பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

ஞாநி


சென்னை நகரின் முதல் நவீன/மாற்று நாடகக்குழு பரீக்ஷா. வர்த்தக மீடியாவாலும், கல்வித்துறையாலும் நவீன நாடகம்அங்கீகரிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் அது கெட்ட வார்த்தையாக இருந்த எழுபதுகளில் தோன்றிய மிகச் சில முன்னோடி நாடக முயற்சிகளில் தொழில் முறையல்லாத நாடகக்குழுவான பரீக்ஷாவும் ஒன்று.

நடுத்தர வகுப்பினருக்கு நாடகம் குறித்தும் வாழ்க்கை குறித்தும் உள்ள போலி நம்பிக்கைகளைக் களைவதை நோக்கமாக அறிவித்து, 1978 நவம்பர் 19 அன்று தன் முதல் நாடகத்தை நிகழ்த்தியது பரீக்ஷா.

இதுவரை இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,அம்பை,அறந்தை நாராயணன், ஜெயந்தன், கங்கை கொண்டான்,கே.வி.ராமசாமி, ஞாநி, எஸ்.எம்.ஏ.ராம், திலீப்குமார், சுஜாதா ஆகியோர் எழுதிய தமிழ் நாடகங்களை மேடையேற்றியுள்ளது.

நவீன நாடகக்குழுக்களிலேயே பரீக்ஷா மட்டுமே திராவிட இயக்க முன்னோடியான அறிஞர் அண்ணாவின் ‘ சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் அல்லது சந்திரமோகன் ‘ என்ற நாடகத்தை நிகழ்த்தியுள்ளது.

தமிழுக்கு முதல் முறை அறிமுகமாக வங்க நாடகாசிரியர்கள் பாதல் சர்க்கார், ரஞ்சித் ராய் செளத்ரி, மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர், ஆங்கில நாடகாசிரியர் ஹெரால்ட் பிண்ட்டர் ஆகியோரின் நாடகங்களை அரங்கேற்றியது.வெள்ளி விழா ஆண்டில் பிரெக்ட், மஹாஸ்வேததேவி ஜே.பி.ப்ரீஸ்ட்லி முதலானோரின் நாடகங்களை நடத்தவுள்ளது.

1992-93ல் யவனிகா, ஆடுகளம், ஐக்யா ஆகிய குழுக்களுடன் இணைந்து வாரம் தோறும் நாடக முயற்சியை ஓராண்டு காலம் நிகழ்த்தியது.

நாடகத்துக்கு வரும் பார்வையாளர்கள் தரும் டிக்கட் பணத்தைக் கொண்டே நாடகம் நடத்தப்படவேண்டும் என்பதில் தொடர்ந்து பரீக்ஷா உறுதியாக இருந்து வருகிறது. விளம்பரதாரர்கள், மான்யம் வழங்கும் நிறுவனங்கள் உதவியைக் கோராமலே இதுவரை பரீக்ஷா இயங்கிவந்துள்ளது. பார்வையாளரின் வாங்கும் சக்திக்கேற்ப வெவேறு இருக்கைகளுக்கு வெவ்வேறு ரேட் வைக்கும் முறையைப் பரீக்ஷா ஏற்கவில்லை. ஒரே கட்டணம் மட்டுமே நிர்ணயித்து, பார்வையாளர் எவரும் எங்கேயும் அமரலாம் என்ற முறையைத் தொடர்ந்து பின்பற்றிவந்துள்ளது.

வெள்ளிவிழா ஆண்டிலும் இதே போல மார்ச் 2003 முதல் பிப்ரவரி 2004 வரையிலான மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி வீதம் 12 நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்து மொத்த நன்கொடையாக ரூ 100 மட்டும் (மாணவர்களுக்கு ரூ 70 ) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நிகழ்ச்சிக்கான கட்டணம் ரூ20/- (மாணவர்களுக்கு ரூ 10).

வெள்ளி விழா முதல் நாடகம் : வட்டம். பிரெக்ட்டின் ஜெர்மன் நாடகம் தி காகேசியன் சாக் சர்க்கிள் என்பதை அடிப்படையாகக்கொண்டு தம்ழில் எழுதி இயக்குவது: ஞாநி. நாள்: மார்ச் 9, ஞாயிறு மாலை 6.45 மணி.

மேலும் தகவல்கள் பெற தொடர்பு கொள்ல வேண்டிய எண்கள்: ஞாநி – 24512446 24512725

Series Navigation

ஞாநி

ஞாநி