நீ கூடயிருந்தாப் போதுமடி..

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

செங்காளி


(வரண்டுபோன நிலத்தைக் கவலையோடு
பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் அவனைப்
பார்த்து அவள் கேட்கின்றாள்)

நெலத்தநீங்க பாத்தபடி மச்சானே – ஏன்
நொந்துபோயி நிக்கறீங்க மச்சானே

பொன்விளைந்த பூமியிது பொன்னாத்தா – இப்ப
பொளந்துபோயி இருக்குதடி பொன்னாத்தா

பொளந்தபூமி வெளைவதெப்பொ மச்சானே – நானும்
பொண்டாட்டியா ஆவதெப்போ மச்சானே

காவிரியில் தண்ணிவந்தா பொன்னாத்தா – நல்லா
கழனிமுழுக்க வெளஞ்சிடுமே பொன்னாத்தாா

காத்திருந்தா வெளச்சலுக்கு மச்சானே – நான்
கிழவியாகிப் போயிடுவேன் மச்சானே

கிழவியாகிப் போனாலென்ன பொன்னாத்தா – இந்தக்
கிழவனுன்ன கட்டிக்குவேன் பொன்னாத்தா

கட்டிக்கிட்டா போதுமாயெம் மச்சானே – நமக்குக்
குழந்தகுட்டி வேணாமாயெம் மச்சானே

குழந்தகுட்டி ஏதுக்கடி பொன்னாத்தா – நமக்குக்
கூழுக்கே வசதியில்லே பொன்னாத்தா

கூழுகாச்சி ஊத்திடுவேன் மச்சானே – நல்லாக்
கூலிவேலை செஞ்சுநானு மச்சானே

கூலிவேலை வேண்டாமடி பொன்னாத்தா – நீயெங்
கூடயிருந்தாப் போதுமடி பொன்னாத்தா

(இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் அவள்
தலையை அன்புடன் வருடிக்கொடுக்க இருவரும்
தங்கள் கவலையை மறந்து நிற்கின்றனர்)

natesasabapathy@yahoo.com

Series Navigation