, பெரியப்பா இன்னும் சொல்லப் போனா எங்க அப்பா..” என்று அப்பா பேரை சொல்லும் போது கண் கலங்கியது, கலங்கிய கண்களை துடைக்க விரும்பாமல் தொடர்ந்தான்,

“.. எல்லோர்ட ஆசையும் அவங்க பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணும்னு தான். என் அண்ணன் இங்கே வர முடியாது. தொழில் இருக்கு. எத்தனையோ பேர் பொழைக்கிறாங்க.. ஆனால் என்னால முடியும். எனக்கும் அது தான் பிரியம். நான் இங்கேயே கல்யாணம் பண்ணனும். எனக்கு மனைவின்னா என்னோட சின்ன வயசிலிருந்து என் கூடவே இருந்து என் மேல உயிரையே வைச்சிருக்கிற உன்னை விட வேற யாரு எனக்கு பொருத்தமா இருக்க முடியும் ?.. நான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டு நான், நீ, பெரியம்மா, பெரியப்பா எல்லோரும் ஒரே வீட்டில் ஒரே..” என்று சொல்லி முடிக்குமுன் வாசல் பக்கமிருந்து ஒரு பெண் குரல், “ஒரே குடும்பமா சந்தோஷமா இருக்கலாம்” என்றது. தமிழ்வாணன், தேவகி இருவரும் அதிர்ந்து திரும்பி பார்த்தனர். வாசலில் கையை கட்டிக் கொண்டு மல்லிகா நின்று கொண்டிருந்தார் மனதில் சந்தோஷத்தையும் வாயில் புன்னகையையும் சுமந்துக் கொண்டு. மல்லிகா நடந்து தமிழ்வாணன் அருகே வந்தார். தமிழ்வாணன் திரும்பிக் கொண்டான் வெட்கத்துடன்.

மல்லிகா தேவகி பக்கமாக நடந்துக் கொண்டே, “பாருங்களேன் எனக்கு தெரியாம இந்த ரெண்டு பேரும் செஞ்சிருக்கிற காரியத்தை.. இவ்வளவு ஆசையை மனசில வைச்சிக்கிட்டு..” என்று தலையை குனிந்திருந்த தேவிகாவின் நாசியை பிடித்து நிமிர்த்தினார். தேவிகா சட்டென்று மல்லிகாவின் காலை தொட்டாள். மல்லிகா தேவிகாவை தூக்கினார்.

மல்லிகா தன் கழுத்தில் மாட்டியிருந்த ஒரு தங்கச்சங்கிலியை அணிவித்து, “எங்க வீட்டு மகராசியா பல்லாண்டு காலம் வாழணும்” என்று வாழ்த்தினார்.

தமிழ்வாணன் சந்தோஷத்துடன் மல்லிகா பக்கமாக வந்து, “பெரியம்மா.. நான்..” என்றான்.

மல்லிகா, “நீ..” என்றார்.

தமிழ்வாணன், “இல்ல.. நீங்க..” என்றான்.

மல்லிகா, “சரி.. நான்..” என்றார்.

தமிழ்வாணன் சொன்னான், “வார்த்தை வாயில இருக்கு வெளியே வர மாட்டேங்குது” என்று.

மல்லிகாவுக்கு தாமோதரன் ஞாபகம் வந்து விட்டது, “உங்க அப்பாவும் இதே மாதிரி தான் பேசுவான்..” என்று கலங்கினார்.

தமிழ்வாணன், “இல்ல பெரியப்பாட்ட சொல்லி அண்ணண்ட்ட பேச சொல்லணும்” என்றான்.

மல்லிகா, “அதுக்கு நான் பொறுப்பு” என்று இருவரையும் கட்டிக் கொண்டார்.

மல்லிகா, கந்தசாமி, தமிழ்வாணன், தேவிகா யாவரும் ஒன்றாக வீட்டுக்கு திரும்பினர். வாசலில் ஒரு பெரிய வெளிநாட்டு கார் ஒன்று நின்றது.

தமிழ்வாணன், “அண்ணன் வந்திருக்காங்க..” என்று உள்ளே வந்தான்.

உள்ளே வந்தால் ரவிக்குமார், சாருலதா, சாருலதா தங்கை நிரோஷா மற்றும் சாருலதாவின் சொந்தங்களும் குழுமியிருந்தனர்.

அவர்கள் உள்ளே வந்ததும் எல்லோரும் வரவேற்றார்கள்.

நடேசன், “தமிழ்வாணனை நம்ம சாருலதா தங்கச்சி நிரோஷாவுக்கு மாப்பிள்ளை கேட்டு சம்மந்தி வீட்டுக்காரங்க வந்திருக்காங்க..” என்றார்.

மல்லிகா, தமிழ்வாணன், தேவிகா செய்வதறியாது, சொல்வதறியாது தடுமாறினர்.

(தொடரும்)

—-

Series Navigation

அ முகம்மது இஸ்மாயில்

அ முகம்மது இஸ்மாயில்