நினைவுகளின் தடத்தில் – (21)

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

வெங்கட் சாமிநாதன்மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர் என்று அவரும் என்னிடம் பிரியமாக இருந்தார். ஆனால் அம்பி மாதிரி அவ்வளவுக்கு எங்கு போனாலும், “வாடா போலாம்” என்று என்னையும் அழைத்துச் செல்பவர் இல்லை. வீட்டிலேயே அவர் கொஞ்சம் ஒதுங்கி பட்டுக்கொள்ளாமல் இருப்பது போல (reserved) தோன்றுபவர். ஆனால் அவர் என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் ஏதோ தேர்ந்தெடுத்தது போல, அவருடைய விருப்பங்கள் வீட்டில் மற்றவர்களதிலிருந்து தனிப்பட்டது போல தோன்றும். இதெல்லாம் இப்போது அவற்றை நினைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறதே தவிர அப்போது இப்படியெல்லாம் நான் பாகுபடுத்திப் பார்த்ததில்லை. எல்லாமே எனக்கு சுவாரஸ்யம் மிகுந்ததாய், புதியனவாய் இருக்கும். வீட்டில் யாருமே நினைத்துப் பார்க்காத ஹிந்தி படங்களுக்கு அவர் போவார். என்னையும் அழைத்துச் செல்வார். தெற்கு ஆவணிமூல வீதியிலோ அல்லது மாசி வீதியிலோ, சரியாக ஞாபக மில்லை. ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. அங்கு தான் ஹிந்தி படங்கள் திரையிடப்படும். அங்குதான் நான் முன் சொன்ன ரத்தன், அன்மோல் கடி போன்ற படங்களைப் பார்த்தேன். அவற்றின் பாட்டுக்கள் தமிழ்த் திரையுல பாடல்களையே மிகவும் பாதித்தன. எல்லோருமே ஹிந்தி மெட்டுக்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தனர். அவற்றிற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அது போல நான் மிகவும் ரசித்த ஒரு தெலுங்குப் படம், ‘ஸ்வர்க்க சீமா. நாகய்யாவும் பானுமதியும் நடித்தது. இரண்டு பேரும் மிக அழகாகப் பாடுபவர்கள். அதில் தான் பானுமதி அறிமுகமாகிறார். ‘பாபுரமா” என்று அவர் பாடிய பாட்டு மிகப் பிரசித்தம். ஆங்கிலப்படங்களுக்கும் அவர் அழைத்துச் செல்வார். அவர் அழைத்துச் சென்றதால் தான் அந்நாளைய ஆங்கிலப் படங்களுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. பரிச்சயம் என்று சொல்வது சரியில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவை எனக்கு புரிந்ததில்லை. ஏதோ சுவாரஸ்யமாக, வேடிக்கையாகப் பார்ப்பேன் என்பதோடு சரி. இருட்டத் தொடங்கிய அந்தி நேரங்களில் சில சமயம் அவர் வைகையாற்றுக்குப் போய் மணலில் உட்கார்ந்து இருப்பது அவருக்குப் பிடிக்கும். வைகை யாற்றில் தண்ணீர் கிடையாது. சித்திரைத் திருநாளின் போது அழகர் ஆற்றில் இறங்குவதற்காக ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக ஆற்றில் தண்ணீர் விடுவார்கள். அது தவிர வேறு எப்போதும் நான் வைகை ஆறு மணல் வெளியாகத் தான் இருக்கும். ஆங்காங்கே ஊற்றுக்கள் தோண்டி வைத்திருப்பார்கள். அது குளிக்கப் பயன்படுவதற்காக. நானும் சில நாட்கள் அந்த ஊற்றில் குளித்ததுண்டு. காசு கொடுத்தேனா சும்மாவா என்பது இப்போது நினைவில் இல்லை. வெளிச்சம் இருக்கும் மாலை நேரங்களில் வைகை ஆற்றின் பாலத்தின் மேல் ரயில் வண்டி போவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஏதோ மரவெட்டை ஊர்வது போலத் தோன்றும். இரவு நேரங்களில் ரயில் வண்டி பாலத்தைக் கடக்கும் போது அதன் ஒளிவரிசை மிக அழகாகக் காட்சி தரும். ராஜா சொல்வார், “கல்கி இதை அழகாக வர்ணித்து எழுதியிருப்பார், நவராத்திரியின் போது வரிசையா விளக்கு ஏத்தி வைப்போமே அது மாதிரி இருக்குன்னு, படிச்சிருக்கியா?” என்று.

ராஜா மிகவும் ரசித்துச் செல்லும் இடம் இன்னொன்று உண்டு. நாங்கள் குடியிருந்த லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரம் முனை வரை வந்து வலது கைப்புறம் திரும்பினால் வைகை ஆற்றுக்கு அந்த வழி இட்டுச் செல்லும். ஆனால் அந்த தெருவின் முனையிலேயே ஒரு சின்ன கடை உண்டு. அது ராஜாவுக்கு மிகவும் பிடித்த இடம். அங்கு தினம் காலையில் ஏழு மணியிலிருந்து ஒன்பது ஒன்பதரை மணி வரை அந்த கடையில் தோசை கிடைக்கும். நெய் தோசை. மணக்க மணக்க இருக்கும். தோசையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது. காலை 7 லிருந்து 9.30 மணி வரை தான். பிறகு கடை மூடிவிடும். பின் மறு நாள் காலையில் தான் திறக்கும். அந்த நெய் தோசைக்காகவே மிக விசுவாசமான வாடிக்கையாளர்களில் ராஜாவும் ஒருவர். அந்த கடைக்காரர் எப்படி தனக்கு ஆகி கைவந்த அந்த வட்டாரத்தில் வெற்றிகரமாக வியாபாரம் செய்ய உதவும் அந்த தோசையைத் தவிர வேறு எதையும் தப்பித் தவறிக் கூட சிந்திக்காதவரோ, அது மாதிரியே நம்மூர் எழுத்தாளரும் ஒருவர் இருக்கிறார். எனக்குத் தெரிந்து கிட்டத் தட்ட அறுபது வருஷ காலமாக ஒரே மாதிரியான நடை, கதை சொல்லும் முறை, ஒரே மாதிரியான மத்திய தர மக்களின் அன்றாட இன்னல்கள், ஏமாற்றங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள், இதைத் தாண்டி மனிதர் வேறு எங்கும் கால் வைத்துவிட மாட்டார். இருவரும் ஒரே தரத்தை, ஒரே உத்தரவாதமான மார்க்கெட்டைக் கொண்டவர்கள். ஏதும் ஏமாற்றமும் இல்லை. ஆச்சரியங்களும் இல்லை. ரயில் வண்டித் தொடர் ராஜாவுக்கு கல்கியை ஞாபகப்படுத்துவது போல, பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கும் இச்சமயத்தில், இந்த முனைக்கடை தோசை எனக்கு இந்த எழுத்தாளரை நினைவு படுத்தி விட்டது. ஆனால் சாதாரணமாக இந்நாட்களில் இவரைப் பற்றி யாரும் கேட்டாலோ, நினைத்தாலோ அந்த முனைக்கடை தோசையைத் தான் உதாரணம் காட்டிச் சொல்வேன்.

கொஞ்ச நாட்களே, ஒரு சில மாதங்களே அங்கு இருந்த போதிலும் அப்போது வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் சரி, அந்நாட்கள் மிக சுவாரஸ்யமானவையாகவே இருந்தன. இரண்டு சம்பவங்கள் எனக்கு இப்போது நினைத்துப் பார்க்கவும், நான் ஏன் அப்படி பாதிக்கப்பட்டேன் என்பது புதிராக இருக்கிறது. இரண்டும், நான் இருந்த தெருவிலிருந்து சிம்மக்கல் வருவது தினமும் கட்டாயம் இரண்டு தடவையாவது நிகழும் ஒன்று. வடக்கு வெளி வீதியைத் தொட்டதும், எதிர்ச்சாரியில் ஒரு சோடாக் கடை. அங்கு பத்திரிகைகளும் கிடைக்கும். பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைத் தாங்கிய ஒரு போஸ்டர் தொங்குமே, அதில் கொட்டை எழுத்துக்களில் “தியாக ராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் விடுதலை” என்று போட்டிருந்தது. அன்று அந்த செய்தியைப் படித்ததும், மெய் சிலிர்க்க, அது என்னவோ உலகத்தையே புரட்டிப் போடும் மிகப் பெரிய செய்தியாகத் தோன்றியது. இதைப் போய் வீட்டில் எல்லோருக்கும் சொல்லியாக வேண்டுமே. அப்படி ஒரு தவிப்பு. இந்த மன நிலைக்குக் காரணம் தியாகராஜ பாகவதர் பாட்டுக்களை நிலக்கோட்டையில் வீட்டுக்கு எதிரே உள்ள சினிமா கொட்டகையில் தினம் கேட்ட பழக்கத்தில் எம். எஸ், செருகளத்தூர் சாமா, பி.யு. சின்னப்பா போல தியாக ராஜ பாகவதரும் மனதில் நிலைபெற்று விட்ட ஒரு பிம்பம். அது போக, நிலக்கோட்டையில் இருந்த போது இந்த மாதிரித் தான் கடைகளில் தொங்கும் போஸ்டர்களில் “தியாக ராஜ பாகவதர் கைது” என்ற செய்தி கொட்டை எழுத்துக்களில் வெளியாகியிருந்ததைப் படித்திருந்தேன். பின்பு பள்ளிக்கூடத்தில் ஒரு சில ஆசிரியர்கள் பத்திரிகை படிப்பவர்கள், அவ்வப்போது வழக்கு விசாரணை நடக்கும்போது, சாட்சிகள் வாக்குமூலங்கள், வக்கீல்களின் குறுக்கு விசாரணை எல்லாம் விவரமாக பத்திரிகைகளில் வெளிவர அவற்றை உரக்கப் படிப்பார்கள், பின்னர் அவர்களுக்கு அது பற்றி சர்ச்சைகள் நடக்கும். அந்த சர்ச்சைகளைக் கேட்டு, எனக்கு வடிவேலு, லட்சுமி காந்தன், இந்து நேசன், ஸ்ரீ ராமுலு நாயுடு, ராஜா பாதர், ரிக்ஷாவில் கத்திக் குத்து, எல்லாம் எனக்கு பத்திரிகை படிக்காமலேயே மனதில் பதிந்திருந்தன. நிலக்கோட்டையாக இருந்தால் இன்னேரம் அம்பி வாத்தியார் உடனே மாமாவிடமும் சின்ன மாமாவிடமும் இந்த செய்தியைச் சொல்ல ஓடோடி வந்திருப்பார். அப்போதெல்லாம் தினந்தோறும் பத்திரிகை வாங்குவது படிப்பது என்பது அவ்வளவாக பரவலாகத விஷயம். ஓடிப்போய் ராஜாவிடமும் அம்பியிடமும் சொன்னால் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ராஜாதான் வீட்டில் இருந்தார். ஓடிவந்ததில் மூச்சிறைத்தது. ஆனால் ராஜாவிடம் எந்த பதட்டமோ திகைப்போ இல்லை. ஒரு புன்னகையோடு, “அது சரி, இதைச் சொல்ல ஏன் இப்படி மூச்சிறைக்க ஓடி வரணும்.?” என்றார். எனக்கு என்னவோ போல வெட்கமாக இருந்தது. என் சுவாரஸ்யம் கெட்டது.

ஆனால் இதே போல வால் போஸ்டரிலிருந்து படித்த செய்தி மனதில் பதிந்த காரணம் எனக்குத் தெரியவில்லை. அந்த செய்தி படித்ததும் நான் தியாகராஜ பாகவதர் செய்தியைப் போல யாரிடமும் சொல்ல ஓடவில்லை. “பிரபல ஹிந்தி நடிகர் பாடகர் சைகல் மறைந்தார்” என்பது தான் அந்த வால் போஸ்டர் செய்தி. அந்த செய்தியில் தான் நான் முதன் முதலாக சைகலின் பெயரையே கேள்விப் படுகிறேன். அதற்கு மேல் எனக்கு அன்று சைகலைப் பற்றி ஏதும் தெரியாது. 1952-லோ 1953-லோ தான் புர்லாவில் சைகலின் தேவதாஸ் படம் பார்க்கிறேன். அதிலிருந்து ‘துக் கே தின் பீதத் நாஹி” யும் “பாபுல் மோரா” வும் மனதில் பதிந்துள்ளது புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் 1946-ல் ஒரு கடையின் வெறும் வால் போஸ்டரில் படித்த, பழக்கமில்லாத இன்னும் ஏழெட்டு வருஷங்களுக்கு கேட்க விருக்காத ஒரு பெயரைப் பார்த்தது ஒரு பதினாலு வயதுப் பையனின் மனதில் பதிந்துள்ளது எனக்குப் புதிர் தான். இன்னொரு பத்திரிகைச் செய்தியும் மனதில் பதிந்துள்ளது, அதன் வரலாற்று முக்கியத்வம் பின்னரே தெரியவருவது, நேரு தலைமையில் காங்கிரஸ¤ம் முஸ்லீம் லீகும் சேர்ந்து ஒரு இடைக்கால சர்க்கார் அமைக்கப்படும் என்று பிரிட்டீஷ் பிரதமர் அட்லீ அறிவித்தது. அந்த இடைக்கால சர்க்காரில் லியாகத் அலிகான், சர்தார் அப்துர் நிஷ்டார் என்ற பெயர்கள் என் நினைவில் பதிந்துள்ளன. அப்துர் நிஷ்டார் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர் என்பது தவிர, அவர் யார் அவர் பொறுப்பென்ன என்பதெல்லாம் தெரியாது. பெயர் மனதில் பதிந்துள்ளது. அவ்வளவே. தல்லா குளத்தில் நடந்த அருணா ஆஸ·ப் அலி பேசிய கூட்டமும் என் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று. அது பற்றி முன்னர் வேறு இடங்களில் எழுதியுமிருக்கிறேன்.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், அந்த 1946-ம் வருடத்திய அந்த மாதங்கள், மதுரையில் படிப்பைத் தொடர்ந்த மாதங்கள், என் படிப்பைக் காட்டிலும் மற்ற பல நிகழ்வுகளால், சுற்றி இருந்த மனிதர்களால், எனக்குத் தெரிய வந்த அளவில் கூட நாட்டு நடப்புகளால், those were exciting times. இதை எப்படித் தமிழில் சொல்வது?

வெங்கட் சாமிநாதன்/15.5.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

நினைவுகளின் தடத்தில் – (21)

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

வெங்கட் சாமிநாதன்

மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர் என்று அவரும் என்னிடம் பிரியமாக இருந்தார். ஆனால் அம்பி மாதிரி அவ்வளவுக்கு எங்கு போனாலும், “வாடா போலாம்” என்று என்னையும் அழைத்துச் செல்பவர் இல்லை. வீட்டிலேயே அவர் கொஞ்சம் ஒதுங்கி பட்டுக்கொள்ளாமல் இருப்பது போல (reserved) தோன்றுபவர். ஆனால் அவர் என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் ஏதோ தேர்ந்தெடுத்தது போல, அவருடைய விருப்பங்கள் வீட்டில் மற்றவர்களதிலிருந்து தனிப்பட்டது போல தோன்றும். இதெல்லாம் இப்போது அவற்றை நினைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறதே தவிர அப்போது இப்படியெல்லாம் நான் பாகுபடுத்திப் பார்த்ததில்லை. எல்லாமே எனக்கு சுவாரஸ்யம் மிகுந்ததாய், புதியனவாய் இருக்கும். வீட்டில் யாருமே நினைத்துப் பார்க்காத ஹிந்தி படங்களுக்கு அவர் போவார். என்னையும் அழைத்துச் செல்வார். தெற்கு ஆவணிமூல வீதியிலோ அல்லது மாசி வீதியிலோ, சரியாக ஞாபக மில்லை. ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. அங்கு தான் ஹிந்தி படங்கள் திரையிடப்படும். அங்குதான் நான் முன் சொன்ன ரத்தன், அன்மோல் கடி போன்ற படங்களைப் பார்த்தேன். அவற்றின் பாட்டுக்கள் தமிழ்த் திரையுல பாடல்களையே மிகவும் பாதித்தன. எல்லோருமே ஹிந்தி மெட்டுக்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தனர். அவற்றிற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அது போல நான் மிகவும் ரசித்த ஒரு தெலுங்குப் படம், ‘ஸ்வர்க்க சீமா. நாகய்யாவும் பானுமதியும் நடித்தது. இரண்டு பேரும் மிக அழகாகப் பாடுபவர்கள். அதில் தான் பானுமதி அறிமுகமாகிறார். ‘பாபுரமா” என்று அவர் பாடிய பாட்டு மிகப் பிரசித்தம். ஆங்கிலப்படங்களுக்கும் அவர் அழைத்துச் செல்வார். அவர் அழைத்துச் சென்றதால் தான் அந்நாளைய ஆங்கிலப் படங்களுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. பரிச்சயம் என்று சொல்வது சரியில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவை எனக்கு புரிந்ததில்லை. ஏதோ சுவாரஸ்யமாக, வேடிக்கையாகப் பார்ப்பேன் என்பதோடு சரி. இருட்டத் தொடங்கிய அந்தி நேரங்களில் சில சமயம் அவர் வைகையாற்றுக்குப் போய் மணலில் உட்கார்ந்து இருப்பது அவருக்குப் பிடிக்கும். வைகை யாற்றில் தண்ணீர் கிடையாது. சித்திரைத் திருநாளின் போது அழகர் ஆற்றில் இறங்குவதற்காக ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக ஆற்றில் தண்ணீர் விடுவார்கள். அது தவிர வேறு எப்போதும் நான் வைகை ஆறு மணல் வெளியாகத் தான் இருக்கும். ஆங்காங்கே ஊற்றுக்கள் தோண்டி வைத்திருப்பார்கள். அது குளிக்கப் பயன்படுவதற்காக. நானும் சில நாட்கள் அந்த ஊற்றில் குளித்ததுண்டு. காசு கொடுத்தேனா சும்மாவா என்பது இப்போது நினைவில் இல்லை. வெளிச்சம் இருக்கும் மாலை நேரங்களில் வைகை ஆற்றின் பாலத்தின் மேல் ரயில் வண்டி போவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஏதோ மரவெட்டை ஊர்வது போலத் தோன்றும். இரவு நேரங்களில் ரயில் வண்டி பாலத்தைக் கடக்கும் போது அதன் ஒளிவரிசை மிக அழகாகக் காட்சி தரும். ராஜா சொல்வார், “கல்கி இதை அழகாக வர்ணித்து எழுதியிருப்பார், நவராத்திரியின் போது வரிசையா விளக்கு ஏத்தி வைப்போமே அது மாதிரி இருக்குன்னு, படிச்சிருக்கியா?” என்று.