பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

சூசன் கோல்டன்பர்க் (கார்டியன் மார்ச் 18, 1996)


தன்னுடைய அப்பாவைப் போலவும், தன்னுடைய தாத்தாவைப் போலவும், ருபோ கோலி பிறக்கும்போதே அடிமையாகப் பிறந்தார். எல்லா நாட்களும் ஒரே மாதிரியானவை. கரும்புப் பயிர் வயல்களில் நீண்ட கடினமான நேரங்கள். சுட்டெரிக்கும் சூரியனால் சற்று அசந்தாலும் சவுக்கு காதுகளை உரசிக்கொண்டு செல்லும்.

ருபோ, அவரது மனைவி 8 குழந்தைகள் அனைவரும் இன்னொரு ஜமீன்தாரான அலி பக்ஷ் லெகாரி என்பவருக்கு 50000 ரூபாய்க்கு நான்கு வருடங்களுக்கு முன்னால் விற்கப்படும்வரைக்கும் வாழ்க்கை சமாளிக்க முடிந்ததாகவே இருந்தது. இந்த ஜமீன்தார் பெயரைச் சொன்னாலே நடுங்குகிறார்கள் இந்த குடும்பத்தினர்.

காலில் இரும்பு விலங்குகள் கட்டி வயல்களில் வேலை செய்யவைக்கப்பட்டார்கள். இரவு அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு தூங்கினார்கள். ஜமீன்தார் குடித்திருந்தபோது இவர்களுக்கு இன்னும் நிறைய அடிவிழுந்தது. இவர்களுக்கு உணவு மிகவும் குறைந்த அளவில் கோதுமை மாவு மட்டுமே. கொடுக்கும் மாவு போதாததினால், இவர்கள் மாதத்தின் இறுதி நாட்களில் புல்லைத் தின்றார்கள்.

‘நாங்கள் வெங்காயத்தை வயலிலிருந்து எடுத்தாலும், ஜமீன்தார் எங்களை அடிப்பார் ‘ என்று ருபோ கூறினார். எரிக்க விறகோ எண்ணெயோ கொடுக்கப்படாததினால், பச்சை மாவை தண்ணீரில் கலந்து மிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டார்கள்.

போலீசும், மனித உரிமை சமூக சேவகர்களும் இவர்களை விடுவித்த பின்னால், இவர்கள் நகரத்தில் அடிக்கடி நடப்பதே ஆச்சரியமான அனுபவம் அவர்களுக்கு.

ருபோவுக்கோ (வயது 40) அவரது தந்தையாருக்கோ எந்தக் கடனால் இப்படி அடிமைப்பட்டோம் என்பது தெரியவில்லை. ஒரு வாழ்நாள் வேலை செய்தபின்னால், இவர்களது கடன் 1,18,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

தெற்கில் இருக்கும் சிந்து மாநிலத்தில், ஜமீன்தார்கள் இவ்வாறு கொடுமையானவர்களாக இருப்பதை எல்லோருக்கும் தெரிந்த சாதாரண விஷயம் போல ருபோ கூறுகிறார்.

கொத்தடிமை முறை 1992இல்தான் சட்டப்படி குற்றமானது. ஷகீல் அஹ்மத் பட்டான் என்பவர் சிந்து மாநில பிராந்திய பாகிஸ்தான் மனித உரிமைக் கழகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். அரசாங்க அதிகாரிகள் இந்த சட்டங்களை நிறைவேற்றுவதில்லை என்றும், அதற்குக் காரணம் அவர்களே இந்த ஜமீன்தார் குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். இஇன்னொரு காரணம் பாகிஸ்தானின் வலிமைவாய்ந்த நபர்களைப் பகைத்துக்கொள்ள தயாராக இல்லை.

பாகிஸ்தானின் முக்கியமான அரசியல்வாதிகள் அனைவரும் பெரும் நிலச்சொந்தக்காரர்கள். பிரதமர் பெனசீர் புட்டோ அவர்களும் பெரிய நிலச்சொந்தக்காரர்தான். கடந்த காலத்தில் நிலச்சீர்திருத்தம் வேண்டி எழுந்த கோரிக்கைகள் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தன.

சிந்து விவசாய வளமை கொத்தடிமை முறையிலேயே தங்கியிருக்கிறது. தீண்டத்தகாத இந்துக்களே (ஹரி என்று அழைக்கப்படும் மக்கள்) பெரும்பாலான கொத்தடிமைகள். இவர்களே அதிக உழைப்பை வேண்டும் கரும்பு மற்றும் பருத்தி விவசாயத்தில் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

பெரும் வாழை மற்றும் சர்க்கரை தோட்டங்களில் வேலை செய்யும் ஹரிக்களுக்கு இந்த ஜமீன்தார்கள் கடவுள் மாதிரி. எடுத்ததற்கெல்லாம் கோபம், சுலபத்தில் மன்னிக்க மாட்டார்கள், யாருக்கும் பதில்சொல்லவேண்டிய கட்டாயமில்லை. நிலச்சீர்திருத்தம், வரி, தொழிற்சங்கம், உரிமைகள் பற்றிய சட்டங்கள் போன்ற நவீன அலங்காரங்கள் ஏதுமின்றி கொடுங்கோல் ஆட்சிசெய்கிறார்கள்.

‘எல்லா ஜமீன்தார்களும் ஹரிக்கள் அவர்களது சொத்து என்று நினைக்கிறார்கள் ‘ என்று பட்டான் கூறினார்.

அப்படித்தான். ஜமீன்தாரான இப்ராஹிம் மாங்கிரியோ மேரன் தேவியின் முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வயலுக்குள் சென்று பலாத்காரம் செய்தபோது சாட்சிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. ‘என் அம்மாவின் முன்னாலும் பலாத்காரம் செய்வார். உலகமே சூழ்ந்து நின்றாலும் அவர் பலாத்காரம் செய்வார் ‘ என்று மேரன் தேவி கூறினார்.

8 வயது ஹனிஃப் அவரது அருகில் நின்றான். அவரது அவமானத்தின் சின்னம். ஹனிஃப்க்கு முஸ்லீம் பெயர் இருப்பதுதான் அவனது தந்தைக்கு ஒரே முக்கியமான விஷயம் என்று மேரன் தேவி கூறினார்.

ஆரம்ப காலக் கடன்கள் மறந்து போயின. ஜமீன்தார்கள் ஹரிக்களின் படிப்பறிவற்ற நிலையைச் சாதகமாகக் கொண்டு எப்போதும் அவர்கள் சுதந்திரமடைய முடியாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். இந்த தோட்டங்கள் அவர்களது நிரந்தர சிறைச்சாலைகளாக ஆகிவிடுகின்றன என்று மனித உரிமை கமிஷன் கூறியது.

மேரனின் தாய் ஜேமா தேவி, ‘தப்புக்கவே முடியாது ‘ என்று கூறினார். தோட்டம் ஆயுதம் தாங்கிய காவலாளிகளால் பாதுகாக்கப்படுகிறது. ‘நாங்கள் அங்கே இறந்தோம், நாங்கள் அங்கேயே பிறந்தோம். நாங்கள் அங்கேயே திருமணம் செய்தோம். அவரது நிலத்தை விட்டு 22 வருமாக வெளியே போகவில்லை ‘ என்று கூறினார்.

மனித உரிமை சமூக சேவகர்கள் அதிகாரிகளை தொந்திரவு செய்து தோட்டங்களை ரெய்டு செய்து ஹரிக்களை விடுதலை செய்திருக்கிறார்கள். இதுவரை சுமார் 1000 விவசாயிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சமூக சேவகர்கள் ஜமீன்தாரின் ஆட்களால் அடிக்கப்பட்டு, கொலைவிழும் என்று பயமுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பட்டான் அவர்களது ஹைதராபாத் அலுவலகத்துக்கு வந்து விடுவித்துச் சென்ற ஹரிக்களுக்கு விலையான பணத்தைக் கொடுக்கும்படி மிரட்டியிருக்கிறார்கள். மட்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தூரத்திலேயே இருக்கும் தோட்டத்தில் இருக்கும் கொத்தடிமைகளைப் பற்றி எதுவுமே தெரியாது என்று அந்த ஸ்டேஷன் போலீஸ் அதிகாரிகள் சாதிக்கிறார்கள். தன் மாவட்டத்திலேயே எந்த கொத்தடிமைகளும் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் சாதிக்கிறார்கள்.

குடிசைகளில் 400-லிருந்து 500 பேருடன் ஜேமா தேவி வசிக்கிறாள்.

இந்த ஹரிக்கள் மிகவும் மோசமான ஏழ்மையில் இருக்கிறார்கள். ஒரே ஒரு உடை மட்டுமே சொந்தம். உடைந்து போன சமையல் பாத்திரங்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது தினமும் 80 ரூபாய் வருமானம் வரும் விதமாக வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மறுபடியும் ஜமீன்தார்கள் தம்மை அடிமைப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு நிமிர்ந்து நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘நான் இப்போது கொஞ்சம் வெள்ளையாகி வருகிறேன் ‘ என்று ஜேமா தேவி கூறினார். இதுவரை அவர் சரியாக முகம் கழுவியதே இல்லை.

இந்த ஹரிக்கள் அந்த இடத்தில் இருக்கும் ஒரு சர்ச் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இருப்பினும், அந்த சர்ச்சை நடத்தும் ஐரிஷ் பாதிரியார், இந்த ஹரிக்கள் எப்படி கடனுக்குள் விழாமல் இருப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். விடுவிக்கப்பட்ட சிலர் ஏற்கெனவே கடனாளியாகி மீண்டும் கொத்தடிமையாக ஆகிவிட்டார்கள்.

The Guardian

18 March 1996

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

ஹினா ஜிலானி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து …

1960இன் பசுமைப் புரட்சியை காரணம் காட்டி, நிலச் சீர்திருத்தம் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கங்கள் எடுத்துவந்தன. சிறிய பண்ணைகள் பெரிய பண்ணைகளை விட அதிகம் உற்பத்தி செய்யும் என்ற காரணத்தை காரணமாகச் சொல்லமுடியாது என்று கூறி அரசாங்கம் மறுத்தது. 1989இல் உச்ச இஸ்லாமிய ஷாரியா நீதிமன்றம், 1972இல் கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தை இஸ்லாமுக்கு எதிரானது என்று தீர்ப்புச் சொன்னது.

***

Series Navigation

சூசன் கோல்டன்பர்க் (கார்டியன் மார்ச் 18, 1996)

சூசன் கோல்டன்பர்க் (கார்டியன் மார்ச் 18, 1996)

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

ரோரி மக்கார்த்தி


சென்ற மாதம் மனோ தன்னுடைய பாகிஸ்தானிய ஜமீன்தாரிடமிருந்து தப்பி ஓடினார். இந்த 65 வயதான முதியவர் உடல் தளர்ந்து வாழ்நாள் முழுவது ஜமீன்தாருக்காக சிந்து மாகாணத்தின் வயல்களில் உழைத்து நொந்து போய் தோல் வற்றிப் போயிருந்தாலும் கோபத்துடன் இருந்தார்.

‘அந்த ஜமீன்தாரை வெறுக்கிறேன். அவனை மீண்டும் சந்தித்தால் அவனை அடிப்பேன் ‘ என்று சொன்னார்.

இறுதியாக மனோ சுதந்திரமடைந்தார். கடந்த 36 வருடங்களாக அவர் பகலும் இரவும் கரும்பையும், பருத்திச் செடிகளையும் தன்னுடைய ஜமீன்தாருக்காக தெற்கு பாகிஸ்தானில் பராமரித்து வந்தார்.

மனோ தனக்கு கடன் பாக்கி கொடுக்க வேண்டுமென்றும், அந்த கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றும் ஜமீன்தார் சொன்னார். இவரும் இவரைப்போன்ற இன்னும் 1000 பேர்களும் தப்பிவிடக்கூடாது என்று ஆயுதம் தாங்கிய காவலாளிகள் வயல்களைச் சுற்றி காவல் காக்கின்றனர்.

‘நாங்கள் படிப்பறிவு அற்றவர்கள். எங்களுக்கு கணக்குவழக்கெல்லாம் தெரியாது. நாங்கள் கடன் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னார்கள். அது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று சொன்னார்கள். எங்களை வெளியே போகவிடவில்லை ‘ என்று இவர் சொன்னார்.

சிலர் உண்மையிலேயே ஜமீன்தாரிடமிருந்து பணம் பெற்றிருந்தார்கள். மனோ போன்ற மற்றவர்கள் எப்படி தங்களுக்குக் கடன் வந்தது என்றே தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் கொத்தடிமைகள். அல்லது ‘ஹரி ‘க்கள். (ஹரி என்றால் தோற்றவன் என்று பொருள். இந்துக்கள் முஸ்லீம்களிடம் தோற்றவர்கள் என்பதால் அவர்களை ஷரியத் சட்டப்படி அடிமைப்படுத்தலாம் என்பது ஜமீன்தார்கள் தரும் சப்பைக்கட்டு – மொ.பெ) இவர்கள் ஏழைகள். படிப்பறிவற்றவர்கள். இந்த ஜமீன்தார்களிடம் காலம் முழுவதும் வேலை செய்கிறார்கள். இவர்கள் பெறும் கடனுக்கு மாதம் 10 சதவீதம் வட்டி என்று இவர்கள் சொல்கிறார்கள்.

1973இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி கொத்தடிமை முறை சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கப்பட்டது. இருப்பினும், சுமார் 20 லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இன்னும் சிந்து மாநிலம், பஞ்சாப் மாநிலம் போன்ற இடங்களில் இருக்கும் பண்ணைகளில் கொத்தடிமையாக இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பே பாகிஸ்தானின் பெரும் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கக் காரணம். இந்த பணக்காரர்களே பெரும் அரசியல்வாதிகளாகவும், ராணுவதளபதிகளாகவும் இருக்கிறார்கள்.

‘இறுதியில் என்னுடைய கடன் 2,50,000 ரூபாயாக ஆகிவிட்டது. எங்களுக்கு கோதுமைமாவும் பச்சைமிளகாயுமே உணவாகக் கொடுத்தார்கள். எங்களை அடிப்பார்கள், எங்கள் பெண்கள் அடிக்கடி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவார்கள் ‘ என்று மனோ சொல்கிறார்.

ஜமீன்தாரின் குடும்பம் ஒரு சவஅடக்கத்தைப் பார்க்கச் சென்றபோது, மனோவும் இன்னும் 60 பேர்களும் தப்பியோடி, பாகிஸ்தானில் இருக்கும் ஹைதராபாத் அருகே இருக்கும் கோட்ரி நகரத்தில் மனித உரிமைகள் கமிஷன் உருவாக்கிய நான்கு முகாம்களில் ஒன்றில் வாழ்கிறார்கள்.

பெரும்பாலான ஹரிகள் போலவே, மனோவும் ஒரு கீழ்ஜாதி இந்து. ‘தீண்டத்தகாதவர் ‘. இவர் இந்தியாவின் எல்லைக்கோடுக்கு அருகே இருக்கும் தார் பாலைவனத்தைச் சார்ந்தவர். ஜாதி பிரிவினை இல்லை என்று பெருமை பேசும் பாகிஸ்தானில்கூட இவரது கையை தொடுபவர்கள் அரிது.

பெண்களுக்கு இந்த பண்ணைகளில் வாழ்க்கை மிகவும் கொடிது. அதிர்ஷ்டக்காரர்கள் வயல்களில் வேலை செய்கிறார்கள். மீரா அதிர்ஷ்டக்காரி இல்லை. அவர் 16 வயதிலிருந்து பாலியல் அடிமையாக உபயோகப்படுத்தப்பட்டார்.

‘நான் ஜமீன்தாரின் வீட்டில் 15 வருடம் இருந்தேன். எனக்கு ஜமீன்தார் மூலம் இரண்டு குழந்தைகள் உண்டு. ‘ என்று மீரா கூறினார். 36 வயதாகும் மீராவும் தார் பாலைவனத்தைச் சார்ந்த கீழ் ஜாதி இந்து.

‘எனக்கு 16 வயதாகும் போது இது ஆரம்பித்தது. எங்களைத் தொடர்ந்து அடித்தார்கள். நாங்கள் அஞ்சினோம். ஐந்து பெண்கள் அவருக்காக நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் அடிக்கடி பலாத்காரத்துக்கு உட்பட வேண்டி வந்தது ‘ என்று மீரா கூறினார்.

‘ஜமீன்தாரை தூக்கில் போட விரும்புகிறேன் ‘

ஐந்து வருடத்துக்கு முன்னால் அவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் சாகு என்னும் இன்னொரு ஹரியை திருமணம் செய்திருக்கிறார்.

மனித உரிமை சமூக சேவகர்கள் இது மாதிரி கொத்தடிமைகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து உயர்நீதிமன்றம் மூலம் அவர்கள் விடுதலைக்குப் பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த முயற்சி கொஞ்சம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 300 ஹரிக்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மற்றவர்கள் தப்பிவிட்டார்கள். இப்போது கமிஷனின் முகாம்களில் 12000 சுதந்திர ஹரிகள் வாழ்கிறார்கள்.

ஆனால், கொத்தடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 1947இல் விவசாயக் கூலிகளில் 1 சதவீதம் மட்டுமே கொத்தடிமையாக இருந்தார்கள். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை 15 சதவீதமாக அதிகரித்துவிட்டது. கத்தோலிக்க மனித உரிமை அமைப்பான நீதி-அமைதிக்கான தேசிய கமிஷன் என்ற அமைப்பின் அறிக்கை இது.

பல ஜமீன்தார்கள் இந்த கொத்தடிமை முறையை ரவாஜ் என்னும் பல நூற்றாண்டுகளுக்கு முந்திய பிராந்திய பழக்க வழக்கங்களின் எச்ச சொச்சங்கள் என்று கூறுகிறார்கள்.

‘எங்களை ஜமீன்தார்கள் என்று கூறாதீர்கள். அது பழங்காலப் பெயர். நாங்கள் பயிர் வளர்க்கும் விவசாயிகள் (growers) ‘ என்று மஹ்ஃபூஸ் உர்ஸானி கூறுகிறார்.

‘கொத்தடிமை முறை என்பது காலம் காலமாக இருந்துவரும் விஷயம். ஏழைகளின் எல்லாப் பிரச்னைகளையும் என்னால் தீர்க்க இயலாது. வழக்கத்திற்கு எதிராக எதிர் நீச்சல் போட முடியாது ‘ என்று கூறுகிறார்.

Guardian newspaper, UK

Monday July 17, 2000

Series Navigation

ரோரி மக்கார்த்தி

ரோரி மக்கார்த்தி

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

முதாஹிர் காஸ்மி அல்மன்சூர்


நிலப்பிரபுத்துவச் சுவர்களைத் தகர்க்க முயன்ற ஒரு போராளி தானே அதற்குப் பலியானார். இந்தப் பலியினால், நிலப்பிரபுத்துவச் சுவர்கள் தகருமா என்பது இனித்தான் தெரியும்.

செப்டம்பர் 24-ல், கராச்சி மருத்துவமனையில் ஷகீல் பட்டான் மரணமுற்றார். மிகவும் துணிச்சலான, அச்சமில்லாத மனித உரிமைச் செயலாளி அவர். சிந்தியில் இருந்த ஹரி மக்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர் அவர். கொத்தடிமையாய் வாழ்க்கையைக் கழித்து தம்முடைய மனித அடையாளங்களைத் தொலைத்துவிட்ட பாவப்பட்ட மக்கள் இவர்கள். கிராமப்புற பாகிஸ்தானில் கொத்தடிமை முகாம்களில் சிந்து மானிலத்தின் உட்புறத்தில் வசிக்கும் கொத்தடிமைகளை விடுவிக்க வேண்டி இவர் போராடினார். ஆகஸ்ட் 10-ம் தேதி மர்மமான முறையில் ஒரு சாலை விபத்தில் கயமுற்ற இவர், கழுத்துக்குக் கீழ் உணர்வற்றுப் போனார். முதுகுத்தண்டு பாதிப்பு இதன் காரணம். இந்த விபத்து பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. பல சிந்தி நிலச் சுவான்தாரர்களுக்கு ஷகீல் பட்டான் சங்டம் விளைவித்தவர். எல்லா கொத்தடிமைகளையும் அடையாளம் கண்டு விடுவிக்க அவர் முனைந்தார். விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் இருப்பதாக மற்ற மனித உரிமைப் போராளிகள் ஐயம் கொள்கின்றனர்.

1996-ல் சிந்து பகுதியில் சங்கார் மாவட்டத்தில் மிகச் செல்வாக்குள்ள ஒருவரான முரீத் கான் மாரி என்பவரின் கொத்தடிமை முகாமை ஷகீல் பட்டான் கண்டுபிடித்தார். ாப்போது பேநசீர் புட்டோ தான் பிரதமர். பாகிஸ்தானின் அரசு நியமித்த மனித உரிமைக் கமிஷனின் ஆய்வுகளின் ஒரு பகுதியாக இந்த முகாம் இவரால் கண்டுபிடிக்கப் பட்டது. மாவட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்தே இப்படி ஒரு முகாம் நடத்தப் படுவது நாடு முழுதும் பத்திரிகைகளில் வெளியானது. உலக முழுதும் பத்திரிகைகள் இதை வெளியிட்டன.

பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷன் இணைப்பாளராகப் பணி புரிந்த ஷகீல் பட்டான் , ஐரோப்பிய கிருஸ்துவ மிஷன் என்ற அமைப்புடன் இணைந்து இந்த முகாம்களை வெளிக் கொணரப் பாடுபட்டார். 200 இந்து உழைப்பாளிகள் – பெண்கள், குழந்தைகள் உட்பட – விடுதலை செய்யப் பட்டனர். இந்த முகாமின் சொந்தக் காரர் முரீத் கான் மாரி. இந்த கொத்தடிமைகள் விடுதலை செய்யப்பட்டது பேநசீரால் மிக பெரிதாக விளம்பரம் செய்யப் பட்டது. ஆனால் இந்தக் கொடுமைக்குக் காரணமான நிலச்சுவான்தாருக்கு எந்த தண்டனையும் இல்லை. பேநசீர் புட்டோவும் கூட ஒருபெருநிலச் சுவான்தார் தான்.

முரீத் கான் மாரி இந்த அடிமைகளைத் தன் பொறுப்பில் தனிச்சிறையில் வைத்திருந்தான். எந்த சம்பளமும் இல்லாமல் இந்த இந்து அடிமைகள் பெரும் வயல் வெளிகளில் வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப் பட்டார்கள். சிறு அளவில் கடன் கொடுத்து இந்த அடிமைகளை தம்முடைய நிலத்தில் வேலை செய்யுமாறு நிலச்சுவான்தார்கள் கட்டாயப் படுத்தினார்கள். இது வழக்கமாய்இ இந்த பிரதேசங்களில் நடைபெறுவதாகும். நிலத்தின் அருகில் குடிசைகளில், சிறிது உணவளித்து இவர்களை அடைத்து விடுவார்கள். மிகுந்த கண்காணிப்பும் உண்டு.

ஷகீல் பட்டானால் இந்த அநீதியைச் சகிக்க முடியவில்லை. இந்த நிலச் சுவான் தார்களுக்கு பெரும் சவாலாய் இருந்தது அவர் பணி. சில கிருஸ்துவ பணியாளர்களுட இணைந்து இவர்களை அடிமைகளை விடுவிப்பதில் முனைந்து நின்றார். 200 பேருக்கு மேல் விடுதலை செய்யப் பட்டார்கள். இந்த நிலப்பிரபு முரீத் கான், சிந்து பகுதியின் விவசாய மக்களுக்கு ஆன்மீக குருவான பீர் பகானாவிற்கும் நெருக்கமானவன்.

1996-ல் மனித உரிமைப் போராளிகள் விடுவிக்கப் பட்ட அடிமைகளுடன் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கச் செய்த ஷகீல் பட்டானை முரீத் கான் வெறுப்புடன் நோக்கினான். பழகிய மிருகங்கள் போல் இருந்த மனித அடிமைகள் கைவிட்டுப் போவது ஆத்திரத்தை அளித்திருக்க வேண்டும். அபோதே ஷகீல் பட்டானைத் தீர்த்துக் கட்ட முடிவாகியிருக்க வேண்டும்.

ஆகஸ்ட 10-ல் உமர்கோட் என்ற இடத்தின் அருஇகில் ஷகீல் பட்டான் விபத்தில் சிக்கினார். முகலாய அரசர் அக்பர் பிறந்த இடம் இது. இதற்கு முன்பே செப்டம்பர் 1996-ல், முரீத் கான் அடிமை வியாபாரி என்ன செய்தார் தெரியுமா ? விடுவிக்கப் பட்ட அடிமைகள் தங்கியிருந்த மால்தி நகரின் சர்ச்சிற்குச் சென்று 87 பேரைக் கடத்திச் சென்று விட்டான். 100 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய படையுடன் முரீத் கான் வந்தான். 200 மைல்கள் தாண்டி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, சர்ச்சில் இருந்த பாதிரியார் ஒருவரைத் தாக்கிவிட்டு, 87 பேரை இழுத்துக் கொண்டு போய்விட்டான். இந்த நிகழ்ச்சியால் பாகிஸ்தான் அதிர்ந்தது. உலகமும் அதிர்ந்தது. சில நாட்கள் கழித்து போலிஸ் 85 பேரை விடுவித்தது. மீணுட்ம் அடிமைகள் சுதந்திரம் பெற்றனர். இரண்டு பேரை விடுவிக்க முடியவில்லை. அவர்கள் காணாமல் போய் விட்டார்கள். அந்த இருவரும் இந்த 85 பேருக்குத் தலைமை ஏற்று போராடி இருக்கிறார்கள்.. தாம் கால்நடைகளைப் போல் நடத்தப் படமாட்டோம் என்று சொன்ன இருவரும் காணவில்லை. இன்னமும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

முரீத் கான் தான் சட்டத்திற்குப் புறம்பாக நடப்பதாய் நினைக்கவில்லை. அடிமைகள் விதியே என்று சகித்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களை விடுவித்தது தான் ஷகீல் பட்டான் செய்த மாபெரும் குற்றம் – நிலப்பிரபுத்துவத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிரான குற்றம். அந்தக் குற்றத்திற்குத் தான் இந்த தண்டனை.

அடிமைகளைக் காப்பாற்றினாலும், ஷகீல் பட்டான் அகால மரணம் அடைந்திருக்கிறார். மனிதப் பண்பாட்டின் தொட்டில் என்று சொல்லப்படும் பிரதேசம் இது. நிலப்பிரபு முரீத் கான் இன்னமும் சுதந்திரமாகத் திரிகிறான். ஏன் ?

Amnesty International

Series Navigation

முதாஹிர் காஸ்மி அல்மன்சூர்

முதாஹிர் காஸ்மி அல்மன்சூர்