பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

பரிமளம்


பட்டிக்காட்டான் X நகரத்தான், குடும்பப்பெண் X படித்தபெண், இந்தியப்பண்பாடு X மேலைநாட்டு அநாகரிகம் என்று கற்பனையான முரண்பாடுகளை முன்வைத்துப் பல திரைப்படங்கள் வழக்கம்போல் பொய்களை அவிழ்த்துவிட்ட காலம் ஒன்றிருந்தது. இவற்றுள் முதலிரண்டும் ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டன. இந்தியர்கள் உலகமெங்கும் பரவி வாழும் இந்தக்காலத்திலும் மூன்றாவது முரண் சாவதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் இன்னும் உயிரோடு உலவுகிறது.

என்ன முயன்றும் தமிழ்ப் பண்பாடு, இந்தியப் பண்பாடென்று சொல்லப்படும் எதுவும் (ஒருநாள் சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழகத்தில், அமெரிக்க வாழ் பெண்மணியொருவர் அங்கே இந்தியப் பண்பாட்டைக் கட்டிக் காக்கத் தன் பேரன் பேத்திகளுக்குச் சுலோகம் கற்றுத் தருவதாகக் கூறினார். ‘அப்படியானால், இந்தியாவில் பிறந்தாலும் சுலோகம் அறியாத நான் பண்பாடற்றவனா ?’ என்றெண்ணிச் சிரித்துக்கொண்டேன்) என் பிடிக்குள் இதுவரை அகப்படவில்லை. வரையறைக்குள் அடங்காமல், என்னவென்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாமல் இவை நழுவி நழுவிப் போகின்றன.

நம் நாட்டில் காலம் காலமாகக் கடியப்பட்டுவரும் பொய், களவு, புறங்கூறுதல், சுயநலம், ஏமாற்று போன்றன உலகின் எல்லா நாடுகளிலும் (உலகின் எல்லா நாடுகளையும் நான் நேரடியாக அறியேன் என்றாலும் இப்படிச்சொல்வதில் தவறு இல்லையென்று நினைக்கிறேன்) தீயொழுக்கங்களாகவே கருதப்படுகின்றன. விருந்தோம்பல், இயலாதவர்க்கு உதவுதல், நேர்மையோடு இருத்தல், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்தல், காடுவரை சென்று இறந்தோரை வழியனுப்புதல் போன்றன நல்ல பண்புகளாக அனைவராலுமே போற்றப்படுகின்றன.

அன்பு, பாசம், நட்பு, காதல், ஊடல், கருணை, பிரிவில் வருத்தம், இறப்பில் அழுகை, பெரியோரை மதித்தல், இறை நம்பிக்கை, பில்லி சூனியம், திருமணத்தில் மொய்யெழுதுதல் போன்றவையும் நாட்டுக்கு நாடு இடத்துக்கு இடம் வேறுபடுவதில்லை.

பணம் படைத்தோரை வியப்பவரும் எளியோரை இகழ்பவரும் இன, மத, நிற (இந்தியாவில் சாதி) வெறியரும் சட்டப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவரும் கூட உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் உள்ளனர்.

கால இடனறிந்து பேசும் பண்பு, குழந்தைகளின் குறும்பு, இளைஞர்களின் முதிர்ச்சியின்மை, மூத்தோரின் பிடிவாதம் போன்றவற்றுக்கும் எந்த ஒரு நாடும் தனி உரிமை கோர இயலாது.

நடிகர்களை வழிபடுவதும், எழுத்தாளர்களை மெச்சுவதும், விளம்பரங்களில் மயங்குவதும், கிசுகிசு செய்திகளில் திளைப்பதும், ஊர்வம்பு பேசுவதும், காக்கா பிடிப்பதும், கழுத்தறுப்பதும், நண்பருக்கு உயிரைக்கொடுப்பதும், பிறன்மனை நயத்தலும், பெண்டு பிள்ளைகளை அடிப்பதும், சிறுமை கண்டு பொங்குவதும் உலகப்பொதுப் பண்புகளே.

இவற்றுக்கும் இவைபோன்று முடிவில்லாமல் நீளும் இன்னும் பல பொதுப் பண்புகளுக்கும் அப்பால் பொதுவிடங்களில் ஒழுக்கம், புதியவர்களுக்கும் மலர்ந்த முகத்துடன் வணக்கம் சொல்லும் அழகு, சொந்தக்காலில் நிற்க விரும்புதல் போன்ற நம்மிடம் இல்லாத நல்ல பல பண்புகள் அங்கே இருக்கின்றன.

இப்படிப் பார்த்தால் உலகப்பண்புகள் ஒன்றே. வேறுபடும் இடத்திலும் நாம் கீழே இருப்பதுபோல் தோன்றுகிறது. பிறகு எதை வைத்து நாம் மார்தட்டிக் கொள்கிறோம் ?

சிலர் கூறும் ஒரு காரணம் ‘இந்தியர்கள் ன்மீகத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்; மேல் நாட்டினர் பணம், பொருள், சுகபோக வாழ்க்கையை விரும்புபவர்கள்’ என்பது. இதைவிட அபத்தமான ஒரு வாதம் வேறு எதுவும் உண்டாவென்பது தெரியவில்லை. மக்கள் வாழ்க்கை உலகம் முழுவதும் பொருளையும் பொருளீட்டுவதையும் மையமாக வைத்தே இயங்குகிறது. இந்தியர்கள் ன்மீகவாதிகள் என்பது எந்த அளவுக்குப் பிழையோ அதே அளவு மற்ற நாடுகளில் ன்மீகம் இல்லை என்பதும் பிழையே.

குடும்பப் பிணைப்பு இல்லை, மணமுறிவுகள், முதியோர் இல்லங்கள் என்பன வேறு சில சப்பைக் காரணங்கள்.

உண்மையில் மேல்நாட்டு அநாகரீகம் என்று பேசும்போது அந்நாட்டுப் பெண்களின் உடல்கள் பெறுகின்ற கவனத்தில் ஒரு சிறிய அளவுகூட மேற்கூறப்பட்ட பொதுப் பண்புகள் பெறுவதில்லை. மேல்நாட்டுப் பெண்கள் புனிதமற்றவர்கள்; எனவே அந்நாடுகள் அநாகரீகமானவை. இதற்கு மேல் விவாதத்திற்கே இடமில்லை. வெற்றி எங்களுக்கே.

மேல்நாட்டுப் பெண்கள் வரலாற்றுக் காலந்தொட்டு இன்றிருப்பது போலவே இருந்துவரவில்லை. அவர்கள் காலத்துக்குக் காலம் பலவேறு தடைகளையும் பிற்போக்குத் தனங்களையும் மூட நம்பிக்கைகளையும் தாண்டியே வந்துள்ளனர். இன்னும் அவர்கள் தாண்டிச் செல்லவேண்டியனவும் பல உள்ளன. இந்தக் கால இந்தியப் பெண்கள் நிலையும் ஒரு ஐம்பது அல்லது நூறு ண்டுகளுக்கு முற்பட்ட இந்தியக் கருத்தியலைப் பொருத்தமட்டில் அநாகரிகமானது. பெண்கள் பள்ளிக் கூடம் செல்வது இன்று நல்லதாகவும் நாகரிகமாகவும் கருதப்படுவது போலவே ‘புனிதம் உடலில் இல்லை’ என்னும் கருத்தும் வருங்காலத்தில் கருதப்படும். அப்போது கற்பு, தாலி, கணவனைத் தொழுதல் எல்லாம் நகைச்சுவைப் பொருள்களாகிவிடும். ஏனெனில் இந்திய வாழ்வியல் மேல்நாட்டினர் செப்பனிட்டுச் சென்ற பாதையில்தான் ஒரு நூறு அல்லது இருநூறு ண்டுகள் பின்னால் பயணம் செய்கிறது. பெண்களும் அதே பாதையில் செல்வது தவிர்க்கவியலாதது.

இதை உணராதவர்களே முரண்களில் குளிர்காய்கிறார்கள். நல்லவேளை, கண்களை முகத்துக்குப் பின்னால் வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்காகக் காலம் உறைந்துவிடவில்லை.

(எதிர்காலக் கனவில் பெண்களின் நிகழ்கால வேதனைகளை நாம் மறந்துவிடவும் இயலாது.)

baalakumar@hotmail.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்