பத்து செட்டி

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

தி.ஜானகிராமன்


பத்து செட்டி வாசலோடு போகிறார். ரொம்ப கஷ்டம். பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக்குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப ‘ போல சவரம் செய்த தலை. ‘ப ‘வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம்கூட இல்லை. காலை, பகல், மாலை– எந்த வேளையிலும் நாமம் இல்லை. குளிக்கக்கூட அவருக்கு மனசு வரவில்லை–இல்லை, குளிப்பதையே அடியோடு மறந்துவிட்டாரா ? ஏற்கனவே அவர் மாநிறத்துக்கும் குறைந்த தவிட்டு அல்லது சாலைமண் நிறம். இப்போது குளிக்க மறந்ததாலோ என்னவோ, தோலுக்கு அசல் மண் நிறமே வந்துவிட்டது. வாசலோடு குறுக்கும் நெடுக்குமாக பொழுது விடிந்து சாய்கிற வரையில் நூறுதடவை நடக்கிறார். எதற்கு இப்படி குட்டி போட்ட பூனையாக அலைகிறார்.

திண்ணையில் படிக்கிற நான் நிமிர்ந்து பார்ப்பேன். மெதுவாகச்சிரிப்பார்.

‘இப்ப எந்த க்ளாசு ? ‘

‘ஆறாவது. ‘

‘நல்லாப் படி ‘ என்று உபதேசம் செய்து விட்டு நடப்பார்.

அடுத்த வாரமும் அதே கேள்வி.

‘இப்ப எந்த க்ளாசு ‘ ‘

‘ஆறாவது ‘ ‘

‘நல்லாப் படிக்கணும். ‘

வாராவாரம் இதே கேள்வி. இதே பதில். இதே உபதேசம்.

‘பாவம் ‘ என் அம்மா நிலைப்படியில் நின்றுகொண்டு.

அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன்.

‘ஏம்மா ? ‘

‘இப்படியும் வரணுமாடா இவனுக்கு ‘ இவன் அப்பா பாலுசெட்டி எப்படியிருந்தார் ‘ அவர் செத்துப் போனப்பறம் ரொம்ப கடனும் ஒடனுமா வந்து எல்லாம் போயிட்டுதடா. இவனுக்கே மூணு குழந்தை ஆயிடுத்து. இவன் அக்கா மூணு பேரும் குறைப்பட்டுப் போயட்டாடா. எவ்வளவு ஜெரப்பா கலியாணம் பண்ணினார் தெரியுமோ அவளுக்கு பாலு செட்டியார் ‘ பாண்டு என்ன, கச்சேரி என்ன, நாலு குதிரை சாரட்டிலே ஊருகோலம். என்ன சாபமோ–மூணு மாப்பிள்ளையும் ஒத்தன் பின்னாலே ஒத்தனா எப்படித்தான் செத்துப் போனானோ. ஒத்தனுக்கு அம்மை போட்டித்து. ஒத்தனுக்கு டி.பி. இன்னொருத்தன் குளத்துலெ குளிக்கிறபோது படியிலே பாசி வழுக்கி முழுகிப் போயிட்டுது. இப்ப மூணு பொண்ணும் வீட்டோட இருக்கு. பத்துவுக்குக் கலியாணம் வேறெபண்ணி மூணு குழந்தை. எப்படித்தான் சாப்பிடறாளோ எல்லாரும் ‘ ‘

கடை இந்த வருஷம்தான் இல்லை. மளிகைக்கடை. வீட்டுக்கு வருகிற விருந்தினர்கள் எனக்குக் காலணா அரையணா என்று விடைபெறும்போது கொடுப்பார்கள். அந்தக் காலத்து வழக்கம். உடனே ஒரு ஓட்டம் பத்து செட்டி கடைக்கு.

‘வாலைய்யரா– வா.த்ராட்சப் பழமா ‘ ‘

கடையாட்களில் ஒருவன் உலர்ந்த த்ராட்சைப் பழத்தை எடுத்து வருவான்.

‘ஏமிராதி ‘ முஸலிகொடுகா ‘ ஆ பண்டு இந்துராரா மஞ்கி பண்டுகா ஐவாருக்கு ‘ என்று பத்துசெட்டி ஒரு சத்தம் போடுவார்.

அவன் உள்ளே போய் வேறு த்ராட்சைப் பழத்தைச் சின்னப் பொட்டணமாகக் கட்டித் தருவான். வழியில் பிரித்துப் பார்த்தால் கறுப்பாக பிசுக்கும் ஈர்க்குமாக ஒட்டி கட்டி தட்டின பழங்கள். பொல பொலவென்று அம்பர் நிறமாக இருந்த அந்தப் பழத்தை விட இது மஞ்சி பழமா ? ‘மஞ்சி ‘க்கு எனக்கு அர்த்தம் தெரியும். தெருக்குழாயில் அலம்பி எல்லாப் பழங்களையும் தின்றுவிட்டு வீட்டு வாசற்படி ஏறுகிற வழக்கம். பத்து ‘ப ‘ சவரத்துக்குக் கீழ் பளிச்சென்று வெள்ளை நாமமும், திருச்சூர்ணமும், பட்டுச் சட்டையும் சலவை வேட்டியுமாக உத்தரவு போடுவார். என்னை ஏன் ‘வாலய்யர் ‘ என்று அழைக்கிறார் என்று புரியாது. ஒரே ஒரு தடவை பெரிய சாக்கடை ஓரமாக நின்று எட்டிப் பார்த்த போது உள்ளே விழுந்து விட்டேன். அப்போது ஏழு வயது. முழங்கால் மட்டும் சாக்கடை நீர் ஓட்டம். பத்து செட்டியார் வீதியோடு போய்க் கொண்டிருந்தவர் நான் விழுவதையும் தலைகூடத் தெரியாத பள்ளத்தில் நின்று கிலி கொண்டு அழுவதையும் பார்த்து, என்னைத் தூக்கி வீட்டுக் கொண்டு விட்டு ‘விஷமக் கொடுக்கு, இனிமெ சாக்கடைப் பக்கம் போனெ ‘ என்று சிரித்து அதட்டி விட்டுப் போனார்.

அதிலிருந்து நான் வாலய்யராகி விட்டேன்.

இப்போது அந்தக் கடை இல்லை. பத்து போண்டி ஆகி விட்டாராம். அழுக்கு வேட்டி, வெறுங்கால்.

நான் பள்ளிக்கூடம் முடிக்கிற வரையில் ‘இப்ப எந்த க்ளாசு ? ‘ என்று மாதத்திற்கு ஒரு தடவை கேட்பார். என்னவோ, மாசத்திற்கு ஒரு வகுப்பாக நம் பள்ளிக் கூடங்கள் மாணவர்களை உயர்த்துவது போல. ஒரே ஒரு வித்தியாசம் வாரத்துக்கு ஒரு தடவை போய் மாசத்துக்கு ஒரு முறை இரண்டு மாசத்துக்கு ஒரு முறையாகத் தேய்ந்து விட்டது. நான் கடைசி வருஷம் படிக்கிற போது, ஆளே வாசலில் தென்படவில்லை. அதே தெரு, ஒரு இருபது வீடு தள்ளி அவர் வீடு. இப்போதெல்லாம் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு குமாஸ்தா மேஜை முன் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

இண்டர் மீடியட், பி.ஏ. எல்லாம் படிக்கும் போது ஊருக்கு விடுமுறையில் வரும்போது கூட ஆளை அதிகமாகப் பார்க்க முடிவதில்லை.

பி.ஏ. கடைசி வருஷம் என நினைக்கிறேன். வாசலில் வழக்கம்போல எழுதிக் கொண்டிருக்கிறார் பத்து.

அவர் அக்கா ஒரு நாள் வந்தாள். என் அம்மாவிடம் வந்து முறையிட்டாள்.

‘ஐகாருகிட்ட சொல்லுங்கம்மா கொஞ்சம் விவூதி மந்திரிச்சுக் கொடுக்கச் சொல்லுங்களேன். ரொம்ப மோசமாய்ப் போச்சு இப்போ. இப்ப சரியா சாப்பிடறது கூட இல்லம்மா. ‘

என்னவாம் ?

ஏழெட்டு வருடங்களாக, பத்து திண்ணையில் உட்கார்ந்து கணக்கெழுதிக் கொண்டிருக்கிறாராம். தினப்படி வரவு செலவு. பயறு கொள்முதல் ஆறாயிரம் ரூபாய் புளி முன்னூறு தூக்கு, எழுநூறு ரூபாய் முப்பது வண்டி அரிசி ஒம்பதாயிரத்து ஐந்நூறு ரூபாய். சூடம் நூறு ரூபாய், மிளகாய் வற்றல் முன்னுற்றைம்பது ரூபாய். ராமன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு கொடுத்தது. மூவாயிரம் ரூபாய். சோசப் ஹைஸ்கூல் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளம் ஆயிரத்து ஐந்நூறு. கும்பகோணம் தொழுநோய் ஆஸ்பத்திரிக்குக் கொடுத்தது பன்னீராயிரம்….

இப்படியாக தினமும் கணக்கு எழுதுகிறாராம்.

எல்லாம் ஆயிரக் கணக்கில் தான்.இப்போதெல்லாம் வரவு செலவு லட்சக்கணக்கில் ஏறிவிட்டது. சுதந்திர தின விழாவுக்கு நன்கொடை 2 லட்சம். கிருஷ்ணன் கோயில் பிரகாரம் புதுப்பிக்க மூன்று லட்சம். செலவுகள் இப்படி. வரவுகளோ பத்து லட்சக் கணக்கில் எல்லாம் மொத்த வியாபாரம். மிளகு, மிளகாய், மஞ்சள், நெல், சைக்கிள் பட்டுப்புடவை, பம்ப் செட்டு ரேடியோக்கள் என்று பல ஸ்தாபனங்களுக்கு பத்து செட்டி முதலாளியாம் கணக்குப் புத்தகத்தில்.

‘நாள் முச்சூட்டும் இதே வேலைதான். சாப்பிடக் கூப்பிட்டாக்கூட, இருக்கா இன்னும் பதினைஞ்சு நிமிஷம் தான் இதமுடிச்சிட்டு வர்றேன். இதாங்க பதில். ரொம்பக் கலங்கிப் போச்சுங்க. மெட்ராஸ்ல ஆஸ்பத்திரியிலே கொண்டு சேர்க்கலாம்…….மெட்ராஸ் போக பணம் ? ‘ அக்காவின் கண்களில் நீர் முட்டி வருகின்றது. தலைப்பால் துடைத்து, ‘வெங்கடேசா–சீனுவாசா ‘ என்று புலம்புகிறாள். ‘குணசீலமாவது கொண்டு போலாங்களா அது திருஷ்னாப்பள்ளிக்கிட்டங்கறாங்க, ரொம்ப தூரமில்லெ ? ‘

அந்த அக்காள் ஒரு நோட்டைக் கூட எடுத்துக் காண்பித்தாள். புரட்டி புரட்டி பார்த்தோம். இருநூறு பக்கம் நோட்டு. அத்தனை பக்கத்திலும் கணக்கு மளிகை மண்டி. சைக்கிள் ஏஜென்சி, சிமெண்ட் ஏஜென்சி இப்படி இரண்டு டஜன் வியாபாரங்கள் ‘ இப்படியா ஒரு பித்துக்கு ஆசை பொங்கும் ‘ சிரித்துக் கொண்டே ஒவ்வொரு ஸ்தாபனக் கணக்காக எண்ணிப் பார்த்ததில், இருபத்தைந்து கோடிக்கு மேல் வரவு செலவுகள்.

அப்பா சிரித்தார். விபூதி மந்திரித்துக் கொடுத்தார். முடிந்தால் குணசீலம் போகச் சொன்னார். ஐம்பது ரூபாய் கடனும் கொடுத்தார்.

இது நடந்து முப்பது வருஷமாகி விட்டது.

ஒருநாள் ஐநூறு ரூபாய்க்கு ஒரு செக்கும் கடிதமும்.

‘பத்து செட்டி என்ற பத்மநாப செட்டியார் ‘ என்று கையெழுத்திட்ட கடிதம்.

பத்மநாப செட்டியார் ஹைஸ் கூலாம். அதில் ஆண்டு விழாவாம். ‘நீங்கள் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும். பயணச் செலவுக்கு நீங்கள் தொல்லைபடக் கூடாது என்று ஒரு சிறிய தொகைக்கு செக் இணைக்கப்பட்டிருக்கிறது. உங்களிடம் அவசியம் பேசவேண்டிய சங்கதிகளும் உள்ளன. ‘

என்ன இது ‘

அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தை விட்டுப்போய் இருபது வருஷங்களாகி விட்டன. ஊரில் யாரும் உறவினர் இல்லை. என் விலாசம் எப்படி இவருக்குத் தெரிந்ததாம் ?

ரயில் ஏறிப்போனேன்.

பத்துவின் வீட்டுக்குப் போனேன். அதே வீடு தான். அடையாளம் கண்டுபிடிக்க ஒரு நிமிஷம் ஆயிற்று. பழைய வீடு இல்லை. வலது, இடது வீடுகளையும் வாங்கி, பெரிய இரண்டு மாடி பங்களாவாகக்கட்டி விட்டாராம். பத்துவின் கணக்குப் பிள்ளை, மாடிக்கு அழைத்துப் போனார்.

பழைய பத்து தான். அதே ‘ப ‘ சவரம். தலையில் கொஞ்சம் நரை. நாமம். ஸ்ரீசூர்ணம். சில்க் ஜிப்பா, ஒரு ‘சேட்டு ‘ மெத்தையில் இரட்டை நாடியாக உட்கார்ந்திருந்தார் பத்து. வயசு எழுபதுஇருக்கும் மனதுக்குள் கணக்குப் போட்டதில். ஆனால் தோற்றம் ஐம்பது ஐம்பத்தைந்து. என்ன வேடிக்கை ‘

‘வாங்கோ–வாங்கோ ‘ ‘ என்று பெரிய குரலில் வரவேற்றார். பல் தேய்க்கச் சொன்னார். காப்பி வந்தது. வேலை குடும்பம் பற்றி எல்லாம் விசாரித்தார். முப்பது நிமிஷம் போயிற்று இப்படி. ‘நீ போகலாம் ‘ என்று கணக்குப் பிள்ளைக்கு உத்தரவிட்டார். அவர் படியிறங்கினார்.

பேசினார்.

‘லெட்டரும் செக்கும் பாத்து பைத்யம்னு நெனச்சிருப்பேள் ‘ என்று சிரித்தார்.

என்ன இது ? சந்தேகமாகத்தான் இருந்தது. சில பேர் சில விஷயங்களில் மட்டும் ஒரு தினுசாக இருப்பதுண்டு. எங்கள் உறவினர்களில் ஒருவர் இப்படி இருந்தார். பெரிய வைத்தியர் நல்ல பெயர். நல்ல கைராசி–இத்யாதி. ஆனால் திடார் திடார் என்று அவருக்கு மைசூர் மகாராஜா தனக்குப் பெண் கொடுப்பதாக வாக்களித்திருப்பதாய் ஒரு நினைவு வரும். கலியாணம் ஒத்திப் போடப் பட்டிருப்பதாகவும் சில வித்வான்களின் செளகரியத்தை உத்தேசித்தும், சில பந்தல்காரர்கள் ‘ப்ரீ ‘ இருக்கிற தேதிகளை உத்தேசித்தும், இப்படி பேசிக் கொண்டே போவார். இப்படி அவரிடம் கல்யாணப் பேச்சைக் கிளப்பி ஓசி வைத்தியம் செய்து கொண்டவர்கள் நூற்றுக்கணக்கு.

பத்து சொன்னார்.

‘உங்களை ஏன் குறிப்பா வரச் சொல்லி லெட்டர் போட்டேன் தெரியுமோ ? எனக்குப் பைத்தியப் பட்டம் கட்டி எங்க அக்கா குண சீலத்துக்கு என்னை அழைச்சிட்டுப் போறேன்னு புறப்பட்டா, உங்கப்பா விபூதி மந்திரிச்சு அம்பது ரூபா செலவுக்கும் குடுத்தார். ரயில்லெ திருஷ்னாப் பள்ளிக்குப் போனோம். பஸ் ஸ்டாண்டுலெ ஒரு நோட்டாசு பெரிசா போட்டிருந்தது. ‘வாருங்கள் சாம்ராஜ்யத்தை அடையுங்கள். நோயில்லாத சாம்ராஜ்யத்தை அடையுங்கள். வறுமையில்லாத சாம்ராஜ்யத்தை அடையுங்கள். பணம் வீடு வசதிகள் எல்லாம் வற்றாமல் நிரம்பும் சாம்ராஜ்யத்தை அடையுங்கள். பூஜ்ய கில்பர்டு வழி காட்டுவார் ‘னு போட்டிருந்தது. அதென்னடா வழின்னு குணசீலத்துக்கு நாளைக்குப் போலாம்னு அக்காட்ட புடிவாதம் புடிச்சு அந்தத் திடலுக்குப் போனேன். ஒரு வெள்ளைக்காரன் இங்கிலீஷ்ல கையை மேலே காமிச்சு, ஏதோ கூட்டத்துக்கு பேசிக் கொண்டிருந்தான். கூட்டம் முடிஞ்சப்புறம் இஷ்டப்பட்டவங்க நேரா வந்து அவரைச் சந்திக்கலாம்னு தர்ஜமா பண்றவன் சொன்னான். கூட்டம் முடிஞ்சப்புறம் அவர்கிட்ட போனோம். ஒரு கூடாரம் அடிச்சு தங்கியிருந்தான். அந்த வெள்ளைக்காரன். ஒருத்தர் ஒருத்தரா உள்ளே விட்டுக் கிட்டிருந்தாங்க. எங்க சான்ஸ் வந்தது. போனோம்.

‘உம் பேரென்ன ? ‘–கேட்டார் அந்த வெள்ளைக்காரர்.

‘பத்து செட்டி ‘

‘அப்படின்னா ‘ ‘

‘பத்துன்னா டென் ‘னுனு தர்ஜமா பன்றவன் இங்கிலீஷ்ல சொன்னான்.

‘ஓ ‘ ‘ என்று ஆச்சரியமா பார்த்தான். ‘பத்து பத்தா. டென்டென் ‘ உம் பேரிலியே ரகசியம் இருக்கே. அதிலியே கர்த்தா ரகசியம் வச்சிருக்காரே ‘ ன்னு ரொம்ப ஆச்சரியப்பட்டாராம் வெள்ளைக்காரர்.

என்னனு முழிச்சேன்.

‘உங்கிட்டே பத்து அணா, பத்திலே ஒண்ணு சாமிக்கு அல்லது ஏழை, அல்லது நோயாளிங்களுக்கு கொடுக்கணும். பத்து ரூவான்னா, ஒரு ரூவா, பத்து சட்டைன்னா ஒரு சட்டை. பத்து வீடுன்னா ஒரு வீடு. பத்து மாங்கான்னா ஒரு மாங்கா. பத்து ஆப்பிள்னா ஒரு ஆப்பிள். பத்திலே ஒண்ணு கொடு. ஆயிரம் ஆயிரமாய் திரும்பி வரும். எடு சீக்கிரம். கர்த்தர் கையை ஏந்திக்கிட்டுருக்காரு. சீக்காளிங்களுக்குக் கொடுங்க. எடு சீக்கிரம்னாரு. கையை நீட்டினாரு எடுன்னு அக்காவை நிமிண்டினேன். யோசிச்சிக்கிட்டே நின்னா. நானே அவ தலைப்பு முடிச்சை அவிழ்த்துப் பார்த்தேன். நாப்பத்திரெண்டு ரூவா இருந்திச்சி கணக்குப் போட்டேன். நாலு ரூவாயையும் மூணரையணாவையும் எடுத்துக் கொடுத்தேன். நான் கணக்கா கொடுக்கறதைப் பார்த்து அந்த வெள்ளைக்காரன் சிரிச்சிக்கிட்டான் மெதுவா. வாங்கிக்கிட்டான். ஏந்து நின்னு ஆகாசத்தைப் பார்த்தான். கை ரெண்டையும் உயர்த்திக் கிட்டான். என்னமோ சொன்னான். என் தலையிலே கைவச்சுத் தடவினான். போன்னான். உனக்கு நாற்பத்து மூனரை லட்சம் வரும்கிறாரு. போங்கிறான் தர்ஜமா பண்றவன். ‘இன்னமே எது வந்தாலும் பத்துலெ ஒண்ணு ஏழைப்பட்டவங்களுக்கு, இல்லாதவங்களுக்கு கொடுத்திடணும், கொடுக்கறீங்களா ‘ன்னான்.

‘ம். ரெடியா ‘ன்னேன்.

‘சரி போங்க ‘ன்னான்.

குணசீலம் போனோம். சாமி கும்பிட்டோம். திரும்பி வந்தோம். வந்த வழியிலெ திருஷ்ணாப் பள்ளியிலெ மறுபடியும் எறங்கினோம். சித்தரா கோவாலு செட்டின்னு எங்கப்பாருக்கு தூரத்து பந்துவாம். அங்க ஒரு நாள் தங்கி ஊர் சுத்திப் பார்த்துட்டுப் போவலாம்டான்னா, எனக்குத் தெரியும் ரொம்பப் பணக்காரனாச்சே, லட்சியம் பண்ணமாட்டான்னு சொன்னேன். லட்சியம் பண்ணாட்டி இருக்கவே இருக்கு ரயில்வே ஸ்டேஷன்னுசொன்னா அக்கா. போனோம் சாப்பாடு போட்டாங்க ‘ நிலைமையெல்லாம் கேட்டாரு. அவரும் ‘என்னை அவிசக் கோமுட்டின்னு நினைச்சீங்களா ? எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூடாது ‘ன்னு வருத்தப்பட்டாரு. ஒரு ஐயாயிரத்தைக் கொடுத்துக் கூட ஒரு ஆளை அனுப்பிச்சாரு. கடையே மறுபடியும் இன்னொரு இடத்தில வச்சோம். அந்த ஆளு ஊருக்குப் போன உடனே பத்திலெ ஒண்ணு ஞாபகம் வந்தது. ஒரு ஐந்நூறை எடுத்துப் பள்ளிக் கூடத்துக்குக் கொடுத்தேன். அவ்வளவுதான் கடையிலே திமுதிமுன்னு கூட்டம் வாடிக்கையை சமாளிக்க முடியல. அன்னன்னிக்கு வர்றலாபத்துல பத்தில ஒண்ணு. மறுநாள் காலம்பற எங்கியாவது போயிறும். இப்ப சிமெண்டு, உரம், பாலியஸ்டர் எல்லாத்துக்கும் எஜென்டு. அவன் சொன்னான் பொறு. இன்னயதேதிக்கு சொத்து வியாபார மெல்லாம் அவன் சொன்னாப்பலவே நாப்பத்து மூனரை லட்சம் மதிப்பு. நான் பைத்தியம்மாதிரி கணக்கு எழுதிக் கிட்டு இருந்தேன். தின்னையிலெ உட்கார்ந்துப்பா அக்கா. நான் நெசம்மாவே அப்பல்லாம் பெரிய பணக்காரன் முதலாளின்னு நெனப்போடவே நோட்டு நோட்டா எழுதி ஒரு தடவை பார்த்துட்டு சாமி கும்பிடுவேன். அப்புறம் தான் சாப்பிடுவேன். அதுதான் என்னை அந்த வெள்ளைக்காரன்கிட்ட தள்ளிக்கிட்டுப் போச்சு. நல்லாச் சொன்னான் அவன். பேர்லியே ரகசியம் இருக்குன்னு. அதுலேர்ந்து பத்து செட்டின்னே கையெழுத்துப் போடறது, உனக்கு அடையாளம் புரியணும்னு தான் பத்துசெட்டிங்கிற பத்மநாப செட்டின்னு கையெழுத்து போட்டேன். உங்கப்பா ஐம்பது ரூவா கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன். வேண்டான்னுட்டாரு அதுதான் இப்ப பத்து மடங்கா உனக்கு அனுப்பிச்சேன். உங்கப்பா பணம் கொடுக்காட்டி நான் எங்க திருஷ்ணாப்பள்ளிக்குப் போயிருக்கப் போறேன், இப்பவும் நான் நாலு லட்சத்து முப்பத்தைஞ்சாயிரம் இந்த நிமிஷம் தர்மமா தூக்கிக்கொடுக்கிறேன்னு வச்சுக்க நாலு கோடி முப்பத்தைஞ்சு லச்சமாச் சொத்து பெருகும். யார் மானேஜ் பண்றது ‘ அதெல்ல கவனிக்கணும் ? ‘

‘ட்ரீங் ‘

மணிப்புத்தான் அமுக்கினார் பத்து.

ஆள் வந்தான்.

‘ரண்டு காபி ‘

‘இப்பவும் என்னப் பாத்தா பைத்தியமாத் தோண்றதோ ‘ ‘ பத்து கேட்கிறார்.

‘பெரிய பைத்தியம் ‘ என்று சிரித்தேன்.

‘நீ சொல்லுவேன்னு தெரியும். இப்ப பசங்கள்ளாம் என்ன கிளாஸ் படிக்கிறா ? ‘

Series Navigation

- தி. ஜானகிராமன்

- தி. ஜானகிராமன்