பிசாசின் தன் வரலாறு-2

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

மாலதி


—-
ஒரு வேகவதியில்
சின்ன குறுக்குவெட்டு
கண் முன் நிகழ்ந்தது.
‘தண்டையார்பேட்டை
வந்துடுத்து டோய் ‘ என்ற
குறும்புச்சிறார்களின்
அறிவித்தலோடு
பத்தாண்டு கழித்துக்
கோர்ட்டுக்கு அஞ்சி
வாழவந்தான் அவள் புருஷன்.
ஐந்தாவது முறையாக
முழுச்சீர் போனது
சிந்தாதிரிப்பேட்டைதனிக்
குடித்தனத்துக்கு.
வயது வந்த தம்பி முன்னிலையும்
அறியாச்சிறுமி என் முன்னிலையும்
மறந்து தள்ளிப்போன
‘தூரம் ‘ வந்துவிட்டதற்குக்
கதறினாளே அவள்!
‘ஐயோ! விடிஞ்சாச்சுன்னு
நம்பினேனே! ‘

வந்து போவதை நிறுத்தி புருஷன்
விட்டபின்
தம்பி தீராமல் அழைத்துக் கொண்டான்.
இன்றைய வேகவதி
வேகவேகமாய் கோயில் சுற்றுபவள்.
அடுத்த ஜென்மத்துக்கான ஆயத்தம்.

துடை முலை வரைகலை
ரசிப்பார்கள் துடிப்பார்கள்.
ஏன் ? குறி விறைத்த ஆணும்
விழி செருகிய நிலையும்
கலையில்லையா ?
ஆண் குறி மட்டும் கலையில்
குழந்தைக்குறியாய்
குழைந்து கிடக்கும்.
எங்கோ ஓரிரு தேவதை
கற்பிதங்களில்.
கலை மூலம் தெரிந்துவிட்டால்
என்ன செய்வது ?
ஆண் பிம்பங்களின்
மாய்மாலங்கள்!மோசடிகள்!
துகிலிரிக்க இருக்கிறாளே
ஒருத்தி[கள்]
குறி விலையையும் குடும்பத்துக்குக்
கொடுக்கவென்று!
அதிகம் பேசுகிறேனா ?
நான் பிசாசு நினைவிலிருக்கட்டும்.
ரத்த தாகம் வரும்போதெல்லாம்
கெட்ட வார்த்தைகளும்
விழுகின்றன.
பிசாசாய் இருப்பது
எவ்வளவு சுலபமோ
அவ்வளவு கடினமும்.
இப்போது மிகவும் மிகவும்
பரவி அலைகிறேன்.
துளியிடம் இருந்தால் முடங்க
முடியாது .கூரைக்குள்
தங்க வாய்க்காது.குழந்தைகள்
கைக்கு வராது.
பார்க்கிறபோதே கரைந்துருகும்.

எனக்குக் கதற முடிவதில்லை.
தொண்டை உடைய மறுக்கிறது.
கத்தினால் யாருக்குக் கேட்கப் போகிறது ?
கண்ணியமுள்ள பிசாசு வேறு நான்.
கன்னாபின்னாவென்று செயல் படமுடியாது.
எங்களை ஆண்கள் வெறுக்கிறார்கள்.
ஆண் மாறிகள் அதற்கும் மேலே.
நுட்பமாய் துரத்துபவர்கள்.
எங்கள் குலமே ஆண்மாறிகளால்
தான் அவதிப்படுகிறது.
அவர்கள் ஆண்களால் நியமனம்
பெற்றவர்கள்.
வல்லடி வழக்குகளில் தரகு
செய்யவும் பொய் சாட்சி சொல்லவும்
அர்த்த உலகத்தில் அமிழ்ந்து
உள் மென்மைகளைப் பேரம் பேசவும்
அதிர்வனவற்றை நிறுத்திவிடவும்
ஊஞ்சலாடுபவற்றைத்தூக்கில் போடவும்
இன்னும் எத்தனையோ காரியங்கள்
செய்யவும்.மறந்துவிட்டேனே!
அடக்கவும் முடிக்கவும் ஆளில்லா
நேரத்தில் ஆண்மாறிகளே ஆண்கள்.

ஒரு விருத்தம் சொல்வேன்.
அபகுண விரகனை
வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆங்கார ஈனனை
அபதியை மறவனை ஆதாளி வாயனை
சதைப்போர்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிமதிவழி வரு வீணாதி வீணனை
அழுகலை அவிசலை தோமூடி ஊணனை
அன்பிலாத
கபடனை விகடனை மனஸ் விகாரனை
வெகுளியைப் பன்முக மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதரிச வாழ்வினைத்
துண்டுபோடும்
கொலையனை அறிவுரை பேணாத ஆடவக்
கசனியை அசனியை மாபாதனாகிய
கணவனையடைந்தவள்
கான்வீடு செறிந்தவள்
துன்பமாறும் வகைபல தொலைத்ததும்
வாளீற்றில் மடிந்ததும்
அதிசய மநோரதி ஆவேசமுற்றதும்
அவனியில் தெய்வங்கள் ஆபாரம் தோற்றதும்
திரிபுர தேவிகளின் பதிபக்தி தூற்றியதும்
செய்வதாமே!

கருத்துக்கள் காலாவதியான
காட்சிகள் புனைபட்டு புனைபட்டு
மீண்டும் மீண்டும்
உக்கிரம் முளைத்துப்
பலமுனை நகர்த்தித்
தீமழையில் நனைவிக்கிறது.
பொருள் கொடுத்து
விலைபோன அந்தஸ்துக்கு
வரதட்சிணை என்ற
பெயராயிற்று.
அது வர வர வேறு வேறு
வடிவெடுத்தது.
‘பெண்ணு குணத்தாலே
பிறந்தகத்துச் சீராலே
கண்ணுக்கழகாலே
காரியக்கோப்பாலே! ‘
என்று கட்டம்கட்டி
விளம்பரத்தில் வேண்டியவர்கள்
ஒருபுறத் தகுதிக்கு மட்டுமே
இலக்கணம் தந்தார்கள்.
ஆணுக்கு அது எதுவும்
வேண்டாம் சும்மா இருந்தாலே
போதும். அத்தோடு
பணம் காய்ச்சி யந்திரமாய்
இருந்தும் வைத்தானானால்
மவுசே மவுசு அவனின்.
பெண் ரகசியங்கள்
உறவுக்கும் தெருவுக்கும்
பகைக்கும் கூட பகிரங்கம்.
ஆண் விஷயம்
அன்னைக்கும் கூட அதி
ரகசியம்.அப்பால்பட்டது
அது அறிதலுக்கும்
புரிதலுக்கும்.என்னமோ!
அவன் சுபாவம் அப்படி என்பதாக.
இயலாமை ஒப்புக்கொண்டு
மறுவாழ்வு தர
மனைவிக்கு எவனாவது
ஆடவனுண்டா ?
ஆனால் அவன்
கேட்காமலே
செய்யவேண்டும் அவள்.
அது ஏற்கப்பட்ட சட்டம்.
மறு புறத்துக்கு மட்டும்
அறிவுரை வரும்.
‘விடு, அது ஒண்ணு தான்
வாழ்க்கையா என்ன ? ‘.
அவள் பித்தானால் டிவோர்ஸ் பதில்.
அவன் பித்தானால் விடை தியாகம்.

அலுவலக மடவார்கள் நின்னருள்
சூடுவார்
முன்பு நானது அஞ்சுவேன்
அயலகத்தவராரும் வம்பு
பேசின் வலியள்
உன்னுடைய சுண்டாயம் நானறிவள்
இனி அது கொண்டு செய்வதென்!
உன்னுடைய தாலியும்
பிள்ளையும் தந்தேன்
கொண்டு போகு நம்பீ!

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்.
மண்ணாண்ட மைந்தர்
பெண் மாதர்க்கிழைத்த
புரி பாபத்திற்காண்டு
பலவாகும்.
துச்சாதனன் தொடங்கி
வைத்த தீதுமின்றும்
மிச்சங்களிறைத்து
ஓடும் ரயில்களில்
நுண்மாண் நுழை புலன்
நொறுக்கி நிமிர்த்தியும்,
நீதி வாசல்களில்
குதறுப் பிரி உதிர்த்தும்,
கண்டும் காணாத
பண்ணாயிரங்களில்
வசைபாடித்தீராத
புண்ணாக்குத் தலவர்களின்
கீர்த்திக்கும் பல்லாண்டு.

சூரியன் கறுப்பாயிருந்து
அவன் ஒரு கோடிப்
பிறப்பெடுத்து இருட்டால்
எரித்தாற்போல ஒரு
அந்தகாரம்
புரிதல் வானில்.
ஏனிந்த கொடுங்கறுப்பு ?
அதற்கேன் சூரியன்கள் ?
அம்மா!நிலத்தாயே!
இன்னமும் வேண்டுமா ?
புதல்வர்கள் உனக்கு ?
மாத்திரை போட்டுக்
கொள்ளேன்
[தொடரும்]

—-
malti74@yahoo.com

பிசாசின் தன் வரலாறு-1

  • பிசாசின் தன் வரலாறு 1
    Series Navigation