நவீனத்தின் அளவு

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

அன்பாதவன்


நவீனத் தமிழ்க் கவிஞன்
ஆவதொன்றும் அவ்வளவு கடினமல்ல
புறப்பிரச்சனைகளை
புறந்தள்ளி புறக்கணி.

தடைச் சட்டங்களா
தலித்கள் எரிப்பா
மோதல் கொலையா
அதிகார அத்துமீறலா
மூடிக்கொண்டுவிடு கான்கிரீட்டால்
காதுகளையும் கண்களையும்.
திறந்தால் சுடும் நிஜம்.

அகச்சிக்கலே மிக முக்யம்
குதுப்மினார் போல
விரைத்த குறியின்
அவஸ்தைகள் அடுக்கு
வேறுவேறு வார்த்தைகளில்.
இருண்மை அவஸ்யம்.

வெளிநாட்டு இசங்கள் பெயர்களை
செருகு வேண்டிய இடங்களில்.

யாரோ சிரமப்பட்டு நடத்தும்
கருத்தங்குகளில் கலந்துகொள்
அரை டவுசரோடும் தாடியோடும்
(யாசித்தாவது)
குடித்துவிட்டுப் போவது சிறப்பு தகுதி.

கத்தி கலாட்டா செய்
கெட்ட வார்த்தைகளை வீசு
நவீனத்தின் அளவு நீளும்வரை
இலக்கியக் கூட்டங்களின் உதைகளில்
நிச்சயிக்கப்படும் உன் இடம்.

வாழ்க நீ எம்மான்!.

—-
jpashivammumbai@rediffmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.