நினைவுகளின் தடத்தில் – (4)

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

வெங்கட் சாமிநாதன்



நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும் மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லியில் புகுந்து சோளக் கொண்டை திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கொண்டை திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

மாமாவால் அவருக்கு வந்த சம்பளத்தில் எங்களையெல்லாம் ரக்ஷ¢ப்பது என்பது சாத்தியமாக இருக்கவில்லை. என் சின்ன வயதில் பாட்டி கொடுத்த செல்லத்தில், ஒரு சில சமயங்களில் நான் மாமாவை மிகவும் வருத்தியிருக்கிறேன் என்பதை பின்னர் வடக்கே வேலையில் சேர்ந்து என் பிழைப்பை நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்த போது உணர ஆரம்பித்தேன். அன்றைய நிலையில் வரம்புக்கு மீறி நான் எதற்கும் ஆசைப்பட்டேன் என்று சொல்வதற்கில்லை. அப்படி ஆசைப்பட ஒரு உலகம் என்பதே என் பிரக்ஞையில் இல்லாதது. நான் தான் முன்னாலேயே சொல்லியிருக்கிறேனே. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை எதிரிலிருக்கும் கீற்றுக் கொட்டைகயில் படம் மாறும் என்று. அவற்றில் வரும் எல்லா புராணக்கதைப் படங்களையும் பாட்டி பார்த்து விடுவாள். மாமா ஒன்றும் சொல்ல மாட்டார். பாட்டிக்கு மாத்திரம் தானே டிக்கட் வாங்கவேண்டும். அந்நாட்களில், தரை டிக்கட் முக்கால் அணாதான். அணா என்றால் இன்றுள்ளவர் எத்தனை பேருக்குப் புரியும் எனபது தெரியவில்லை. ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு பன்னிரண்டு காசுகள். ஒரு காசுக்கு விலைக்கு வாங்கக் கூடிய பொருடகள் அன்று இருந்தன. ஒரு கூறு கடலையோ, இலந்தைப் பழமோ, சின்ன கொய்யாப் பழமோ ஒரு காசுக்குக் கிடைத்து விடும். முக்காலணா கொடுத்தால் நானும் பாட்டியும் ஒரு சினிமா பார்த்து விடுவோம். தான் பார்ப்பது மட்டுமல்லாமல், பாட்டிக்கு சில படங்கள் ரொம்பவும் பிடித்து விட்டால், எல்லோரிடமும் அதை மிகவும் சிலாகித்து நிறைய பேசுவாள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அனேகமாக, ஹரிச்சந்திரா என்று நினக்கிறேன். பி.யு.சின்னப்பாவம் கண்ணாம்பாவும் நடித்த படம். அதில் கண்ணாம்பா நிறைய வசனம் பேசி நெடு நேரம் பாடி கதறி அழும் கட்டம் உண்டு. மயானத்தில் தன் பிள்ளை லோகிதாசனின் சடலத்தை வைத்துக் கொண்டு, அவனைப் பெற்று வளர்த்த கஷ்டத்தையெல்லாம் சொல்லி ஒப்பாரி வைப்பாள். ஒன்றாம் மாதம், இரண்டாம் மாதம், என்று ஒவ்வொரு மாத கஷ்டத்திற்கும் ஒரு வேதனை வர்ணணை, பாட்டு இப்படி. பாட்டி மனம் உருகிவிட்டது. வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க ஒரு கிழவி வருவாள். அவளுக்கு மாதம் சம்பளம் ஒன்றே கால் ரூபாய். அந்தக் கிழவியிடம் கண்ணாம்பாவின் உருக்கமான புலம்பலைச் சொல்லிச் சொல்லி அந்தக் கிழவியும், அவ்வப்போது, ‘ஆமாம்மா இருக்காதா அம்மா, சும்மாவா இருக்கு ஒரு பிளையைப் பெத்து வளக்கறது, அதே செத்துப் போய், அதப் புரிஞ்சுக்காத புருஷன் முன்னாலேயே கொள்ளி வைக்கறதுன்னா,’ என்று அவ்வப்போது சந்தர்ப்பத்தை ஒட்டி குரல் கொடுத்துக் கொண்டிருப்பாள். கடைசியில் கிழவிக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாட்டிக்கு மனம் இளகி விட்டது. தன் கதையைக் கேட்க இப்படி ஒரு ரசிகை கிடைத்த சந்தோஷம். ‘இந்தா கிழவி, நான் காசு தரேன். நீயும் போய்ப் பாரு’ என்று சொல்லி விட்டாள் அந்த உணர்ச்சி வசத்தில். கிழவிக்கு எப்படி முக்காலணா கொடுத்தாள் என்று எனக்கு ஞாபகமில்லை. கட்டாயம் கொடுத்திருப்பாள். ஆனால் காசு மாமாவிடமிருந்து தான் வாங்க வேண்டும். நான் கொஞ்சம் பெரியவனாகி விட்ட காலத்தில், எப்போதாவது மாமா எனக்கு காலணா கொடுப்பார், ‘பாவம் பசங்க ஒண்ணுமே கேக்கறதில்ல, ரொம்ப ஏங்கிப் போயிட்டதுக” என்று பாட்டியிடம் சொல்லுவார். நான் அந்த காலணாவுக்கு மூன்று கொய்யாப் பழங்கள் வாங்கி, நான், என் மாமா பெண், பையன் மூன்று பேறும் ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொள்வோம்.

ஒரு சமயம் ஏதோ ஒரு படம் வந்திருந்தது கொட்டகையில். அது நிச்சயமாகப் புராணப் படமாக இல்லாதிருந்தக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பாட்டி அழைத்துச் சென்றிருப்பாளே. நான் தனித்து விடப்பட்டேன். படம் பார்க்கவேண்டும், காசு வேணும் என்று மாமாவை நச்சரித்துக் கொண்டிருந்தேன் இரண்டு நாட்களாக. பாக்கலாம்டா என்று சொல்லி மாமா தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். காசு பெயரும் வழியாக இல்லை. அன்று தான் கடைசி நாள். எனக்கோ வாழ்க்கையில் ஏதோ ஒன்று மகத்தான ஒன்று என்றென்றைக்குமா இழக்கப்போகிறோம் என்ற துக்கம். இந்த சினிமா பார்க்க முடியவில்லை என்றால் வாழ்க்கைக்குத் தான் என்ன அர்த்தம்? நம் வாழ்க்கை ஏன் இப்படி ஒரு சுகமும் ஒருசந்தோஷமும் இல்லாமல் ஆகிவிட்டது? எத்தனை பேர் மூன்று நாட்களாக சினிமாவுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்? எனக்கு என்று ஏன் இத்தனை துரதிர்ஷ்டம்? கடைசியாக, ‘அடி பின்னிப் பிடுவேன் ராஸ்கல், ரொம்பத்தான் அடம் பிடிக்கிறே? எத்தனை சினிமா பாத்திருக்கே, ஒண்ணு பாக்காட்ட என்ன குடி முழுகிப் போறது?’ என்று சீறினார். இன்னம் அதிகம் முரண்டு பிடித்தால் நாலு சாத்து சாத்திவிடுவார் என்று தோன்றியது. துக்கமோ, என் துரதிர்ஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் பீறிட்டுக் கொண்டு வந்தது. அஸ்தமனம் ஆயிற்று. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. எங்கெங்கோ மனம் போனபடி சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. இப்படியும் ஒரு வீடு, ஒரு மாமா, ஒரு பாட்டி, ஒரு சினிமா பாக்க காசு கொடுக்காதா மாமாவும் பாட்டியும். சே. நினைக்க நினைக்க மனம் கொதிப்படைந்து கொண்டு வந்தது. ஓடையைத் தாண்டியதும், ஒரு பார்க் இருக்கும். அதில் தான் ஒரு வாசக சாலை, ஒரு ரேடியோப் பெட்டி; கூட ஒரு ஒலிபெருக்கியும் இருக்கும். . திருச்சி வானொலியை அதில் கேட்கலாம். திருச்சி மாத்திரமே. செய்திகள், பாட்டுக்கள், நாடகங்கள், இத்யாதி. நல்ல பார்க் அது. மாலை நேர பொழுது போக்குக்கு நிலக்கோட்டை வாசிகளுக்கு அது உகந்த இடம். நிலக்கோட்டை பஞ்சாயத்தின் பொறுப்பில் இருந்தது. பார்க்கில் இருக்கும் மரங்கள் கொடி செடிகள், நிறைய க்ரோட்டன்கள் எல்லாவற்றுக்கும் ஒரு கிணறும் ஏற்றமும் உண்டு. அந்த வாசக சாலையில் நிறைய பத்திரிகைகள், யுத்த செய்திப் படங்கள் நிறைந்த பத்திரிகைகள் இருக்கும். அந்த பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இனி வீட்டுக்குப் போவதில் அர்த்தமில்லை. இவ்வளவு அநியாயம் நடக்கும் வீட்டுக்கு யார் போவார்கள்? பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். இருட்டியது. என்ன செய்யலாம்? எங்காவது மாமா கண்டு பிடிக்க முடியாத ஊருக்குப் போய்விடலாம். ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். வேலை கிடைகாதா என்ன? கிளப்பில், பஸ்ஸில் எத்தனை என் வயதுக் கார சின்ன பசங்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் சினிமா பார்க்க யாரிடம் காசு கேட்க வேண்டும்? எவ்வளவு அதிர்ஷ்டம் அவர்களுக்கு? ரேடியோவில் ஒலி பரப்பு முடிந்தது. விளக்கை அணைத்தும் விட்டார்கள். பார்க்கைச் சேர்ந்த ரீடிங்க் ரூம் வட்ட வடிவில் இருக்கும். அதைச் சுற்றிய ஒரு வராண்டா. அந்த வராண்டாவில் யார் யாரோ படுத்திருப்பார்கள். நானும் அங்கேயே படுத்து விட்டேன். எப்போது தூங்கினேன் என்பது தெரியாது.


Series Navigation

author

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

Similar Posts