பள்ளிப்படை கோவில்
Published December 12, 2008 • By
ஆதவா
ஆதவா
மேற்கூரை சுமையினைத்
தாங்கமுடியாத மண்டபத்தூணருகே
தூங்கி வழியும் கோட்டான்களின்
நிழலசைவை ரசித்தபடி
வடிந்து கிடந்தது நிலவு
மேற்புறச் சுவர்முட்டும்
காட்டுமரத்தின் கிளையொன்று
சிதிலமடைந்த ஆகமவிதிகள்
எழுதிய இலக்கணத்தை
மாற்றியமைத்துக் கொண்டிருந்தது
கல்லிடுக்குகள் சிதைந்து
தூணிட்ட முத்தம் தவிர்த்து
இணையில்லா இதழ் பிரித்து
யார் மீதும் எப்போதும்
விழத் தயாராக இருந்தது
கோவிலுருப்புக்கள்
இருட்டுகள் ஒன்றையொன்று
முட்டிக் கொண்டிருக்கும்
கருவறையின் வெற்றிடத்தை
பறவைகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்க
யாருக்கோ ரகசியத்தைக்
கசிய வைத்தபடி காத்திருக்கிறது
பள்ளிப்படை கோவில்