பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

நா.முத்து நிலவன்


பிரபல தமிழ்க்கவிஞரும், இலக்கியவிமர்சகரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவருமான ஆங்கிலப்பேராசிரியர், தமிழ்க்கவிஞர் டாக்டர் பாலா தமது 63ஆம் வயதில் சென்னையில் 22-09-2009அன்று காலமானார்.

தமிழகஅரசின் சிறந்த கவிதைநூலுக்கான விருது, சிற்பியின் கவிதைவிருது, உட்பட பலப்பல விருதுகளைப் பெற்றவர் கவிஞர் பாலா. ‘சர்ரியலிசம்’(1977), ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை’(1981), ‘பாரதியும்-கீட்சும’;(1982), ‘கவிதைப்பக்கம்’(1986), ‘தமிழ்இலக்கியவிமர்சகர்கள’;(1992), ‘முன்னுரையும் பின்னுரையும்(1995), ‘திண்ணையும் வரவேற்பறைகளும்’(1999), ‘இன்னொரு மனிதர்கள்’(2002), ‘நினைவில் தப்பிய முகம்’(2007), முதலான கவிதை மற்றும் விமர்சன நூல்களுடன், மீரா, மேத்தா, சிற்பி ஆகியோரின் தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறார்.

பாலா தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக (2002-2006ஆம் ஆண்டுகளில்) பணியாற்றிய போதுதான் சாகித்திய அகாதெமி சாமானியர்களுக்கும் அறிமுகமானது. அதுவரை ஐந்துநட்சத்திர விடுதிகளிலேயே நடந்துவந்த அகாதெமிக் கருத்தரங்கம், முதன் முதலாக கவிஞர்மீரா-வின் அஞ்சலிக் கூட்டமாக, சிவகங்கையில் உள்ள அவரது வீட்டு வாசலில் –தெருவில் மேடையமைத்து, மக்கள் மத்தியில்– நடந்ததை கவிஞர் அப்துல் ரகுமான் நெகிழ்ந்துபோய்க் குறிப்பிட்டது அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலகாலத்துக்கும் மறக்காது.

சிற்பி-(2002-‘ஒரு கிராமத்து நதி’-கவிதைத்தொகுப்பு), வைரமுத்து(2003-‘கள்ளிக்காட்டு இதிகாசம’;- நாவல்),ஈரோடுதமிழன்பன்(2004- ‘வணக்கம்வள்ளுவ’-கவிதை), மேத்தா (2006-‘ஆகாயத்துக்கு அடுத்தவீடு’- கவிதை), ஆகிய 4 கவிஞர்கள,; தமது படைப்புகளுக்காக சாகித்திய அகாதெமி விருதினை அடுத்தடுத்துப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில், 1955முதல் சுமார் 50 ஆண்டுக்காலமாக ராஜம்கிருஷ்ணன் ஒருவர்தான் அகாதெமி விருதுபெற்ற ஒரே பெண் எழுத்தாளராக இருந்தார் 2005இல் அந்த இரண்டாவது சிறப்பினை எழுத்தாளர் திலகவதி பெற்றார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. சிவகங்கை அரசர் உயர் நிலைப்பள்ளியில் -1957-62இல்- படித்தபோதே, செலவுக்கும் வழியில்லாமல் – விளையாடவும் உடல்திறனில்லாமல், சிவகங்கை நூலகத்தில் ஒரு நாளைக்கு ஒரு நூல்வீதமாக படிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். படிக்கும் பழக்கத்தோடு, பேரா.ந.தர்மராஜன் நடத்திய இலக்கியக் கூட்டங்களைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது, பள்ளிப்பருவத்திலேயே எனக்குக்கிடைத்த பெரியவாய்ப்பு என்று கருதுகிறேன். இன்றைய எனது ‘தங்குதடையற்ற தமிழ்’ அப்போதே கிடைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்” என்று ‘புத்ககம் பேசுது’ இதழ் நேர்காணலில்; குறிப்பிட்டார் கவிஞர்.

1964இல் தந்தையார் இறப்புக்குப் பின் அண்ணன் திரு.சண்முகவேல் அவர்களின் ஆதரவில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் வேதியியல் இளங்கலைப் பட்டம் பெற்றார் பாலச்சந்திரன் சேலம் – ராசிபுரம் அரசுக்கல்லூரி வேதியியல்துறையில் சிரியராகச் சேர்ந்தபோது,. பக்கத்து மாவட்டமான கோவையிலிருந்து, ‘வானம்பாடி’களின் “நீ” தொகுப்பு அறிமுகமானது. கலாப்ரியா -தீப்பெட்டி அளவில்- “வெள்ளம்” என்றொரு தொகுப்பையும், பச்சையப்பன் கல்லூரி “உதயம்” என்றொரு தொகுப்பையும், வெளியிட்டிருந்த நேரமது. புதுக்கவிதைகளை, மிக நேர்த்தியாக வாசிப்பதிலும், அருமையாக ரசிக்க வைப்பதிலும் ‘வானம்பாடிகள்’ புதிய சிகரங்களைத் தொட்டனர். தத்துவார்த்தமாகவும், கூடார்த்தமாகவுமான கவிதைகளை அவர்கள் வாசிக்கும் பாணியில் அரங்கமே கலகலத்துப் போகும்! அப்படித்தான், மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப்பூக்கள்’, சிற்பியின் ‘ஒளிப்பறவை’, கங்கை கொண்டானின் ‘கூட்டுப் புழுக்கள்’, சக்திக்கனலின் ‘கனகாம்பரமும் டிசம்பர்ப் பூக்களும்’, சிதம்பர நாதனின் ‘அரண்மனைத் திராட்சைகள்’,புவியரசுவின் ‘இதுதான்’ – அரங்கத்தை ஜெயித்தபின் அச்சிலும் வந்து புகழ்பெற்றன.

இவ்வாறாக, வானம்பாடிகளால் புதுக்கவிதை ஜனநாயகமயமானதுடன், இடதுசாரிச் சிந்தனையுடன் கூடிய புதுக்கவிதை இயக்கத்தையும் தமிழில் வானம்பாடிகளே தொடங்கிவைத்தனர் என்பதுதான் முக்கியமான செய்தி. வானம்பாடிகளின் கவிதைகள் நேரடியாகப் பேசின. உண்மையை அரிதாரமில்லாமல் போட்டுடைத்தன. இந்த வானம்பாடி இயக்க மையமாக, புவியரசு, அக்னிபுத்ரன், சிற்பி,மேத்தா,கங்கை கொண்டான் கியோர் இருந்தனர் என்பதும், பண்டித இலக்கணப்புலவர்கள் இவர்களைக் கடுமையாக எதிர்த்தனர் என்பதும், ‘ஒரு அப்பளத்தின் மரணம்’ என்று எப்படிக் கவிதை எழுதலாம் (ஓர் அப்பளம் என்றல்லவா எழுத வேண்டும்?) என்று ஒரு பிரபலமான தமிழறிஞரின் மகன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார் என்பதும் சுவையான செய்திகள்.

சுமார் பத்தாண்டுகளில் -வானம்பாடிகள் பிரிந்துவிட்டபிறகு- நவீன தமிழ்க்கவிதைப் படைப்பிற்காகவும், சரியான இலக்கிய விமர்சனத்திற்காகவுமே ‘சுவடு’ இதழை ரம்பித்jhu; ftpQu; ghyh. அது க.நா.சு. மற்றும் வெங்கட்சாமிநாதன் போலும் இலக்கிய விமர்சகர்களே இலக்கியச் சிற்றிதழ்களின் பெரும் பக்கங்களை அடைத்துக்கொண்ட காலம். அதுபோன்ற விமர்சகர்களைப் பற்றியே “தமிழ் இலக்கிய விமர்சகர்கள்” என்றொரு நூலை சுவடு இதழ்க் கட்டுரைகளிலிருந்து தொகுக்கும் அளவிற்கு சுவடு பேசப்பட்டது. வெங்கட் சாமிநாதனைப் பற்றி- வண்ண நிலவன், க.கைலாசபதி பற்றி- தி.க.சி., சி.சு.செல்லப்பா பற்றி என, நல்ல நேர்மையான தகவல்களை முன்வைத்து, கூர்மையான விமர்சனத்தை சுவடு வழங்கிவந்தது. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற சிறுகதையான ‘பள்ளம்’ சுவடில் வந்ததுதான்.

அப்துல் ரகுமான், சிற்பி, முதலானோருடன் இணைந்து சிவகங்கையிலிருந்து கவிஞர் மீரா நடத்திய ‘அன்னம்’ இதழில் பங்கேற்றார் பாலா. பின்னர் சாகித்திய அகாதெமியில் கௌரவப் பணி. “தமிழில்ஒருவிருது அறிவிக்கப்பட்டால் எழுகின்ற அளவிற்கான மாற்றுக்குரல்கள் வேறெங்கும் இல்லைஎன்பதும் உண்மைதான்.தனக்குப்பிடிக்காத ஒருவருக்கு விருதுகிடைத்து விட்டால், உடனே சொந்தப்பெயரிலும், புனைபெயரிலும், சிஷ்யகோடிகளைவிட்டும் தாக்கக் கூடியவர்கள் தமிழில் அதிகம்தான். ‘..ஏன் விருது தரப்படவில்லை?’ என்று என்னிடம் கேட்டவர்களிடம் நான் கேட்டேன்: “அருமையாக எழுதிவரும் கந்தர்வனுக்கு, நீலபத்ம நாபனுக்கு, மீராவுக்கு, திலகவதிக்கு, மேத்தாவுக்கு, வாசந்திக்கு, சிவகாமிக்கு, பூமணிக்கு, கலாப்ரியாவுக்கு ,கல்யாண்ஜிக்கு ஏன் தரவில்லை என்று நீங்கள் ஏன் கேட்க மாட்டேனென்கிறீர்கள்?” என்று –2002இல்- கேட்டவர் கவிஞர்! தான் எழுதிய ‘கவிதைப் பக்கம்’ வாரஇதழ்த் தொடரிலும், ‘புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை’ விமர்சன நூலிலும் இவர் அறிமுகப்படுத்திய நல்ல புதுக்கவிதைகள் ஏராளம்! அதைவிடவும் இவர் முன்னுரை கொடுத்தும் முன்னிலைப் படுத்தி மேடையேற்றியும் அறிமுகப் படுத்திய கவிஞர்கள் ஏராளம், ஏராளம்! சமீபத்தில் 25ஆம் பதிப்புக் கண்டு சாதனை படைத்திருக்கும் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’ தொகுப்புக்கும் முன்னுரை தந்தவர் கவிஞர் பாலா தான் !

மனைவி திருமதி மஞ்சுளா அவர்களோடும் மகன் கார்த்தி–மருமகள் கோமதி, மகள் ப்ரியா- மருமகன் முருகப்பெருமாள் மற்றும் பேரக்குழந்தைகளோடும் நிறைவாழ்வு வாழ்ந்த கவிஞரின் பாசத்தையும் மனிதநேயப் பண்பையும் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்களும் தமிழ்க்கவிதை ஆர்வலர்களும் என்றும் மறக்கஇயலாது. கவிஞரின் உறவினர்கள் புதுக்கோட்டையில் இல்லாதபோதும்,

அமெரிக்காவிலிருந்து வந்த அவரது மகன், சென்னையிலிருந்துவந்த அவரது மகள் ஆகியோருடன் அவர்பெற்ற மாணவரும் பெறாதமகனுமான தங்கம் மூர்த்தி உள்ளிட்;ட அவரது மாணவர்களும் கவிதை நண்பர்களுமே முன்னின்று கவிஞர் பாலாவின் இறுதி நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இறக்கும் தருவாயிலும் கூட, ராஜம் கிருஷ்ணனின் நாவல் ஒன்றைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முடித்தும், பொன்னீலனின் புதிய தரிசனங்கள் நாவலை, தன் மாணவர்கள் மொழிபெயர்க்க வழிகாட்டிக்கொண்டும் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது!

புதுக்கவிதைக்கு எதிரான பழமைவாதிகளோடு மட்டுமல்லாமல் ‘நவீன கவிதை’ எனும் பெயரில் புரியாமல் – புரியவிடாமல் – எழுதிக் கொண்டிருப்பவர்களோடும் கடந்த நாற்பது ஆண்டுக்காலமாகப் போராடிக்கொண்டும் முற்போக்குப் படைப்பாளிகளோடு நல்ல நட்புடனும் தனது பணியைத் தொடரந்து வந்த கவிஞர் பாலாவின் புகழ், தமிழிலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்! அவரது பணியை இளைய தலைமுலை தொடரவேண்டும், தொடரும்! அதுவே அவருக்கான சரியான அஞ்சலியாகும்!.

————————————————————————————

கவிஞர் பாலாவின் படைப்புகள்

கட்டுரை நூல்கள்:

1977 சர்ரியலிசம்

1981புதுக்கவிதைஒருபுதுப்பார்வை

(2004இல் 4ம் பதிப்பு)

1986 கவிதைப் பக்கம்

1992 தமிழ்இலக்கிய விமர்சகர்கள்

1995 முன்னுரையும் பின்னுரையும்

1982 பாரதியும் கீட்ஸ¤ம்

நடத்திய இதழ்:

‘சுவடு’ இலக்கிய இதழ் –சிரியர்

பங்கேற்ற இதழ்கள் :

சிற்பியின் ‘வானம்பாடி’

மீராவின் ‘அன்னம்’

கவிதைத் தொகுப்புகள்:

1999 திண்ணைகளும் வரவேற்பறைகளும்

(தமிழக அரசு பரிசு பெற்றது)

2002 இன்னொரு மனிதர்கள்

(சிற்பி இலக்கிய விருது பெற்றது)

2008 நினைவில் தப்பிய முகம்

Monograph:

2000 Meera: His Life and Art

(Bi-Lingual work)

தமிழ்க் கவிதை விமர்சன உரையாடல்:

2001புதுக்கவிதை விவாதம் (கவிஞர்மீராவுடன் ஒர்உரையாடல் ‘னந்த விகடன்’ இணைப்ப)

மொழிபெயர்ப்புகள்:

1982 வித்யாபதியின் காதல்கவிதைகள்

1997 Noon In Summer

( சிற்பி கவிதை -தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு)

2001 Selected Poems of Mu.Metha

(மு.மேத்தா கவிதை –

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு)

some meeraa’s poems &

‘Noon in summer’ (Editor)

website: www.bala-ink.com

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்