பிறகு….

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘அருண் நில்லுங்கோ. நான் சொல்லுறதைக் கேளுங்கோ. உங்கட மனசிலை ஏதேதோ கற்பனை செய்யுறீங்க என்று நினைக்கிறன். வேண்டாம். அதை கலைத்துவிடுங்கோ. குழம்ப வேண்டாம். என்மீதும் குற்றமிருக்கு. மேற்கத்திய சூழல்கள்ல இருக்கின்ற ஆணும் பெண்ணும் இயல்பாய் நண்பர்களாக இருக்க முடியுமெண்டு நினைத்தேன். நம்பினேன். தவறாகிவிட்டது. எனக்கு எண்ட ரெண்டு பிள்ளைகளும் முக்கியம். அவர்களோட வாழ்க்கைக்கான விருப்பங்கள், தேவைகள் முக்கியம். என்னட அன்பு முழுசா அவர்களுக்குப் போய்ச் சேரணும். அப்படித்தான் எனக்கான விதி சொல்லுது. அதனைக் கூறு போட இயலாது. விருப்பமுமில்லை. பிறகு….. ‘

கடந்த சில வாரங்களாக இதைத்தான் அவள், திரும்பத் திரும்பப் பழுதடைந்த ஒலிநாடாவைப் போலச் சொல்லிக் கொண்டிருருந்தாள். ‘பிறகு ‘ என்று அவள் தொடரும்போதெல்லாம் நான் அலட்சியம் காட்டியிருக்கிறேன். அந்த வாக்கியத்தை முடிக்க நான் அனுமதிச்சதில்லை. ஒரு வேளை முடித்திருக்கலாம். எனக்குத்தான் அதைக் கேட்பதற்கு விருப்பமில்லையோ என்னவோ ? ‘பிறகு ‘ என்கின்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு அடுத்து வந்த சொல்லினால் எனக்கு என்ன நேர்ந்திருக்கும் ? சந்தோஷமா ? துக்கமா ? இரண்டுமேவா ?. அந்த ராட்சஷி சொல்ல வந்ததை முழுசாக கேட்டுத் தொலைச்சிருக்கணும். தவறிட்டேன்.

‘எனக்கு எண்ட ரெண்டு பிள்ளைகளும் முக்கியம். அவர்களோட வாழ்க்கைக்கான விருப்பங்கள் தேவைகள் முக்கியம். எண்ட அன்பு முழுசா அவர்களுக்குப் போய்ச் சேரணும். அப்படித்தான் எனக்கான விதி சொல்லுது. அதனைக் கூறு போட இயலாது. விருப்பமுமில்லை. பிறகு……. ‘

இந்த முடிவில்லா கடைசிவாக்கியம், என்னை விடாமல் துரத்தியது. மேய்ப்பனில்லாத ஆடு நான். ஓடியிருக்கக்கூடாது. அவளைப் பார்த்தது. இரக்கப்பட்டது. எதிர்பார்த்து மனசுக்குச் சுகம் தேடிக்கொண்டது. அவள் நெருக்கத்தினால் கிடைத்த பெண்வாடையை நாசியில் கவளம் கவளமாய் வாங்கிக் கொண்டது என எல்லாமே தப்புத்தான். தவிர்த்திருக்கணும். செய்யலை. இளிச்சவாயன். ஏமாந்துட்டேன். இப்படி முழுசா மீட்டர் உயரங்களில் இருக்கும் இரண்டு பிள்ைளைகளை பெத்து வீட்டுல விட்டுட்டு,.. என்னோட எப்படி அவளால நெருங்க முடிஞ்சுது. ஊர் சுற்ற முடிஞ்சுது. போட்ட கூச்சலுக்கு, இப்போது அவளால எப்படி அமைதியா பதில் சொல்ல முடியுது. ‘பிறகு ‘ ன்னு, இன்னும் என்னத்தைச் சொல்ல வறா.. வேண்டாம். நான் கேட்கப்போவதில்லை இனியும் வாலைக் குழைத்துக் கொண்டு அவள் பின்னே நான் ஓடப்போவதில்லை.

அவளை முதன் முதலாப் பார்த்ததினம் ஒரு வகையில் முக்கியமான நாள். ஜூலை 14ந்தேதி. பஸ்த்தி சிறையிலிருந்த கைதிகள் புரட்சியாளர்களால் விடுவிக்கப்பட்ட நாள். பிரான்ஸ் நாட்டின் சுதந்திர நாள். ராணுவ அணிவகுப்பைப் பார்த்துவிட்டு, மணி மதியம் ஒன்றிருக்கும் பாரீஸின் கவர்ச்சிகரமான வயிற்றுப் பகுதியான ‘ஷாான்ஸெலிஸே ‘ (Champs -Elysee) – ஒர் ஆடம்பர ரெஸ்டரெண்டின் பேவ்மெண்ட் தெரஸ். அவென்யூவை பார்த்தபடி நுரைததும்பிய பீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் முடிச்சு முடிச்சாக நாற்காலிகளில், குளிர்க் கண்ணாடிகளை தலையில் உட்காரவைத்து, குறைந்த ஆடைகளுடன், சுளீர் வெயிலுக்கு இதமாக, குளிர்பானம், பீர், ஐஸ்கிரீம் எனவிருந்த வெள்ளையர்களை ஒதுக்கிவிட்டு, என் கவனத்தை சற்றுத் தள்ளியிருந்த ஆர்க் தெ திரியோம்ப்பை (Arc-de-Triomph) முத்தமிட்டுச் செல்லும் கார்களில் பதித்த நேரம், அவள் வந்து கொண்டிருந்தாள்.

வெள்ளையர் கும்பலிலிருந்து வேறுபட்ட நிறம். சிக்கென எனது கவனத்தில் தொற்றிக்கொண்டாள். அவள் வலது கரத்தில் கற்றையாக வெள்ளைத் தாள்கள். எதிர்த் திசையில் இருந்த சேனல் பர்ஃபூயூமின் ஷோ ரூமை பார்த்துக் கொண்டே என்னை அவள் கடந்தபோதுதான் அது நிகழ்ந்தது. அவள் கையிலிருந்து விடுபட்ட தாளொன்று நேரே என்னை நோக்கி பறந்துவந்து காலில் விழுந்தது. ஓடி வந்தாள். இருவரும் இயல்பாய்க் குனிந்தோம். இயல்பாய் தாளைப் பற்றியிருந்தோம். அவள் ஏதேனும் சொன்னாளா ? ஞாபகமில்லை. நான் ஊமையாக இருந்தேன். அவள் கரத்திலிருந்து மெல்லிய உஷ்ணம் என் கரத்திற்குப் பரவிற்று. அந்த உஷ்ணம் மெல்ல மெல்ல கை, தோள், உடல் என ஓட்டமிட்டு, இதயத்தைத் தொட்டபோது, நான் வேர்த்திருந்தேன்.

இன்றைக்கும் அந்த முதல் நாள் உஷ்ணம், மாற்றுக் குறையாமல் என்னிடமிருப்பது ஆச்சரியம்.

ஏன் அந்தப் பெண்ணிடம் இப்படி பைத்தியமாக இருக்கவேண்டும். ?

இத்தாலிய கப்பூச்சினோ காபியின் நிறம், பருவ புள்ளிகள் ஒற்றிய முகம், முகமறைத்து ஒதுங்கும் ஷாம்பு விளம்பரத்துக்கான கூந்தற்கற்றை, இடைக்கிடையே தேவையின்றித் துடித்து அமைதியாகும் கருவிழிகளென, அவளை நீங்கள் கண்டிருந்தால்கூட இப்படித்தான் என்னைப்போல கேள்வி கேட்டுக்கொண்டிருப்பீர்கள்.

அன்றைக்கு அவள் என்னிடம் கேட்ட கேள்வி. இன்றைக்கும் மாத்திரை குறையாமல், மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது ‘நீங்க தமிழா ? தமிழ் கதைப்பீங்களா ? ‘

என்னோட ஊமைத் தலையாட்டலுக்குக் கூடக் காத்திராமல், ‘யாழ்ப்பாணமா ? ‘ என்ற கேள்வி தொடர்ந்து வந்து விழுந்தது.

‘பாண்டிச்சேரி ‘ என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து நேரிடையாகப் பார்த்தேன்.

‘நான் யாழ்ப்பாணம். பிரான்சுக்கு வந்து இரண்டு மாதம். எவ்ரியில இருக்கிறன். இன்றைக்கு லீவுயெண்டு இந்தப்பக்கம் வந்தேன். ‘லா ஷப்பெல் ‘ போயிட்டு வீட்டுக்குப் போகவேணும். மெட்ரோ எடுக்கவேணும் ? ‘

‘வாங்க சேர்ந்தே போகலாம். நானும் கார் துய் நோர் போயிட்டு கிரிஞி போகணும். ‘

என் பதிலால் அவளுக்குச் சந்தோஷம். கண்களை அகல விரித்துப் படபடத்துப் பேசினாள். ‘பாண்டிச்சேரி ட்கள் தமிழ்கதைக்க விரும்பமாட்டினம் எண்டு கேள்விப்பட்டன் நான் ‘.. எனத் தெடர்ந்த உரையாடலில் ஐரோப்பிய வெயில், தமிழ்நாட்டு சினிமா என நான் இருக்க, அவள் ஈழம், எஸ்.பொ, சேரன், என்று சொல்லிக் கொண்டுபோனாள். நான்தான் அவளது பெயரைக் கேட்டேன். ‘பிரிசில்லா ‘ என்றாள். எனது பெயரைக் கேட்பாள் என எதிர்பார்த்து, கேட்காததால், அருண் என்று சொல்லி வைத்தேன். அதனைச் சாதாரணமாக வாங்கிக்கொண்டதில் எனக்குச் சின்ன வலி.

அந்த முதல்நாள் சந்திப்பிற்குப் பிறகு, அவளை மறுபடியும் சந்திக்க நேர்ந்தது. ‘லா ஷப்பெல் ‘ தமிழ்க்கடையொன்றில்.

‘தேனிசை செல்லப்பாவின் கசெட் கிடைக்குமா ? ‘ எனக் கடைக்காரரிடம் வைக்கப்பட்ட கேள்விக் குரலில் இருந்த பரிச்சயம் என்னை ஈர்க்க, திரும்பினேன். அவளேதான்.

நான், ‘போன் ழூர்! ‘ என அவள் பதிலுக்கு வணக்கம் என்றாள். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். ‘நான் வெளியில உங்களுக்காகக் காத்திருக்கிறேன் ‘ என்றேன். அவள் யோசித்து ‘ஓம் ‘ என்றாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவளிடம் ‘வாங்க பக்கத்துல ஒரு பிராஸ்ஸரி இருக்கு, காப்பிக் குடித்துக்கொண்டே பேசுவோம் ‘ என்று சொல்ல, . ‘அய்யய்யோ பியர், விஸ்கியெண்டு மதுவாடையாயிருக்கும். எங்களோட தேனீர்க் கடைகள் இருக்குதே!.. ‘ எனச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள்.

நான் பதிலேதும் சொல்லாமல் அருகிலிருந்த ஒரு இலங்கைத் தமிழரின் தேனீர்க் கடைக்குள் முதன் முறையாக நுழைந்தேன். என்ன கேட்பது ?, எப்படிக் கேட்பது ? என்பது தெரியாமல் நான் விழிப்பதை புரிந்தவளாக:

‘எனக்குப் பசிக்குது. என்னெண்டாலும் சாப்பிடவேணும். கொத்துரொட்டி பிடிக்குமா ? ‘ என்றாள்.

‘எனக்கு டா போதும். ‘

‘ சரி ஒரு கொத்துரொட்டி, இரண்டு உழுந்து வடை, இரண்டி தே தண்ணி ‘ என்று கட்டளையிட்டுவிட்டு, ‘இரண்டு கதிரைகள் அந்தப் பக்கம் சும்மா இருக்குது, உட்காரலாம் ‘, என்றாள்.

அவள் கதிரைகள் எனக் குறிப்பிட்டது நாற்காலிகளை என்பதைப் புரிந்துகொண்டு அவளைத் தொடர்ந்து சென்று உட்கார்ந்தேன்.

நான்தான் உரையாடலைத் தொடர்ந்தேன். ‘நான் ‘, ‘எனது ‘, ‘என்னைச் சார்ந்தவர்கள் ‘ என்று சொல்லிக் கொண்டுபோக, அவள் கொத்து ரொட்டியை ருசித்துக் கொண்டே தமிழர்தம் பெருமைகளைப் பதிலாகச் சொன்னாள்.

‘பிரிசில்லா..! ‘

‘ம்.. ‘

உங்களைப் பற்றி ஏதேனும் சொல்லலாமே ?

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘எதைப்பற்றி ? எந்த நேரமும் வாழ்க்கையில் தொங்கிக்கொண்டு பயணிப்பதையோ ? பிரச்சினைகளை சந்தித்த சந்திக்கும் சந்தித்துக் கொண்டிருக்கும் சராசரி இலங்கை பெட்டை யெண்டா ? எங்கட ஐயாவின் திடார் மறைவுக்குப் பிறகு, அம்மா சுகயீனமாக, சகோதரங்களை ஆமிக்காரன் சுட்டுப்போட, வன்னிக் காட்டில் அலைந்ததைச் சொல்லவோ ? இல்லை மோசம்போன போன மூத்த தமக்கைக்காக பிரான்சுக்கு களவாய் வந்ததையோ ?.. பிறகு. ‘

‘பிரிஸில்லா வேண்டாம். உன்னைப் புரட்டிப்போட்ட பழைய விபரீதங்கள் இப்போதைக்கு வேண்டாம். இந்த நேரத்தைச் சந்தோஷபடுத்த நம்மிருவருக்கும் பொதுவான வேறு விஷயங்கள் இல்லையா ? ‘

‘நானும் அதைத்தான் சொல்கிறேன். உங்களிடத்திலிருக்கும் சந்தோஷமோ அல்லது என்னிடத்திலிருக்கும் துக்கமோ வேண்டாம். இருவருக்கும் பொதுவான செய்திகளைப் பரிமாறிக்கொள்வோம் சரிதானே ? ‘ எனக் கேட்டுவிட்டு அவள் நேரிட்டபோது என்னிடம் பதிலில்லை.

அந்தச் சந்திப்பிற்கு பிறகு எனக்கு அவளிடமும், அவளுக்கு என்னிடமும் ஏற்பட்டிருந்த ஈர்ப்பினை எந்த ரகத்தில் சேர்ப்பது ?. வெர்ஸாய் அரண்மனைப் பூங்காவிலோ, இத்தாலியன் ரெஸ்டரண்டிலோ மணிக்கனக்கில் நாங்கள் பேசியதெல்லாம் சங்கச் சித்திரங்கள், தமிழன்பன் கவிதைகள் எனச் சொன்னால் நீங்கள் நம்பித்தான் கவேண்டும்.

என் ஊத்தை மனதின் கற்பனைக்கு அவள் பிடிபடாமலேயே இருந்தாள். ஒரு நாள் கேட்டேவிட்டேன்.

‘பிரிசில்லா… வெல்.. எனக்கு தெரிஞ்சாகணும். எத்தனை நாட்களுக்கு இப்படி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ? எனக்கு நீ வேண்டும். எம்மனதைப் பதுக்கிக் கொண்டு பாசாங்கு உரையாடல்களை நடத்த என்னால முடியாது. ‘

‘என்ன தெரிஞ்சாகணும் ? ‘

‘நீ. !. உன் மனது ?.. ‘

‘அருண் வேண்டாம். இந்த சினிமா வசனத்தை மூட்டகை¢ கட்டி வையுங்க ‘

‘என்னிடமிருந்து தப்பிக்க வேண்டாம். உனக்கு அப்படியொரு எண்ணமில்லையா ? ‘

‘இல்லை. சத்தியமா இல்லை. ரெண்டு பிள்ளைகள முழுசா வச்சிகிட்டு எப்படி நான்.. ? ச்சே.. நீங்களும்

சராசரி மனுஷண்ணு காட்டிட்டாங்களே! ‘

‘என்ன உளர்ற ? ‘

‘உளறல. உண்மையைத்தான் சொல்றேன் ‘

‘உண்மையோ பொய்யோ. எனக்கு உன் கடந்த காலம் வேண்டாம். அக்கறையில்லை ‘

உங்களுக்கு வேண்டாம். எனக்கு வேண்டும். எனக்கதில் அக்கறையிருக்கின்றது. பிறகு..

அப்போதாவது அந்த ‘பிறகு ‘ஐ முடிக்கச் சொல்லிக் கேட்டிருக்க வேண்டும். தவறிட்டேன். எப்போதும் எதிலும் காட்டும் அவசரம் அப்போதும் வந்தது. மனம், ‘அவள் உனக்கானவள் ‘ என்றுச் சொல்லப்போக என் கவனம் அவள் கதையில் அல்ல, அவளிடமிருந்தது.. தேவையற்ற கற்பனைகளை கொடியேற்றி கைத்தட்டியது.

இரண்டுமூன்று நாட்கள் சென்றிருக்கும். அன்று சனிக்கிழமை. அவளைச் சந்திக்கவேண்டுமென்று நினைத்து, பலமுறை தொலைபேசியில் எண்களை ஒற்ற அடுத்த முனையில் எந்த பதிலும் இல்லை. எரிச்சலில் கட்டிலில் விழுந்தேன். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேனோ ? எழுந்து முகத்தை அலம்பிக் கொண்டு, டிக்காசன் விட்டு கறுப்பு காப்பியை ஒரு சாசரில் வடித்துக் கொண்டு மேசையின் முன்னால் உட்கார்ந்தேன். அன்றைக்கு வந்த கடிதங்களுக்கிடையே, சற்று வித்திாயாசமான உறையில் ஒரு கடிதம். பிரித்துப் பார்த்தேன். அவள்தான் எழுதியிருந்தாள்.

‘அருண் அவர்களுக்கு,

இந்தக் கடிதத்தை என்னிடமிருந்து எதிர்பார்த்திருக்கமாட்டாயள். ஏமாற்றங்கள் உங்களுக்கு எப்படியோ ? எங்களைப் போன்றவர்களுக்கு அதுவே வாழ்க்கை. எந்தச் செய்தியையும் முழுவதுமாக வாங்கிக்கொள்ள நீங்கள் பழகிக்கவேணும்; ஒவ்வொருமுறையும் சொல்லலாமெண்டு நினைத்து நினைத்து சொல்லாமல் விட்டதை நீங்கள் எப்படி கற்பனைசெய்து கொண்டியளோ ? என்னால் யூகிக்க முடியலை. இனியாகிலும் நிஜத்திற்கு வரவேணும். நான் பிரான்சுக்குக் களவாய் வந்ததைச் சொல்லியிருந்தேன். ஆனால் அப்படி வந்தது, மோசம்போயிருந்த எண்ட தமக்கைகாக, அவளட இரண்டு பிள்ளைகளுக்காக, அப்படி வந்தற்கான ஏற்பாடுகளை செய்த எண்ட தமக்கையின் புருஷனை மணமுடிக்கப்பதற்காகவென்பதை, என்ன காரணத்தினாலோ உங்களிடம் நான் சொல்ல முயன்றபோதெல்லாம், ஏதோவொன்று தடுத்துவிட்டது.

அனேக சமயங்களில், பெருமையாகப் பேசப்படும் நமது கலாச்சாரம் பெண்களின் விதிகளை மட்டும் இப்படித்தான் தீர்மானிக்கின்றது. ஆண்களின் சுயதேவைகளுக்காக எழுதப்பட்ட விதி. அவ்விதிகளைப் பொறுத்தே எங்களுக்கான விலைகள்..நாங்கள் உயிரல்ல உடைமை.. ஆண்களுக்கான பிரத்தியேக உடமை. அப் பெருமையைக் காப்பாற்றவே ( ?) கனடாவுக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குள்ளும் கனவுகள். பெண்களுக்கான கனவுகள். நிஜத்தோடு ஒட்டாத முன்னிரவு கனவுகள். அக்கனவுகளை கலைக்காமலே

ஒரு கேள்வி. ஒரு வேளை நான் சொல்லவந்ததை முழுவதுமாகக் சொல்லியிருந்தால், தமைக்கை பிள்ளைகளோட என்னை மணமுடிக்க உங்களுக்குத் தைரியம் வந்திருக்குமா ? சும்மாவேணும் ‘ஓம் ‘ என்று சொல்லுங்கள். பாலையை நிலமாகக் கொண்டவர்கள் கானல் நீரைத்தானே குடித்துப் பழகவேணும்……………….

கதவைத் திறந்துகொண்டு, கைப் பிடியிலிருந்து வலதுகரத்தை எடுக்காமலேயே என் மனைவி.

‘நான் சொன்னதை மறந்துட்டு இங்கே என்ன பழைய குப்பையை கிளறிகிட்டு இருக்கீங்க.. ? ‘

‘உங்க மாதர் சங்கத்துல எழுத்தாளர் பிரிஸில்லாவோட ஏதோ சந்திப்புன்னு சொன்ன…போயிட்டு வாயேன். ‘

‘பெண் எழுத்தாளர்னா ஆண்கள் வரக்கூடாதுண்ணு இல்லை. நீங்களூம் வரலாம். தவிர வித்தியாசமான தலைப்புல பேசவும் வச்சிருக்கோம் ‘

‘என்னன்னு ? ‘

‘ ‘பிறகு ‘…. ஆமாம் அதுதான் தலைப்பு. ‘

‘புரியலை… ‘

‘முகத்தைத்தானே அலம்பப் போறீங்க அப்படியே மனதையும் அலம்பிக்கிங்கப் புரியும்.

******

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா