தேவதேவன்
1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர்
=======================
புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்
மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது
அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .
2.மேகம் தவழும் வான்விழியே
=====================
மேகம் தவழும் வான்விழியே
உன் தனிப்பெரும் வியக்தியை
துக்கம் தீண்டியதெங்கனம் ?
எதற்காக இந்தப் பார்வை
வேறு எதற்காக இந்தச் சலனம் ?
அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?
ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?
மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?
கவனி
உனக்கு கீழே
அவை
ஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .
3. ஒளியின் முகம்
==========
நான் என் கைவிளக்கை
ஏற்றிக் கொண்டதன் காரணம்
என்னை சுற்றியுள்ளவற்றை
நான் கண்டுகொள்வதற்காகவே
என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல
அல்ல
நீ என் முகத்தை கண்டுகொள்வதற்காகவும்தான்
என்கிறது ஒளி
4. வரைபடங்கள்
==========
வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண
வரைபடம் எதற்கு ?
வானமோ
இரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது
5. அழைப்பு
======
கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னை சூழ
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது
6. தூரிகை
======
வரைந்து முடித்தாயிற்றா ?
சரி
இனிதூரிகையை
நன்றாக கழுவிவிடு
அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவிவிடு
கவனம்
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையை கெடுத்துவிடும்
சுத்தமாய் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப்போட்டுவை
ஒரு குவளையில்
7. அக்கரை இருள்
============
நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடை விரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின்மேலிருந்த
என் அறையின் விளக்கொளி
இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்
முளைத்த துயரொன்றை
கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி
என் பாத ஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல
நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்
நட்சத்திரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்
அதுசமயம்
நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளிலில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது .
8. சூரியமறைவு பிரதேசம்
=================
உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்கு சூரியன்
உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு ந்ண்பனின் முகம்
ஒரு டம்ளர் தண்ணீர்
இன்னும்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக் கொண்டே போகலாம்
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையென்றால்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்
ஒரு டம்ளர்தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லை என்றால்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்
காகிதத்தில் பொதிந்த கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை
காணப்படாவிட்டால்
உணர்ந்துகொள்
‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘
9] தன்னதனி நிலா
==============
தன்னந்தனி நிலா
எல்லாவற்றிலும் எதிரொளிக்கிறது
அதன் அழகு
தன்னதனி நிலா
தன் அழகை தானே ரசிக்கிறது
நீர் நிலைகளில்
தன்னந்தனி நிலா
தன் தனிமை மறக்கிறது
நீர் நிறை கண்களில்
10. மலை
====
மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?
அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?
தேவதேவன் கவிதைகள் தொடர்பு
———————————————
http://www.thinnai.com/ar0812023.htm
வீடு http://www.thinnai.com/pm0812024.html
மரம் http://www.thinnai.com/pm0819028.html
பறவை http://www.thinnai.com/pm0825025.html
கடவுள் http://www.thinnai.com/pm0902029.html
தேவதேவன் மின்னஞ்சல் dhevadhevan@marutham.com
***
தொகுப்பும் தட்டச்சும் – ஜெயமோகன்
***
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- காவிரி நீர் போர்
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- கவிதாசரண் பத்திரிக்கை
- நாய் வாங்கும் முன்பாக
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- தோழியரே! தோழியரே!
- இதுவும் உன் லீலை தானா ?
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- ஒரு கடிதம்…
- எழுத / படிக்க
- குப்ஜாவின் பாட்டு
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- காவிரி நீர் போர்
- அதுவரை காத்திருப்போம்.
- புதிய பாலை
- யார்தான் துறவி ?
- பயணங்கள் முடிவதில்லை
- இரு கவிதைகள்
- கவலையுள்ள மனிதன்!
- நடிகர்கள்!
- கலாச்சாரக் கதகளி