நான் கணினி வாங்கிய கதை
அனந்த் (அனந்தநாராயணன்)

கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற
வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக்
கணினிக் கடைமுன்னே காலை முதலே
துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத்
தணியாமல் நீண்டிட்ட தூயவனின் வால்போல்
அணிவகுத்து நின்ற அனைவருடன் கூடி
மணிக்கணக்கில் நின்று மண்டையெலாம் சூடாய்க்
கணினியை வாங்கிக் கடிதில்வீ டெற்றித்
தணியாத ஆவலுடன் தட்டச்சுச் செய்யும்
பணியைத் துவக்குமுன்தான் பார்த்தேன்என் கையில்
அணிகடிகை* யில்லா ததை!
*கடிகை = கடிகாரம்