பன்னீர்ப்பூக்கள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

கோகுலன்தனிமையின் சலிப்பில்
வாசல் வந்தமரும் இந்நடுநிசியில்
சிதறிக்கிடக்கும் எதிர் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள்
சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன

பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு எனக்கு அவசியமாகின்றது

வெளிகளை நிரப்பிக்கிடக்கும் நறுமணம்
வலிகளை மறப்பதற்குப் போதுமானதாகவும்
குளிர்காற்றில் நிறைந்துவரும் இரவின் பாடல்
ஆறுதலைக் கொண்டுவருதாகவும் இருக்கின்றது

உதிர்ந்து கிடப்பினும்
மணந்து கொண்டிருக்கின்ற வாசப்பூக்கள்
தீர்க்கம் நிறைந்தவை

காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்
இரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்
இவை அறிந்திருக்கக் கூடுமெனத் தோன்றுகிறது

சூழ்ந்த இரவின் இருளில்
வலிகளை கரைத்துக்கொண்டிருக்கும் நான்
கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைச் சூட்சமங்கள்
இன்னும் ஏராளம் இருக்கின்றன


நட்புடன்,
கோகுலன்
gokulankannan@gmail.com

Series Navigation

கோகுலன்

கோகுலன்