பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

அரவிந்தன் நீலகண்டன்


ஓர் உயிரினமாக இப்புவியில் நாம் வாழவும் நம் எதிர்கால சந்ததிகள் வாழவும் சுற்றுப்புற சூழலியல் ஓர் அறிவியலாக மட்டுமின்றி நம் அன்றாட பிரக்ஞையில் ஓர் பகுதியாகவும், நம் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் உரைகல்லாகவும் விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று பரிணாம அறிவியலுடன் சுற்றுப்புற சூழலியல் கொண்டுள்ள தொப்புள்கொடி உறவே ஆகும். சுற்றுப்புற சூழல் என்பது தேர்வு செய்யும் ஒரு தேர்வு இயக்கியாக டார்வினால் அறியப்பட்டது. பரிணாமத்தின் இயங்குமுறையின் பன்மைத்தன்மை குறித்து, உயிரியல் சூழலில் முதன்முதலாக எடுத்துரைத்தவர் சார்ல்ஸ் டார்வினே. பன்மை இயக்கங்கள் ஒருசேர உறைவதன் சாத்திய கூறினை ஆபிரகாமிய சூழலில் உருவான மேற்கத்திய மூளை ஏற்றுக்கொள்ள பெரும் தயக்கம் காட்டி வந்துள்ளது. ஆயினும் அண்மைக்காலங்களில் உயிரிக்கோளத்தின் பல தளங்களில் பல்வேறு பரிணாம இயக்க முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. நியோ-டார்வினியவாதிகள் 1960களின் இறுதியிலும், ’70களின் தொடக்கங்களிலும் லின்மர்குலிஸின் ‘உள்ளுறை இசைவிருப்பு ‘ இயக்கத்தின் சாத்திய கூறுகளை மறுத்ததற்கான காரணம் ஆபிரகாமிய பார்வையான ‘இதுவே ஒரே வழிமுறை ‘ என்னும் எண்ணவோட்டமாக இருக்க கூடும். அவ்வாறே மற்றொரு சாத்தியகூறின் கண்டுபிடிப்பால் இயற்கை தேர்வே பொய்ப்பிக்கப்பட்டதாக காட்டும் மேற்கத்திய பொதுஜன அறிவியல் ஊடகங்களின் போக்கும் ஆபிரகாமிய பார்வை அடிப்படையிலானதாக இருக்கலாம். பொதுவாக பரவுதன்மை கொண்ட ஆபிரகாமிய மதங்களிலேயே ஒற்றை இயக்க பார்வை பெரும் இறுக்கம் கொண்டுள்ளது. (மாறாக பரவுதன்மையற்ற ஆபிரகாமிய சமயமான யூதத்தில் பன்மைக்கான சாத்தியம் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ‘கபால் ‘ மறைஞான வளர்ச்சி. யூத சமயத்தில், அது கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுகங்களிடையே அடக்குமுறைகளிலேயே ஜீவித்த போதும் கூட, ‘கபால் ‘ மறைஞானம் பெரும் பரிணாமம் அடைந்திருப்பதை காணலாம்.) மற்றனைத்து காரணிகளும் பொதுவாகவும் சமமாகவும் கொண்ட இரு தேசங்களில் பரிணாம அறிவியலை அறிவியலாக ஏற்கப்படுவது அந்நாடு சுற்றுப்புற சூழல் அறிவியலுக்கும் , அச்சூழலியல் சமுதாய மதிப்பீடுகள் சமுதாய மதிப்பீடுகளில் பெருமளவு கலந்திருப்பதையும் தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது. ஏனெனில் சிருஷ்டி அல்லது இயற்கையிலிருந்து தனித்த மானுட உயர்த்துவம் எனும் இரண்டுமே இயற்கையின் மாறும் தன்மைக்கு எதிரான போக்கில், இயற்கையிலிருந்து அன்னியப்பட்ட மானுடம் அதனை அடக்கியாள்தல் எனும் அடிப்படையில் சுற்றுப்புற சூழலியலை காண்கின்றன. உதாரணமாக பூச்சிக்கொல்லி மருந்து ஏன் மிகையாக பயன்படுத்தப்பட கூடாது எனும் கேள்வியை எடுத்துக்கொள்வோம். மாக்ஸ் வெப்பரால் பிரபலப்படுத்தபட்ட ‘புரோட்டஸ்டண்ட் மதிப்பீடு ‘ கோலோச்சும் சமுதாயத்தில் அக் கேள்விக்கு அது உணவுச் சங்கிலியில் நுழைந்துவிடக்கூடாது என்பதே பதிலாக இருக்கும். மாறாக அதனால் ஏற்படும் உயிர்பன்மை அழிவு ஒரு காரணமாக கருதப்பட மாட்டாது.

இன்றைக்கும் பல அடிப்படைவாத கிறிஸ்தவ திருச்சபைகள் ‘பசுமை குழுக்களை ‘ எதிர்ப்பது அவை மானுட வாழ்வினை சிரமமேற்படுத்தி மற்ற ‘கீழான ‘ படைப்புகளை முக்கியத்துவமடைய வைக்கின்றன என்பதுதான். இடதுசாரிகள் பசுமை பிரச்சனைகளை உற்பத்தி உறவு முறைகளுக்கப்பால் பார்க்க இயலாதவர்களாக இருப்பதன் மூலகாரணமும் இதுதான். இயற்கையிலிருந்து கிடைப்பவை எடுக்க எடுக்க குறையாத வளமையாக விளங்கும், மட்டுப்படுத்துவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலைதான் இலாபம் கருதி உற்பத்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்த முதலாளித்துவ வர்க்கம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை மட்டுப்படுத்த ஏற்படுத்தப்படுவதுதான் சூழலியல் பிரச்சனைகள் எனும் இடதுசாரி பிரச்சாரத்தை இன்று கூட (சோவியத் காலங்களில் இது மிக பிரபலம்) காணலாம். அதேசமயம் இடதுசாரிகள் அதிகார பீடங்களில் இல்லாத நாடுகளில் சூழல் நாசங்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்துமே முதலாளித்துவத்தின் இலாப நோக்கின் விளைவாக காணும் போக்குடன் வெகுஜன பசுமை இயக்கங்களுடன் இடதுசாரிகள் கை கோர்த்துக் கொள்வதை பார்க்கலாம். இது சுற்றுப்புற சூழல் பிரச்சனைகளின் பல் பரிமாணத் தன்மையை வெகுவாக குறைத்து அது ஒரு சமுதாய பொருளாதார பிரச்சனை மட்டுமே என்றும் அதற்கான தீர்வு ஒரு குழு (பொதுமக்கள் இயக்கம்) மற்றொரு குழுவினை (ஆலை

அமைக்கும் முதலாளி அல்லது அரசு) வெற்றி கொள்வதால் மட்டுமே இயலும் என்கிற அளவில் கொண்டுவிட்டுவிடுகிறது. இதன் விளைவாக ‘பசுமை அரசியல் ‘ குறிப்பாக இடதுசாரி ‘பசுமை அரசியல் ‘ தன்னளவில் பசுமை பிரச்சனைகளை குறுக்குவது இன்றியமையாததாகும். இந்நிலையில் ஓர் பசுமை இயக்கத்தின் செயல்பாடு எந்த அளவு அறிவியல் தன்மை கொண்டதாக உள்ளது என்பது கேள்விக்குள்ளாக்கப் பட வேண்டியதும் கட்டாயமாகிவிடுகிறது. பரவுதன்மையும், மூடியதுமான, பன்மை விரும்பாத மற்றும் பன்மை அழிக்கும் சித்தாந்த பின்புலம் கொண்ட பசுமை இயக்கம் எதுவும் பசுமை பிரச்சனைகளை ஒருவித அரசியல் அதிகாரம் அடைவதற்கான ஓர் பகடைக்காயாகவே பயன்படுத்தி வந்துள்ளன. உதாரணமாக ஜார் அரசில் பெரும் இயந்திரச் சூழலில் தொழிலாற்றும் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து முதன்முதலாக பெருமளவில் பொதுஜன பிரக்ஞையை உருவாக்கியது லெனினின் ‘இஸ்க்ரான் ‘ (தீப்பொறி) தான். ஆனால் சோவியத் அரசின் கீழ் அது குறித்த பிரக்ஞை ஒரு அறிவியலாக வளரவில்லை மாறாக சில சட்டங்களாக உருமாறி பின்னர் அதுவும் கிடப்பில் போய்விட்டது. தொழிலாளர் உடல் நிலைக்கு தீமைசெய்யும் சூழலில் தொழிலாளர்களை உழைக்க வைப்பது காலம் சென்ற சோவியத்திலும் செஞ்சீனத்திலும் ஒரு திறமையான அரசியல் சட்டவரம்பிற்கப்பால் பட்ட தண்டனையாக மாற்றிய பெருமை அந்நாடுகளின் பொலிட் பீரோக்களுக்கு உண்டு. நாளை பாரதத்தில் செங்கொடி பறந்தால் நர்மதை அணைத்திட்டம் முற்போக்கு திட்டமாகிவிடும் என்பதோடு நமது அணு ஆயுத மற்றும் அணு உலை திட்டங்களும் கூட ஏற்கத்தக்கவை ஆகிவிடும். இந்நிலையில் பசுமை இயக்கம் ஓர் அரசியல் இயக்கமாக எந்த அளவு பரிணமிக்க முடியும் அல்லது அரசியல் சாரா, மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஓர் அறிவியல் இயக்கமாக இயங்குவதற்கான வழிமுறைகள் என்ன ?

இயற்கைக்கும் மானுடத்திற்குமான உறவு குறித்து மேற்கத்திய பரவுதன்மை கொண்ட ஆபிரகாமிய மரபுகள் (கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் மார்க்சியம்) முன்வைக்கும் பார்வைகள், இம்மரபுகளால் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் தேச மரபுகள் வைக்கும் பார்வைகள் மற்றும் இன்றைய பரிணாம மற்றும் சுற்றுப்புற சூழல் அறிவியல் முன்வைக்கும் பார்வைகள் ஆகியவற்றிற்கிடையே உள்ள அடிப்படை ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் ஆகியவற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

கிறிஸ்தவ இறையியலை பொறுத்தவரை மனிதனின் மேலாதிக்கமானது சர்வ நிச்சய உண்மையாகும். இவ்வுலகமும் அதன் படைப்புக்களும் மனிதன் ஆண்டு அனுபவிக்க இறைவனால் உருவாக்கப்பட்டவையே. இயற்கை வழிபாடு, உயிர்சக்திகளினை மகிமைப்படுத்துதல் என்பன மிக கேவலமாக காணப்பட்டன.யூதத்திலிருந்து கிறிஸ்தவம் உருவாகையில் பல கூறுகள் அவ்வுருவாக்கத்ததில் செயல்பட்டன. ஆனால் தன் அதிகார அமைப்பினை ரோம சாம்ராஜ்ய அரசமைப்பின் அடிப்படையில் உருவாக்கிய திருச்சபை இயற்கையிலிருந்து வேறுபட்ட இறைமையையும், அதன் ஒரே அதிகார பிரதிநிதித்துவமாக தன்னையும் நிலைப்படுத்த ஏதுவாக இப்புதுசமயத்தை உருவாக்கியது. யூதத்தினை ஒருமை தன்மைகொண்ட சமயமாக்கி பின் அதன் வரலாற்று நீட்சியாக தன்னை கற்பித்து கொள்ள ஏதுவாக பரவுதன்மை கொண்ட ஏக இறையியல், நம்பிக்கையற்றோருக்கு என்றென்றைக்குமான நரகம், எனும் நிலைபாடுகளை தன் அஸ்திவார தூண்களாக திருச்சபை ஏற்றுக்கொண்டது. யூத-ரோம உறவுகளில் யூத திருக் கோவில்கள் போர் சமயத்தில் ரோமர்களால் அழிக்கப்படுவதும் பின்னர் அவர்களாலேயே கட்டித்தரப்படுவதுமான நிலைகள் மாறி, மற்ற சமயத்தினரின் கோவில்கள் அழிப்பு ஒரு சமயக்கடமையாக மாறியது கிறிஸ்தவம் சமய உலகுக்கு அளித்த முக்கிய கொடையாகும். பல பாகன் சமயத்துவரின் புனித காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டன. பெண் வழிபாட்டாளர்கள் சூனியக்காரிகளாக்கப் பட்டனர். பின்னென்றும் கிறிஸ்தவ சமய வரலாற்றில் எழுந்த தாந்திரீக தன்மை கொண்ட சமய போக்குகளும் ஈவிரக்கமற்று நசுக்கப்பட்டன. இதற்கான முதல் பெரும் அடையாளம் தம் திருச்சபை அங்கீகரித்ததல்லாத மற்றனைத்து நற்செய்திகளும் – குறிப்பாக ஞான நற்செய்திகள் (புனித தோமை, புனித மாக்தலேனா ஆகியவை இவற்றில் முக்கியமானவை) அழிக்கப்பட்டன. இவ்வாறு அழிக்கப்பட்ட ஞான நற்செய்திகள் பன்மைதன்மையை, இயற்கையோடிணைந்த பெரும் மனதாக இறைமையை காண முற்படுபவை என்பது முக்கியமானது. உதாரணமாக புனித மாக்தலேனாவின் பரிசுத்த நற்செய்தியில் நாம் அறியும் இறைமை இயற்கையினை தன் வெளிப்பாடாக கூறுகிறது. மேரி மாக்தலேனின் ஞான நற்செய்தியில் (Gnostic Gospel) ஏசு இயற்கை குறித்து கூறியதாக வரும் பகுதி பின்வருமாறு: ‘அனைத்து இயற்கையும், அனைத்து வெளிப்படும் வஸ்துகளும், அனைத்து உயிர்களும் ஒன்றுள் ஒன்றாக , ஒன்றோடொன்றாக ஜீவிக்கின்றன. மீண்டும் அவை அவை தம் வேர்களில் கலந்திடும். ஏனெனில் ஜட வஸ்துவின் இயற்கை அந்த இயற்கையின் வேர்களிலேயே கரையும். ‘1 தன்னறிதலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ஞான நற்செய்தியில் புனித மாக்தலேனா பெண்ணான காரணத்தால் அவள் உண்மையை அறிந்திருக்க கூடுமா என ஏசுவின் ஆண் சீடர்கள் வினா எழுப்பியதாகவும் அது பதிவு செய்கிறது. திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட பரிசுத்த நற்செய்திகளிலும் ஏசு உயிர்த்தெழுந்ததை கண்டது அவரது ஆண் சீடர்களல்ல புனித மாக்தலேனாதான் என்பதும், ஆனால் நற்செய்தி அறிவிப்பு எனும் கிறிஸ்தவ பரவுதன்மைக்கு தலைமை தாங்கியவர்களோ அவர்களது ஆண்சீடர்கள் மாத்திரமே என்பதும், பின்னெப்போதும் பெண்மை மேலெழ அனுமதிக்காத அதிகார கட்டுமானத்தை திருச்சபை ஏற்படுத்தியதையும் காண்கையில் ஞான நற்செய்திகளில் நாம் அறியப்படும் கிறிஸ்தவ மறைஞானம் ஒரு அதிகார அமைப்பினை ஏற்படுத்த வேண்டிய ஆசைக்காக ஈவிரக்கமின்றிபலியிடப்பட்டதென்பதை அறிந்துகொள்ளலாம்2. லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னிய பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரும், கிறிஸ்தவ இறையியல் வரலாற்றினை ஆழ்ந்து ஆராய்ந்தவருமான பேராசிரியர் லின் டி வைட் புகழ்பெற்ற ‘சயின்ஸ் ‘ இதழில் இன்றைய சூழலியல் அபாயங்களுக்கான வேர்களை விளக்குகையில், அவற்றிற்கும் கிறிஸ்தவத்திற்குமான உறவினை அடிக்கோடிடுகிறார், ‘பாகன் உயிர்வழிபாட்டினை அழித்ததன் மூலம் கிறிஸ்தவம் இயற்கையை அக்கறையின்றி அழித்து பயன்படுத்த வகை செய்தது. …. (சில பாகன் வழிபாட்டு முறைகளை பின்பற்றும்) புனிதர் வழிபாடும் கூட தன் அடிப்படைத்தன்மையில் பாகன் இயற்கை வழிபாட்டிலிருந்து வேறுபட்டதேயாகும். ஒரு கிறிஸ்தவனை பொறுத்தவரையில் ஒரு மரம் என்பது ஒரு பெளதீக இருப்பு என்பதற்கப்பால் ஏதுமில்லை. புனிதவனம் எனும் கருத்தாக்கமே முழுமையாக கிறிஸ்தவத்திற்கும் அதன் அடிப்படையிலான மேற்கத்திய மதிப்பீடுகளுக்கும் அயலானது. ஏறக்குறைய ஆயிரம் வருட கிறிஸ்தவ மிஷினரி இயக்கம் புனிதவனங்களை வெட்டித் தள்ளியவாறே இருந்தனர். ஏனெனில் புனித வனங்கள் இயற்கையில் தெய்வீக உயிர்சக்தியின் வெளிப்பாடாக அறியப்பட்டு ஆராதிக்கப்பட்டதால் அவற்றின் இருப்பே விக்கிரக ஆராதனையாயிற்று. … கிறிஸ்தவம் அதன் மேற்கத்திய வடிவத்தில் மிக அதிகமான மானுடத்துவ சார்பு மதமாக விளங்குகிறது….பழம் பாகனிய சமயங்கள் மற்றும் ஆசிய தர்மங்களினின்றும் கிறிஸ்தவம், இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே பெரும் பிளவை சிருஷ்டித்ததில் அது முழுமையாக மாறுபடுகிறது. மேலும் கிறிஸ்தவம் இறைவனின் சங்கல்பமே மனிதன் தன் தேவைக்காக இயற்கையை சுரண்டுவதுதான் எனவே அதுவே முறையான வாழ்க்கை முறை என நிர்ப்பந்தித்தது …. எனவே இயற்கையின் இருப்பு மானுடத்தின் சேவைக்காக என்று மட்டுமே மதிக்கப்பட வேண்டும் எனும் கிறிஸ்தவ அடிப்படையை மறுதலிக்காத வரை நாம் மேலும் மேலும் மோசமாகும் இயற்கை சீரழிவுகளை நோக்கியே சென்று கொண்டிருப்போம். ‘3

ஆனால் பரிணாம அறிவியலின் உண்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு கிறிஸ்தவ திருச்சபைகள் தம் இறையியலை விரிவும் ஆழமும் கொண்டதாக ஆக்குதற்கான சாத்தியகூறுகள் சில மிகச்சிறந்த கிறிஸ்தவ இறையியலாளர்களால் முன் வைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக தெயில் தி கார்ட் சார்டின் மற்றும் அறிவியலாளரான தியோடோஸியஸ் தொப்ஸாக்ன்ஸ்கி ஆகியோரால் இப்பார்வைகள் மிகக் கடுமையான தவத்தை ஒத்த உழைப்பின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘ஆல்பாவும் ஒமேகாவாகவும் விளங்கும் பிரபஞ்ச கிறிஸ்துவினுள் ‘ தன்னுணர்தல் நோக்கிய பயண சாதனையாக வாழ்வினை மாற்றும் தூய ஆன்மிக வாழ்வாக கிறிஸ்தவ வாழ்வு அமையுமாயின் அது சுற்றுப்புற சூழலியலின் தவிர்க்க இயலா முதல் விதியான பன்மையுடன் ஒருங்கிணைந்து வாழலுடன் எவ்வித மோதலும் கொண்டிராது அமையும். ஆனால் திருச்சபைகளும் சரி பின் வந்த இறையியலாளர்களும் சரி இப்போக்கினை முழுமையாக நிராகரித்து சூழலியலை கணக்கிலெடுக்கும் இறையியலை உருவாக்க முயற்சிக்கின்றனர். சூழலியலின் அறிவியலை மறுதலிக்கும் அடிப்படைகள் இத்தகைய இறையியலில் உருவாவது தவிர்க்க இயலாததாகும். உதாரணமாக ‘உலகின் தோட்டக்காரன் அல்லது பொறுப்பாளனாக மனிதன் ‘ எனும் இறையியல் பார்வை இன்றைய கிறிஸ்தவ திருச்சபையின் அங்கீகரிக்கப் பட்ட பசுமை பார்வையாக உள்ளது4. இப்பார்வையின் அடிப்படை ‘இயற்கைக்கு தன்னளவில் எவ்வித மதிப்பும் இல்லை ‘ 5என்பதும் ‘மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு மனிதன் இறைவனுடன் சரியான உறவினை ஏற்படுத்துவதன் மூலமே உருவாக்கப்பட முடியும் ‘ என்பதும் இந்த சரியான உறவு ‘திருச்சபையின் மூலமாக ‘ மட்டுமே ஏற்பட முடியும் என்பதுமாகும். இவ்விதத்தில் வளரும் நாடுகளின் சூழலியல் பிரச்சனைகள் இறை-மனித உறவு சரியாக முறைப்படவில்லை என்பதனாலேயே என்பதும் எனவே வளரும்நாடுகளில் உள்ள சூழலியல் பிரச்சனைகள் ‘நற்செய்தி பரப்புதல் ‘ எனும் மதமாற்றத்திற்கான முதல் ஆக்கப்பட வேண்டும் என்பதுமே திருச்சபைகளின் ‘பசுமை ‘ அரசியல் இயக்க பங்கேற்பாக அமைகிறது. மேலும் இன்று இயற்கை தன்னளவில் தீமை கொண்டது; சைத்தானின் கைப்பாவை எனும் கருத்தாக்கமும், இயற்கை வழிபாடென்பது வளரும் நாடுகளின் முன்னேற்றங்களை தடைபடுத்தும் ஒன்று; நாகரிகமற்ற ஒன்று என்பதுமான சித்திரமும் பல தளங்களில் கிறிஸ்தவ பிரச்சாரத்தில் பயன்படுத்தப் படுகின்றன.. இன்று மேற்கத்திய கிறிஸ்தவ இறையியல் ஹிந்து மற்றும் பெளத்த தர்மங்களின் சிறந்த கருத்தாக்கங்களுடன் உறவு கொண்டு அவற்றை அழிக்கும் ஆபத்தாக கருத வேண்டாத சூழலில் தன்னை புத்துயிரூக்கம் பெறவைக்கும் சாத்திய கூறுகளை கொண்டிருக்கிறதென்றால், பாரதத்திலோ 19-ஆம் நூற்றாண்டின் இனவாத சித்தாந்தங்களை கொண்ட அழிவுச்சக்தி இறையியலையே கிறிஸ்தவம் முன் வைக்கிறது.(வளரும் நாடுகளில் காலாவதியாகிவிட்ட தொழில்நுட்பத்தை மற்றும் தரமற்ற சரக்குகளை தள்ளும் பன்னாட்டு வியாபார அமைப்புகளூக்கும் மேற்கத்திய திருச்சபைகளின் ஆசிய ஆத்மாக்களின் அறுவடையாளர் களுக்கும் இந்த விஷயத்தில் வேறுபாடு இல்லை.) பாரதத்தின் வடகிழக்கில் வனவாசி சமுதாயங்களிடையே மதமாற்ற உக்தியாக இனவாதம் மிஷினரிகளால் புகுத்தப்பட்டதன் விளைவாக பெரும் மானுட சோகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதமாறிய ஒரு வனவாசி குழுவினரை ‘இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் ‘ (Race chosen by God) என மிஷினரிகள் தனிமைப்படுத்தி அவர்களுக்கும் மற்ற குழுவினருக்கும் பகையினை ஏற்படுத்துகின்றனர். இது இருவிதங்களில் திருச்சபைக்கு உதவிகரமாக உள்ளது. ஒன்று: மிக அதீதமாகையில் தனி நாடு உருவாக்கப்படலாம். இரண்டு: சமாதான பேச்சு வார்த்தைகளில் திருச்சபை பங்கேற்பதன் மூலம் அதன் கட்டுப்பாட்டை மக்கள் மீது மீண்டும் திணிக்கலாம். மதமாற்றத்தை எதிர்க்கும் பல வனவாசிகள் இன்று அழிவினை நோக்கி செல்கின்றனர். உதாரணமாக திரிபுராவில் ஜமாதியாக்கள் மற்றும் மிசோரமில் ரியாங்குகளை குறிப்பிடலாம். வனவாசிகளிடையே கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடு அவற்றின் ‘பசுமை ‘ பார்வையின் அடிப்படை குறைபாடுகளை காட்டுகின்றன. இக்குறைபாடுகள் திருச்சபைகள் அதிகாரப்பற்றினால் சுயமாக தேர்ந்தெடுத்துக் கொண்டவை. திருச்சபைகள் வளரும் நாடுகளில் விளையாடும் அதிகார விளையாட்டில் ஆத்மாக்களின் அறுவடையில், இக்குறைபாடுகளே மனிதத்தன்மையற்ற முறையில் மண் சார்ந்த மரபுகளை அழிக்கும் வலிமையான ஆயுதங்கள். எனவே திருச்சபைகளை பொறுத்தவரையில் அவை வலிமை வாய்ந்த ‘நற்செய்தி பரப்பும் கருவிகள் ‘. எடுத்துக்காட்டாக ஒரு கிறிஸ்தவ இறையியலாளர் பின்வருமாறு கூறுகிறார், ‘ஹிந்துக்கள் ஏன் வறுமையில் உழல்கிறார்கள் ? அவர்களுக்கு இயற்கையை அடக்கும் கிறிஸ்தவ மதிப்பீடுகள் இல்லை. நதிகளை வணங்குகிறார்கள். அவற்றில் அணையைக் கட்டி வளமுடன் வாழவே அந்நதி படைக்கப்பட்டது என்பது அவர்களுக்கு தெரியாது. ‘6 இது ஏதோ ஒரு சாதாரண கிறிஸ்தவ பிரச்சாரகர் அல்ல. இந்திய மதச்சார்பற்ற அரசியலில் முக்கிய பங்கு வகித்தவரும், கிறிஸ்தவ அறிவுலகில் ‘மிகச்சிறந்த மேதமை உடைய முன்னணி இந்திய இறையியலாளர் ‘ என அறியப்படுபவருமான விஷால் மங்கல்வாதி. புரோட்டஸ்டண்ட் திருச்சபை ஊழியராக இருந்தபடியே பகுஜன்சமாஜ் கட்சி மற்றும் ஜனதாதள கட்சிகளில் பெரும் பதவிகளில் இருந்தவர் இவர். ஜனதா தளம் ஆளும் கட்சியாக இருந்தபோது அதன் விவசாயிகள் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கினார். ஆக, மேலை நாட்டு கிறிஸ்தவ இறையியலில் பசுமை குறித்த சில ஆக்கபூர்வ சிந்தனைகள் இருந்தாலும் கள செயல்பாட்டில் மற்றும் வளரும் நாடுகளில் திருச்சபை இன்னமும் தன் காலனிய மற்றும் மேலாதிக்க, அறிவியலுக்கு ஒவ்வாத கருத்தியலுடனேயே செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை.

அடுத்ததாக மார்க்ஸியம். மேலோட்டமாக நோக்குகையில் மார்க்சியம் பலவித கவர்ச்சித்தன்மைகளுடன் விளங்குகிறது. தொடர்பற்றவையாக காணப்படும் சமூகநிகழ்வுகளுக்கிடையே ஆழ்ந்த தொடர்பிருப்பதை காட்டும் ஒரு முழுமை மற்றும் ஒருமை சார்ந்த ஓரியக்கமாக சமுதாயத்தை காண மார்க்சியம் வழிகோலுகிறது. மார்க்சிய பார்வையில் தனிப்பட்டதாக எதையும் ஒருவர் காண முடியாது. அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தே காணப்படும். மேலும் மார்க்சியம் பரிணாம நோக்குடையது. மார்க்ஸ் தன்னை டார்வினின் சமுதாய வாரிசாகவே காண முற்படுகிறார். ஆனால் மானுடத்தின் தனிமைப்படுதல் என்பது மார்க்சியத்திற்கு அத்யாவசியமான ஒன்று. கிறிஸ்தவமும் மார்க்சியமும் இவ்விடயத்தில் ஒன்றிணைக்கின்றன. மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவில் ஒரு அதல பாதாளத்தை அவை இரண்டுமே கூறுகின்றன. மனித பரிணாம வளர்ச்சியின் இயக்கமானது தொல்பழங்காலம் முதலே மற்ற உயிர்பரிணாம இயக்கவிதிகளுக்கு மாறுபட்டதாக இருக்கவேண்டும் என்பதாக அவை கூறுகின்றன. மேலும் நேர்கோட்டு பரிணாமமாக உலகை காணும் மார்க்சிய பார்வையில் மதிப்பீடுகள், கலாச்சாரம் ஆகிய அனைத்துமே உற்பத்தி உறவுகளின் மேல் அமைக்கப்படும் மேல் கட்டுமானங்கள். எனவே மார்க்சிய பார்வையில் இனக்குழு சமுதாயத்தை காட்டிலும் நில உடைமைச் சமுதாயத்தையும் அதைக் காட்டிலும் தொழில்யுக சமுதாயமும் மேம்பாடுடையவை. மார்க்சின் வரலாறு குறித்த இப்பார்வை காலனிய ஆதிக்க சூழலில் உருவானவை. எனவே பாரதத்தின் மேலான பிரிட்டிஷ் அரசினை மார்க்ஸ் ஒரு வரலாற்றுத் தேவையாகவே பார்த்தார். மார்க்ஸ் பாரதத்தை குறித்து கொண்டிருந்த சித்திரம் ஒரு மூன்றாம் தர கிறிஸ்தவ பிரச்சாரகனின் சித்திரத்திலிருந்து அப்படியே எடுக்கப்பட்டது என்றால் மிகையல்ல. பாரதம் என்பது ‘பாதிக் காட்டு மிராண்டிகளின், அரைகுறை நாகரிக சிறிய குழுக்களின் நாடு ‘ என அவர் கூறினார். எனவே பாரதத்தில் மானுட மனமானது ‘மிகச்சிறிய அறிதல் சுழலுக்குள் அகப்பட்டு எல்லாவித மூட நம்பிக்கைகளுக்குமான கருவியாக சுழல்கிறது ‘ என்றும், இங்கு வாழ்க்கையானது ‘தரமற்ற, தேக்க நிலையுடைய தாவரத் தரம் கொண்டது ‘ என்றும் குறிப்பிட்ட மார்க்ஸின் பார்வையில் பாரதிய கலாச்சாரத்தின் விளைவாக, ‘இயற்கையின் பேரதிபனான மனிதன் காட்டுமிராண்டித்தனமான இயற்கை வழிபாட்டின் விளைவாக எந்த அளவு தாழ்ந்துவிட்டானென்றால் கனுமான் என்கிற குரங்கிற்கும், சப்பாலா என்கிற பசுவுக்கும் முன்னால் மண்டியிடுகிற அளவுக்கு தாழ்ந்துவிட்டான். ‘7

ஏங்கல்ஸ் ஐரோப்பிய இனமேன்மைவாதத்தை ‘அறிவியல் ரீதியாக ‘ வேரூன்ற விட்டார். இதன் விளைவாக மார்க்சிய பார்வையில் ‘தேசிய இனங்கள் ‘ அவற்றில் நிலவும் உற்பத்தி முறைகள் மூலம் மதிப்பிட படவும், ஒற்றை பெருங்கல்லாக மக்கள் குழுக்களை சித்தரிக்கும் போக்கும் ‘அறிவியல் நிலை ‘யை அடைந்தன. பிற்காலத்தில் மார்க்சிய அரசுகள் ஏற்பட்ட போது தனக்கு சித்தாந்த தடைகற்களாக தோன்றிய மரபுகளை முழுமையாக துடைத்தெறிய இந்நிலைபாடுகள் பெரிதும் உதவின. ‘மார்க்சியத்தை இந்திய சூழலுக்கும் பாரம்பரியத்துக்கும் ஏற்ற வகையில் வளர்த்தெடுக்கப் போவதாக ‘ இன்று சில மார்க்சிய சித்தாந்த அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு மார்க்சியர் கீழைத்தேச மார்க்சியம் என்கிற புத்தம் புதிய ஒட்டுத்தாளுடன் லெனினியத்தை விட மாவோவியம் சிறந்தது என்கிற ரீதியில் கூறுகின்றார். உண்மையில் இதுவரையிலான மார்க்சிய ஆட்சிகள் அனைத்திலும் மரபுகள் ஒழிப்பு, சூழல் அழிப்பு, இன வெறி என அனைத்திலும் மாவோ முதல் போல்பாட் வரையிலான ‘கீழைத்தேய மார்க்சீயர்கள் ‘ ஸ்டாலினியத்தை உருவாக்கிய மேலை மார்க்ஸியத்துக்கு சிறிதும் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மார்க்ஸிய சித்தாந்திகள் என்னதான் ‘கீழைதேய வளர்த்தெடுப்பு மார்க்சியம் ‘ பேசினாலும் சிறிதே தோலைச் சுரண்டினால் மேல்தேச மேன்மைவாதம் வெளிப்படுவதை காணலாம். ‘ஆசியத்துவ உற்பத்திமுறைகளும் ‘ அதனைச் சார்ந்த மதிப்பீடுகளும் கொண்ட சமுதாயத்தில் புரட்சி தோன்றவோ வேரூன்றவோ முடியாதென்பது ‘அறிவியல் பூர்வமான ‘ உண்மை என்பதால் சீன கம்யூனிஸ்ட் கட்சி 1927 இல் சீனா ஒரு ஆசிய தேசமே அல்லவென அதிகாரபூர்வமாக அறிவித்தது. திபெத்திய காட்டு யாக்குக்கு அமெரிக்க பைசான் காளைகளின் கதி நேர்வது மார்க்சிய அரசின் மார்க்சிய பார்வை இரு நூற்றாண்டுக்கு முந்தைய காலனிய கிறிஸ்தவ மேலாதிக்க சிந்தையையே தன் இன்றைய பார்வையாக கொண்டிருப்பதிலிருந்து மாறவில்லை என்பதனை காட்டுகிறது. எந்த அளவுக்கு மண் சார்ந்த மரபுகளின் மீது வெறுப்பையும், தாழ்வு மனப்பான்மையையும் மார்க்சியம் உருவாக்கமுடியும் என்பதற்கான சான்று இது. மேற்கத்திய தலையாட்டலை பெறாத அல்லது மேற்கின் சித்தாந்த கண்ணாடி வழியாக காணப்பெறாத எதையும் தூக்கி எறியும் இந்திய இடதுசாரி போக்கு மற்றொரு உதாரணம். இதன் மூலம் கலாச்சார துடைத்தெடுப்பு அல்லது கலாச்சார மேலாதிக்கம் ஆகியவற்றை எளிதில் மார்க்சியத்தால் ஏற்றெடுக்க முடிகிறது. பொதுவுடைமையை தன் அரசியல் சித்தாந்தமாக மேற்கொண்டுள்ள ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்கையில் ஆக்ரமிக்கப்படும் நாட்டின் சுய அடையாளத்தை முழுமையாக துடைத்தெறிய மார்க்சியம் அறிவுஜீவித்தன நியாயப்படுத்தலை வழங்குகிறது. ஓரிரு வருடங்கள் முன் வெளியான மார்க்சிய ‘பிரண்ட்லைன் ‘ பத்திரிகையில் திபெத்தில் சீனாவின் ஆக்ரமிப்பை மகிமைபடுத்தும் பிரச்சார படங்களுடன், அட்டைப்பட கட்டுரையாகவே வெளிவந்தது ஞாபகம் இருக்கலாம். (பாரதத்தை சீனா ஆக்ரமித்தபோது அகில உலக அளவில் பாரதம் மீதான ஆக்ரமிப்பை நியாயப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார பத்திரிகை பெயரும் ‘ப்ரண்ட்லைன் ‘தான் என்பது வெறும் தற்செயலான ஒற்றுமை என்றே கருதப்படலாம்.) திபெத் ஆக்ரமிப்பின் தொடக்கத்தில் திபெத் ஒரு பின்தங்கிய அனைத்து மூட பழக்கவழக்கங்களும் நிரம்பிய சமுதாயமாக பெளத்த மடாலயங்களால் வைக்கப்பட்டிருக்கிறதென்றும், எனவே முற்போக்கு சமுதாயமான சீனம் அவர்களை முன்னேற்றுவது வரலாற்றுக்கடமை என்றும் கூறி ஆக்ரமிப்பும் அதனைத் தொடர்ந்த இன அழிப்பும் நியாயப்படுத்தப் பட்டன.8 மார்க்சின் கலாச்சார காலனிய நியாயப்படுத்தல், சோவியத்களின் ஆக்ரமிப்பு நியாயப்படுத்தல் மற்றும் நேபாளத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சமஸ்கிருத ஏடுகளை மாவோயிஸ்ட்கள் எரித்தமை, அண்மையில் பாண்டிச்சேரியில் சமஸ்கிருத வகுப்புக்களில் முற்போக்கு மார்க்ஸிஸ்ட்கள் செய்த வன்முறை மேலும் திபெத்தில் தொடர்ந்து நடக்கும் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அழிப்பு ஆகிய அனைத்திலும் ஒரே சித்தாந்த நூலிழை ஓடுவதை காணலாம். ஒரு மரம் அதன் கனிகளால் நிச்சயிக்கப்படுவதாக கூறினான் நாஸரேத்தின் தச்சன் மகன். ஸ்டாலின்கள், காஸ்ட்ரோக்கள், போல்போட்கள், லெனின்கள் , மாவோக்களென விஷகனிகளையே கொடுத்துவரும் ஒரு பன்மை அழிப்பு சித்தாந்தமான மார்க்சியம் பன்மையோடிணைந்த வாழ்வினை அடிப்படையாக கொண்ட பசுமையியலுடன் எவ்விதத்திலும் இணைய முடியாதென்பதே உண்மை.

இனி பாரத தர்ம மரபுகளை காணலாம். வேத உபநிஷதங்கள் தொடங்கி பாரத மரபு முழுமையுமே இயற்கையினை ஒரு பெரும் பேருண்மையின் வெளிப்பாடாக காண்கிறது. மனிதனை இயற்கையிலிருந்து பிரிக்காமல் அதே சமயம் மானுடத்தின் சிறப்பியல்புகளையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் சாத்திய கூறு வேறெந்த மரபினைக் காட்டிலும் பாரத மரபினில் சிறப்பாக உள்ளது. பெளதீக இயற்கையினை இறைவனிலிருந்து பிரிந்த, இழிந்த உருவாக்கமாக காணாது, இறையின் வெளிப்பாடாக இறையுடலினின் ஒரு பாகமாக காண்பது தத்துவங்களிலும் சரி பக்தி இலக்கியங்களிலும் சரி வெகு இலகுவாக பாரத மரபில் வெளிப்படுகிறது.

பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து இரு உதாரணங்கள்:

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி 9

மாநிலம் சேவடி ஆகத் தூநீர்

வளைநரல் பெளவம் உடுக்கை ஆக

விசும்புமெய் ஆகத் திசைகை ஆகப்

பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக

இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே10

(இயற்கையினை இறை இயற்கையின் முடிவிலித் தன்மையில் ஓரங்கமாக கண்ட ஸ்பைனோசாவை, கிறிஸ்தவ அடிப்படைவாத ஆத்திரத்திலிருந்து தப்ப, யூத சமுதாயம் சமுதாய பகிஷ்கரிப்பு செய்ய வேண்டியதாயிருந்தது.) நவீன பாரதத்தில் பசுமை இயக்க வெற்றிகர முன்னோடிகளாக (அரசியல் நடத்துபவர்களாக அல்லாமல்) திகழும் அண்ணா ஹஸாரே, ராஜேந்திர சிங், பகுகுணா, அனில் அகரவால் ஆகிய அனைவருமே (இவர்கள் ஒரு சிலரே) பாரத தர்ம மரபுகளால் (குறிப்பாக ஸ்வாமி விவேகானந்த சிந்தனையால்) உந்தப்பட்டு தம் இயக்கங்களை ஆரம்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தலித்கள் மற்றும் வனவாசி மக்கள் இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள். பசுமை இயக்கத்தை தொழில்நுட்பம், சமுதாய ஒருங்கிணப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை இணைந்த முழுமையாக நோக்கியவர்கள். இவர்கள் வெறும் எதிர்ப்பியக்கமாக மட்டுமே தம் இயக்கங்களை நடத்தவில்லை. ஆனால் சூழலியல் அறிவியலுக்கும் சூழலியல் மக்கள் இயக்க வெற்றிகளுக்கும் பாரதிய மரபின் பங்களிப்பு என்ன என்பது நம் இடதுசாரி செமினார் வாலாக்களுக்கு சுவாரசியமில்லாத ஒரு விஷயம் அல்லது ஆராய்ச்சி செய்யுமளவுக்கு முக்கியத்துவமல்லாத ஒன்று. மாறாக மேற்கத்திய தூண்டுதலில் (கிறிஸ்தவ திருச்சபை மற்றும் இடதுசாரி) உருவாகும் தலித் மற்றும் வனவாசி இயக்கங்கள் எதிர்ப்பியக்கங்கள் எனும் குறுகியலிய இயக்கங்களாக விளங்குவதோடு அ) இனவாதம் ஆ) மேற்கத்திய மேலாதிக்க ஏற்பு ஆகியவற்றுடன் விளங்குவதை காணலாம். கையில் ஓம் விதத், காஞ்சா இலையா ஆகியோரது சித்தாந்தங்களிலும் சரி, ‘தலித் வாய்ஸ் ‘ போன்ற பத்திரிகைகளிலும் சரி இதனை தெளிவாக காணலாம். அறிவியல் சார்ந்த பசுமையியல் மற்றும் வளங்குன்றா மேம்பாட்டு (sustainable develpment) பார்வை இத்தகைய வெறுப்பியல் நோக்கி நகரும் சித்தாந்த இயக்கங்களில் உருவாக முடியாதது. மானுட பண்பாட்டு பன்மையை பாரத மரபுகள் எவ்வாறு நோக்குகின்றன ? மற்ற ஆக்ரமிப்பு கருத்தியல்களால் பாரத பண்பாட்டு பன்மைவளம் எவ்வித அபாயங்களை எதிர் நோக்குகின்றன ? பண்பாட்டு பன்மை பேணலுக்கும் உயிர் பன்மைக்குமான உறவு எத்தகையது ? அது மானுடம் ஜீவித்திருத்தலுக்கு எவ்விதத்தில், எந்த அளவில் இன்றியமையாதது ? பசுமை அறிவியலுடனான பாரத மரபின் இயற்கை பார்வையின் ஒற்றுமை வேற்றுமைகள் என்ன ? பல்லாயிரம் ஆண்டுகளாக பலவித தாக்குதல்களுக்கும் அப்பால் சநாதனமாக ஜீவித்திருக்கும் ஓர் பெரும் மரபின் மைந்தர்கள் என்ற முறையிலும், கோடிக்கணக்கான மக்களை கொண்ட வளரும் ஒரு தேசம் என்ற முறையிலும், அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றுடன், இந்நெடுங்காலம் நம்மை வாழவைத்த நம் மரபு சார்ந்த உள்ளார்ந்த மதிப்பீடுகளையும் இணைத்ததொரு வளம் குன்றா வளர்ச்சிக்கான சாத்திய கூறுகளை நாம் சிந்திக்க வேண்டும்.

1. புனித மேரி மாக்தலேனாவின் முழுமையான ஞான நற்செய்திக்கு காண்க

http://reluctant-messenger.com/gospel-magdalene.htm

[நக் ஹமாதி பிரதிகளில் இந்நூல் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை]

2. எலைன் பேஜ்ல்ஸ், ‘The Gnostic Gospel ‘ , Vintage Books, 1979 பக். 44

3. பேரா. லின்.டி.வைட், ‘Historical roots of our Ecological Crisis ‘, Science (155(3767)): 1203-

1207, 1967.

4. புடியான்ஸ்கி.எஸ்., ‘Nature ‘s Keepers -The New Scieneof Nature Management ‘, New York,

The Free Press, 1995.

5. ஷாஃப்பர்.எஃப்.ஏ, ‘Pollution and the Death of Man, The Christian View of Ecology ‘, Wheaton – IL, 1970.

6. விஷால் மங்கல்வாதி பேச்சு @ கிரேஸ்வேலி செண்டர், கலிபோர்னியா , பிப்ரவரி,3,1998,

California Aggiee Online நிருபர்கள்: எரிக்.ஏ.எலொ மற்றும் ஜான் ஹோரன்பெல்ட்

7. கார்ல் மார்க்ஸ், ‘The Bristish Rule in India ‘ (1853), ப்ரோக்ரஸ் பதிப்பகம், மாஸ்கோ, 1971 பக்-

166-72

8. டேவிட் கோபெலின் திபெத் விடுதலைக்கான இணைய தளத்தில் திபெத்தில் செஞ்சீனம்

நிகழ்த்தும் சூழலியல் மற்றும் இனப்படுகொலையின் முழுவிவரம் காண்க. திபெத்தின் மடாலய

அழிப்பு விவரங்களை காண்க : www.tibetinfo.net

9. போற்றித் திருவகவல்

10. நற்றிணை

***

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்