பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

அமர்நாத்


18. ‘இன்Nஃபா-ட்ராக்’

மிஞ்சிய இரண்டு சப்பாத்திகளில் மிளகாய்ப்பொடி-எண்ணெய் தடவி அலுமினியத்தாளில் சுற்றி ஒரு பிளாஸ்டிக் பையில் சாமி வைத்தான். எதற்கு என்று பரிமளா அவனைப் பார்த்தாள்.
“நாளைக்கு போறவழிக்கு. செகுரிடிலே ஒண்ணும் சொல்லமாட்டா.”
“நன்னாத்தான் யோசிக்கறே.”
“ஆசாரமா வெளிலே அதிகம் சாப்பிடாததாலே வந்த பழக்கம்.”
இருவராகச் செய்ததில் சமையலறை வேலை விரைவாக முடிந்துவிட்டது. சாப்பிட்ட மேஜையையும் துடைத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்தார்கள்.
“எல்லாத்தைவிட நீங்க ரெண்டுபேரும் ஒத்துமையா சமைக்கறதைப் பாக்கும்போதுதான் எனக்குப் பொறாமையா இருக்கு. காய் நறுக்கறதிலேர்ந்து, சாப்பிட்டு, ஒழிச்சுவைக்கறதுவரை நானே செய்யணும்” என்றாள் பரிமளா.
“உனக்காக நாங்க சுமுகமா இருக்கோம். சமைக்கறப்பதான் நிறைய தகராறு வரும். என்ன பாத்திரம் உபயோகிக்கலாம்? உப்புமாலே கத்தரிக்காய் போட்டா நன்னா இருக்குமா, இருக்காதா? இப்படி ரெண்டுபேருக்கும் வேறவேற ஐடியா கிடைக்கும்.”
“ப்ரியா எல்லாத்திலியும் பூண்டு போடுவாளோ?”
“இப்போ குறைச்சுனுட்டா. ஆனா அவளோட குருமா பிரமாதமா இருக்கும். நீ ரெண்டும் ஒண்ணும் மூணுநாள்தான் இருந்தே. அதைப் பண்ண நேரம்கிடைக்கலை. அடுத்ததடவை…”
“ஒருமாசம் வந்து இருக்கட்டுமா?” என்று சிரித்தாள்.
சாமி வேடிக்கையான பதில்தருவதற்குள் எழுதும் மேஜைமேலிருந்த அலைபேசியின் ரீங்காரம்.
“ஹாய், சூரன்! என்ன விஷயம்?”
“ஹாய் டாட்! சும்மாத்தான் கூப்பிட்டேன். இங்கே படிப்பு, சாப்பாடு எல்லாம் நல்லபடியா போறது. அங்கே எப்படி?”
“சிறுவயதில் அம்மாவுக்கும் எனக்கும் நன்றாகத் தெரிந்தவள் இங்கே வந்திருக்கிறாள்” என்று பரிமளாவைப் பார்த்து புன்னகைத்தான். “கிட்டத்தட்ட நாற்பது வருஷத்துக்கு அப்புறம் அவளை சந்திக்கிறோம்.”
“அவ்வளவு காலத்திற்குப் பிறகு உங்களுக்குள் அடையாளம்காண முடிந்ததா?”
“எதிர்பார்த்தபடி, உடலில் நிறைய மாற்றங்கள். ஆனாலும் பலகாலம் பழகியதுபோல் ஒரு நெருக்கம்.”
“பேச நிறைய விஷயமிருக்குமே.”
“நிறைய. முன்பு நடந்ததில் யாருக்கு அதிகம் ஞாபகமிருக்கிறது என்று போட்டி.”
“அதில் உனக்குத்தான் வெற்றி. உருப்படாத விஷயங்களை ஞாபகம் வைப்பதில் நீ எக்ஸ்பெர்ட் ஆயிற்றே.”
“பாராட்டுக்கு நன்றி! பன்னிரண்டு வயதில் அவள் ஒரு நாடகத்தில் நடித்தாள். அதில் அவள் பேசிய ஒரு வசனத்தை அவள்பேசியபடியே சொன்னேன். அசந்துவிட்டாள்.” இப்போது பரிமளா அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.
“எனக்கு அதில் வியப்பில்லை.”
“அப்புறம், உன் நண்பன் ஹிக்கரி வந்திருக்கிறான். 1-ப்ரோமோப்ரோபேன் சம்பந்தப்பட்ட ஒருவழக்கில் அவனுக்கு அம்மாவின் உதவி வேண்டுமாம். அவனுடன் பேசிமுடித்ததும் உன்னைக் கூப்பிடச் சொல்கிறேன்.”
“தட்’ஸ் iஃபன். அவசரமில்லை. பை, டாட்!”
அலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டுத் திரும்பிய சாமி பரிமளாவை உற்றுப் பார்த்தான்.
“கார்த்தாலே பாத்ததுக்கு உன்முகம் வாடினமாதிரி யிருக்கு. உடம்புக்கு ஒண்ணுமில்லையே?”
“ஜலதோஷம் வரும்போல இருக்கு. ஊருக்குப்போய் பாத்துக்கறேன்.”
“ரெண்டு ‘ஆஸ்பிரின்’ போட்டுண்டு படுத்துக்கோ நாளைக்கு நீ பிம்மாலம் எழுந்திருக்கணும்.”
தொடர்ந்துவந்த மௌனத்தில், அடுத்த அறையின் உரையாடல் அவர்கள் காதில் விழுந்தது. ஹிக்கரி ஆசைகாட்டிய ஐம்பதாயிரம் டாலரை சரவணப்ரியா உடனே மறுத்ததைக்கேட்டு பரிமளாவின் முகம் சுருங்கியது. ‘கெம்-சேஃபி’ன் இருபத்தைந்தாயிரம் டாலர் மனதில் கனத்தது.
“க்ரான்ட் கிடைக்கலை என்பதற்காக ப்ரியா பணத்தை ஏத்துக்காம, வேண்டாம்னு சொன்னது ரொம்ப உத்தமமான குணம். உனக்குப் பெருமையா இருக்கணும்.”
“நீகூட சென்ட்ரல் ஜியார்ஜிலே க்ளாஸ{க்கே வராத ஒருத்தனுக்கு பாஸ் போடாம, அதனாலே வேலையை இழந்திருக்கே. சம்பளத்திலே பத்தாயிரம் டாலராவது குறைஞ்சிருக்கும். நீ செஞ்சதும் பெருமைப்பட வேண்டிய காரியம்தான்.”
“ஹிக்கரி கேட்டவுடனேயே ப்ரியா மாட்டேன்னு சொல்லிட்டா. நான் அப்படிச் செய்யலை, ஒருநாள் யோசிச்ச பிறகுதான் அவங்க கேட்டதுக்கு ஒத்துப்போகலை…”
“அதுலே தப்பு ஒண்ணுமில்லை. நீதிக் கதைகளில்தான் கெட்டதுக்கும் நல்லதுக்கும் கறுப்பு-வெள்ளை மாதிரி வித்தியாசம் உடனே தெரிஞ்சுடும். நிஜ வாழ்க்கைலே எது சரி எது தப்புன்னு வித்தியாசம் கண்டுபிடிக்கறது அவ்வளவு சுலபமில்லை. எட்டு தொழிலாளிகளுக்கு சில மில்லியன் டாலரைக் கொடுத்து அவங்க வாயை அடைக்கறதுக்காக மார்க்ஸ் கம்பெனி மத்தவங்க வயத்திலே அடிக்க வேண்டியிருக்கும். அது மாத்திரமில்லை, இந்தமாதிரி ஒருவழக்கிலே ஜேசன் மாட்டிண்டு திணறினது எங்களுக்குத் தெரியும். இதுக்காக ஹியுஸ்டனுக்கு அடிக்கடி போகணும். எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காட்டா? இது ஒண்ணும் சயின்டிஃபிக் விவாதம் இல்லை. ஜுரிலே இருக்குற டெக்சஸ் ஆளுங்களுக்கு ‘ஸ்டாட்’டும் தெரியாது, நரம்பு எப்படி உணர்ச்சியைக் கடத்தறதுன்னும் தெரியாது. அவங்களுக்கு ப்ரியா சொல்றதைவிட தெற்கத்தி உச்சரிப்பில் வெள்ளை ஆண்கள் சொல்றது சரின்னு படலாம். அப்படியே சாதகமான முடிவா இருந்தாலும் அந்த வக்கீல்கள் ஒருமில்லியன் டாலரைப் பாக்கெட்டில் போட்டுக்கும்போது அவங்க தூக்கி எறியற கேவலம் ஐம்பதாயிரத்தைத் எப்படி ஏத்துக்க முடியும்?”
சாமியின் விளக்கத்தால் பரிமளா சமாதானம் அடையவில்லை. ‘கெம்-சேஃப்’ பணத்தைப் பற்றிய கசப்பான நினைவுகள் நீங்க மறுத்தன. அதனால், மறுநாள் பயணத்திற்காக ‘சார்ஜரி’ல் செருகியிருந்த அலைபேசியின் கூவல் அவள் காதில்விழவில்லை.
“உன்னுடையது” என்று நினைவூட்டிய சாமி அதை எடுத்துவந்து அவளிடம் தந்தான்.
பரிமளா செல்லின் முகப்பைப் பார்த்தாள். அழைப்பவரைத் தெரிந்தவராக அடையாளம்செய்ய முடியாமல் வெறும் கலிNஃபார்னியா என்று காட்டியது.
“ஹலோ!”
“பரிமளா கோலப்பன்?” என்று கட்டையான இந்திய ஆண்குரல்.
“பேசுகிறேன்.”
“நான் பத்மநாபன், கோர்னேலில் இருந்தேனே, ஞாபகமிருக்கிறதா?”
பரிமளா ஒருகணம் திகைத்தாள். சமாளித்துக்கொண்டு, “நன்றாக. நான்கு நாட்களுக்குமுன்தான் உன்னைப்பற்றி பேச்சு வந்தது” என்றாள்.
“மகிழ்ச்சியான நினைவுகளுக்காக என்று நம்புகிறேன்.”
“இனிமையான சூழலில்தான் நம்மைப்பற்றி பேசினேன், பத்மநாபன்!” என்று சாமியைப்பார்த்து புன்னகைபுரிந்தாள். அழைப்பு யாரிடமிருந்து என்று தெரிந்ததும் சாமி மேஜையில் கையை ஊன்றி எழுந்திருக்கப் போனான். பரிமளா அவன் கையை அழுத்தி உட்காரச்செய்தாள்.
அவள் குரலில் தொனித்த அயன்மையை அவன் கவனித்திருக்க வேண்டும். “பழையபடி பத்தூ என்றே என்னை அழைக்கலாம்.”
“பார்க்கலாம்.”
நீண்ட அசௌகரியமான மௌனம்.
உரையாடலின் சூழலை இனிதாக்க, குரலில் நட்புரிமையைக் கலந்து, “நான் எப்படி உன்னைக் கண்டுபிடித்தேன் என்று சொல்கிறேன்” என்று அவன் ஆரம்பித்தான். “நான் உனக்குப் பக்கத்தில் சன்னிவேலில்தான் இருக்கிறேன். என் குடும்பம் சாக்ரமென்ட்டோவில். பையனுக்கு திங்கள் பிறந்தநாள். பரிசு வாங்க புத்தகக்கடைக்குப் போனேன்.”
“என்ன படிக்கிறான்?”
“பள்ளியில் சீனியர்.”
“எங்கே?”
“சாக்ரமென்ட் அகடெமியில்.”
“உனக்கு அவன் ஒருபையன்தானா?”
“அவன் சின்னவன், முதலில் ஒருபெண். ‘கால்டெக்’கில் முதல்வருஷம். பையனுக்கும் அங்கே இடம் கிடைத்திருக்கிறது.”
“உன் மனைவி?”
“ராகினிக்கு கலிNஃபார்னியா வருமானவரி அலுவலகத்தில் வேலை.”
பத்மநாபன் புத்தகம் வாங்கப்போனதை பரிமளா மறக்கவில்லை. “பிறந்தநாளைக்கு விடியோ-கேம், ஐ-பாட், இப்படியில்லாமல் புத்தகம்தான் பரிசா? விசித்திரம்தான்.”
“படிப்பைத்தவிர அவனுக்கு வேறெதிலும் ஆர்வமில்லை.”
“அதில் உன்னைமாதிரி இருக்கிறான்.”
“அது அந்தக்காலம்.” இந்தக்காலத்தில் அவன் எப்படி மாறியிருக்கிறான் என்று சொல்லவில்லை. “பிரபல விஞ்ஞானப் புத்தகங்களின் வரிசையில் தேடினேன். ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ என்கிற தலைப்பு சுவாரசியமாகப் பட்டதால் எடுத்துப் பார்த்தேன். ஒருவாரம் முன்தான் வந்திருந்தது. புத்தகத்தை எழுதியது தெரிந்த பெயராக இருக்கிறதே என்று பின்அட்டையைத் திருப்பினால் உன்படம். முன்னே பார்த்ததற்கு உன்னிடம் அதிகம் மாறுதலில்லை.”
“நான் வேண்டாம் என்று மறுத்தாலும், புத்தகம் விற்கவேண்டும் என்பதற்காக, எனக்கு ஒப்பனைபோட்டு சின்னவளாக மாற்றினார்கள்.”
“நான் அதை நம்பவேண்டுமாக்கும். போகிறது. கணிதம் சம்பந்தப்பட்ட எதுவும் என்பையனுக்கு பிடிக்குமென்று அதை வாங்கினேன். உன்னைப் பாராட்டலாமென்று உன் வீட்டைக் கூப்பிட்டபோது ஒருபெண் எடுத்தாள். உன் மகளோ?” அந்தக் கேள்வியின் தொனியில் உனக்கொருபெண் இருக்கமுடியுமா என்ற சந்தேகம் தொக்கி நின்றது.
“என் மாணவி, ஆனால் மகள்போல். மகள் என்ன பேத்தி என்றுதான் சொல்ல வேண்டும்.”
அவன் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. “நீ வெளியூர் போயிருக்கிறாய் என்பதைத் தவிர வேறுவிவரம் தர மறுத்துவிட்டாள். எதற்கு, எந்த ஊருக்கு என்றுகூடச் சொல்லவில்லை. பெண் நல்ல அழுத்தம்.”
“அவள் தரவில்லையென்றால் என் செல்லின் எண் எப்படி கிடைத்தது?”
“நாற்பத்தொன்பது டாலர் தொண்ணுற்றைந்து சென்ட் கட்டியதும் ‘இன்Nஃபா-ட்ராக்’ உடனே கொடுத்தது.”
“அதற்கு அவ்வளவு விலையா?”
“அதுமட்டுமில்லை, இன்னும் சில விவரங்களுக்கும். உன் வயது.”
“உனக்கு ஏற்கனவே தெரியும்.”
“நெருங்கிய உறவு என்று யாரும் கிடையாது.”
‘கமலா உறவானாலும் ஒட்டுதல் இல்லை என்று ‘இன்Nஃபா-ட்ராக்’ தெரிந்து வைத்திருக்கிறதே! புத்திசாலிதான்.’
“அப்புறம் உன் வீடு, அதன் மதிப்பு, நீ உபயோகிக்கும் கார் நிஸான் சென்ட்ரா.”
“இதாகாவில் இருந்தபோது நீ ஒரு சென்ட்ரா வாங்கினாயே” என்று நினைவூட்டினாள்.
“கார்வாங்கினதும் அதில் பிட்ஸ்பர்க் கோவிலுக்குப் போய்விட்டு வந்தோமே, அது நன்றாக ஞாபகம் இருக்கிறது” என்றான் அவன் பதிலுக்கு.
“நாம் சென்ட்ராவில் நயாகரா ஃபால்ஸ் பார்க்கத்தானே போனோம்.”
“அப்படியா? கார் வாங்கியதும் அதை எடுத்துக்கொண்டு எப்போது பிட்ஸ்பர்க் போனேன்?” என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.
“புது வேலையில் சேர்ந்து புது கார் வாங்கியதும் புது மனைவியுடன் கோவிலுக்குப் போயிருப்பாய்.”
“கரெக்ட். நீ எப்போது சான்ஹொசே திரும்புகிறாய்?”
“அதையும் ‘இன்Nஃபா-ட்ராக்’ சொல்லவில்லையா?” என்றாள் கிண்டலாக. “அதற்குப்பிறகு என்னை அழைத்திருக்கலாமே.”
விட்டுக்கொடுக்காமல் அவனும், “தொண்ணூற்றிஒன்பது டாலருக்கு அதுவும் தெரிந்திருக்கும்” என்று சிரித்தான். “ஆனால், சில விஷயங்களை மனமிருக்கும்போதே செய்துவிட வேண்டும், தள்ளிப்போடக் கூடாது.”
“உண்மைதான், இப்போது நான் தூங்க வேண்டிய நேரம்.”
“ஐ’ம் சாரி! மறந்தேவிட்டேன். நீ கிழக்கே சென்றிருந்தால் உனக்கு என்னைவிட இரண்டுமூன்றுமணி அதிகமிருக்கும். நாளை கூப்பிடுகிறேன், பரிமளா!”
“பணச் செலவில்லாமலே உனக்கு ஒருவிவரம் தருகிறேன். நாளை காலை பதினோருமணிக்கு சான்ஹொசே வருகிறேன். பை!”
பாதி உரையாடல் மட்டும் காதில் விழுந்தாலும் மீதியை ஊகிப்பது சாமிக்கு சிரமமாக இல்லை. அதில் பழைய உறவைப் புதுப்பிக்கும் ஆசை இருந்திருக்கும் என நினைத்தான். பரிமளாவின் வார்த்தைகளில் அது தென்படவில்லை. அவளாகவே பேசுவதற்கு காத்திருந்தான்.
“நீ என்ன நினைக்கிறே?”
“நீ எங்களைப்பாத்து, முன்னே எப்பவோ நடந்ததைப்பேசி, சந்தோஷப்படலையா, அதுமாதிரி அவனுக்கும் ஆசைவந்திருக்கும்.”
“அப்போ, நான் பட்டும்படாம பேசினது தப்போ?”
“நாளைக்குத்தான் கூப்பிடறேன்னு சொல்லியிருக்கானே, இல்லாட்டாலும் அவன்நம்பர் உன்னோட செல்லுலே இருக்கும்.”

Series Navigation