நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

ஜடாயு


சென்ற திண்ணை இதழில் (மார்ச் 8, 2007) “காஞ்சி மடத்தில் ஒரு ஞானி” என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் எழுதிய அழகிய கட்டுரையில் மறைந்த காஞ்சி பரமாசாரியார் அவர்களைப் பற்றி அற்புதமாக எழுதியுள்ளார். நன்று. ஆனால் அதே கட்டுரையில் சங்கரர் உருவாக்கியதாகக் கருதப் படும் மற்ற மடங்கள் பற்றி ஏளனம் மற்றும் எள்ளல் கலந்த தொனியில் எழுதியிருக்கிறார். இது சொல்ல வந்த பொருளுக்குத் தேவையில்லாத விஷயம் மட்டுமல்ல, மிகத் தவறான தகவலும் கூட.

// வெ.சா : காஞ்சி மடத்தை மற்ற சங்கர மட பீடாதிபதிகள் அங்கீகரிப்பது கூட இல்லை….. அவர்களுக்கெல்லாம் லோகாயத, ஸ்தாபன நிர்வாக அக்கறைகள் அதிகம். அவர்களைத் துறவிகள் என்றோ ஞானிகள் என்றோ நினைப்பது சிரமம் தரும் காரியம். மடத்தை நிர்வகிக்க வந்தவர்கள். அவ்வளவே. ஆக, இம்மடங்கள், காஞ்சி மடத்தை ஒர் சங்கராச்சாரிய பீடமாக ஏற்பதில்லை. ஆனால் விஷயம் என்னவென்றால், இவர்கள் பீடாதிபதிகளாக இல்லையென்றால், இவர்களுக்கென்று தனிப்பட்ட ஆளுமை ஏதும் கிடையாது. ஒரு அதிகாரி பதவி இழந்த மாதிரி தான். இவர்களது தனி மனித ஆளுமை காரணமாக, இவர்கள் தலைமையேற்க வந்த மடத்தின் கண்ணியமும் கௌரவமும் இவர்களால் க்ஷ£ணித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். //

// வெ.சா: ஆதி சங்கராச்சாரியார் எட்டாம் நூற்றாண்டில் ஸ்தாபித்து விட்டுச் சென்ற காலத்திலிருந்து இன்று வரை அந்த மடங்களில் இவ்வளவு நீண்ட கால நீட்சியில் எத்தனையோ சங்கராச்சாரியார்கள் பீடாதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். ஆனால், காலடியிலிருந்து வந்த எட்டாம் நூற்றாண்டு ஆதி சங்கராச்சாரியாரைத் தவிர வேறு எவரும் நாம் இன்று நினைவு கொள்ளும் தடயங்களை விட்டுச் செல்லவில்லை. //

இவற்றில் சில மடங்களில் உள்ள பிரசினைகள் காஞ்சி மடம் உட்பட எல்லா சமய ஸ்தாபனங்களிலும் உள்ளவை தான். ஆனால் இதை வைத்துக் கொண்டு இவர்கள் வெறும் பீடாதிபதிகள் என்று சொல்வது மகா அபத்தம். இந்த எல்லா மடங்களிலும் மிகப் பெரிய ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று ஒவ்வொரு மடத்தின் வரலாற்றையும் எடுத்துப் பார்த்தால் புரியும். இஸ்லாமியப் படையெடுப்பு பேரலையாக வந்து இந்து தர்மத்தைக் குலைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மடங்களே தர்மம் காக்கும் சக்தியாகத் தழைத்து நின்றன. நான் அறிந்தவரை, இந்த காலகட்டங்களில் காஞ்சியிலோ, கும்பகோணத்திலோ மடம் இருந்ததற்கான எந்த வரலாற்றுத் தகவலும் இல்லை.

குறிப்பாக தென்னிந்தியா முழுவதையும் இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து காத்த பெருமைக்குரிய விஜயநகரப் பேரரசை உருவாக்க உந்துதல் அளித்தவர் சிருங்கேரி பீடத்தின் ஏழாவது பீடாதிபதியாக இருந்த மாமுனிவர் மாதவ வித்யாரண்யர். சங்கரரின் வரலாற்றை முதலில் காவியமாக எழுதியவரும் இவரே. தமது சீடர்களான ஹக்கர், புக்கர் என்னும் இரு கிராமப் படைத் தலைவர்களை (இவர்கள் “தூய” சத்திரிய மரபில் வந்தவர்கள் அல்ல) அழைத்து அரசு அமைக்கும் ஆணையையும், ஆசியையும் வழங்கிய அவரது வரலாற்றுச் செயல் சந்திரகுப்தனை சிம்மாசனம் ஏற்றிய சாணக்கியரின் கீர்த்திக்கு நிகரானது. “வித்யாநகர மஹாராஜதானீ, கர்நாடக சிம்மாசன பிரதிஷ்டாபனாசார்ய..” என்ற பட்டப் பெயர்களுடன் விஜயநகரப் பேரரசர்களின் எல்லா ஆவணங்களிலும் சிருங்கேரி பீடாதிபதிகள் குறிக்கப் படுகின்றர். இந்தப் பட்டம் இன்றுவரை தொடர்கிறது.

சிருங்கேரி மடத்தின் உக்ர நரசிம்ம பாரதி (1817–1878) அக்காலத்திய ஞானிகளில் தலையாயவர். மகாராஷ்டிரத்தின் மகா ஞானிகளாக விளங்கிய ஜங்கலி மகாராஜ், ஷீர்டி சாய்பாபா, கஜானன் மகாராஜ் இவர்களது குரு மரபில் இவர் வழிபடப் படுகிறார். இதே மடத்தில் வந்த ஸ்ரீசந்திரசேகர பாரதி (1912-1954) ஒரு மகா ஞானி, ஜீவன்முக்தர். முற்றிலுமாக அழிந்து, சிதைந்து போயிருந்த சங்கரரின் அவதாரத் தலமான காலடி இருக்கும் இடத்தையும், அதில் சங்கரர் பிறந்து, வளர்ந்த எல்லா இடங்களையும் கண்டறிந்து அதை மறுபடியும் ஒரு புனிதத் தலமாக ஆக்கிய இவர் சங்கரரின் மறு அவதாரமாகவே கருதப் பட்டார்.

துவாரகை, பூரி ஆகிய இரு மடங்களின் பொறுப்பையும் சில காலங்கள் ஏற்றிருந்த ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த மகாராஜ் ஒரு பேரறிஞர். முதல் உலகப் போர் சமயத்தில் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டதாக பிரிட்டிஷ் அரசால் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்ற வழக்கில் ஆஜரானவர். வேத இலக்கியத்தில் புதைந்து கிடந்த கணித அறிவை முழுதுமாக வெளிக் கொணர்ந்து இன்று பெரிதும் பேசப் படும் வேத கணிதம் (Vedic Mathematics) என்ற துறையை உருவாக்கிய பெருமை அவரைச் சாரும்.

165 வருடம் தலைமையற்று இருந்த பத்ரிநாத்தில் உள்ள ஜ்யோதிர்மடம் பீடத்தை 1941ல் அலங்கரித்த பிரம்மானந்த சரஸ்வதி (1870-1953) சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த கிருஷ்ணானந்த சரஸ்வதியின் சீடர். இன்று யோகம், தியானம் உலகெங்கும் செல்வதற்கு அடிகோலியவர் இவர் என்றே சொல்லலாம். ஆழ்நிலைத் தியானம் என்ற அமுதத்தைத் தந்த மகரிஷி மகேஷ் யோகி இவரது அணுக்கச் சீடராகவும் தொண்டராகவும் இருந்தார். இதே மரபில் இருந்து வந்த வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ரிஷி பிரபாகர் ஆகியோர் போற்றி வணங்குவது இவரை பரமகுருவாகக் கொண்ட குரு பரம்பரையைத் தான்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அத்வைத குரு தோதாபுரி சிருங்கேரி சங்கராசாரியாரிடம் தீட்சை பெற்றவர். சின்மயா மிஷன் நிறுவனர் சுவாமி சின்மயானந்தரின் குரு தபோவனம், ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தரின் குருநாதர் இவர்களும் அவ்வாறே. கிரியா யோகம் என்ற அற்புதமான யோக முறையை உருவாக்கிய பரமஹம்ஸ யோகானந்தரின் குரு பூரி சங்கர மடத்தில் தீட்சை பெற்றவர். இந்து மறுமலர்ச்சியின் தீபச் சுடர்களான இந்த எல்லா ஆன்மிக இயக்கங்களும் இன்றும் தங்கள் வரலாற்றில் இந்த புராதன சங்கர மடங்கள் தங்களுக்கு அளித்த ஆன்மிக வழிகாட்டுதல்களை மரியாதையுடனும், நன்றியுடனும் நினைவு கூர்கின்றன.

வெ.சா அவர்கள் காஞ்சிப் பெரியவரின் புகழ் பாடிக் கொள்ளட்டும். ஆனால் அதற்காக மற்ற சங்கர மடங்களைத் தாழ்த்துவது சரியல்ல. வரலாற்றளவில் இந்து தர்மத்திற்கும், ஆன்மிகத்திற்கும் இந்த நான்கு மடங்கள், இவற்றை அலங்கரித்த ஞானியர் ஆற்றியுள்ள மகத்தான பணிகள் அளவிலும், கீர்த்தியிலும் மிகப் பெரியவை.

http://jataayu.blogspot.com


jataayu.b@gmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு