நகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

நாகூர் ரூமி


அமெரிக்காவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒரு முறையல்ல, இரண்டு முறை. 1835ம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றியது. மறுபடியும் அந்த ஹேலியின் வால் நட்சத்திரம் 1910ம் ஆண்டு தோன்றி மறைந்தது. அதிசயம் இதுவல்ல. முதல் வால் நட்சத்திரம் தோன்றி மறைந்த அதே ஆண்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து இரண்டாவது வால் நட்சத்திரம் தோன்றி மறைந்த அதே ஆண்டு மறைந்தது ஒரு மூன்றாவது ‘வால் ‘ நட்சத்திரம் !

அந்த வால் மாணிக்க நட்சத்திரம்தான் சாமுவேல் லேங்ஹார்ன் க்ளமன்ஸ் என்று பெற்றோரால் நாமகரணம் சூட்டப்பட்ட மார்க் ட்வெய்ன் என்று அறியப்பட்ட எழுத்தாள மேதை ! பிச்சைக்காரர்கள் செத்தால் ஒன்றும் நடப்பதில்லை. மகாமனிதர்கள் மரணிக்கும்போது விண்ணகமே பற்றிக்கொள்கிறது என்று ஷேக்ஸ்பியர் தெரியாமலா சொன்னார் !

ஜான் மார்ஷலுக்கும் ஜேன் லாம்ப்டனுக்கும் றாவது குழந்தையாக நவம்பர் 30, 1835ல் பிறந்தார் மார்க்ட்வெய்ன். ஜீவித்திருந்த 75 ண்டுகளில் எழுத்தாளராகப் பரிணமித்தபிறகு 11 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுப்புகள், 3 பயணக்கட்டுரைத் தொகுப்புகள், 2 மலரும் நினைவுகள், 8 க்கும் மேற்பட்ட தத்துவம் மற்றும் பலதரப்பட்ட படைப்புகள், ஒரு முடிவுறாத சுய சரிதம் கியவற்றை அமெரிக்க இலக்கியத்திற்கு அளித்துள்ளார்.

அவர் எவ்வளவு எழுதினார் என்பது அவ்வளவு முக்கியமல்ல. எப்படி எழுதினார் என்பதுதான் முக்கியம். அமெரிக்க இலக்கியத்தின் ‘பெரிசு ‘களின் ‘காலரி ‘யில் நிரந்தரமான இடம் பிடித்ததற்கு காரணமும் அதுதான்.

அந்த காரணம் வேறொன்றுமில்லை, நமக்கு மிகவும் பிடித்தமான, பழக்கமான நகைச்சுவைதான். அதில் என்ன மகத்துவம் என்கிறீர்களா ? சிரிப்பது எளிது, இயற்கையானது. ஆனால் சிரிக்க வைப்பது ஒரு மகாகலை. அது உள்ளேயிருந்து வரவேண்டும். மார்க்ட்வெய்னுக்கு அது பொங்கிப்பொங்கி வழிந்தது.

அவருக்கு எல்லாமே நகைச்சுவைதான். அவருக்கு வெளியே இருந்த உலகத்தைப் பார்த்து மட்டும் அவர் சிரிக்கவில்லை. தன்னைத்தானே பார்த்து அவர் சிரித்துக்கொண்டார். அவர் எழுத்தின் அடி நாதமாக இருப்பது இந்த நகைச்சுவைதான். பூவிலிருந்து வாசத்தை எப்படி பிரிக்க முடியாதோ அதேபோல அவரிடமிருந்து நகைச்சுவையை பிரிக்க முடியாது. அதுதான் அவர், அவர்தான் அது.

‘இடுக்கன் வருங்கால் நகுக ‘ என்ற வள்ளுவத்தை பரிபூரணமாகப் பின்பற்றிய அமெரிக்கப் பெருந்தகை அவரே ! மரணம்கூட அவருக்கு நகைப்புக்குரியதுதான். அதாவது அவருடைய மரணம் !

‘என்னைப் பற்றிய இரங்கல் செய்திகள் யாவும் மிகைப்படுத்தப்பட்டவையே ‘ என்று அவர் இறப்பதற்கு 13 ண்டுகளுக்கு முன்பே அவரைப்பற்றிய கற்பனையான இரங்கல் செய்திக்கான அவருடைய விமர்சனத்தை (!) நியூயார்க் பத்திரிகை ஒன்றில் எழுதினார் !

அவருடைய நகைச்சுவை ரொம்ப நுட்பமானது, அழகானது. சில உதாரணங்கள். தன் பள்ளிக்கூட வாழ்வைப்பற்றி போகிறபோக்கில் அவர் சொல்கிறார் :

‘என் கல்வியில் தலையிடும் உரிமையை என் பள்ளிக்கூடத்துக்கு நான் கொடுத்ததே இல்லை ‘ !

‘இறையருளால் நமது நாட்டில் நாம் மூன்று அரிய விஷயங்களை வைத்திருக்கிறோம். பேச்சு சுதந்திரம், மனசாட்சிப்படி நடக்கும் சுதந்திரம், இந்த இரண்டையும் பயன்படுத்தக்கூடாது என்ற ஞானம் ‘ !

‘எல்லா மிருகங்களிலும் மோசமான மிருகம் மனிதன்தான். இன்பம் பெறுவதற்காக துன்பம் கொடுக்கும் மிருகம் வேறு எதுவுமில்லை ‘ !

‘நான் இலக்கியத்துறையில் இருப்பதற்கு உண்மையான காரணம் பன்னிரண்டு வயதில் எனக்கு தட்டம்மை வந்ததுதான் ‘ ( என்கிறார் திருப்புமுனை பற்றிய கட்டுரையில் ! )

அவருக்கு நாலு வயதிருக்குபோது அவர் குடும்பம் ஹானிபல் என்ற ஊருக்குக் குடியேறியது. மிஸ்ஸிஸிப்பி நதியின் மேற்குக் கரையோரமாக அமைந்திருந்தது அந்த ஊர். அங்குதான் அவருடைய சிறுவயதுப்பருவம் கழிந்தது. அந்த நதியும், பலதரப்பட்ட படகுகளும், மீன்பிடித்தலும், மலைகளும், காடுகளும், இயற்கை அழகும் அவர் மனதைக்கொள்ளை கொண்டன.

இந்த காலகட்டத்தில் அவர் மனதை மிகவும் ஆழமாக பாதித்த, மனதில் நிரந்தரமாகத் தங்கிய விஷயங்கள் இரண்டு. ஒன்று மிஸ்ஸிஸிப்பி ஆறு. இன்னொன்று அடிமைகளின் அவலவாழ்வு.

மிஸ்ஸிஸிப்பி ஆறு ஒரு சாதாரண ஆறல்ல. ஒரு மாபெரிய நதி. வட அமெரிக்காவின் மிகப்பெரிய நதி அதுதான். அந்தக் கண்டத்தின் எட்டில் ஒரு பகுதியை – 3,100,000 ஸ்கொயர் கிலோமீட்டர்கள் – அது வளப்படுத்தியது. மிஸ்ஸவ்ரி, ஓஹிமா ஆகியவை அதன் உப நதிகளாகும். மிஸ்ஸிஸிப்பி ஏறத்தாழ 3780 கிலோமீட்டர் நீளத்துக்கு ஓடியது !

ஒரு ஸ்டாம்படகின் மாலுமியாகி, அதன் ஆழங்களையும் மர்மங்களையும் அறிய வேண்டும் என்று கனவுகண்டு அந்த கனவை நனவாக்கியவர் மார்க்ட்வெய்ன். அந்த கனவை அவரே விவரிக்கிறார் :

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமத்து நண்பர்களுக்கு ஒரு நிரந்தரமான லட்சியமிருந்தது. ஒரு ஸ்டாம் கப்பலின் மாலுமியாக வேண்டும் என்பதுதான் அது. தற்காலிக ஆசைகள் நிறைய வந்தன. எனினும் அவை தற்காலிகமானவை. சர்க்கஸ் வரும்போதெல்லாம் க்ளவ்னாக வேண்டும் என்று ஆசை வரும். நல்லவர்களாக வாழ்ந்துவிட்டால் கடல் கொள்ளைக் காரர்களாவதற்கு கடவுள் அனுமதி கொடுப்பார் என்று நம்பினோம். ஆனால் இந்த ஆசைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்தன. நின்றது ஸ்டாம் கப்பல் மாலுமியாகவேண்டும் என்ற ஆசை மட்டும்தான்.

அவருடைய படைப்புகளின் அந்தரங்க கதா நாயகன் மிஸ்ஸிஸிப்பி ஆறுதான். உரிமம் பெற்ற ஸ்டாம்கப்பல் மாலுமியாக நான்காண்டுகள் அந்த ஆற்றின்மீது அவர் வாழ்ந்த அனுபவமும் அவருடைய படைப்புகளுக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அவருடைய எழுத்தைப் பற்றி அவரே இப்படித்தான் சொல்கிறார் :

‘என் எழுத்து தண்ணீர் மாதிரி. பெரிய எழுத்தாளர்களின் எழுத்தோ வொய்ன் மாதிரி. தண்ணீர் எல்லோரும் குடிக்கிறார்கள். ‘

அவர் அப்படிச்சொன்னதற்குக் காரணம் உவமானம் அழகாகவும் பொருத்தமாகவும் இருப்பது மட்டுமல்ல. அவர் மிஸ்ஸிஸிப்பியின் மைந்தன் என்பதும்தான் !

அவருடைய புனைபெயரே தண்ணீர் சம்பந்தப்பட்டதுதான். ஆற்றின் ஆழம் 12 அடி இருப்பதைத்தான் மாலுமிகள் ‘மார்க் ட்வெய்ன் ‘ என்று குறிப்பிட்டார்கள். அது ஒரு பாதுகாப்பற்ற ஆழம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது 27ம் வயதில் 1863இல் வர்ஜீனியாசிட்டி என்ற ஒரு பத்திரிகைக்காக நகைச்சுவைப் பயணக்கட்டுரை எழுத ஒத்துக்கொண்டபோதுதான் அவர் தனக்கு ‘மார்க் ட்வெய்ன் ‘ என்று புனைபெயரிட்டுக்கொண்டார்.

அடிமைகளின் வாழ்வு அவரை ஆரம்பத்திலிருந்தே பாதித்து வந்தது. அவரது அப்பாவே அடிமை வியாபாரம் செய்பவராகவும் நீதிபதியாகவும் இருந்தார்! அப்பா இறந்தபிறகு மார்க்ட்வெய்ன் தன் மாமவுடன் போய் வசிக்க நேர்ந்தது. அவர் மாமாவுக்கு இருபது கறுப்பின அடிமைகள் இருந்தனர்.

பல அடிமைகள் அந்த ஊரில் கொடூரமான முறையில் சின்னத் தவறுகளுக்காக கண்ணெதிரிலேயே கொல்லப்பட்டதை பார்க்க நேர்ந்திருக்கிறது. மேலும் அடிமைகளுடைய வாழ்முறை, பேச்சு, மொழி, சொற்கட்டு, பிராந்திய வழக்கு எல்லாம் அவருக்கு மனப்பாடம்.

அவருடைய நாவல்களில் இவை மிகவும் சிறப்பாக வெளிப்பட்டன. அவருடைய தலைசிறந்த படைப்பாக கருதப்படுகின்ற ‘ஹக்கில்பெரிஃபின்னின் வீரதீரச் செயல்கள் ‘ (The Adventures of Huckleberry Finn) நாவல் அதில் வரும் ‘நாகரீகமற்ற ‘ மொழிக்காக கொஞ்சகாலம் தடைசெய்யப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!

மார்க்ட்வெய்ன் எவ்வளவோ எழுதியிருந்தாலும் இந்த உலக அறிஞர்களால் அவருடைய மூன்று படைப்புகள் மட்டும் மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது. அவை : 1. The Aventures of Tom Sawyer (டாம் சாயரின் வீரதீரச் செயல்கள்), 2. Life on Mississippi (மிஸ்ஸிஸிப்பியின் மீது வாழ்க்கை) மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட ஹக்கில்பெரிஃபின்.

டாம்சாயரும் ஹக்கும் வயசுக்கு வராத சின்னப் பசங்களுக்காக எழுதப்பட்ட கதைகளைப்போல தோன்றும் நாவல்கள். இரண்டு பரிமாணங்கள் கொண்டவை. ஒரே சமயத்தில் குழந்தை இலக்கியமாகவும் வளர்ந்தவர்களுக்கான எழுத்தாகவும் இருப்பவை. அடிமைத்தளைக்கு எதிரான குரல்கள். தப்பி ஓடிவந்துவிட்ட ஒரு கறுப்பு அடிமைக்கு அடைக்கலம் கொடுத்து அவனைக்காப்பாற்றும் ஒரு வெள்ளைப் பையனின் கதைதான் ஹக்கின் கதை. ‘மிகச்சிறந்த புத்தகம் ‘ என்றும் ‘எல்லா அமெரிக்க எழுத்தும் அங்கிருந்தே வருகிறது ‘ என்றும் ஹக்கை ஹெமிங்வே பாராட்டினார்.

எனினும் மிஸ்ஸிஸிப்பி அனுபவங்களையோ பயணக்கட்டுரைகளையோ எழுதியதுபோல சுலபமாக அவரால் நாவல்களை எழுதிவிட முடியவில்லை. டாம்சாயர் நாவல் விட்டுவிட்டு பல வருடங்கள் எழுதப்பட்டது. ஹக் நாவலையும் தொடங்கி கொஞ்சம் எழுதி பின் இரண்டு ஆண்டுகள் மூடிவைத்துவிட்டார். 1876இல் தொடங்கப்பட்ட ஹக் எட்டு வருஷம் கழித்து 1884இல்தான் ஒருவழியாக முடிக்கப்பட்டது !

Puddi ‘n Head Wilson என்ற இவரது குறு நாவல் அமெரிக்காவின் மீதான இவரின் கடைசிப்பார்வை என்று சொல்லலாம். வெளிப்படையாக செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ராக்ஸி என்ற அடிமைப்பெண்ணின் பாத்திரத்தை இதில் தந்தார். அடிமைத்தளை மற்றும் இனக்கலப்பு பற்றிய ஒரு சக்திவாய்ந்த சமுதாயச் சாடலாகவும் இந்நாவல் அமைந்தது.

ஆறு, அடிமைகள் தவிர மூன்றாவதாக ஒரு விஷயம் அவருடைய எழுத்தில் முக்கியத்துவம் பெறுகிறதென்றால் அது அவருடைய பயண அனுபவங்கள் பற்றிய தொகுப்புதான். ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என உலகம் சுற்றிய எழுத்தாளர் அவர். பொதுவாக அவருடைய பயணங்கள் யாவுமே பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதுவதற்காக அப்பத்திரிக்கைகளால் அனுப்பப் பட்டவைகளாகவே இருந்தன. இப்படி அமர்த்தப்பட்ட பணிகளாலும் தனது சொற்பொழிவுகளாலும் – இன்னொரு பரிமானம் – அவர் நிறைய சம்பாதித்தார்.

அவருடைய முதல் பயணக்கட்டுரைத் தொகுப்பு The Innocents Abroad. இது 1869 இல் வந்தது. இது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிரதிகள் விற்றது ! 1870 இல் ஒலிவியா லாங்க்டன் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு ஒரு பயணக்கட்டுரைத் தொகுப்பு Roughing It என்று 1872இல்.

தனது அண்ணன் நடத்திய ‘ஹானிபல் ஜேர்னல் ‘ உட்பட பல பத்திரிக்கைகளில் நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் பரபரப்பான பொய்யான நிகழ்ச்சிக் கட்டுரைகள் என மார்க் ட்வெய்ன் எழுதி தன் எழுத்து வாழ்வைத் துவக்கியிருந்தாலும் ‘தி சாட்டர்டே ப்ரஸ் ‘ என்ற பத்திரிக்கையில் எழுதிய ‘குதிக்கும் தவளை ‘ (The Jumping Frog) என்ற சிறுகதையே அவருக்கு எழுத்தாளர் என்ற அந்தஸ்து ஏற்பட காரணமாக இருந்தது.

அது எதிர்பாராத வரவேற்பைப் பெற்று, நாடுமுழுவதிலும் இருந்த பல பத்திரிக்கைகளிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது. நாமும் எழுதலாம் என்ற நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அது அவருக்கு கொடுத்தது. அவருடய வருங்கால எழுத்துக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாகவும் அது அமைந்தது.

கிட்டத்தட்ட 50 வருடங்கள் எழுதிக்கொண்டிருந்த அவருடைய கடைசி எழுத்து எது என்று பார்த்தால் அது அவருடைய சுயசரிதைதான். அவர் சொல்லச் சொல்ல அது எழுதப்பட்டது. ஆனால் அது முடிவதற்கு முன்பே அவர் ஏப்ரல் 21, 1910 இல் இதயக் கோளாறினால் காலமானார்.

ஒரு எழுத்தாளராகப் பார்க்காமல், மனிதன் என்று பார்த்தாலும் அவர் வாழ்வு வியப்புக்கும் மரியாதைக்கும் உரியதாக உள்ளது. தனக்கிருந்த ஒரு லட்சம் டாலர் கடனையும் சொன்னபடி மூன்றே ஆண்டுகளில் வெளி நாட்டுப் பயணச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி கிடைத்த வருமானத்தில் தம்பிடி பாக்கியில்லாமல் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பது வியப்புக்குரிய விஷயமல்லவா ? குடி போதையில் ஒருமுறை கைது செய்யப்பட்டதும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாவதற்கு முயன்று தோற்றதும்கூட ஆச்சர்யமான விஷயங்கள்தான் !

மார்க்ட்வெய்ன் ஒரு தீவிர சுருட்டு குடி மன்னன். ( சங்கிலிப் புகைப்பாளர் ?!) எப்போதுமே குடிப்பீர்களா என்று கேட்டதற்கு ‘தூங்கும்போது குடிப்பதில்லை ‘ என்று பதில் வந்தது ! சுருட்டு பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது கஷ்டமா என்று கேட்டதற்கு ‘ச்சே ச்சே, ரொம்ப ஈசி, நான் எத்தனையோ முறை நிறுத்தியிருக்கிறேன் ‘ என்றாராம் !

நம்மை அடக்கம் செய்பவன்கூட வருத்தப்படும் அளவுக்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்று சொன்னவர் அவர்! ‘உண்மையைச் சொல்வதற்கு எதையுமே ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை ‘ என்று சொன்ன மார்க்ட்வெய்ன் என்ற மேதையை, தாகத்தை தண்ணீரால் தீர்க்க முடியும் என்ற காலம் வரை மனிதர்கள் நினைவு வைத்திருப்பார்கள்.

(குமுதம் ஜங்ஷன், ஆகஸ்டு 16-31, 2002)

Series Navigation