நெருப்புக் கோழி

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

பத்ரிநாத்


சாலையின் சிற்சிறு சத்தங்கள் சங்கருக்கு எங்கோ கேட்பது போல தோன்றிக் கொண்டிருந்தது.. டாக்கடைபாய், பையனிடம் ஏதோ கத்திக் கொண்டிருந்தார்.. ஒரு கன்று தீடார் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.. தொழிலாளர்கள் பிரம்மாண்ட லாரியில் மூட்டைகளை ஏற்ிறிக் கொண்டிருந்தார்கள் .. பாம்பை விட வேகமாக வளைந்து வித்தைக் காட்டிச் சீறிப் பாய்ந்தது ஆட்டோக்கள்.. தெருவுக்குள் புதியதாய் நுழைந்த ஒரு இள நாயை ஒரு கிழ நாய் வாயை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு குறைத்தது.. ஒரு முகவரியை வைத்துக் கொண்டு போகிறவர் வருகிறவர்களையெல்லாம் கையில் குடையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.. ..

சங்கரையும் அந்தக் குடை முதியவர் கேட்டார்.. ஆனால் அவன் என்ன சொன்னான் என்பதே அவனுக்கே தெரியவில்லை..எங்கோ வெறித்துப் பார்த்து பதில் சொன்னான்..

அவனுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டும்.. அதுவும் உடனடியாக.. பணம்.. பணத்தை யார் கண்டு பிடித்தார்கள்.. அவனுக்கு இந்தக் கேள்வி பணத் தட்டுப்பாடு சமயங்களில் யோசிக்கத் தோன்றும்.. அதாவது அடிக்கடி.. அலுவலகத்தில் குட்டிக் கரணம் போட்டும்… ம்ம்…. பெயரவில்லை.. உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்களே.. அவனுக்கு நினைவில் தெரிந்த நாள் முதல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறான்..முதலியார் தெரு எழுநூறு ரூபாய் முச்சந்தி வீட்டிலிருந்து, நான்கு வருடம் முன்பு தொளாயிரம் கொடுத்து செட்டியார் சைடு போர்ஷன் வந்ததுதான் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரே முன்னேற்றம்..

இப்போது பையன் கல்லூரிப் படிப்புக்கு இருபதாயிரம் ரூபாய்.. மாமாவிடம் கடன் வாங்கியது பத்து, அவர் பெண் திருமணத்திற்கு உடனடியாகத் திருப்ப வேண்டும்..என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.. நேற்று மனைவியின் வியாதிக்கு மட்டும் வைத்தியச் செலவு முன்னூறு ரூபாய் பழுத்துவிட்டது.. கலர் கலராய் எத்தனை மாத்திரைகள்.. புடவை டிசைனைப் போல மாத்திரையிலும் வந்துவிட்டதோ என்று தோன்றியது.. யாரிடம் கேட்பது.. அந்த முதியவரிடம் கேட்கலாமா..எரிச்சலாக இருந்தது.

குடை முதியவரைப் பார்த்தாலே சாப்பிட்டு நான்கு நாட்கள் இருக்கும் போல இருந்தது..

‘ ‘நேரா போங்க.. ஒரு லாரி ஆபீசு வரும்.. அப்படியே போனா அங்கப் போயி கேளுங்க.. ‘ ‘, என்றவுடன் சுருக்கென்று நினைவுக்கு வந்தது.. லாரி ஆபீசு.. உடனே அவனும் திரும்பி நடந்தான்.. கோபக்கார மேலாளர் முகம் ஞாபகம் வந்தது.. அந்தக் கிழ நாயின் முகம்கூடவே நினைவில் வந்தது.. உர் உர் என்ற பார்வை.. எப்போதுமே எந்தப் பேச்சைத் தொடங்கினாலும் அவர் சண்டைப் போடுவதைப் போலத்தான் இருக்கும்..

ஓட்டமும் நடையுமாக லாரி ஆபீசுக்கு வந்தான்.. சொல்லவே மறந்து விட்டது.. காலையில்தான் அங்கு ஒருவர் வந்தார்..ஏகப்பட்ட சூட்கேசு பெட்டிகளைக் கொண்டு வந்தார்.. அவைகளை அலுவலகத்தில் வைத்து விட்டுச் சென்றார். மேனேஜர் வந்தால் அவரிடம் சொல்லச் சொன்னார்.. சங்கரோ மறந்து தொலைத்து விட்டான்.. .. இன்று மேலாளர் பார்த்து அலுவலகத்திற்கு வரவில்லை.. வேறு யாராவது வந்து இது என்ன பெட்டிகள் என்று கேட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ பிரச்சனைதான்..

லாரி ஆபீசில் பெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது.. யாரோ சிலர் ஊருக்கு வந்து இறங்கியிருப்பதைப் போல.. நண்டும் சிண்டுமாய் சின்னக் குழந்தைகள், இரண்டு பெண்கள்

மற்றும் ஒரு வயதானவள் என்று ஆறு பேர்.. என்ன பிரச்சனை.. ஓட்டமாக ஓடினான்..அந்தக் கூட்டத்தில் காலையில் சூட்கேசுகளை கொண்டு வந்த ஒரு நடுத்தர வயதுக்காரரை அடையாளம் கண்டு கொண்டான்.. ஓ.. மீண்டும் சூட்கேசுகளை எடுப்பதற்கு வந்திருப்பார்கள் போலும்..

மேலாளர் உள்ளே வந்திருந்தார்.. உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்ி.. அதைப் பார்த்த சங்கருக்குச் சந்தோசமாக இருந்தது..

‘ ‘வாய்யா.. சங்கரா.. ‘ ‘, என்றார்..

‘ ‘ சார்.. காலையில் இதோ இவருதான் வந்திருந்தாரு.. சூட்கேசுகளை இங்கன வச்சுட்டுப் போனாக.. சாயங்காலம் வர்றதா சொன்னாக.. அதான் சொல்லிட்டுப் போவலாம்னு ஓடியாந்தேன்.. ‘ ‘,

‘ ‘சரி.. சரி.. நம்ப சிநேகிதக்காரர்களோட உறவுக்காரங்கதான்.. ஊர்லேர்ந்து வந்திருக்காங்க வேண்டுதலுக்கு…. இப்போ மறுபடியும் ஊருக்குப் போறாங்க.. ஒமக்கு வேல முடிஞ்சு போச்சுல்ல..நீ எப்படி போற.. ‘ ‘, என்றார்.

‘ ‘ஏன் சார்.. ‘ ‘,

‘ ‘யோவ்.. சும்மாத்தான்யா..நீ வூட்டுக்குப் போவ சுமதி தியேட்டர் பஸ் ஸ்டாப்புலதான் பஸ் புடிப்ப இல்ல வேற எங்கினியாச்சுமான்னு கேட்டேன்.. ‘ ‘,

‘ ‘தியேட்டர் ஸ்டாப்புதான் சார்.. ‘ ‘. என்றான் சங்கர்..

‘ ‘அப்ப நல்லது.. ஒண்ணு பண்ணு.. இவுங்கள சுமதி தியேட்டர் பஸ் ஸ்டாப்ல பஸ் ஏத்திவிடு.. சார்.. இவரு அந்த வளியாத்தான் போறாரு.. இவர பஸ் ஏத்திவுடச் சொல்றேன்.. ‘ ‘, மேலாளர் அவர்களைப் பார்த்துக் கூறினார்.. ‘ ‘யோவ் சங்கரு.. கூட்டிட்டுப் போயா.. ‘ ‘, என்றார்..

‘ ‘சரி சார்.. வாங்க.. ‘ ‘, என்றதும் அனைவரும் சுற்றுலா கைடை பின் தொடர்வதைப் போல சங்கரைப் பின் தொடர்ந்தார்.. ‘ ‘வாங்கம்மா.. அந்தப் பொட்டிய எங்கிட்டக் குடுங்க.. ‘ ‘, அவற்றை வாங்கிக் கொண்டான்.. ‘ ‘நீங்க முன்னப் போங்க.. இதோ வாறேன்.. ‘ ‘, என்று மீண்டும் அலுவலகத்திற்குச் சென்றான்..

‘ ‘என்னய்யா.. ‘ ‘, ஏதோ புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மேலாளர் கேள்விக்குறியுடன் சங்கரைப் பார்த்துக் கேட்டார்..

‘ ‘இதோ போறம் சார்.. நா சொன்னனே.. ‘ ‘,

‘ ‘ரூவா மேட்டர்தான.. அட… நீ ஒரு தொணதொணயா.. அடுத்த மாசம் பாக்கலாம்னு சொன்னனே.. யோயா..பாக்கலாம்.. ‘ ‘, சிடுசிடுத்தார்..

‘ ‘சரி.. ‘ ‘, என்று ஏமாற்றத்துடன் திரும்பினான்..

அவர்களை அழைத்துக் கொண்டு தியேட்டர் ஸ்டாப்புக்குச் சென்றான்.. கூட்டம் அவன் எதிர் பார்த்ததைவிட குறைவுதான்.. குழந்தைகளைப் பார்த்தான்.. கைக் குழந்தை ஒன்று.. இரண்டு ரெண்டுங்கெட்டான்கள்.. அனைத்துக் குழந்தைகளும் பசிக்கு அழுதன.. ஒன்று தெருவில் வருவது போவதையெல்லாம் வாங்கிக் கொடுக்கச் சொன்னது.. இதோ பஸ் வந்துவிடும்..மேலாளருக்குத் தெரிந்தவர்களாக வேறு இருக்கின்றார்கள்.. அனைவருக்கும் நான்ிதான் டிக்கெட்டு எடுக்க வேண்டும்.. எடுத்தால் முப்பது ரூபாய்வரை பழுத்துவிடும்.. பையைத் துழாவினான்.. இருபதாய் மடிக்கப்பட்ட பத்து ரூபாய் நோட்டு.. பரம அழுக்காய் வெளிவந்தது..இதை நடத்துனன் வாங்குவானா என்பதே சந்தேகம்தான்.. அவமானமாக இருந்தது..மேலும் துழாவ.. சில சில்லரைக்காசுகள் தான் தென்பட்டன..

ஒரே யோசனையாக இருந்தது..

‘ ‘சார்.. நீங்க ஒண்ணு பண்ணுங்க.. எதிர் திசையில் போய் நின்னாக்க மெயின் பஸ் ஸ்டாண்டுக்குப் போற பஸ் வரும்.. அங்கப் போயிருங்க.. ஒக்கார இடம் கிடைக்கும்.. இங்கன கிடைக்காது.. மழ வர்றாப்ல இருக்கு.. குழந்தைங்க வேற இருக்கு.. வாங்க நான் ஏத்திவிடறேன்.. ‘ ‘, என்று அவர்கள் அனைவரையும் அழைத்து எதிர் திசையில் செல்லும் வண்டியில் ஏற்றிவிட்டு, நடத்துனரிடம் பிரதான பேருந்து நிலையத்தில் இறக்கிவிடச் சொன்னான்..

அப்பா.. நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்..ஆனால் பாவம்..ஊர் பேர் தெரியாதவர்களிடம் போய் இப்படித் தவறாகச் சொன்னோமே என்றிருந்தது.. அமர இடம் கிடைக்காது என்று வேண்டுமென்றே அச்சப் படுத்திவிட்டோம்.. இந்த நேரத்தில் ஒன்றும் இங்கேயே கூட்டம் இருக்காது.. மேலும் அவர்கள் பிரதான பேருந்து நிலையம் செல்ல அரை மணிநேரம் ஆகும்.. அங்கிருந்து அடுத்த பேருந்து பிடிக்க மேலும் கால தாமதம் ஆகும்.. குழந்தைகள் பெண்களுடன் என்ன சிரமப்பட நேருமோ.. ? தீடிரென்று மனம் குரங்காகிப் போகிறது.. அவர்களையே டிக்கட்டு வாங்கச் சொல்லியிருந்திருக்கலாம்…. அதனால் என்ன.. கேவலம் நம் வறட்டு கெளரவத்திற்குப் போய் இப்படிச் சொல்லித் தொலைத்துவிட்டோம்..

சே.. குற்றவுணர்வுடன் தான் செல்லும் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான்..

****

prabhabadri@yahoo.com

Series Navigation