பரதக் கலையின் வெளிநாட்டுக் காதலிகள்

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

சித்ரா சிவகுமார்


பிறந்தது ஒரு நாடு. வாழ்வது பிறிதொரு நாட்டில். உயிரென மதிப்பதோ மற்றொரு நாட்டின் கலையை. கசக்கிஸ்தானின் ஒக்சானா, ஜப்பானின் நவோகோ, பிரான்சின் சான்டிரின் மூவரும் ஹாங்காங்கில் வாழ்ந்து கொண்டு, நம் தமிழகக் கலையான பரதத்தைத் தங்கள் உயிரெனக் காதலித்து, அதை அன்னிய மண்ணில் பரப்பி வரும் கலைஞர்கள்.

மூவருமே சென்னையில் கலாக்சேத்திராவில் முறையாக பரதம் பயின்றவர்கள். ஹாங்காங்கில் பல மேடைகளை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், இக்கலையை பலருக்கும் கற்றுத் தரும் ஆசிரியர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒக்சானா பன்ஷிகோவா மூன்று நிலைகளில் சீனர், பிரன்சு, இத்தாலி, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் இந்தியர்களென 20 பெரியவர்களுக்கும், இந்திய, நேபாள, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கும் நடனம் கற்றுத் தருகிறார். நவோகோ கவாய் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்களுக்கு பயிற்சி தந்துள்ளார்.

ஒக்சானா பன்ஷிகோவா

ஐந்து வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்ட ஒக்சானா, 2000ஆம் ஆண்டில் இந்தியா செல்லும் வாய்ப்பு கிட்டிய போது, அங்கு காணக் கிடைத்த நடன நிகழ்ச்சி தன் வாழ்க்கைப் பாதையை மாற்றியதாக எண்ணுகிறார். அல்மாடியில் இந்தியத் தூதரக மையத்தில் கலாக்சேத்திரத்தில் பயின்ற அக்மரல் கைனசரோபாவிடம் நடனம் கற்கச் ஆரம்பித்த பின், நான்கு வருட நடன பட்டப்படிப்பிற்கான கல்வி உதவி பெற்று சென்னை கலாக்சேத்திராவில் கால் பதித்தார். ஐந்து வருடங்களுக்குப் பின்னர், கலாக்சேத்திர பிரார்த்தனைக் கூடத்திலேயே தன் அரங்கேற்றத்தையும் செய்து திரும்பினார். பின்னர் ஹாங்காங்கில் 2007லிருந்து கலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியையாக மாறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் தன் இனிய நடன பாணியால் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தும் வருகிறார்.

நவோகோ கவாய்

ஓசாகாவில் லீலா சம்சனின் நடனத்தைக் கண்டு மயங்கியே பரதத்தைக் பயிலும் ஆர்வம் ஏற்பட்டதாக நவோகோ கூறுகிறார். ஜெயஸ்ரீ நாராயணனை முதலில் குருவாகக் கொண்டு நடனத்தைக் கற்க ஆரம்பித்து, பின்னர் கலாக்சேத்திரத்திலும் பாண்;டி பல்கலைகழகத்திலும் பரதம் கற்றார். ஆறு வருட பயிற்சிக்குப் பின் பாண்டியில் அரங்கேற்றம் செய்து திரும்பினார்.

பதினாறு வருடங்களாக ஹாங்காங்கில் வாழும் சான்டிரின் பொம்மலரேட், இந்தியாவின் மீதும், அதன் கலை, உணவு, திரைப்படங்கள் மீதும் அதிக காதல் கொண்டு, அடிக்கடி இந்தியப் பயணங்கள் செய்தவர். ஆனாலும் ஹாங்காங்கில் தான் முதன்முறையாக இந்தியப் பரம்பரிய நடனமான குச்சுப்புடி நடனத்தை ஹரி ஓம் ஆடக் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.

சான்டிரின் பொம்மலரேட்

உடன் இந்திய நடனக் கலையை கற்கும் ஆர்வம் பெற்று கலாக்சேத்திரத்தில் பயின்ற சந்தோஷ் மேனனிடமும், ராஜேந்திர நியதியிடமும் பரதத்தைக் கற்க ஆரம்பித்தார். பின்னர் சென்னைக்கே சென்று இரண்டு வருட பயிற்சியும் பெற்றார். மொழி வல்லுநராக பணிபுரியும் இவர் கலையைப் பயிற்றுவிக்க நேரமில்லாத போதும், நடன நிகழ்வுகளில் பங்கு கொள்ள மட்டும் சமயத்தை ஒதுக்கி விடுகிறார்.

ஆண்டுதோறும் சென்னை உதவும் கரங்களுக்காக நடத்தப்படும் நிதி திரட்டும் நிகழ்வில் மூவரும் தவறாமல் பங்கு கொண்டு, பரதத்தின் மேல் கொண்ட காதலையும் தங்கள்; திறமைகளையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல் தாங்கள் இந்தியாவின் மீதும் இந்திய மக்கள் மீதும் கொண்ட காதலையும் வெளிப்படுத்துகின்றனர்.

நடனமாடும் போதெல்லாம் இறைவனின் அருகே இருக்கும் வாய்ப்பைத் தரும் பரதத்திற்கு நன்றி கூறுவாராம் ஒக்சானா. நடனமாடும் தருணத்தில் தன் வாழ்க்கையின் வேரைக் கண்டு கொண்டதை உணர்வதாக நவோகோ கூறுகிறார். நடனம் ஒரு ஆன்மீகப் பயிற்சி. அது ஆத்மாவிற்கு உணவாக அமைகிறது என்று கூறுகிறார் சான்டிரின்.

பரதத்தின் இம்மூன்று வெளிநாட்டுக் காதலிகள் நமக்குக் கிடைத்த, நம் கலைக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்