நாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

B. R. ஹரன்.


சனிக்கிழமை ஜூன் 19-ஆம் தேதியன்று தினசரிகளில், “ஆந்திர அமைச்சரவை கடப்பா மாவட்டத்தை ‘ஒய்.எஸ்.ஆர் மாவட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது” என ஒரு செய்தி வெளியானது. (http://www.deccanchronicle.com/hyderabad/kadapa-now-ysr-district-501 ) இதற்கான சட்ட மசோதா 03-09-2009 அன்றே ஆந்திர சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேய அரசால் “கட்டபாஹ்”(Cuddapah) என்று அழைக்கப்பட்டு வந்த இம்மாவட்டம் ஆகஸ்டு 19, 2005 முதல் “கடப்பா” (Kadapa) என்று ராஜசேகர ரெட்டியாலேயே உச்சரிப்பு (Phonetic) மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. (http://www.hindu.com/2005/08/18/stories/2005081805760200.htm )
அந்தச் செய்தியைப் படித்தவுடன் நம் அரசியல்வாதிகளின் மேல், குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மேல், ஏற்கனவே இருக்கும் வெறுப்பும் அருவருப்பும் அதிகமாகித்தான் போனது. இன்று நம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கும், அனுபவித்துக் கொண்டிருக்கும் பல துன்பங்களுக்கும், ஆட்சியில் இருந்த நேரு குடும்பம் செய்த பல தவறுகள் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அக்குடும்பத்தினருக்கே உரிய அகம்பாவத்தினால் இந்தியாவே அவர்களின் சொந்த ராஜ்ஜியம் என்ற எண்ணத்துடனே ஆட்சி புரிந்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்த அறுபத்திரண்டு ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த காங்கிரஸ் ஆட்சியில், நரசிம்மராவ் அவர்களின் ஐந்து வருடத்தைக் கழித்தால் மிச்சமுள்ள வருடங்கள் முழுவதும், மன்மோகன் சிங் அரசு உட்பட, நேரு குடும்பமே ஆட்சி செய்துள்ளது, செய்து வருகின்றது. தான் ஆட்சி செய்த ஐம்பது வருடங்களில் அனைத்துத் திட்டங்களுக்கும், கட்டடங்களுக்கும், சாலைகளுக்கும், அரங்குகளுக்கும் என்று அனைத்திற்கும் தன் குடும்பத்தவரின் பெயர்களையே வைத்து, கட்சி மட்டுமல்ல இந்த நாடும் தன் குடும்ப சொத்தே என்பது போல சுய விளம்பரமும் தற்பெருமையும் கொள்கிறது நேரு குடும்பம்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட அந்தந்த முதல் அமைச்சர்கள் தங்கள் மாநில அரசின் திட்டங்களுக்கும், தங்கள் மாநிலத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கும், சாலைகளுக்கும் நேரு குடும்பத்தவரின் பெயரையே வைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு முதுகெலும்பற்ற பூச்சிகளாக நேரு குடும்பத்தினரின் காலடியில் ஊர்ந்து கொண்டு, அவர்கள் காலால் இட்ட பணியைத் தலையால் செய்து முடிக்கத் தயாராய் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் அனைவரும்.
இந்த மாதிரியான சூழலில் காங்கிரஸ் கட்சியையும் நேரு குடும்பத்தையும் மீறிய வளர்ச்சியடைந்த மாநிலத்தலைவர் ஒருவர் இருந்தார் என்றால் அவர் சாமுவேல் ராஜசேகர ரெட்டி தான் என்று சொல்வது மிகையாகாது. தெலுங்கு தேசக் கட்சியின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாமல், இழந்த ஆட்சியையும் மீட்க முடியாமல், தங்கள் கட்சியின் வீழ்ச்சியையும் தடுக்க முடியாமல், மாநில அளவில் நல்ல திறனுடைய தலைமையும் இல்லாமல் திணறிக்கொண்டிருந்த காங்கிரஸின் அகில இந்தியத் தலைமைக்கு, சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் திறமையும், பணமும், தந்திரமும், உழைப்பும் மிகவும் தேவைப்பட்டதால் அவரிடம் கட்சியின் முழு பொறுப்பையும் ஒப்படைத்து சரணாகதி அடைந்தது. அதன் பலனாக சாமுவேல் ரெட்டி அபரிமிதமான வளர்ச்சி அடைந்தார். ஆந்திராவைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்றால் சாமுவேல் ராஜசேகர ரெட்டி தான் என்கிற அளவிற்கு கட்சியையும், நேரு குடும்பத்தையும் விடப் பெரிதாக வளர்ந்தார்.
ராஜசேகர ரெட்டி கிறுத்துவராகவும் இருந்தத காரணத்தினால் சோனியாவின் மதரீதியான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கும் பேருதவியாக இருந்தார். எனவே, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஆந்திராவில் கிறுத்துவ மிஷனரிகள் மதமாற்றத்தில் படு பயங்கரமாக ஈடுபட்டன. மேற்கத்திய கிறுத்துவ நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டு, பெரும்பான்மையாக நிலங்கள் வாங்கப்பட்டு ஏராளமான சர்ச்சுகள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டன. கோவில் நிலங்களைக்கூட சர்ச்சுகளுக்குக் கொடுக்க ஏற்பாடுகள் செய்தார் சாமுவேல் ரெட்டி. (http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/ )
திருப்பதி திருமலையைக் கூட விட்டு வைக்கவில்லை அவர். ஏழு மலைகளில் இரண்டு மலைகள் (27.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) தான் பகவானுக்குச் சொந்தம் என்று சொல்லி, மற்ற ஐந்து மலைகளையும் அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கி, அவ்விடத்தில் பொழுதுபோக்குப் பூங்காக்களும், கேளிக்கை விடுதிகளையும் உண்டாக்க எண்ணி, அவற்றைத் தலை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்போவதாக அரசாணையையும் வெளியிட்டவர் அவர். திருமலையிலும் கிறுத்துவ மதமாற்றம் தலைவிரிக்கத் தொடங்கியது. இந்துக்கள் அதிர்ந்து போயினர். நல்ல உள்ளம் கொண்ட ஏழுமலையானின் பக்தர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றம், ஏழு மலைகளும் பகவான் வெங்கடாஜலபதிக்கே சொந்தம் என்றும் அரசாணை செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. ரெட்டியும் பொங்கியெழுந்த இந்துக்களின் எழுச்சியைப் பார்த்துத் தன் எண்ணத்தைக் கைவிட்டார். {Judgment of a Division Bench of the Andhra Pradesh High Court1997 (2) ALD Page 59 (DB) – Tallapakam Koppu Raghavan Vs State of A.P}. (http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/ ) ஒரு பக்கம் திருப்பதியை கிறுத்துவமயமாக்க முயற்சிகள் மேற்கொண்டு, மறுபக்கம் திருவேங்கடத்தான் மீது பக்தி கொண்டவர் போலவும் ஆலய மஹோத்ஸவங்களில் பங்கு கொண்டு வந்தவர் சாமுவேல் ரெட்டி. அவர் மூலமாக, தானும் திருமைலையாண்டவன் மீது பக்தி கொண்டவர் போல பெருமாள் தரிசனம் செய்து காட்டியவர் சோனியா.
ராஜசேகர ரெட்டி சிறந்த அரசியல்வாதி என்பது உண்மை. அவர் கடுமையாக உழைத்து காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார் என்பது உண்மையே. ஏழை மக்களுக்குப் பல திட்டங்களை அளித்து அவர்களை மிகவும் கவர்ந்தார் என்பதும் உணமையே. அதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் என்பதும் உண்மை தான். ஆட்சியை மீண்டும் பிடித்ததையும், அதைத் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்தலில் வென்றதையும் அரசியல் சாதனை என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மற்றபடி அவர் மக்களுக்குச் செய்தது அவருடைய கடமை. தேர்தலில் வென்ற எந்த அரசியல் தலைவரும் செய்ய வேண்டிய கடமையைத் தான் அவர் செய்தார். முழுவதுமாக, அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடையுமாறு ஆட்சி செய்தாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் ஏழைகளைக் கவரும் வகையில் ஆட்சி செய்தாலும் மறுபக்கம் ஆந்திராவை கிறுத்துவ மயமாக்க அவர் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகள் பெரும்பான்மையான ஹிந்து சமுதாயத்தைப் பெரிதும் அதிருப்திக்குள்ளாக்கியது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
காலம் சென்ற அவரைப் பெருமைப் படுத்த வேண்டுமென்றால், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அவர் பிறந்த ஊரில் அவர் பெயரில் ஒரு நினைவகமோ, ஒரு நூலகமோ, விளையாட்டு அரங்கமோ கட்டிவிட்டுப் போயிருந்தால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. சொல்லப்போனால் வரவேற்கத் தான் செய்வார்கள். அல்லது தலைநகரில் முக்கியமான இடத்தில் அவருக்கு ஒரு சிலை அமைத்தால் யாரும் குறை கூறப் போவதில்லை. அதை விட்டு ஒரு மாவட்டத்திற்கே அவர் பெயரை வைத்து ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் என்று அழைப்பது அம்மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பையும் பாரம்பரியப் பெருமையையும் கொச்சைப் படுத்துவதாக இருக்கிறது. எதிர்கட்சிகள் எப்படி ஒத்துப் போயின என்று கேட்கலாம். ஆம், இன்று இதற்கு ஒத்துப் போனால் நாளை சித்தூர் மாவட்டம் சந்திரபாபு மாவட்டம் ஆகலாமே!
அதுவும் எப்பேர்பட்ட மாவட்டத்திற்கு சாமுவேல் ரெட்டியின் பெயரை வைத்துள்ளனர்? கடப்பா மாவட்டத்தின் வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? கி.மு.க்களில் மௌரியர் ஆட்சியின் கீழ் இருந்து, கி.பி மூன்றாம் நூற்றாண்டில் சாதவாஹனர்களின் கீழ் வந்தது. விஜயநகரை ஆண்ட ராயுலு மன்னர்களின் சிறப்பைத் தெரிவிக்கும் விதமாக ராயலசீமா என்று கூறப்பட்ட பகுதியைச் சேர்ந்தது கடப்பா. விஜயநகர மன்னர்களிடம் தளபதிகளாக இருந்த பெம்மசனி நாயக்கர்கள் தங்களுடைய கண்டிகொடா கோட்டையை பெண்ணா ஆற்றின் கரையில் கடப்பாவில் அமைத்து, அங்கிருந்தபடியே ராய்ச்சூர் மற்றும் குல்பர்கா போர்களை விஜயநகரம் சார்பாக வென்றனர்.
ஸ்ரீ அன்னமாசார்யா, ஸ்ரீ பொடுலூரி வீர பிரம்மம், ஸ்ரீ போதணா போன்ற மகான்கள் அவதரித்த தலம் கடப்பா.
தெலுங்கு மொழியில் கடப்பா என்றால் “வாயில்” என்று அர்த்தம். அதாவது திருமலை/திருப்பதி க்ஷேத்திரத்திற்கு யாத்திரை மேற்கொள்கிறவர்களுக்கு கடப்பாவே நுழைவாயிலாகும். தேவுணி கடப்பா என்று சொல்லப்படுகிற வேங்கடாஜலபதி ஆலையத்திற்குச் சென்று இறைவனைத் தரிசித்து, ஸ்ரீ அன்னமாசார்யா முதலிய மஹான்களை வேண்டிக் கொண்டு, அதன் பின்னர் தான் திருமலை/திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் பாரம்பரிய ஐதீகம். ‘ஆந்திர மஹா பாகவதம்’ என்கிற நூலை இயற்ற ஸ்ரீ போதணா அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்த பெருமாள் கோவில் கடப்பாவில் உள்ள வொண்டிமிட்டா என்கிற இடத்தில் தான் உள்ளது. புகழ் பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தின் தெற்கு வாயிலாகக் (தக்ஷிண துவாரம்) கருதப்படும் 108 சிவலிங்கங்களையுடைய கோவில் பெண்ணா ஆற்றங்கரையில் கடப்பா மாவட்டத்தில் தான் உள்ளது. (Ref: http://en.wikipedia.org/wiki/Kadapa_district )
“தெற்கு ஆசிய டிஜிடல் நூலகத்தில்” (Digital South Asia Library) உள்ள “இந்திய ராஜாங்க பேரகராதி” (Imperial Gazetteer of India) தொகுதி 11-ல் 57, 58, 59 மற்றும் 60 பக்கங்களில் கடப்பா என்கிற பெயரின் முக்கியத்துவமும், அம்மாவட்ட்த்தின் பெருமைகளும் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ( http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V11_063.gif)
இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு மாவட்டத்தின் பெயரை, அதுவும் திருப்பதியின் வாயில் என்றும் ஸ்ரீசைலத்தின் தெற்கு வாயில் என்றும் போற்றப்படுகின்ற மாவட்டத்தின் பெயரை, திருப்பதியை கிறுத்துவமயமாக்க முற்பட்ட ஒரு சாதாரண மனிதனின் பெயரில் அழைப்பது என்பது மக்களின் ஆன்மீகப் பாரம்பரிய உணர்வுகளையும் கலாசார உணர்வுகளையும் மிகவும் புண்படுத்துவதாகும். அதுவும் சாமுவேல் ரெட்டி அரசியலில் தலைவர் அந்தஸ்திற்கு வருவதற்கு முன்னால் எப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார் என்று பார்த்தோமானால், இப்பேர்பட்ட ஒரு மனிதரின் பெயரை பாரம்பரிய தெய்வீக மற்றும் கலாசாரப் பெருமை கொண்ட ஒரு மாவட்ட்த்திற்கு வைப்பதா என்று அதிர்ந்து போவோம். அதைப்போல ஒரு மாவட்டத்தையும் அம்மாவட்ட மக்களையும் அவமதிக்கும் செயல் வேறில்லை. (http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/ )
இந்த மாதிரியான பெயர் மாற்றம் இன்று நேற்று நடப்பதல்ல. முகலாயர்கள் நம் தேசத்தின் மீது படையெடுத்து வந்து நம்மை அடிமைகளாக அடக்கி ஆள ஆரம்பித்த காலத்திலிருந்து, பின்னர் கிறுத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிஃரெஞ்சு, ஆங்கிலேய) ஆட்சி செய்தது வரை நம் தேசத்தின் பல நகரங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்நகரங்களில் நம் மாபெரும் கலாசாரச் சின்னங்களாக இருந்த ஆலயங்களும், அரண்மனைகளும், கலையரங்குகளும், அழிக்கப்பட்டு, அவ்விடத்திலே அன்னியச் சின்னங்கள் கட்டப்பெற்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த தேசத்தின் மீது பக்தியற்றவர்களும், இந்த தேசத்தின் கலாசாரத்தின் மீது பற்றற்றவர்களும், இந்த தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தின் மீது நாட்டம் இல்லாதவர்களும் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருவதால், அவர்களும் நம் நகரங்களின் பழைய பெயர்களையும் பெருமைகளையும் மீட்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்லாமல், தங்கள் பங்கிற்கு பெயர் சூட்டும் கலாசாரத்தைத் தொடர்ந்து செய்துகொண்டும், சுயநலமே பிரதானம் என்று இருக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக ஆயிரம் ஆண்டு காலம் அடிமைப்பட்டதாலும், ஆங்கிலேய அரசு தொடங்கிய கல்வி முறையைத் தொடர்ந்து பின்பற்றுவதாலும் நம் தேசத்தின் உண்மையான பெருமையையும், வரலாற்றையும் அறியாமல், அன்னியர்களிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடந்ததைப் பறைசாற்றும் சின்னங்களைப் பெருமை மிக்கதாகக் கருதிக்கொண்டிருக்கிறோம். இந்த மனநிலையே நம்மை நமது பெருமைமிகு கடந்த காலத்தை மீட்டு நம் உண்மையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்லவிடாமல் தடுக்கின்றது. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அன்னியர்களின் பாதையை மாற்றியமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பாதையில் பயணித்துத் தங்களுடைய சுய விளம்பரங்களையும் தற்பெருமையையும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
நம் பாரத தேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்தவர்கள், தேச பக்தி மிகுந்தவர்கள், பாரத கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள், நம் நாட்டில் உள்ள அன்னிய கலாசாரக் கட்டிடங்களை அடிமைச் சின்னங்களாகத்தான் பார்ப்பார்களேயன்றி, கலைக் களஞ்சியங்களாகவும், பாரம்பரியப் பொக்கிஷங்களாகவும் கருத மாட்டார்கள். எனவே இன்றைய ஆட்சியாளர்கள் நம் நாட்டின் பாரம்பரியமும் கலாசாரமும் பாதிக்குமாறு செய்கின்ற காரியங்களை எதிர்க்க வேண்டுவதும், நம் நாட்டின் பெருமைமிகுச் சின்னங்களைக் காப்பதும் நம் தலையாய கடமையாகும்.
ஏற்கனவே நம் நாட்டில் எங்கும் எதிலும் தகுதியில்லாத அரசியல்வாதிகளின் பெயர்களையும் உருவங்களையும் பார்த்து அலுப்பும் அருவருப்பும் அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு மாவட்ட்த்தின் பெருமையை அழிக்கும் வகையில் அதற்குச் சாதாரண அரசியல்வாதியின் பெயரை வைப்பதென்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். அச்செயல் நம் அரசியல் சாஸனப்படியும் தவறானதாகும்.
அரசியல் சாஸனத்தின் 51A-ஆவது க்ஷரத்தின் ‘f’ பிரிவின்படி, “நம் நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதிப்பளித்து பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் முக்கியமான கடமையாகும்”. எனவே கடப்பாவின் பெயர் மாற்றம் அதன் பாரம்பரியத்தையும் பெருமையையும் பாதிக்கும் என்பதால் ஆந்திர அரசாங்கத்தின் இச்செயல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாக ஆகிறது.
மேலும், இப்போது கடப்பாவின் பெயர்மாற்றத்தைச் சகித்துக்கொண்டோமானால், இது ஒரு தவறான முன்னுதாரணமாகி, நாளை திருவாரூர் மாவட்டமோ அல்லது நாகப்பட்டினம் மாவட்டமோ “கருணாநிதி மாவட்டம்” என்று அழைக்கப்டுவதையும், இந்தியாவின் தலைநகரான புது தில்லி “ராகுல் காந்தி நகரம்” என்று அழைக்கப்படுவதையும், உத்திரப்பிரதேச மாநிலம் “மாயாவதி மாநிலம்” என்று அழைக்கப்படுவதையும் சகித்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, கடப்பா மாவட்டத்தின் பெயர் மாற்றத்தை எதிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.
இதன் தொடர்பாக, ஹைதராபாத் ‘ஹிந்து யுவா’ அமைப்பைச் சேர்ந்த திரு.குருநாத் அவர்கள் இணையத்தில் தயார் செய்துள்ள மனுவில், http://www.petitiononline.com/06242010/petition.html என்கிற இணைப்புக்குச் சென்று கடப்பா மாவட்டத்தின் பெருமையைப் பாதுகாக்க விரும்பும் அனைவரும் கையெழுத்து இட்டுத் தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கலாம். மற்றபடி அவரவர்கள் தங்களால் இயன்ற அளவு தங்களுக்கு தெரிந்த முறையில் ஆந்திர அரசிற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். ஆந்திர அரசின் இக்காரியம் நாளை நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பெருமையையும் பெரிதும் பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொண்டு செயல்படுவோம்.

Series Navigation