படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

விஜயன்



(8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் ப+க்கள் – இலக்கணக் குறிப்பு:

பள்ளியில் படிக்கும்போது எனக்கு அந்நியமான இரண்டு பரிட்சைகள், ஒன்று கணிதம், மற்றொன்று தமிழ் இரண்டாம் தாளில் உள்ள இலக்கணக் குறிப்பு. எனக்கு நன்கு பரிச்சயமான இரண்டு இலக்கணக் குறிப்புகள் “வினைத்தொகை” ஊறுகாய் மூன்று காலங்களைக் குறிக்கும் சொல்; மற்றும் “வாடாமலர்“, ஈறுகெட்ட எதிர்மறை பெயரச்சம். “வாடாமலரில் ““வாடாத“வில் உள்ள “த“ மறைந்து ஒரு எதிர்மறைப் பொருளை உணர்த்தும் சொல்.
அந்நியன் என்ற சொல்லின் பரிமானம், கல்லூரிகளில் நான் படிக்கும் காலத்தில் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகளில் அறிமுகமான, பிரெஞ்சு எழுத்தாளர் “ஆல்பர் காம்யு“வின் தமிழாக்க நாவலான “அந்நியன்“. பள்ளிகளில் கல்கியின் “பொன்னியின் செல்வன்“ பிரமிப்புக்குப் பின்னால், ஜெயகாந்தன், ஜானகிராமனுக்கு அப்பால், ஒரு அந்நிய எழுத்தாளரின் “அந்நியன்தான்“ பிரமிப்பை ஏற்படுத்திய நாவல்.
இதற்குப் பின்னால் இதே பெயரில் வந்த திரைப்படம் “சுத்த ஆனியன்“ வெங்காயம்! ஊரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. அன்பே சிவம், இயற்கை, ரிதம், 12பி மற்றும் சில படங்கள் தவிர கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்த தமிழ் படங்கள் யாவும் நிறைவான படங்கள் அல்ல.
தமிழ் வெகுஜன ஊடகங்களான திரைப்படங்களும், “டிவி“ நிகழ்ச்சிகளும் எனக்கு அந்நியமானவையே! சமீபகாலமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னுள்ள ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா போன்ற பெருமளவில் விளம்பரம் செய்யப்படும், பெப்ஸி உமா பாணி டெலிபோன் உளரல்கள். கலக்கப்போவது யாரு போன்ற காமெடிகள், அறைத்த மாவை அறைக்கும் பட்டி மன்றங்கள், மூக்கை உறிஞ்சும் மெகாத் தொடர்கள், பொய்யே உருவான செய்திகள் இப்படி இருபத்தி நாலு மணி நேரமும், ஏழு நாட்களில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிகளில்கூட, விளம்பரம் செய்யுமளவுக்கு விபரம் உள்ளவை அல்ல. சன் டிவி முதல் கலைஞர் டிவி வரை “இடியட் பாக்ஸ்“ என்ற சொல்லுக்கு சரியான உதாரணங்கள் தமிழில் டிவி நடத்துபவர்களும், தினசரி நடத்துபவர்களும் சுத்த அறை வேக்காடுகள். தமிழில் அறிவு _Pவிகளும், கலைஞர்களும் இந்த ஊடகங்களுக்கு வெளியேதான் இருக்கிறார்கள்.
இதை எழுதும் வேளையில் அக்டோபர் 26 நம்பர் ஒன் நாளிதழ் “தினகரன்“ பத்திரிக்கையில் முதல்பக்க அதிசயம். விபரத்திற்கு நேரடியாக பாருங்கள். தினகரனில் முதல் பக்கத்தில், 10 சதவீதத்தில் ஒரே ஒரு அடைமழை, செய்தியைத் தவிர மீதமுள்ள 90 சதவீதமும் விளம்பர மழையால் நனைந்திருந்தது. வர வர தினசரி மற்றும் வாரப் பத்திரிக்கைகளில் பெரும்பாலான பக்கங்கள் “பிளாட்பாரத்தில்“ உள்ள விளம்பர பலகைப் போல முழுதும் விளம்பரமாகவே நிரம்பியிருக்கிறது. பத்திரிக்கையில் விளம்பரம் இருக்கலாம், விளம்பரத்திலா பத்திரிக்கை? “அன்னை தெரசா மரணம்“ என்று முதல் வரி 10 பாயிண்டிலும் இந்த செய்தியை உங்களுக்கு அளிப்பது “வசந்த் அண்டு கோ“ என்று 72 பாயிண்டில் அடுத்த வரியும் இருந்தால் எவ்வளவு எரிச்சலடைவீர்கள். சந்தைப் பொருளாதாரத்தில் தரமான விஷயம் மலிவாக கிடைத்தால் அது சாதனை, ஆனால் விற்காத மலிவான விஷயம் கடைசரக்காகி உங்கள் மேல் பெய்தால் அது அடை மழையா! அல்லது சகதி மழையா? தமிழ் வெகுஜன ஊடகங்கள் “வினைத்தொகை“ குறிப்பில் சொல்லப் போனால் எனக்கு நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் “அந்நியமாகி“ போய் கொண்டிருக்கிறது! இலக்கணம் மாறிய குறியீடுகள்!
“அஞ்சா நெஞ்சன்“ “அழகிரி“
“யார் சொன்னது மதுரையில் மீனாட்சியின் ஆட்சியென்று, ஐந்தடிக்கு ஒரு அஞ்சா நெஞ்சன்“ ஆளுயர போஸ்டர் ஆட்சி. சிலகாலமாக மதுரையில் உயர் நீதிமன்ற வழக்கு விஷயமாய் செல்லும்போது ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கு செல்லும் வழி நெடுகிலும், ஐந்தடிக்கு ஒரு போஸ்டர். தமிழகத்தில் மற்ற நகரங்களைவிட மதுரையில்தான் டிஜிட்டல் போஸ்டர் பைத்தியம் அதிகம். ஆண்டி முதல் அஞ்சா நெஞ்சன் வரை வீட்டில் நடக்கும் எல்லா வைபவத்திற்கும், வெளியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பெரிய பேனர்வைப்பது தவிர்க்க முடியாத சடங்கு அதில் தங்கள் குடும்ப போட்டோவுடன், இஷ்ட தேவதைகளான நயன்தரா முதல் மறைந்த அரசியல் தலைவர்களான பசும்பொன் தேவருடன், தன்னையும் இனைத்து படங்களுடன், பட்டங்களுடன் பறைசாற்றி கொள்ள “தெருவெல்லாம்“ போஸ்டர் மழைதான்!
மதுரையில் என் டாக்ஸி டிரைவரிடம் இதுபற்றி கேட்டபோது கூச்சத்துடன் தன் திருமணத்திற்கு, தான்கூட நாலாயிரம் ரூபாய் செலவு செய்து பேனர் வைத்ததாக சொல்லி, அந்தப் பணத்தில் உறவினர்களை வண்டிவைத்து திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தால் அவர்களுக்காவது திருப்தியாக இருந்திருக்கும் என்று சொல்லி வருத்தப்பட்டார்.
அஞ்சா நெஞ்சன் என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சத்திற்கு “வெட்கமில்லா விளம்பரம்“ என்று இலக்கணக் குறிப்பு சொல்லலாமா?
வாடாமலர் – தமிழ் வெகுஜன ஊடகங்களில் அன்னியனாகிப் போன எனக்கு இணையப் பத்திரிக்கைகளும் தமிழ் “வலைப்ப+க்களும்“. தான் வாடா மலர்கள். ஜெயமோகன் தொடங்கி முத்துலிங்கம், இரா முருகன், வாஸந்தி, ஜெயபாஸ்கரன் அசோகமித்திரன், ஜெயபாரதன், வண்ண நிலவன் வரை பி.கே. சிவகுமார் தொடங்கி பாஸ்டன் பாலாஜியிலிருந்து காற்றுவெளி மதுமிதா வரை மற்றும் இங்கு பெயர் குறிப்பிடாத பல வலை பூக்கள் என் விரல் நுணிகளில், நான் விரும்பும் வலைகளில், விற்பனைக்கில்லாத என் விரலுக்கு எட்டிய வாடாமலர்கள். இன்று கண்ணதாசனின் பாடல் கேள்விக்கு பூப்பூ வா ப+த்திருக்கு பூ மியிலே ஆயிரம் பூ , பூ விலே சிறந்த பூ , என்ன பூ ? என்று கேட்;டால் விரல்களின் வருடலில் பூத்த “வலைப்பூ“ என்று சொல்லியிருப்பேன்.
இலக்கணம் மீறிய குறியீட்டில் “வலைப்பூக்கள்“ வினைத்தொகையா? அல்லது “உயர்வு நவிர்ச்சை அணியா?“ இலக்கணக்குறிப்பு அந்நியன் என்று தொடங்கி வேறு குறிப்புகளை எழுதி முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்.
இதைத்தான் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதை என்று சொல்கிறார்களோ?


kmvijayan@yahoo.com

Series Navigation

விஜயன்

விஜயன்