பங்களாதேஷ் நாட்டை பசுமை மயமாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue


உலக வெப்பமயமாதலாலும், பல் உயிரின வேற்றுமை அழிக்கப்படுவதாலும், அடிக்கடி நடக்கும் இயற்கை பேரழிவுகளாலும் உந்தப்பட்டு, பங்களாதேஷ் நாடு, நாட்டின் பரப்பளவில் சுமார் 20 சதவீதம் காடுகளால் நிரப்பப்படுவதற்காக திட்டம் தீட்டி நடைமுறைப் படுத்த இறங்கியிருக்கிறது.

பிரதமர் பேகம் கலேதா ஜியா அவர்கள் இந்த திட்டத்தை துவக்கி வைத்து, பங்களாதேஷின் சுமார் 13 கோடி மக்களை, வருடந்தோரும் ஒரு மரமாவது நடும்படிக்கு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

2015 ஆம் ஆண்டுக்குள் சுமார் 20 சதவீத பங்களாதேஷ் பரப்பளவு காடுகளால் மூடப்பட்டு இருக்க வேண்டுமென்று கட்டாயம் இருக்கிறது என்றும், அடிக்கடி நடக்கும் புயல்களையும், உலக வெப்பமயமாதலையும் தடுக்க அது ஒன்றே வழி என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வனத்துறை சுமார் 5.6 கோடி மரங்களை இலவசமாக வழங்கும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயர்ந்து வருவதால், பங்களாதேஷின் கடற்கரை பிரதேசங்களில் பல நிரந்தரமாக கடலுக்குள் சென்றுவிடும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஷாசுதீன் சிராஜ் அவர்கள் கூறினார்.

இந்த பேரழிவை பங்களாதேசின் மக்கள் தடுத்தே ஆகவேண்டும் என்றும் ஏராளமான காடுகளை உருவாக்குவது என்பது இதைத் தடுக்கும் வழிகளில் ஒன்று என்றும் இவர் கூறினார்.

இலக்கு ரீதியில் சுமார் 25 சதவீதம் பங்களாதேஷின் மொத்த பரப்பளவு வனத்தின் கீழ் இருக்க வேண்டும் என்றும், இதுவே சிறந்த சுற்றுச்சூழல் சமச்சீர்வுக்கு அடித்தளம் என்றும், இதுவரை பங்களாதேஷின் அரசாங்கங்கள் இட்ட திட்டங்கள் மூலம் சுமார் 9 சதவீதமே காடுகளின் கீழ் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

சுந்தரவனம் (சுந்தர்பன்) என்ற உலகத்தின் மிகப்பெரிய மாங்க்ரோவ் காடுகள், உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டிருந்தும், பல்லாயிரம் மரங்கள் ‘மேலே இறக்கும் வியாதி ‘top dying ‘ disease காரணமாக இறந்துகொண்டிருக்கின்றன.

மேலும், மர வியாபாரிகளும், எரிமரம் பொறுக்கும் மக்களும் காடுகளை மொட்டையடித்துவிட்டார்கள்.

ராயல் பெங்கால் புலிகள் என்ற இந்திய துணைக்கண்டத்தின் சிறப்பு வாய்ந்த புலிகளின் உறைவிடமாக இருக்கும் சுந்தரபன் காடு, பங்களாதேஷ் நாட்டுக்கும், அருகாமை மேற்கு வங்காள மாநிலத்துக்கும் கடல் புயல்களிலிருந்து பெருத்த பாதுகாப்பை இதுவரை அளித்து வந்திருக்கிறது.

Series Navigation