நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

அ.முத்துலிங்கம்


நான் இப்பொழுது கடைகளில் புத்தகம் வாங்குவதில்லை. ஏனென்றால் முதலில் வாங்கிய புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தாலும் இருக்கும் புத்தகங்களை வைப்பதற்கே இடமில்லை. அவை அறைகளை நிறைத்து கூரையை தொட்டுவிட்டன. புது நூல்களை வாங்கி என்ன செய்வது ? என் வீட்டில் புத்தகங்கள் இல்லாத ஒரே இடம் எரிகலன் அறைதான்.

இந்த நிலையில் என் வீதியில் இருக்கும் ஒரு வீட்டில் garage sale என்று அறிவித்திருந்தார்கள். நவராத்திரி கொலு போல தவறாமல் கோடை மாதங்களில் இந்த விற்பனை எங்கள் ரோட்டில் நடைபெறும். நான் அங்கே சென்று பார்த்தபோது அந்த வருடம் முழுக்க உழைத்த பல சாமான்கள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கன்னம் உள்ளுக்கு போன ஒரு பெண் அவற்றின் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள். ஆட்கள் வருவதும் போவதுமாக சாமான்கள் வேகமாக விலைபட்டன.

ஒரு பக்கத்தில் அந்த வீதியில் இருந்த சகலரும் தாங்கள் படித்து முடித்த புத்தகங்களை குவியலாக அடுக்கிவைத்து விற்றனர். பலர் வந்து அந்த புத்தகங்களை தூக்கிப் பார்த்து சோதித்தனர். அட்டைகளை ஆழமாக ஆராய்ந்தார்கள். சிலர் எச்சில் தொட்டு நாலு பக்கங்களை புரட்டி படித்துப் பார்த்தார்கள். பின்பு எச்சிலையும், புத்தகங்களையும் விட்டுவிட்டு போனார்கள். அந்த புத்தகங்களில் என்ன பார்த்தார்கள், என்ன இருந்தால் வாங்கியிருப்பார்கள் என்ற விவரம் எனக்கு தெரியவில்லை. ஒருவர் 1980ம் ஆண்டு மொடல் கிறைஸ்லர் காரில் வேகமாக வந்து இறங்கினார். அங்கே இங்கே பார்க்காமல் புத்தகக் குவியலை நோக்கி நடந்து வந்தார். அப்படி வந்தவர் மேலே இருக்கும் புத்தகங்களை தள்ளிவிட்டு தன் கைகளை பாம்பு புற்றுக்குள் விடுவதுபோல உள்ளே நுழைத்து அகப்பட்ட புத்தகத்தை இழுத்து ஆராய்ந்தார். பின்பு அதை வைத்துவிட்டு வேறு புத்தகத்தை இழுத்து எடுத்தார். கடைசியில் ஒரு புத்தகத்தை நெடுநேரம் கையில் வைத்துக் கொண்டு யோசித்தார். அது சிவப்பு அட்டை போட்ட தடித்த புத்தகம். லியோ டோல்ஸ்டோய் எழுதி, உலகப் புகழ் பெற்ற War and Peace என்ற நாவல். ரஸ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் இரு எழுத்தாளர்களின் கூட்டுப் பணியில் உருவாகி, அறுபது வருடங்களுக்கு முன் நியூயோர்க் நகரில் பிரசுரிக்கப்பட்டது. தாள்கள் எல்லாம் பழுப்பாகிப்போய் மிகப் பழசாக இருந்தாலும் ஒரு ஒற்றை கழன்று விழாமலும், அட்டை கிழியாமலும் முழுசாக ரஸ்யாவின் பழைய மணத்தை வீசிக்கொண்டு கிடந்தது. அதன் விலை 25 சதம். கடுமையான ஆலோசனைகளுக்கு பிறகு அந்தக் காசை பக்கட்டில் இருந்து எடுத்துக் கொடுத்து புத்தகத்தை வாங்கிப் போனார்.

நான் இன்னும் சிறிது நேரம் அங்கே பரப்பியிருந்த சாமான்களை பார்வையிட்டேன். மேற்சொன்ன காரணங்களினால் எனக்கு புத்தகங்கள் வாங்குவதில் ஆர்வமில்லை. மேசை விரிப்புகள், பீங்கான் கோப்பைகள், விளக்குகள், வைன் திறப்பான்கள் என்று பலதும் விலை போயின. ஒரு பெண் முடி உலர்த்தி ஒன்றை முடி உதிருமட்டும் பேரம் பேசி வாங்கிப் போனாள். இன்னொருவர் விநோதமான வாத்தியம் ஒன்றை வாங்கி அதை வாசித்தபடியே போனார். அவருடைய பிள்ளைகள் ?ாம்லின் ஊதுகுழல்காரனை தொடர்ந்த சிறுவர்கள்போல அவரை தொடர்ந்து நடனமாடிக்கொண்டே போனார்கள்.

அப்பொழுது அந்த பழைய கிறைஸ்லர் கார் மறுபடியும் வேகமாக வந்து நின்றது. அதே மனிதர் இறங்கி வந்தார். நான் நினைத்தேன் அவர் வேறு புத்தகங்களும் வாங்கப் போகிறார் என்று. அப்படியில்லை. அவர் வாங்கிய டோல்ஸ்டோயின் புத்தகத்தை திருப்பி கொடுக்க வந்திருந்தார். Woody Allen என்ற அமெரிக்க நடிகர் ‘போரும் அமைதியும் ‘ நாவலை ஐந்து மணி நேரத்தில் படித்து முடித்தாராம். ஒரு வேளை இவர் அரை மணி நேரத்தில் படித்து முடித்து விட்டாரோ என்னவோ என்று எண்ணினேன். அல்லது ஐந்து குடும்பங்களும், 500 பாத்திரங்களும் கொண்ட இந்த நாவலை சமாளிக்க முடியாது என்று நினைத்தாரோ. ஏதோ பழுதான சாமானை அவருக்கு ஏமாற்றி விற்றுவிட்டார்கள் போன்ற தோரணையில் அதிகாரமாகவே முறையிட்டார். அந்தப் பெண் உண்மையில் ஆடிப்போனாள். அவர் புத்தகத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அதற்கான 25 சதக் காசை திரும்பப் பெற்றுக்கொண்டு போனார். அதிமேதையான டோல்ஸ்டோயின் புத்தகத்திற்கு ஏற்பட்ட கதியைக் கண்டு என் மனம் திடுக்கிட்டது.

டோல்ஸ்டோய் ரஸ்யாவின் முதல்தர எழுத்தாளர் மட்டுமல்ல உலகத்தின் தலை சிறந்த படைப்பாளிகூட. கவிதைக்கு சேக்ஸ்பியர் என்றால் நாவலுக்கு டோல்ஸ்டோய். முதன்முதலாக நாவல் என்ற முறையான வடிவத்தை உலகத்துக்கு தந்தவர் என்று இவரை சொல்வார்கள்.

ஆனால் டோல்ஸ்டோய்க்கு சேக்ஸ்பியரை பிடிக்காது. சேக்ஸ்பியருடைய பாத்திரங்கள் செயற்கையான சம்பாஷணை செய்கிறார்கள் என்பார். சேக்ஸ்பியருடைய எழுத்தில் நம்பகத்தன்மை இல்லை என்பதும் அவருடைய குற்றச்சாட்டு. தன் முதுமைக் காலத்திலும் சேக்ஸ்பியரை இன்னொருமுறை திரும்ப முழுவதும் படித்து ஆராய்ந்து தன் மதிப்பீடு சரியானதுதான் என்பதை டோல்ஸ்டோய் உலகத்துக்கு உறுதிப் படுத்தினார். தென்னாபிரிக்கா பத்திரிகை ஒன்றில் டோல்ஸ்டோய் எழுதிய ‘ஒரு இந்துவுக்கு கடிதம் ‘ என்ற கட்டுரை பிரசுரமானது. மகாத்மா காந்தி தன்னுடைய 39வது வயதில் இதை மொழிபெயர்க்கிறார். இந்து தீவிரவாதிகளை தன் பக்கம் திருப்புவதுதான் காந்தியின் நோக்கம். டோல்ஸ்டோய்க்கும் காந்திக்கும் இடையில் நீண்ட கடிதப் பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இது டோல்ஸ்டோய் இறக்கும்வரை தொடரும். உண்மையான மதத்தின் போதனை அன்பு என்பது டோல்ஸ்டோயின் உபதேசம். மகாத்மா காந்தியின் அ ?’ம்சை இயக்கத்துக்கான வித்து அப்போது ஊன்றப்படுகிறது.

டோல்ஸ்டோய் காலத்தில் ரஸ்யாவில் இன்னொரு பிரபலமான படைப்பாளியும் இருந்தார். அவர் பெயர் அன்ரன் செக்கோவ். சிறுகதைகள், நாவல்கள் நாடகங்கள் என்று எழுதியவர். டோல்ஸ்டோய் இவருக்கு 32 வயது மூத்தவராக இருந்தபோதிலும் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு மலர்ந்தது. டோல்ஸ்டோய் முதுமை அடைந்தபோது அவருடைய மரணத்தை நினைத்து செக்கோவ் பயந்தார். ‘டோல்ஸ்டோயின் மரணத்தை எண்ணி நான் அஞ்சுகிறேன்.

அவருடைய முடிவு என் வாழ்க்கையில் ஒரு வெற்று இடத்தை உண்டாக்கும். நான் என் வாழ்க்கையில் வேறு யாரையும் இவ்வளவு நேசிக்கவில்லை. டோல்ஸ்டோய் இருக்கும் வரையும் ஒரு இலக்கியக்காரனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரும். ‘ இப்படி செக்கோவ் கூறினார்.

வெகு விரைவில் டோல்ஸ்டோய் இறந்துவிடுவார் என்று செக்கோவ் அஞ்சினார். ஆனால் நடந்தது வேறு. தனது 44வது வயதில் செக்கோவ்தான் முதலில் இறந்துபோனார். அப்பொழுது டோல்ஸ்டோய்க்கு வயது 76. அவர் இன்னும் ஆறு வருட காலம் உயிர் வாழ்ந்து 82வது வயதில் காலமாவார்.

ஒருமுறை செக்கோவ் பல மைல் தூரம் பிரயாணம் செய்து டோல்ஸ்டோயை சந்திக்க வந்திருந்தார்.

டோல்ஸ்டோய்க்கு செக்கோவின் சிறுகதைகள் பிடிக்கும்; நாவல்கள் பிடிக்கும்; ஆனால் நாடகங்கள் பிடிக்காது. செக்கோவைப் பார்த்து டோல்ஸ்டோய் ‘நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய் ‘ என்றார்.

செக்கோவுக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. திரும்பும் வழி முழுக்க ‘நான் சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறேன் ‘

, ‘நான் சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுகிறேன் ‘ என்று ஆகாயத்தைப் பார்த்து கத்தினார். சவுக்கை எடுத்து குதிரைகளை அடித்தார். அவை பறந்தன. அப்படியும் அந்த வேகம் அவருக்கு போதவில்லையாம்.

சோஃபியா என்ற பெண்ணை டோல்ஸ்டோய் தன் 34வது வயதில் மணமுடிக்கிறார். அவளே அவருக்கு செயலாளராகவும் பணியாற்றுகிறாள். மணமுடித்த அடுத்த வருடம் ‘போரும் அமைதியும் ‘ என்ற நாவலை எழுதத் தொடங்குகிறார் டோல்ஸ்டோய். ஆறு வருடங்கள் தொடர்ந்து எழுதி அதை முடிக்கிறார். சிலப்பதிகாரம் சொன்னதையே டோல்ஸ்டோயும் தன் 1370 பக்க நாவலில் சொன்னார். ஊழ் வலுவானது. அதில் மனித யத்தனம் என்று ஒன்றில்லை. எது எழுதியிருக்கிறதோ அதுவே நடக்கும்.

நாவலின் பிரதானமான பாத்திரங்களான பியேருக்கும், நடாஷாவுக்கும் இடையில் முகிழ்க்கும் காதலை கடைசிவரை அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்துக்கு நேரே சொல்லவில்லை. நாவல் முடிவுக்கு வர ஒருசில பக்கங்கள் மட்டுமே இருக்கும்போது ஒரு முக்கியமான கட்டம் வரும். பனி உறைந்தது போன்ற முகத்துடன், விரக்தியான மன நிலையில் நடாஷா இருப்பாள். அப்போது, அவள் எதிர்பாராத இடத்தில், முற்றிலும் கைவிட்டுப்போன தருணத்தில், பியேர் தோன்றுகிறான்.

‘துருப்பிடித்த கீல் கதவு மெல்ல திறப்பதுபோல அவதானமான கண்கள் கொண்ட அந்த முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது. ‘ பல வருடங்களுக்கு பிறகு பியேரைக் காணும்போது நடாஷாவின் முகத்தில் ஏற்படும் மாறுதலை இப்படி டோல்ஸ்டோய் வர்ணிக்கிறார். மனதில் நிற்கும் இடம்; மறக்கமுடியாத வசனம். அந்த கிறைஸ்லர் கார் மனிதருடைய 25 சதக் காசு இந்த ஒரு வசனத்துக்கே சரியாகப் போய்விடும்.

என்ன காரணமோ நாவலில் தவறவிட்ட சில விஷயங்களை சொல்வதற்காக டோல்ஸ்டோய் ‘முடிவுரை ஒன்று ‘ எழுதி நாவலில் சேர்க்கிறார். விடுபட்டுப்போன சமாச்சாரங்கள் எல்லாவற்றுக்கும் முடிவு வருகிறது. அப்படியிருந்தும் அவருக்கு சமாதானம் இல்லை. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு கூறப்படவில்லை என்று எண்ணுகிறார்.

சொல்லப்போனால் குழப்பம் இன்னும் அதிகமாகிறது. 1370 பக்கங்கள் கொண்ட நாவலிலே வரும் கடைசி வசனம் பாதியிலேயே நிற்கிறது. வாழ்க்கையின் முடிவின்மையை அது காட்டுவதாக இருக்கலாம். அல்லது எவ்வளவு பக்கங்கள் எழுதிக் குவித்தாலும் ஒரு கதாசிரியனால் முடிவை தொட முடியாது என்று உணர்த்துவதாகவும் இருக்கலாம். ‘முடிவுரை இரண்டு ‘ எழுதுகிறார். அப்படியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ‘நாவல் பற்றி சில வார்த்தைகள் ‘ என்று குறிப்பு எழுதுகிறார். நாவல் என்ன சொல்லியது, என்ன சொல்லவில்லை, எப்படி அதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு விளக்கமான உரை. இப்படி அவரால் அந்த நாவலை உதறிவிட முடியவில்லை.

விட்டுவிட்டு இருக்கவும் இயலவில்லை.

டோல்ஸ்டோய் தம்பதியினருக்கு 13 பிள்ளைகள். இறுதி நாட்களில் சோஃபியாவுக்கும், டோல்ஸ்டோய்க்கும் இடையில் மனக்கசப்பு உருவாகிறது. தன்னுடைய செல்வங்களை எல்லாம் டோல்ஸ்டோய் பிரித்துக் கொடுத்துவிட்டு துறவியாகி, ஊர் ஊராகப் போய் உபதேசம் செய்கிறார். ரஸ்ய கிறிஸ்தவ மதபீடம் அவரை தள்ளி வைக்கிறது. நெப்போலியனால் கடைசிவரை பிடிக்க முடியாத தூர எல்லைகள் கொண்ட ரஸ்யாவின் கவனிக்கப் படாத கிராமங்களுக்கு எல்லாம் ஒரு வெறியோடு பயணிக்கிறார். இறுதியில் தன் 82 வது பிராயத்தில் பெயர் தெரியாத ஒரு மூலை ரயில் நிறுத்தத்தில் உயிரை விடுகிறார்.

ஓர் ஒப்பற்ற ரஸ்ய ஞானியின் ‘போரும் அமைதியும் ‘ நாவல் இருபத்தைந்து காசுக்குகூட பெறுமதி இல்லையென்று அந்த கிறைஸ்லர் மனிதர் திருப்பி கொடுத்துவிட்டு போய்விட்டார். சிவப்பு மட்டையை காற்று தள்ள, உள்ளே தெரிந்த நெப்போலியன் ஆக்கிரமித்த ரஸ்யாவின் வரைபடம் வடக்குப் பார்த்தபடி கிடக்கிறது. மேல் ஒற்றை அடித்து அடித்து படத்தை மூடி பின் திறக்கிறது.

இதை என்னால் பொறுக்க முடியவில்லை. 25 காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை நானே வாங்கினேன்.

அது என் வீட்டில் தண்இர் சுடுகலனுக்கும், எரிகலனுக்கும் இடையே உள்ள ஒடுக்கமான இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்கும். நான் என் மீதி வாழ்நாளில் அதைப் படிப்பேன் என்று உத்திரவாதம் சொல்லமுடியாது. 25 காசு அவமானம் ஏற்படாமல் டோல்ஸ்டோயை காப்பாற்றுவதுதான் என் நோக்கம். உலகமேதைக்கு இந்தச் சிறு உதவிகூட செய்யாவிட்டால் எப்படி ?

முற்றும்

Series Navigation