வளவ.துரையன்
பொதுவாகவே மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வுகளும் அவற்றின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் மிக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் நட்டுப்புற இயலின்மீது ஆய்வாளர்களின் கவனம் விழுந்தது. இன்றைய சூழலில் இத்துறை வெகுவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஒன்றாகும். கன்னடத்திலும் வங்காளத்திலும் இதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. நாட்டுப்புற இலக்கியத்தை முதன்முதலில் பாடமாகச் சேர்த்த பெருமை மைசூர் பல்கலைக்கழகத்தைத்தான் சாரும். பிறகு கருநாடகப் பல்கலைக்கழகமும் பெங்களூர் பல்கலைக்கழகமும் நாட்டுப்புற இயல்கள் குறித்த மாநாடுகளை நடத்தின. கன்னட நாட்டுப்புறவியலின் வளர்ச்சிக்கு இத்தகு நடவடிக்கைகள் மிகவும் உதவின.
கன்னட நாட்டுப்புறவியலை தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் தாஸ் என்கிற இறையடியான் எழுதிய இந்த நூல் 1993 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அவருடைய ஐந்தாண்டு கால இடைவிடாத உழைப்பின் விளைவாக இத்தொகுதி உருவாகியிருக்கிறது. ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டு, 240 பக்கங்களில் இத்தொகுதி வெளிவந்துள்ளது.
1603 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஜான் லேடன் என்பவர் சிறீரங்கப்பட்டணத்தின் வீழ்ச்சியைக் காட்டும் “லாவணி” என்னும் நாட்டுப்புறப் பாடல் வகையை ஆங்கிலம் வழியாக கன்னட நாட்டுப்புற மக்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். இத்தகவலில் தொடங்கி கருநாடக நாட்டுப்புற இயலைப்பற்றி எழுந்த நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் என எல்லாத் தகவல்களையும் இறையடியான் விரிவாகவே தொகுத்துள்ளார்.
கன்னடப் பழமொழிகளைப்பற்றி வெளிவந்த படைப்புகளில் 1912 இல் வெளியான “கருநாடக லோகோத்தி நிதான” என்னும் நூல்தான் பழமொழிகள் பற்றி வெளியான முதல் நூலாகும். இதை கெட்டில் என்பவர் எழுத பாசேல் மிஷன் அச்சகம் வெளியிட்டுள்ளது. போகிற போக்கில் பழமொழிகளைச் சொல்லிவிட்டுச் செல்லாமல் அவற்றில் பொதிந்துள்ள இலக்கியப் பார்வையையும் சமுதயப் பார்வையையும் இருவகைப்படுத்தி பட்டியலிடுகிறார் இறையடியான். மேலும் விரிவாக, எளிய சந்தங்களைக் கொண்ட பழமொழிகள், உவமானம், வடிவ வேறுபாடு, எதிர்ப்பொருள், இதிகாசங்களை ஒட்டியவை, நிலவியல், உடலியல், இல்லறவியல், தொழிலியல், சித்தாந்தம், நகைச்சுவை என்பனபோன்ற பல துணைத்தலைப்புகளின்கீழேயும் பழமொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பேன் இல்லாத தலையில்லை
சளி இல்லாத மூக்கில்லை
ஒருவேளைச் சோற்றுக்கே கதியில்லை
அன்னதானம் செய்கிற செட்டியாருக்கு
நரியை தலைவன் ஆக்கினால்
வீட்டுக்கொரு கோழி கேட்டதாம்
என்பவைபோன்ற பழமொழிகளைப் படிக்கும்போது தமிழில் இவற்றுக்கு இணையாக வழங்கப்படுகிற பழமொழிகள் நினைவில் வந்துபோகின்றன.
இந்நூலில் கன்னட நாட்டுப்புறவியலில் விடுகதைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அவை மிகவும் பிற்காலத்திலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பாரதத்தின் விடுகதைஇயலை ஆய்வு செய்கையில் தமிழ், தெலுங்கு, மராட்டி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 1900-1920 காலகட்டத்தில் விடுகதைகள் பல நூலாக்கப்பட்டுள்ளனவென்றும் 1940 இல்தான் ப.ஜோஷ் அவர்கள் 214 கன்னட விடுகதைகள் அடங்கிய மக்கள ஒடபுகளு (குழந்தை விடுகதைகள்) என்ற தொகுப்பை வெளியிட்டார் என்றும் இறையடியான் குறிப்பிடுகிறார்.
கன்னடத்தில் விடுகதைகளை ஒகட்டு, ஒகண்டி, ஒண்டு, ஒகண்டே, ஒகடு, ஒடபு, ஒடகதே, வடச்சுதே என்றெல்லாம் கூறுவதுண்டு. விடுகதைகளும் நூலில் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இயற்கையின் தாக்கம் என்னும் தலைப்பில் உள்ள
போகும்போது பூந்தோட்டம்
வரும்போது வெறுந்தோட்டம்
அது என்ன? (பருத்திவயல்)
அழுகாத பழம்
தவிடு அற்ற ராசமுத்து
அது என்ன? ( புளியம்பழம்)
ஆகிய விடுகதைகள் சுவையானவை.
சமூகவியல் பார்வை என்னும் பிரிவில் சில விடுகதைகளைக் காட்டி, அதன் பின்னணியில் உள்ள சமூகக்குறிப்பையும் இறையடியான் சுட்டிக் காட்டுகிறார். கருநாடகக் கிராமங்களில் வீட்டுவிலக்கான பெண்கள் குளித்துவிட்டு மாற்றுப்புடவையுடன் திரும்புகையில் முதலில் கட்டிய புடவையை முள்வேலியின் மேல் போட்டுவிடுவாள். அழுக்குப்புடவையை எடுக்கவரும் சலவைக்காரன் சிறு குச்சி அல்லது கோலினால் முள்ளின்மீது போட்டிருக்கும் புடவையை எடுத்து நீரில் நனைத்துப் பின்னரே கைகளில் எடுத்துத் துவைப்பது வழக்கம். இத்தகவலை ஒரு கன்னட விடுகதை குறிப்பிடுகிறது.
சண்டையில்லை சச்சரவில்லை
அடிக்கிறான் உதைக்கிறான்
சங்கடமில்லை களைப்புமில்லை
கோலெடுத்து முள்ளின்மேல்
அடுத்து நாகரிக விடுகதைகள் என்னும் தலைப்பில் செய்தித்தாள் பற்றி
அக்கக்கா இங்கே பாரு என்ன அழகு
அழ என்னடி அழகு, உடம்பெல்லாம் கரியே
கருப்பா இருந்தால் என்னடி,
நாடெல்லாம் அவள் கையிலே
என்னும் விடுகதை எடுத்துக்காட்டப்படுகிறது.
பிரெஞ்சு அறிஞரான ஆபி குயுபா என்பவர்தான் 1816 இல் முதன்முதல் கன்னட நாட்டுப்புறக்கதைகளை நூலில் வெளியிட்டுள்ளார். பிற மொழிகளில் உள்ளதுபோல கன்னட நாட்டுப்புறக்கதைகளிலும் அரக்கர்கள், மந்திரசக்தி, மாயாஜாலம் போன்றவை இருப்பதோடு, இதிலும் பறவைகள், மிருகங்கள் ஆகியவை பேசுகின்றன.
தேவகன்னி என்னும் கன்னடக்கதை தமிழில் வழங்கும் ஜெகதலப்பிரதாபன் கதையைப்போல இருப்பதை இறையடியான் ஒப்புநோக்கி எழுதுவது குறிப்பிடத்தக்கது.
கன்னட நாட்டுப்புறப் பாடல்கள் ஆண்கள் பாடல்கள், பெண்கள் பாடல்கள், குழந்தைப் பாடல்கள் என்று வகைப்படுத்துவதோடு பண்டிகை, திருவிழா ஆகியவற்றில் பாடும் பாடல்களும் நூலில் காட்டப்படுள்ளன. கன்னடத்தில் ஒப்பாரிப்பாடல்கள் குறைவாக இருந்தாலும் அவற்றின் இலக்கியத்தன்மை சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள டாக்டர் ஆறு.இராமநாதன் குறிப்பிடுவதுபோல நாட்டுப்புறக்கலைகள் என்னும் இயல் இந்த நூலின் மூன்றில் ஒருபங்கை எடுத்துக்கொண்டுள்ளது. இறையடியான் சற்று விரிவாகவே இவ்வியலை ஆய்வு செய்துள்ளார். ஆண்கடவுளை அடிப்படையாகக் கொண்ட ஆட்டங்கள் (12), பெண்தேவதை வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்ட ஆட்டங்கள் ( 12), நலிந்தோர் கூத்துவகை (11) பல்வேறு இனமக்களின் ஆட்டங்கள் (11), நம்பிக்கைகளைக் களனாகக் கொண்ட ஆட்டங்கள் (3) பாடல்களைமட்டுமே கொண்ட ஆட்டங்கள் (7) இசைக்கருவிகளைப் பெயராகக் கொண்ட ஆட்டங்கள் ( 6) பரவலாக அறியப்பட்ட ஆட்டங்கள் (9) என்று பெரும் எண்ணிக்கையில் 71 ஆட்டங்கள் எடுத்துக்காட்டப்படுள்ளன. ஆட்டங்களின் பெயர்கள், அவை ஆடப்படும் காலம், ஆடுபவர் எந்தப் பிரிவினர், ஆடும்போது அணியும் ஒப்பனை ஆகியவற்றைக் குறிப்பிடும் நூலாசிரியர் சில நாட்டுப்புறக்கலைஞர்களின் நேர்காணலையும் வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே நாட்டுப்புற விளையாட்டுகள் நான்கு தென்மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளன என்கிறார். காயாட்டம், ஆடுபுலி ஆட்டம், தாயக்கட்டம், கற்கள் எடுக்கும் ஆட்டம், குச்சி புதைப்பது, கண்ணாமூச்சி, நொண்டியாட்டம், கோலியாட்டம்போன்று தமிழ்நாட்டில் கிராமங்களில் காணப்படும் ஆட்டங்கள் கருநாடகப்பகுதிகளில் வேறு பெயர்களில் ஆடப்படுகின்றன. கருநாடக மக்களின் வழிபாடு, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நூலின் இறுதிப்பகுதியில் அறிமுகம் செய்கிறார் இறையடியான்.
வாசித்து முடிக்கும்போது வேறொரு மொழி வழங்குகிற பிரதேசத்தின் நாட்டுப்புறவியலை பரவலாக அறிந்துகொண்ட மனநிறைவை இறையடியானின் நூல் அளிக்கிறது. தான் படித்தும் கேட்டும் அறிந்துகொண்ட தகவல்களை மிகவும் பொறுப்பான முறையில் தனித்தனி இயல்களாகப் பிரித்து ஒழுங்குசெய்து தொகுத்துத் தந்திருக்கும் இறையடியானுக்கு தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.
( கருநாடக நாட்டுப்புறவியல்- ஓர் அறிமுகம். சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான ஊடக ஆய்வகம், 5, குலாம் அப்பாஸ் அலிகான் 6 ஆம் தெரு, ஆயிரம்விளக்கு, சென்னை-6. பக்கம் 240. விலை.ரூ45.)
*
jayashriraguram@yahoo.co.in
- மெல்லிசையழிந்த காலம்
- தரிசன மாயை.
- `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` யில் பிக்காசோ
- கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”
- காலர் (கழுத்துப்பட்டி)
- தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
- கவிதானுபவம்-1 தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி
- தேடிச் சேர்த்த செல்வம் : இறையடியானின் கருநாடக நாட்டுப்புற இயல்
- கவிஞர் மதுபாலிகாவின் ” வாழ்க்கையின் கவிதைகள் “
- நூலெனப்படுவது…!
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
- அக்டோபர் குறுக்கெழுத்து போட்டி விடைகள்
- பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் (1473-1543)
- தீக்குச்சிகள்.
- வேத வனம் விருட்சம்- 57
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >>
- முள்பாதை 3 (தொடர்நாவல் மூன்றாம் அத்தியாயம்)
- தனிமை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 58 << உன் கை வல்லமை >>
- மழை பொதுவுடமையின் கருவி
- விமான நிலைய வரவேற்பொன்றில்…
- இன்னா செய்தாரை ஒறுத்தல்
- காங்கிரஸ் போடும் கணக்கு
- பொறியில் சிக்கும் எலிகள்
- இரண்டு நல்ல ஆரம்பங்கள்
- இஸ்லாமினால் ஆய பயனென் கொல்……
- வீடு – மனித நகர்வின் அடையாளம்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- மிஸ்டர் மாறார்
- மீண்டும் புதியகந்தபுராணம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -5