பண்பாட்டிற்கு எதிரானது

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

குரல் செல்வன்



(1)
“நேற்று ப்ரின்ஸ்டனைச் சுற்றிப் பார்த்து விட்டோம். நம் வரிசையில் அடுத்தது யேல்” என்றான் சாமி. ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. ஒன்பது மணிக்கு முன்பே காலை உணவை முடித்துக் கொண்டு ஓட்டலிலிருந்து கிளம்பிவிட்டார்கள். வெய்யில் இன்னும் சூடு பிடிக்கவில்லை.
“டாட்! நாம் நேராகக் கன்னெக்டிகட் போகாமல் ஏன் எடிசன் வழியாகப் போகிறோம்?” சாலையில் போக்கு வரத்து அதிகமில்லாததால் சூரன் காரை ஓட்டினான்.
“முதலிலிருந்து ஆரம்பிக்கிறேன். கிட்டத் தட்ட உன் வயதில் இது நடந்தது. உனக்குப் பதினேழு முடிந்து விட்டது. எனக்கு அப்போது பதினாறு முடிய இருந்தது. கோடை விடுமுறையின் போது நான் என் அத்;தை வீட்டில் தங்கி இருந்தேன். அங்கே அவர்கள் பையன் நடராஜனும், நானும் ஆறு வாரங்கள் பொழுதைப் போக்கினோம்.”
“எப்படி?”
“சோம்பேறித்தனமாக, உருப்படியாக எதுவும் செய்யாமல்.”
“ஒன்றும் செய்யாமல் எப்படி இருக்க முடியும்? குற்ற உணர்வு வராதா?”
“ஊகும், துளிக் கூட வராது. அது இந்திய மண்ணின் மகிமை.”
“எந்த விதக் கவலையும் பொறுப்பும் இல்லாலை; நீ இருந்ததைக் கேட்டுப் பொறாமையாக இருக்கிறது.”
“உன்னைப் பார்த்து எனக்குத்தான் பொறாமை. வரும் ஆறு வாரங்கள் நீ மதிப்பிற்குரிய பல்கலைக் கழகத்தில் தங்கப் போகிறாய். இவ்வளவு நீண்ட காலம் நீ எங்களை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை. உன்னை விட உன் அம்மாவுக்குத்தான் இது மிகக் கடினமாக இருக்கப் போகிறது. நீ புதிய நண்பர்களைச் சந்திக்கும் போது உனக்கு வீட்டின் நினைவு வராது.”
“நீ சொல்வது உண்மைதான். தினமும் காலையில் இரண்டு மணி நேரம் பாடம், எப்படி விஞ்ஞான ஆராய்ச்சி செய்வது என்று. பிறகு ஒரு ஆராய்;ச்சிப் பிரிவில் வேலை செய்ய வேண்டும். மாலையில் மறுபடியும் ஒரு பிரபல விஞ்ஞானியின் பேருரை. மூச்சு விடக் கூட நேரமிருக்காது.”
“எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டியிருந்தால்….”
“இப்போது எடிசன் போக வேண்டி இராது.”
“அந்த நடராஜன் அவன் மனைவியுடன் இப்போது எடிசனில் மிஸ்டர் சாரதி என்பவர் வீட்டில் தங்கி இருக்கிறான். நம்முடைய தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டு பிடித்து நான்கு நாட்களுக்கு முன் கூப்பிட்டுப் பேசினான். வந்து பார்க்க முடியுமா என்று கேட்டான். நாம் ஏற்கனவே முடிவு செய்த வழியிலிருந்து கொஞ்சம் தள்ளிப் போக வேண்டும். சில மணி நேரம் அதிகம் ஆகும், அவ்வளவுதான். பழைய நாட்களைப் பற்றிப் பேச எனக்கு ஒரு அரிய வாய்ப்பு.”
“அதாவது ஒன்றுமில்லாததைப் பற்றிப் பேச.”
“ஒன்றுமில்லை என்று சைன்nஃபல்ட் தொடரின் நிகழ்ச்சி போல ஒதுக்கி விட முடியாது.”
“அப்படி என்றால் ஒரு நாள் நடந்ததைச் சொல்லேன், கேட்கிறேன்.”

வீட்டிற்குள் புழுக்கமாக இருக்கும் என்று சுவாமிநாதனும், நடராஜனும் மேல் மாடியில் திறந்த வெளியில் தூங்குவார்கள். அதிகாலையில் மட்டும் சற்று குளிராக இருக்கும். அந்த புதன் கிழமை காலை முதல் வெளிச்சத்திலேயே சுவாமிநாதனுக்கு விழிப்பு வந்தது. பறவைகளின் கூச்சலில் படுத்திருந்தான். பிறகு ஜமக்காளத்தையும், போர்வையையும் மடித்து விட்டு மாடியைச் சுற்றி நடந்தான். சூரியனின் கதிர்கள் முகத்தைத் தாக்கிய போதுதான் நடராஜன் கண்களைத் திறந்து கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தான்.
“ஏன் ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா? இன்னிக்கி ராத்ரி வேணும்னா கீழேயே படுத்துக்கலாமா?”
“உடம்புக்கு ஒண்ணுமில்லை, இன்னிக்கி ரிசல்ட் வரப் போறது.”
“நாளைக்குத் தானே பேப்பர்லே வரும்னு சொன்னே.” பள்ளி இறுதித் தேர்வுக்குப் போய் யாராவது பயப்படுவார்களோ?
“இன்னிக்கி சாயந்தரம் ஏழு மணிக்கி மேல டைம்ஸ் ஆஃபீஸ_க்கு ரிசல்ட் வந்துடும்.”
அந்த ஏழு மணி வருவதற்குள் காய்கறி வாங்கி வந்தார்கள். குளித்து சாப்பிட்ட பிறகு மந்திரி அளகேசன் வீட்டிற்கு நடந்து சென்றார்கள். வெய்யிலின் உக்கிரத்துக்குப் பயந்து அவர் குடும்பம் சென்னைக்குக் குடி பெயர்ந்துவிட்டது. அவர் எப்போதாவதுதான் கண்ணில் படுவார். நடராஜன் அமெரிக்க மொழியில் ‘ஹெளஸ்-சிட்’ செய்து கொண்டிருந்தான். அதற்கு வாரம் பத்து ரூபாய் சம்பளம் வேறு. தன்னை விட இரண்டு ஆண்டுகளே மூத்த நடராஜனின் கையில் பணம் தாராளமாகப் புழங்குவது சுவாமிநாதனுக்குப் புதுமை. அன்று நடராஜன் அந்த வீட்டின் ரெஃப்ரஜரேட்டரைச் சுத்தம் செய்ய வேண்டிய வேலை. பனிக் கட்டிகளை அப்புறப் படுத்திவிட்டு, தட்டுகளைக் கழுவித் துடைக்க வேண்டும். வழக்கம் போல் சாமிநாதன் அவர்கள் வீட்டு நூலகத்திற்குச் சென்றான். யாரோ அக்கறையாகப் பத்திரிகைகளில் வந்த தொடர்கதைகளைப் பைண்டு செய்து கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்தார்கள். நாற்காலியில் உட்கார்ந்து படிக்கும் போது வெளி உலகம் எங்கோ சென்று விடும். பாவைவிளக்கைத் திங்கள் படிக்க ஆரம்பித்தான். அன்று முடித்து விடலாம் என்றிருந்தான். ஆனால் நண்பகலில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு முடிக்கும் போது கால்களில் துணி வைத்துத் தைத்தது போல் தோலுடன் ஒட்டிக் கொண்டிருந்த பான்ட்ஸில் இருவர் சைக்கிளில் வந்தார்கள். மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் கலந்த ஒரு மொழியில் பேசினார்கள்.
“உங்கள் நம்பரைக் கொடுத்தால் நான் ரிசல்ட் கேட்டு சொல்கிறேன்” என்றான் நடராஜன்.
“அப்படி என்றால் உங்கள் எல்லோரையும் சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றான் ஒருவன். நால்வரும் நான்கு சைக்கிள்களில் ஜான்வர் படத்திற்குச் சென்றார்கள். கொட்டகையில் பகல் காட்சிக்குக் கூடக் கூட்டம். மற்ற மூவரும் ஏற்கனவே படத்தைப் பார்த்திருந்தார்கள் போலிருக்கிறது. பாடல்கள் வரும் போது இரண்டு பேராக வெளியே சென்று இருமிக் கொண்டே திரும்பி வந்தார்கள்.
வரும் வழியில் நடராஜன் அவன் பங்குக்கு எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தான். அங்கிருந்தே அந்த நண்பர்கள் பிரிந்து சென்றார்கள். வீட்டில் சாப்பிட்டு விட்டு மறுபடியும் மந்திரியின் வீட்டிற்கு ஒரு நடை. ஏழு மணி வந்த போது டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர் பகுதியில் தொலை பேசியின் மணி அடித்தது.
“ஹலோ! யாரு, குஞ்சப்பாவா? நான் அளகேசன் சாரின் செக்ரடெரி பேசறேன். எனக்கு ஸ்கூல் iஃபனல் ரிசல்ட் சிலது தெரியணும்.”
“நம்பர் குடுங்கோ. நான் பாத்து சொல்றேன்.” நான்கு எண்களை எழுதிக் கொண்டார் குஞ்சப்பா. தொலைபேசி மணி அடிக்கும் வரை சீட்டு விளையாடினார்கள். எட்டரைக்கு மேல்தான் செய்தி வந்தது. “ஹலோ! நீங்க குடுத்த நாலு நம்பர்லே கடைசிது மட்டும் தேறல. மிச்சதெல்லாம் பாஸ். ஹிஹி. மந்திரி சார் கிட்ட நான் ரிசல்ட் குடுத்தேன்னு சொல்லிடுங்கோ.”
“கட்டாயமா சொல்றேன்.” ஒலி வாங்கியை வைத்து விட்டு நடராஜன் அட்டகாசமாகச் சிரித்தான். சுவாமிநாதனுக்கு அவனைப் பாராட்டத் தோன்றவில்லை. “ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டியே?” என்றான்.
“என்ன மறந்துட்டேன்?”
“புதன் கிழமை ராத்ரி எட்டு மணிக்கு..”
“எட்டு மணிக்கு என்ன?”
“பினாகா.”
“பினாகா கீத் மாலாவை மறந்தே போயிட்டேனே” என்று கத்திக் கொண்டே ரேடியோவைத் தேடி ஓடினான். அவன் நிஜமாகவே ரிசல்ட்டுக்குப் பயந்து போயிருக்க வேண்டும்.

“நீங்கள் அப்புறம் சந்திக்கவில்லையா?” என்று சூரன் கேட்டான்.
“இல்லை. அதற்குப் பிறகு அவன் வேலையில் சேர்ந்து விட்டான். நான் படிப்பில் கவனம் செலுத்தினேன், அமெரிக்காவிற்கு வந்தேன்.”
“நீ இப்போது சொன்னதெல்லாம் அவனுக்கு நினைவிருக்குமா?”
“இருக்கும், இல்லாவிட்டால் என்னைத் தேடிப் பிடித்து ஏன் கூப்பிட வேண்டும்?”
எடிசன் ஊருக்குள் நுழைந்த பிறகு கையில் வைத்திருந்த படத்தைப் பார்த்து சூரனுக்கு வழி சொல்லி வந்த சாமி வாசலில் கோலம் போட்டிருந்த ஒரு வீட்டைக் காட்டி, “அந்த வீடுதான்” என்றான். அதற்கு முன் கார் சென்று நின்றது. “சென்ற வாரம்தான் இந்த வீட்டிற்குப் புதிதாக வந்தார்கள் என்று கேள்விப் பட்டேன். அதற்குத்தான் இந்த அலங்காரம்.”
“நாம் புது வீட்டிற்குச் சென்ற போது இப்படி செய்ததாக நினைவில்லையே.”

(2)
அறிமுகப் படலம் முடிந்தவுடன் மனைவியர் இருவரும் சமையலைக் கவனிக்கச் சென்றார்கள். சாரதியின் பெரிய பெண் நிவேதிதா பரத நாட்டியப் பயிற்சிக்குச் சென்றிருந்தாள். வருகிற நேரம்தான். வரவேற்பு அறையின் மூலையில் பிரிக்கப் படாத சில அட்டைப்; பெட்டிகள். புது வீட்டில் எல்லா சாமான்களும் அவற்றின் இடங்களுக்கு இன்னும் செல்லவில்லை போலிருக்கிறது.
தன்னுடன் ஒரு சோஃபாவில் உட்கார்ந்திருந்த நடராஜனிடம் தன்னைப் பற்றி இரண்டு வாக்கியங்கள் சொன்ன பிறகு சாமி, “இப்ப என்ன பண்ணிண்டிருக்கே?” என்று அவனைக் கேட்டான்.
“ரிடையர் ஆயிட்டேன். இரண்டு பையன்களை வளத்துப் படிக்க வைச்சாச்சு.” அந்த பதிலில் இருந்த பெருமை உடலின் தொய்வை மறைத்தது.
“சாமிநாதன் காலேஜ்லே சேர்ரதுக்கு முன்னாடி எங்க வீட்டிலே ஒரு மாசம் இருந்தான்” என்று சாரதியிடம் சொன்னான். அவரும் சூரனும் சாமிக்குப் பக்கத்தில் இன்னொரு சோஃபாவில் அமர்ந்திருந்தார்கள். “அதுக்கப்புறம் இப்பதான் பாத்துக்கறோம். நடுவிலே என்னன்னமோ வந்துடுத்து. நீ கிட்டத்தட்ட அப்பிடியேதான் இருக்கே.”
அந்தப் புகழ்ச்சியில் மகிழ்ந்து போன சாமி, “கொஞ்சம் தலை நரை, மத்தபடிக்கி நீயும் உன் வயசுக்கு நன்னாத்தான் இருக்கே” என்றான் விட்டுக் கொடுக்காமல்.
சூரனுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் ஆறு வயதுப் பையன் நவீன் கேம்பாய் விளையாடிக் கொண்டிருந்தான். “நீ கேம்பாயில் என்ன விளையாடுவே?” என்று சூரனைக் கேட்டான்.
“என்னிடம் கேம்பாய் எப்போதும் இருந்ததில்லை.”
“நெவர்?”
“நெவர்.” துரிதமாகத் திருகிய அவன் கையிலிருந்து வந்த உலோகங்கள் உரசும் ஒலிகளுக்கும், மனிதர்களின் ஓலக் குரல்களுக்கும் நடுவில்; பெரியவர்களின் உரையாடலும் சூரனின் காதுகளில் விழுந்தது.
“நான் உங்காத்துக்கு வந்த அடுத்த நாள் ‘நட்டி ப்ரொஃபசர்’ பாக்கறதுக்காக சைக்கிளிலே போனோமே, ஞாபகம் இருக்கா? திரும்பி வரச்ச கொட்டற மழை. எங்கேயும் ஒதுங்காம முழுக்க நனைஞ்சிண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு வயசு” என்று சாமி ஆரம்பித்தான். சூரன் பிறருக்குத் தெரியாதபடி அப்பாவின் பக்கம் ஒரு புன்சிரிப்பை வீசினான்.
“நீ சொல்றது முப்பது வருஷத்துக்கு முன்னாடின்னா.”
“சரியா முப்பத்தி ஏழு வருஷம் முடிஞ்சுடுத்து.”
“நேத்து நடந்த மாதிரி;ன்னா சொல்றே.”
“ஜூன் முப்பதாம் தேதி பினாகா கீத்மாலாவைக் கூட மறந்துட்டு ஸ்கூல் iஃபனல் ரிசல்ட்டுக்காக அளகேசன் வீட்டிலே காத்திண்டிருந்தோமே.”
“நீ சொல்றது எதுவுமே ஞாபகம் இல்ல.” நடராஜனின் வெற்றுப் பார்வையில் பத்து வயது கூடின மாதிரி இருந்தது.
சாமி பழையதை விட்டு விட்டு நிகழ் காலத்திற்கு வந்தான். “பையங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?”
“பெரியவன் சுரேஷ் இந்தியாவில இருக்கிற ஓரியன் ஃபார்மசெடிகல்ஸ_க்கு மேனேஜர். புது மருந்து கண்டு புடிச்சா டெஸ்ட் பண்ணறதுக்கு அவன் கிட்டதான் அனுப்பிடுவா. பூனாவுக்குப் பக்கத்தில கம்பெனி. எங்க போனாலும் கார் அழைச்சிண்டு போயிடும். மாட்டுப் பொண்ணும் கம்பெனியிலே பெரிய பொசிஷன்ல இருக்கா.”
“சின்னவன்?”
“தினேஷ் ஆப்பிள் கம்ப்யூட்டர்லே இருக்கான். அவன் வீட்டுக்குத்தான் போயிண்டிருக்கோம். மென்லோ பார்க்கிலே வீட்டைச் சுத்தி ஒரு ஏக்கர் நிலம். படிச்சு முடிச்ச உடனேயே அவனுக்கு எண்பதாயிரம் சம்பளத்திலே ஆரம்பிச்சா. இன்னும் வயசு முப்பது கூட ஆகல. அதுக்கள்ள நூத்தைம்பதாயிரமாம். வாரத்திலே நாலு நாள் சைனா, ஐயர்லாந்துன்னு சுத்துவான். எங்க போனாலும் ஃபர்ஸ்ட் கிளாஸ்லதான். ஐ-டிவிலே இவன் டிசைன்தான்…” இன்னும் எவ்வளவோ சொல்லி இருப்பான், ஆனால் அவற்றைப் பல முறை கேட்டு சாரதிக்கு அலுத்துப் போயிருக்க வேண்டும். பேச்சை மாற்றினார்.
“நீ எத்தனாவது படிக்கிறே?” என்று சாரதி சூரனைக் கேட்டார்.
“வரும் ஆண்டில் நான் சீனியர்” என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.
“எந்த காலேஜ் போகப் போற?”
“எங்கே போனாலும் அது வீட்டிலிருந்து ஐநூறு மைலாவது தள்ளி இருக்க வேண்டும்.”
“என்ன மேஜர் எடுத்துக்கப் போற?”
“இன்னும் முடிவு செய்யவில்லை.”
சூரனின் பதில்கள் சாரதிக்குத் திருப்தி தந்ததாகத் தெரியவில்லை. ஒரு சிறு மௌனத்திற்குப் பிறகு அவர், “நான் கோவில்ல ‘நாட் டு பி அன் ஏபிசிடி’ன்னு ஒரு க்ளாஸ் நடத்தறேன்” என்று ஆரம்பித்தார். நடராஜனைப் பார்த்து, “இங்கே பொறந்து வளர்ர குழந்தைகளுக்கு நம்ம பழக்கம் தெரியறதில்லை, இந்த ஊரு நல்ல வழக்கமும் கத்துக்கறது கிடையாது. அதுக்காக அவாளை அமெரிக்கன் பார்ன் கன்ஃப்யூஸ்ட் தேசிகள்னு சொல்றது வழக்கம்” என்றார். சாமி சமீபத்தில் ஏபிசிடி என்று கேள்விப் படாததால் அவனுக்கும் அந்த விளக்கம் தேவைப் பட்டது.
கார் நின்று புறப்படும் சத்தம் வெளியிலிருந்து கேட்டது. அதைத் தொடர்ந்து நிவேதிதா வாசற் கதவைத் திறக்கும் சத்தமும் வந்தது. கறுப்பு டைட்ஸ_ம், அதே நிறத்தில் உடலோடு ஒட்டிய சட்டையும் அவளைச் சிறு பெண் போலக் காட்டின. பின்னல் போட்டுக் கொள்ளும் அளவுக்கு நீண்ட தலை மயிர். வேர்வைத் துளிகள் அழகு செய்த முகம். பரத நாட்டியப் பயிற்சியினால் அளவெடுத்தாற் போன்ற உடலமைப்பு. வீட்டில் புதிதாக இரண்டு பேர் இருப்பது அவள் எதிர் பார்த்ததுதான். அதனால் அவள் பொதுப் படையாக “ஹாய்!” சொன்னாள். நவீனைக் கீழே தள்ளிவிட்டு அவன் இடத்தில் உட்கார்ந்தாள். அவளை முறைத்து விட்டு அவன் விளையாட்டில் கவனம் செலுத்தினான். இப்போது கார்கள் உறுமும் சத்தமும், அவை சுவரில் மோதி இடிபடும் ஒலிகளும் அவன் கையிலிருந்து வெளிப் பட்டன.
சாரதி தொடர்ந்தார். “எப்பன்னு ஞாபகம் இல்லை. இருபது வருஷத்துக்கு முன்னால தீபாவளி மலர்லே வந்த கதை. நா. பார்த்தசாரதியோடதுன்னு நினைக்கிறேன். எப்படி வெளிநாட்டிலே இருக்கிற நம்ம ஊர் குழந்தைகள் நம்முடைய கலாசாரத்தை பத்தி எதுவும் தெரியாம வளர்ரான்னு போட்டிருந்தது. அதைப் படிச்சப்போ எனக்கு அந்த நிலைமை வந்தா குழந்தைகளை நம்ம வழக்கங்களைச் சொல்லி வளக்கணும்னு முடிவு பண்ணினேன். என்னோட கிளாஸ_க்கு இருபது குழந்தைகளாவது வரும், ஆறுலேர்ந்து பத்து வயசுக்குள்ள. காலைலே முக்கால் மணி நான் ராமாயணம், மகாபாரதத்திலே ஆரம்பிச்சு ஹிந்து மதம் வரைக்கும் கொண்டு போயிடுவேன். பத்து நிமிஷம் ப்ரேக். அப்பறம் நாலு பேருக்கு நான் தமிழ் கத்துத் தரேன். மத்தவாளுக்கு இந்தி.”
“ஹாய்! நான் சூரன்,”
“ஹாய்! என் பெயர் நிவேதிதா.” பெயரைச் சப்தம் பிரித்துச் சொன்னாள்.
“அக்கா! அவன் கேம்பாய் விளையாடினதே இல்லையாம்”
“எனக்கு டென்னிஸ், நீச்சல் என்று நேரம் போய் விட்டது” என்று சூரன் காரணம் காட்டினான்.
“உன்னை மாதிரி அவன் நேரத்தை வீண் பண்ணல. இந்த வீட்டுக்கு வந்ததுலேர்ந்து எப்ப பாரு கேம்பாய்தான் கையிலே வச்சிண்டிருக்கே. ஒளச், ஒளச்!” கேம்பாயிலிருந்து மிகுந்த சிரமத்துடன் அவன் கையை எடுத்து அவள் காலில் கிள்ளி இருக்க வேண்டும்.
“உங்க பொண்ணு, இந்தியாவிலே பொறந்து இங்க பத்து வயசிலே வந்திருக்கா. நீங்க சொல்றபடி நடக்கிறா” என்று சாமி சால்ஜாப்பு சொன்னான்.
“பையன் இங்க வந்தப்பறம்தானே பொறந்தான். இன்னிக்கி கார்த்தால கூட சுலோக கிளாஸ_க்குப் போனான். தமிழ்லே பேசுவான், எழுத்து கூட்டிப் படிப்பான்.”
பதினேழு ஆண்டுகளாகத் தன் மகனுக்குப் பண்பாடு சொல்லிக் கொடுக்கத் தவறி விட்டோமா என்று சாமிக்குத் திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது. சூரனை வளர்த்து உருவாக்குவதை முழு நேர வேலையாக அவனும், அவன் மனைவி சரவணப்ரியாவும் செய்ததாக அவனுக்குக் கொஞ்சம் என்ன, நிறையவே கர்வம் உண்டு. அதில் ஒரு பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது. இருந்தாலும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், ‘நீங்க இருக்கிற எடிசன் ஒரு சின்ன இந்தியா மாதிரி, அதனாலே இதெல்லாம் முடிஞ்சிது’ என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தான். அதற்குள், “எல்லாம் சூடா இருக்கு, சாப்பிடலாமே!” என்ற திருமதி சாரதியின் அழைப்பு அவனைக் காப்பாற்றியது.
எல்லோரும் எழுந்தார்கள். சாமி நடராஜனிடம், “மென்லோ பார்க்கிலே இருந்துட்டுத் திரும்பிப் போறச்ச முடிஞ்சா எங்க வீட்டுக்கு வரணும்” என்று அழைப்பு விடுத்தான்.
“தினேஷ் என்ன சொல்றானோ அப்படி.”
சாப்பாட்டு மேஜையில் வைக்கப் பட்டிருந்த ஏழெட்டு சாத கறி வகைகளைப் பார்த்த சூரனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. “மிசஸ் சாரதி! நான் வயிற்றை நன்றாக நிரப்பிக் கொள்ளப் போகிறேன். அப்புறம் ஆறு வாரங்களுக்கு இந்த மாதிரி சாப்பாடு எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது” என்றான்.
“ஆறு வாரம் என்ன கணக்கு?” என்று கேட்ட அவளிடம் தான் பாஸ்டனில் தங்கி விஞ்ஞான ஆராய்ச்சியில் பயிற்சி செய்யப் போவதை விளக்கமாக எடுத்துச் சொன்னான்.
சாப்பிடும் போது, “இதுக்கப்பறம் எங்கே போறேள்?” என்று சாரதி கேட்டார்.
“அமெரிக்கப் பண்பாட்டின் படி அப்பா பையனையோ பொண்ணையோ பள்ளிக்கூடம் முடிக்க ஒரு வருஷம் இருக்கும் போது அவா ஆசைப்படற எல்லா காலேஜூக்கும் அழைச்சுண்டு போய் காட்டணும். அந்த வழக்கத்தின் படி நேத்து ப்ரின்ஸ்டன் பாத்தோம். இன்னும் மூணு பாக்கி இருக்கு.”
“நிவேதிதா பத்தாவதுதான் முடிச்சிருக்கா. அதுவுமில்லாம, காலேஜ் படிப்புக்கு இந்தியா அனுப்பலாமோன்னு ஒரு ப்ளான் இருக்கு.”

(3)
சாமியும், சூரனும் நன்றி சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டார்கள். சாரதியுடன் வீட்டுக்கு வெளியே வந்தார்கள்.
“நம்ம ஊர் சாமான் வாங்கிக்கணும். நாஷ்வில்லே கிடைக்கிறதை விட இங்க புது சரக்கா இருக்கும்னு கேள்விப் பட்டேன்” என்றான் சாமி.
“நீங்க கேள்விப் பட்டது சரிதான். கன்னெக்டிகட் போற வழிலே படேல் கடை இருக்கு. அங்க டரன் ஓவர் அதிகம். வாங்கிண்டு நீங்க அப்படியே போயிடலாம். நான் கூட அந்தக் கடைக்குப் போகணும். வீடு மாத்தப் போறோமேன்னு கனமான சாமான் எதுவும் வாங்கல. எனக்குப் பின்னாடியே வாங்கோ!” அப்போது நிவேதிதா வீட்டிலிருந்து வேகமாக வெளியே வந்தாள். ‘அப்பா! இந்த ரெண்டு டிவிடியைப் பாலிவுட் விடியோவிலே இன்னிக்கே திருப்பித் தரணும், அத்தைக்காகக் கொண்டு வந்தோம்.”
‘அது படேல் கடைக்குப் போற வழியிலே இல்லையேம்மா.”
‘நீங்க படேல் கடைக்கு வழி சொல்லுங்கோ. நாங்க கொஞ்ச நேரம் கழிச்சுக் கிளம்பறோம்” என்றான் சாமி. அவர் வழி சொல்ல யோசிக்கும் போது, நிவேதிதா, “நான் அவா கார்லே வரேம்பா. அப்புறம் நாம ஒண்ணா திரும்பி வரலாம்” என்றாள்.
“அதுவும் நல்ல ஐடியாதான்.” சாமியிடம், “நான் பாலிவுட் விடியோக்குப் போயிட்டு உங்களைப் படேல் கடையிலே பாக்கறேன்” என்று அவர் குறுந்தகடுகளை நிவேதிதாவின் கையிலிருந்து எடுத்துக் கொண்டு முதலில் கிளம்பினார்.
“நான் டிரஸ் மாத்திண்டு வரட்டுமா? அன்க்ல்!” என்று நிவேதிதா சாமியிடம் கேட்டாள்.
“நீ வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்” என்று சாமி தான் அடிக்கடி சொல்லும் வாசகத்தைச் சொன்னான். அவள் வீட்டிற்குள் ஓடினாள். சாமி வெளியிலேயே காத்திருக்க முடிவு செய்தான்.
காரின் முன் புறத்தில் சாய்ந்து கொண்ட சூரன் ஒரு புன்னகையுடன், “டாட்! நீ என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறாய் என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்றான்.
“தெரியுமா? எங்கே சொல் பார்க்கலாம்.”
“சாரதி அன்க்ல் நினைக்கிற பண்பாட்டில் வளர்க்கா விட்டாலும் அம்மாவும் நானும் ஒரு விதக் கட்டுப் பாடுகளுடனும், ஒழுங்கு முறைகளோடும் உன்னை வளர்த்திருக்கிறோம் என்று சொல்லப் போகிறாய், அப்படித்தானே?”
“கிட்டத்தட்ட நீ சொன்னது சரிதான். கட்டாயமாக உட்கார வைத்து சொல்லித் தரும் மந்திரங்கள் மறந்து விடும். ஆனால் பெரியவர்கள் வாழ்ந்து காட்டும் பாடங்கள் மறக்காமல் இருக்கும்.”
“தாத்தா அப்படித்தான் உனக்குச் சொல்லிக் கொடுத்தாரா?”
“யெஸ்;.”
“அந்தப் பெண் வருவதற்கு பத்து நிமிடமாவது ஆகும். அதற்குள் தாத்தா எப்படி பாடம் கற்றுத் தந்தார் என்று சொல்லேன்.”
“தாத்தா ஏர்Nஃபார்ஸில் இருந்தார் என்று உனக்குத் தெரியும். நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது அவருடைய ஆண்டு விடுமுறையின் போதுதான் அவரைப் பார்ப்பேன். அப்படி வரும்போது எனக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார். ஒரு தடவை ஒரு கிரிக்கெட் பேட்டும் பந்தும் கொண்டு வந்தார். அது வரையில் எங்கள் கிராமத்தில் பழைய டென்னிஸ் பந்தையும், உடைந்து போன பலகையையும் வைத்துக் கொண்டுதான் விளையாடுவோம். வரிகள் போட்ட சிவப்பு நிறப் பந்தையும், வழவழப்பான பிடி வைத்த பேட்டையும் நான் எல்லோரிடமும் பெருமையாகக் காட்டினேன். அடுத்த நாள் மாலை என்னுடைய கும்பலுக்கு எப்படி பேட்டைப் பிடித்து விளையாடுவது என்று காட்டி இரண்டு கட்சிகளாகப் பிரித்து விளையாடச் செய்தார். நான் முதலில் விளையாடி அவுட் ஆகிவிட்டேன். ஆனாலும் நானே தொடர்ந்து விளையாடுவேன் என்று அடம் பிடித்தேன். பந்தும், பேட்டும் என்னுடையவை தானே? ஆனால் தாத்தா அதற்கு அனுமதிக்க வில்லை. விளையாட்டின் விதிப்படி அவுட் ஆன பிறகு நான் வெளியே போகத்தான் வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னார்.”
“டாட்! ஆட்டத்தின் விதிமுறைகள் பின் பற்றப் படுவதற்காக” என்று சொல்லிக் கொண்டே சூரன் எழுந்திருக்க முயன்றான்.
“அது தெரியும், கதை அதோடு முடியவில்லை.”
“தாத்தா மிக புத்திசாலி. உனக்கு ஒரே நாளில் இன்னொரு பாடம் கற்றுக் கொடுத்தாரா?”
“அன்றைய விளையாட்டில் என் அணி தோற்றுவிட்டது. எதிர் அணியில் ஒரு பையன் மிக நன்றாக விளையாடினான். அவனுடைய ஆட்டத்தைத் தாத்தா பாராட்டியது எனக்கு இன்னும் எரிச்சலைத் தந்தது. அவன் பரம ஏழை. அவனுக்கு ஒரு தங்கை. அவன் அப்பா வீட்டை விட்டு ஓடி விட்டார். அதனால் அவன் அம்மா ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வந்தாள். அங்கே அவர்களுக்கு மதிய உணவு கிடைக்கும். இரவு சாப்பாட்டிற்கு அவன் ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் ‘பஹ_தி பிக்ஷாந்தேகி’ என்று சொல்லுவான். மிச்சம் இருக்கும் சாதத்தில் கொஞ்சம் பாத்திரத்தில் போடுவார்கள். தேவையான சாதம் சேர்ந்தவுடன் வீட்டிற்கு எடுத்துப்; போவான்.”
“மீதியை நான் சொல்கிறேன். நீ தோற்றுப் போன அன்று இரவு அவன் உங்கள் வீட்டிற்கு வந்து, ‘வீட்டுத் தலைவி! பிச்சை இடுங்கள்’ என்று சொன்னான். நீ அவனுக்குப் போடாதே என்று சொல்லி இருப்பாய்.”
“அப்படித்தான் என் அம்மாவிடம் சொன்னேன். அது தாத்தா காதில் விழுந்து விட்டது.”
“டாட்! விளையாட்டின் போட்டி மனப்பான்மை அதோடு போய்விட வேண்டும், இது தெரியாதா? ஹாய்! நீட்டா!” சாமி திரும்பிப் பார்த்தான். அவள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாள் என்று தெரிந்தது. பின்னலை அவிழ்த்து விட்டுத் தலைமயிரைப் பிரித்து வலது புறத்தில் சேர்த்துக்; கட்டி இருந்தாள். இலேசான ஒப்பனையில் அழகைக் கூட்டினாள். இளஞ் சிவப்பில் பூப் போட்ட சட்டையும், சிவப்பு கோடுகள் குறுக்காகப் போட்ட ஸ்கர்ட்டும் அணிந்து உயர் நிலைப் பள்ளிக்குச் செல்லும் ஒரு பெரிய பெண் போலத் தோன்றினாள். காலையில் கிளம்பும் போது, பழைய டி-சட்டைக்குப் பதிலாக, சூரனைக் காலர் வைத்த மடிப்பு கலையாத புதிய சட்டை போட்டுக் கொள் என்று சொல்லி இருக்கலாம்.
“சூரன்! என் பெயர் நீட்டா என்று உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று அவள் அகன்ற கண்கள் இன்னும் விரிந்தன.
“ஒரு ஊகம்தான். என் பள்ளியின் பெண்கள் டென்னிஸ் அணியில் நிவேதிதா ஷெராத் என்று ஒருத்தி இருந்தாள். அவளை நீட்டா என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.”
‘டாட்! நான் ஓட்டட்டுமா?” நிவேதிதா பக்கத்தில் உட்கார்ந்து வழி காட்ட அவனுக்குக் காரோட்ட ஆசை போலிருக்கிறது. சாமி அவனிடம் சாவியைக் கொடுத்து விட்டுப் பின் இருக்கைக்குச் சென்றான்.
“நிவேதிதா! நீ லைசன்ஸ் வாங்கிவிட்டாயா?” என்று முன்னால் உட்கார்ந்த அவளிடம் சாமி கேட்டான்.
“லேர்னர்ஸ் பெர்மிட் வைச்சிண்டிருக்கேன், அன்க்ல். அம்மா பக்கத்தில இருந்தா மட்டும் வீக்என்ட்லே ஓட்டுவேன். பாரலல் பார்க்கிங்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.”
“நடுவிலே தப்பு பண்ணிட்டா மொதல்லேர்ந்து ஆரம்பிக்கணும், அவ்வளவுதான்.”
“சூரன்! நீ தினமும் பள்ளிக்குக் காரை எடுத்துப் போகிறாயா?”
“போன ஏப்ரலிலிருந்து போகிறேன். அங்கே நியு ஜெர்சி அளவுக்கு நெரிசல் கிடையாது.”
கார் நகர்ந்து அகன்ற தெருவுக்கு முன்னால் சென்று நின்றது.
“இங்கே இடது பக்கம். சாரி! என் அப்பா கலாசாரம் என்ற பேச்சு வந்தால் வாய் ஓய மாட்டார்” என்றாள் நிவேதிதா மன்னிப்பு கேட்கும் பாவனையில்.
“நீட்டா! அது ஒன்றுமே இல்லை. என் அப்பா சிறுவர்களுக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்து எப்படி டோர்னமென்ட்டுகளில் போட்டி போட வைப்பது என்று சொல்ல ஆரம்பித்தால் அரை மணிக்கு முன் முடிக்க மாட்டார். நான் சொல்வது சரியா? டாட்!”
‘அரை மணிதானா? பையன்களுக்கு ஒரு வழி, பெண்களுக்கு இன்னொரு வழி என்று இரண்டு மணி எடுத்துக் கொள்வேன் என்று நினைத்திருந்தேனே.”
நிவேதிதா வழி சொல்ல கார் சில பச்சை விளக்குகளைத் தாண்டி நெடுஞ்சாலையில் சென்று கலந்தது. “சூரன்! ஃப்ரீவேயில் நன்றாக ஓட்டுகிறாயே” என்று பாராட்டினாள். “எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை.”
‘பழக்கம்தான், நீட்டா! எவ்வளவு ஆண்டுகளாக நீ நடனம் கற்றுக் கொள்கிறாய்?”
‘இந்தியாவில் ஆரம்பித்தேன், ஆனால் முறையாகக் கற்றுக் கொள்ளவில்லை. இங்கே வந்த பிறகுதான் முழு மனதாகப் பயிற்சி செய்கிறேன்.”
“நிவேதிதா! அரங்கேற்றம் எப்போது?” என்று சாமி குறுக்கிட்டான்.
“அடுத்த ஆகஸ்ட்லே அங்க்ல்! உங்களால வர முடியுமா?”
“சூரன் இந்தப் பக்கத்தில் இருக்கும் காலேஜில் சேர்ந்தால் அங்கே அவனை விடுவதற்கு வருவோம். அப்படியே உன் அரங்கேற்றத்தையும் பார்க்கிறோம். சூரன்! அரங்கேற்றம் என்றால்…” என்று சாமி ஆரம்பித்த போது, “எனக்குத் தெரியும், டாட்!” என்று சூரன் வெட்டினான்.
“சூரன்! உனக்கு எங்கே படிக்க ஆசை?”
“ஹார்;வர்ட், எம்ஐடி, ப்ரின்ஸ்டன்…”
“எல்லாம் ராங்க்கிங்கில் மிக உயரத்தில் இருக்கும் பல்கலைக் கழகங்களாயிற்றே” என்ற நிவேதிதா தொடர்ந்து, “உனக்கு நிச்சயம் ஒன்றில் இடம் கிடைக்கும்” என்றாள்.
“தாங்க்ஸ்! அவற்றில் இடம் பிடிப்பதில் ஒரு ரகசியம் இருக்கிறது.”
“அது என்ன ரகசியம், எனக்கும்தான் சொல்லேன், உபயோகமாக இருக்கும். பன்னிரண்டு ஏபி வகுப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?”
“அது அவசியம்தான். அத்துடன் ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்திருக்க வேண்டும். உதாரணமாக, உன்னைப் போல் இந்தியாவின் தொன்மையான நடனத்தில்” என்று சூரன் தலையைத் திருப்பி சிரித்தான்.
நிவேதிதா நாணத்துடன் புன்னகைத்தாள். “நீ என்ன படிக்க ஆசைப் படுகிறாய்?”
“கெமிஸ்ட்ரியும், பயாலஜியும்.”
“அப்புறம்?”
‘என் அப்பாவுக்கு நான் மெடிகல் போக வேண்டும் என்று ஆசை. கல்லூரியில் இரண்டு ஆண்டு முடித்த பிறகு எம்காட் எழுதலாமா, வேண்டாமா என்று யோசிப்பேன். உனக்கு எதில் விருப்பம்?”
‘என் அப்பாவுக்கும் நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. இந்தியாவில் மணிபாலில் அவருடைய நண்பர் டிரெக்டராக இருக்கிறாராம். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அங்கே போய்ச் சேர்ந்தால் ஐந்து ஆண்டுகளில் மெடிகல் டிகிரி கிடைத்து விடும். இங்கே என்றால் எட்டு வருஷம் ஆகும். எனக்குத்தான் அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. மொழியில்தான் எனக்குத் திறமை இருப்பதாக நினைக்கிறேன். நான் என்னுடைய பள்ளிக்கூடப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கிறேன். சோன்யா காந்தி பற்றியும், பிரபல விஞ்ஞானி பிரசன்ன ராஜன் பற்றியும் நான் எழுதிய கட்டுரைகள் எடிசன் மார்னிங் ஹெரால்டில் வந்திருக்கின்றன.”
‘அப்படியா? அவற்றைப் படிக்க எனக்கு ஆசை. எனக்கு ஈ-தபாலில் அனுப்புகிறாயா? ஸ்ஸ்ஸ_ரன்அட்எம்ஐடி.ஈடியு.”
“நிச்சயமாக.”
“நீட்டா! அடுத்ததாக நீ ஒரு நாவல் எழுத வேண்டும்.”
“அப்படி ஒரு ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் எதை வைத்து எழுதுவது என்றுதான் நிச்சயமாகத் தெரியவில்லை” என்று வெகுளித்தனமாக நிவேதிதா கைகளை விரித்தாள். அவள் எந்த பாக்கியசாலிக்கு மருமகளாக வாய்க்கப் போகிறாளோ என்று சாமி வியந்தான்.
“அமெரிக்கப் பள்ளியில் படித்துக் கொண்டு, பத்திரிகைத் தொழிலில் பயிற்சி செய்து, இந்திய நாட்டியத்திலும் தேர்ச்சி பெறும் ஒரு பதினாறு வயதுப் பெண்ணைப் பற்றி எழுதலாமே” என்று ஆலோசனை சொன்னான் சூரன். இருவரும் சிரித்தார்கள்.
“அப்படி எழுதி அது பிரசுரத்திற்கு ஏற்கப் பட்டால் ஹார்வர்ட் கூட உன்னை வாவா என்று அழைக்கும்” என்றான் சாமி.
கார் நெடுஞ்சாலையை விட்டு விலகிய பிறகு நிவேதிதா காட்டிய வழியில் சென்றது. “அந்த சிவப்பு கேம்ரி திரும்பும் இடத்தில் நீயும் வலது பக்கம் போக வேண்டும்.” பின் பக்கம் திரும்பி சாமியிடம், “அன்க்ல்! நீங்க ரொம்ப சாமான் வாங்கணுமா?” என்று கேட்டாள்.
சரவணப்ரியா கொடுத்த காகிதத்தைச் சாமி எடுத்துப் பார்த்தான். “மொத்தம் முப்பது பவுண்டு இருக்கலாம். ஏன் கேட்கிறாய்?”
“இந்தக் கடையில் வண்டியை வெளியே எடுத்து வர முடியாது. கார் வரையில் தூக்;கிக் கொண்டுதான் வரவேண்டும்.”
“ஏன் அப்படி?”
“கடைக்கு வருபவர்கள் வண்டிகளைக் கார் வரையில் தள்ளிக் கொண்டு வந்து பிறகு அங்கேயே விட்டு விட்டுப் போய் விடுகிறார்களாம்.” சூரன் கடைகளின் வரிசைக்கு முன் காரைச் திருப்பினான். “சூரன்! படேல் கடை கடைசியில்.”
“ஆல்டி கடைகளில் ஒரு க்வார்டர் போட்டு வண்டியை எடுக்க வேண்டும். திருப்பிக் கொண்டு வைத்தால்தான் அந்தக் காசு திரும்பக் கிடைக்கும்.”
“இங்கே அப்படி இல்லை. கடையின் ஒவ்வொரு வண்டியிலும் ஆறடிக்கு ஒரு இரும்புக் கழியைப் பொருத்தியிருக்கிறார்கள். அது வண்டியை வாசலுக்கு வெளியே எடுத்து வராதபடி கதவின் மேல் இடிக்கும்.”
“என்ன சாமர்த்தியம்” என்று சாமி வியந்தான்.
“கடைக்கு வருகிறவர்களும் ஒரு விதத்தில் புத்திசாலிகள் தான். கடையின் வாசலுக்கு எதிரில் இரண்டு நோ பார்க்கிங் இடங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு ஏகப் போட்டி. அங்கே காரை நிறுத்தி சாமான்களை வண்டியில் ஏற்றி விடுவார்கள்.” அச்செயலில் அவளுக்கு ஒப்பதல் இல்லை என்பது அவளுடைய தழைந்த குரலில் தெரிந்தது.
சூரன் நிறுத்த இடம் தேடி காரை மெதுவாக ஓட்டினான். முன் வரிசைகளில் எதுவும் கண்ணில் படவில்லை. சாமி ஜன்னல் வழியே கடைக்குள் இரும்புக் கழிகள் பொருத்திய வண்டிகளைப் பார்த்த போது கடைக்காரனின் யுக்தி புரிந்தது. ஏற்கனவே நோ பார்க்கிங் இடங்களில் ஒன்றில் காரை நிறுத்திவிட்டு வந்த சாரதி கை காட்டவே சூரன் நிறுத்தி ஜன்னலைக் கீழே இறக்கினான்.
அவர் நோ பார்க்கிங் இடங்களைச் சுட்டிக் காட்டி, “இன்று நமக்கு அதிருஷ்டம்தான்! அங்கே இன்னொரு இடம் காலியாகப் போகிறது. சூரன்! அங்கே நீ காரை நிறுத்தலாம்” என்றார். அவர் சொன்னபடியே சங்கு, சக்கரம், தாமரை அடையாளங்களைப் பின் ஜன்னலில் சுமந்த ஒரு லெக்ஸஸ் பின்னோக்கி வெளியே வந்து நேராகத் திரும்பி எதிர்ப் பக்கம் சென்றது.
“அப்படிச் செய்யலாம் அங்க்ல்! ஆனால் அது என் பண்பாட்டிற்கு எதிரானது” என்றான் சூரன்.


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation