தூரமொன்றைத் தேடித்தேடி..

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

சாமிசுரேஸ் , சுவிஸ்


சுகம் கேட்கும் உன் கேள்விக்கு
நீண்ட பதில் தர வேண்டும் நண்பா.

முட்கள் பதியாத
விருப்புக்களை விரும்பும்
ஒரு சிறுகுழந்தையாய் மனம் துடிக்கிறது.

ஐரோப்பிய வீதிகளில்
ஒவ்வொரு துணிக்கைகளிலும் நனைகிறேன்
காலடிகளில் சரசரக்கிறது மணல்.

நீ காணும் காட்சிகளின் நிற மூர்த்தங்களின்
மொழிபெயர்ப்புக்களை பகுப்பது
சுலபமல்லவே நண்பா.

ஒரு மெல்லிய புன்னகையின் வலியைச் சொல்ல
வார்த்தைகள் இல்லாமல் போயிற்றே.

இடைவெளி நோக்கிய விழி
வரவேற்க மனமின்றிச் சிதைய
மௌனங்களை மீறி நெருக்கும் து}றலில்
மெல்ல நனைகிறது மனம்.

பற்றின்றித் தொலைந்த இரவுகளைப் பற்றி
எனக்கென்ன கவலை.

என் மையப்புள்ளியின் நகர்வு
சில கணங்களைத் தொலைத்த தொடுகையாய்
சீரற்ற பாதையில் செல்கிறது.

அழகைப் பருகிப் பின் து}க்கியெறிந்து
அந்தரத்தில் தொங்கும் அக்கினியாய் நான்
குளிர்கிறேன்.

நண்பா நீ வெயிலில் சுடுபவன்
ஐம்பூதங்களும் ஒன்று சேர்ந்து
மெய்யுள் தாக்கும் குளிர்ப்பறவை நான்.
இங்கு சிரிமொழிபேச எழுத்துக்களில்லை கேள்.

சிறிது சிறிதாய் வாழ்க்கைத் துளிகளைச் சேகரித்தபடி
வினாடி விழுங்கும் புழுக்களாய்
முகவெளிச்சத்துடன் உலவுகிறோம்

சில நேரங்களில் என் சுபாவத்தை மீறி
மௌனமாயிருக்கவே விரும்புகிறேன்
காற்றை மொழியாக்கிச் சுவைக்கிறேன்

நண்ப
நீ பதில் தரவேண்டாம்
வலியில்லாச் சிரிப்புக்கொடுபோதும்
மீதமுள்ள மணித்துளிகள் மரணிக்காமலிருக்கும்
25.02.2007


sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்,சுவிஸ்

சாமிசுரேஸ்,சுவிஸ்