நித்யானந்தாவும் நேசக்குமாரும்

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

மாலிக் எம்


malik.mdb@gmail.com

நித்யானந்தா குறித்து திண்ணை இணையதளத்தில் நேசக்குமார் எழுதிய கட்டுரையில் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=21003051&format=html ), இஸ்லாம் குறித்து எழுதியவைகளில் தகவல் பிழைகளும் கருத்துப்பிழைகளும் உள்ளன.

அவைகளைப் பார்ப்போம்.

(அ) அவர் கூறுகிறார்: “சாமியார்கள் அல்லது குருமார்கள் இந்து சமயத்தில் அல்லது இந்திய சமயங்களில் அல்லது சூஃபியிஸத்தில் இருப்பது பற்றி எள்ளலுடன் பார்க்கும் இஸ்லாமிஸ்டுகள்…..”
அவரது இந்த கூற்று இருவகைகளில் தவறான வாக்கியம்.

முதலான தவறு:

இதில் இஸ்லாமிஸ்டுகள் வேறு சூஃபிக்கள் வேறு என நேசக்குமார் காட்டுவது. உண்மையென்னவெனில், சூஃபிகள் அனைவரும் இஸ்லாமிஸ்டுகள்தான். ஓரிறைக் கொள்கையான இஸ்லாமிய இறைக்கொள்கையை உடைய வாழ்க்கையின்றி யாராலும் இவ்வுலக வாழ்க்கையைத் தேர முடியாது என்பது, ரூமி, கஸ்ஸாலி, ஜீலானி, சிஸ்தி உட்பட்ட அனைத்து சூஃபிகளின் நிலை. எனவே அவர்கள் அனைவர்களும் இஸ்லாமிஸ்டுகள் தான். ஏனெனில், “இஸ்லாமும் சிறந்தது” என்று கூறுபவர்கள் சூஃபிக்கள் அல்லர். “இஸ்லாம் மட்டுமே வழி” என்பவர்கள்தான் சூஃபிக்கள்.

கிறிஸ்தவர்கள் யூதர்கள் போன்றோர்கள் மீது சில சூஃபிக்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தாலும், அவர்கள் (சூஃபிக்கள்) அவ்வேற்று மதத்தினரைக் கருத்தில் கொள்ளும் போது, நபிகள் நாயகம் அல்லாத வேறு இறைத்தூதர்களுக்கு அவர்கள் வழிபடுபவர்கள் எனும் கண்ணோட்டத்தில் மட்டுமே. மற்றபடி அவர்களும் அவ்விறைத்தூதர்களல்லாத இறைவனை வணங்குமபவர்களாக இருத்தல் அவசியம். அவர்களைக் கிறிஸ்துவை வணங்கும் கிறிஸ்தவர்களாகக் கொண்டல்ல. அத்தகைய கிறிஸ்தவர்களை சூஃபிக்கள் அனுசரிப்பவர்களல்ல.

இரண்டாம் தவறு:

சூஃபிக்களல்லாத இஸ்லாமியர்களிடம் குருமார்கள் இல்லை என்று நேசக்குமார் காட்டுவது.

நபிகளாரின் “நபிமொழிகள்” எனப்படும் ஹதீஸ்களை தொகுத்த புகாரி இமாம் அவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருமார்கள் இருந்துள்ளனர். (இவரது புத்தகத்திலிருந்து, இஸ்லாத்தினை விமர்சிக்க நேசக்குமாரே பல நபிமொழிகளைச் சுட்டியுள்ளார்)

வஹ்ஹாபிகளாலும், ஏனைய முஸ்லீம்களாலும் நன்மதிப்புடன் நோக்கப்படும், இமாம் ஹன்பல் மற்றும் இப்னு தைமிய்யா போன்றோர்கள் அனைவரும் பல குருக்களிடம் பயின்று, பிற்காலத்தில் குருக்களாகவும் இருந்தவர்கள். இதில் இப்னு தைமிய்யா, சூஃபிக்களின் குருமாரான அப்துல்காதிர் ஜீலானியின் அபிமானியும் ஆவார்.

(ஆ) நேசக்குமார் மேலும் கூறியது:
“ஒரு மனிதர் தன்னை அவதாரம்/நபி/இறைதூதர்/சித்தர்/சாமியார்/ஞானி என்று சொல்லிக் கொள்கிறார். அவர் பிடிபட்டால் போலிச் சாமியார்/ போலி நபி ஆகிறார். பிடிபடாவிட்டால் ஒரு மதத்தை/ கல்டை தோற்றுவித்தவர் ஆகிறார். அல்லது பல ஞானியரின் வழியில், நபிமார்களின் வழியில் தாம் வந்தவர் என்கிறார்.”

இதில் நேசக்குமாருக்கு ஏனோ புதிய முயற்சித் தேவையாயிருக்கிறது. ஏதோ அனைத்து மதங்களையும் அவர் திடீரெனெ ஒரே பார்வையில் நடத்துவது போல அவர் இங்கு எழுதுகிறார். ஆனால் நேசக்குமாரின் எத்தகைய நிலைப்பாடுகளால், எத்தைகைய விமர்சங்களால், அவர் இணைய உலகில் பேர் பெற்றவர் என நினைத்துப் பார்க்கவேண்டாமா ? அவர் அத்தகைய “இஸ்லாம்-மீதான-வெறுப்பு” என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தாலே நலம். அது அவரது வாசகர்களுக்கு எந்த குழப்பத்தினையும் ஏற்படுத்தாமல், அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். தனது மதம் அடிவாங்கும்போது மட்டும், “எனது மதம் மட்டுமல்ல; இஸ்லாமும் தான்” என காட்டுவதற்காக, அவருக்கு இஸ்லாத்தினையும் சமபார்வை நோக்கத் தேவையேற்படுகிறது.

(இ) அடுத்து அவரது முரண்பாடு ஒன்றினைக் காட்டுகிறேன். அவரது கூற்றுகளைக் கவனியுங்கள். தனது கட்டுரையில் இரு இடத்தில் கூறுகிறார்:
“நித்தியானந்தாவைப் பார்த்து நாம் இந்த மரபே தவறு, சந்நியாசமே தவறு, காவியே தவறு என்று முடிவெடுத்துவிட வேண்டியதில்லை. அப்படி என்றால், ஒரு இராமகிருஷ்ணரோ, விவேகாந்தரோ, ரமணரோ நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் இல்லாத மதம் எப்படி இருந்திருக்கும்? இருட்டறையாகத்தான் இருந்திருக்கும். இந்த இருட்டறையிலிருந்து ஆன்மீகம் பற்றிய புரிதல் இல்லாமல், அடிப்படையான அறிவும் இல்லாமல் தம்மையும் வருத்திக்கொண்டு உலகையும் வருத்திய மத்திய ஆசிய கல்டுகள் விளைவித்த அனர்த்தங்கள் அதன் விளைவாக ஓடிய ரத்த ஆறுகள், மனித குலம் பட்ட துன்பங்கள், இன்றும் உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் ஆகியன நமக்கு இந்த பாடத்தையே சொல்கின்றன”

மேலே உள்ள அவரது கூற்றில், மிகத் தெளிவாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் மீதான வெறுப்பைக் கொட்டுவது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அவர் இந்து மதத்தினைப் பற்றிக் கூறுவதினைப் பாருங்கள்: “ஒரு இராமகிருஷ்ணரோ, விவேகாந்தரோ, ரமணரோ நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் இல்லாத மதம் எப்படி இருந்திருக்கும்? இருட்டறையாகத்தான் இருந்திருக்கும்”, என்று கூறி, இவர்களில்லையென்றால், இந்து மதம் ஒரு “இருட்டறை” என்று கூறி, ஓரிரு மனிதர்களைச் சுற்றி இந்து மதத்தினைக் கட்டமைக்கிறார். மேலும் இதை ஒரு ஆன்மீக வழித்தேடலுக்கு ஏற்ற மதம் என்று தனது கட்டுரையில் ஆங்காங்கு பரிந்துரைத்துவிடுகிறார். ஆனால் அடுத்த பத்தியிலேயே, மற்ற மதங்களை குற்றம் பிடிக்க, இதற்கு முரணாக அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்: “மத்திய ஆசியா மட்டும் தான் என்றில்லை, எங்கெங்கெல்லாம் ஒருவரை சார்ந்து ஒரு மதம் அமைகிறதோ, அவரின் கூற்றுகள், செயல்பாடுகள் கேள்விக்கப்பாற்பட்டவையாக அந்த மதத்தவர் பின்பற்றக் கூடியதாக அமைகிறதோ அப்போது அது பின்பற்றுபவர்களை உன்மத்தர்களாக்கி பெரும் வெறியையும், அரக்கத்தனத்தையும் தோற்றுவிக்கின்றது.” இவ்வாறு உடனே முரண்பட்டு நிற்கிறார். என்னத்தை சொல்வது ?

(ஈ) அவரது கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள்:
“ ‘நான் கடவுள்’ என்பதற்கும், ‘நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது’ என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. தன்னைத் தானே நபி/இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்வதற்கும், அவதாரம் என்று சொல்லிக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. ”

ஆனால் உண்மையில் வித்தியாசம் உள்ளது. “நான் கடவுள்” என்று சொல்லும் பேர்வழியினை போலி என நிரூபிப்பது சுலபம். அவரிடம் உங்களில் யாராவது ஒருவர் சென்று உங்களதுத் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சொல்லுங்கள். அவரால் அது நிச்சயமாக இயலாது. எனவே அவர் கடவுள் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரியும். அவர் போலிக்கடவுள் என்று தெளிவாகத்தெரியும். ஆனால் தன்னை இறைத்தூதர் எனச் சொல்லுபவரை, அவரது கூற்றுக்கள் மற்றும் செயல்களைக் கொண்டு ஆராய்ந்து நாம் இருவிதத்திலும் முடிவெடுக்க முடியும். அவர் இறைத்தூதராகவும் இருக்கலாம், போலியானவராகவும் இருக்கலாம்.

(உ) நேசக்குமார் சொல்கிறார்: “இதில் நித்தியானந்தாவைப் பார்த்து குதூகலிக்கும் மத/மார்க்க அன்பர்களின் நிலைதான் பரிதாபமானது. தாம் நம்பும் இறை மனிதர் நித்தியானந்தாவை விட மோசமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் கூட இவர்களுக்கு எழுவதில்லை.” இப்படிக் கூறுபவர் ஏன் இரமணர், இராமக்கிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோர் மீது எந்த சந்தேகமும் இன்றி நம்பிக்கைக் கொண்டு எழுதியுள்ளார் ?

(ஊ) இக்கட்டுரையில் நேசக்குமார் பெருமையுடன், தனது பழையக் கட்டுரையைச் சுட்டுகிறார்:
“எனக்கு ஜெயேந்திரர் கைது தினங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்தச் சூழலில் நான் எழுதிய திண்ணைக் கட்டுரையும் நினைவுக்கு வருகிறது ( http://www.thinnai.com/?module=displaystory&story_id=20412025&format=html ). அப்போது எழுதிய விஷயங்களை இந்தச் சூழலிலும் நினைத்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறும் அவரது அப்பழைய கட்டுரையானது, சங்கராச்சாரியார் பெண்களுடன் சம்பந்தப்பட்டதுத் தொடர்பாக அவர் எழுதியது. அதில் அவர், “உலகெங்கிலும், துறவிகள் என்ற பெயரில் உலவும் கயவர்கள் எல்லா மதங்களிலும், சமுதாயங்களிலும் உள்ளனர். பக்கத்தில் உள்ள பாகிஸ்தானில் கூட இம்மாதிரியான குற்றச் சாட்டுகள் எழும்போதெல்லாம், சூஃபி முறையே தவறென்ற பிரச்சாரமே மேலோங்குகிறது. ஐரோப்பாவிலோ பெரும்பாலோனோர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, எல்லா அவலங்களுக்கும் ஆதாரம் கத்தோலிக்கர்களின் பிரம்மச்சார்ய முறையே என்று தீர்மானித்து விட்டனர். இது ஆன்மீகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது என்று ஓரிடத்தில் விவேகானந்தர் வருந்துகிறார்”, என்று எழுதியுள்ளார். இதில், சூஃபிக்கள் என்றால் அவர்கள் திருமணம் செய்யாத துறவிகள் எனப் பொருளில் எழுதி தகவல் பிழை செய்துள்ளார். பெரும்பாலான பிரபல சூஃபிக்கள் அனைவரும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்தவர்கள் ஆவர். உதாரணத்திற்கு ரூமி, இப்னு அரபி, அப்துல் காதிர் ஜீலானி, கஸ்ஸாலி மற்றும் காஜா முகைதீன் சிஸ்தி போன்றவர்களைக் கூறலாம்.

Series Navigation

மாலிக் எம்

மாலிக் எம்