டாக்டர் என் சுவாமிநாதன்
====
விமானம் பறப்பதே தெரியாமல் உள்ளே அமைதியாக இருந்தது. மேரி தன் எதிரில்
மேசையில் கணக்குப் போட்டுகொண்டு கருமமே கண்ணாயிருந்தாள். விமான பணிப்பெண்
அருகே வந்து ‘என்ன வேண்டும் ‘ என்று கேட்க ‘ஷாம்பெய்ன் ‘ என்ற குரல் மேரியின்
அருகிலிருந்த இளைஞனிடமிருந்து வந்தது. அப்பொழுதுதான் மேரி அவனை உன்னிப்பாக
கவனித்தாள். வாட்ட சாட்டமான உடல்வாகு, நேர்த்தியான உடை, லட்சணமான முகம்.
‘ம்ம் இவனை யார் விட்டுவைத்திருப்பார்கள். இவனுக்கு ஒரு காதலி இருப்பாள், ஏன்
மனைவியே கூட இருக்கலாம் ‘ என்று நினைத்து ஒரு பெருமூச்சு விட்டாள்.
அவன் அவளை நோக்கி ஒரு புன்னகை பூத்தான்.
‘நான் மைக்கேல் மார்ட்டின் ‘
‘நான் மேரி மான்செஸ்டர் ‘
‘நீங்கள் ந்யூயார்க் போகிறீர்களா ? ‘ என்ற அவன் கேள்வி அபத்தமாக அவளுக்கு பட்டது.
பின்னே இதில் சிகாகோவுக்கா போவார்கள். தன்னுடன் பேசவிரும்பியே அவன் கேட்கிறான்
என்று பட்டதும், ‘ம். நான்ஸ்டாப் ப்லைட் கெடக்கில. நீங்க எங்க போறீங்க ? ‘ என்றாள்.
‘நான் ஹூஸ்டனில் இறங்கிவிடுவேன். இன்னொரு பிளேன் பிடித்து ஐயோவா வரை
போகணும். நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் ? ‘
அவள் பெருமையுடன் ‘மெர்ஜர் ஸ்பெஷலிஸ்ட் ‘ என்றாள். அவனுக்கு இது புரிந்திருக்குமோ என்ற
ஐயத்தில் ‘இரண்டு கம்பெனிகள் இணையவிரும்பினால் அதை நடத்தி வைக்கிற வேலை ‘
என்ற விளக்கம் கொடுத்தாள்.
அவன் ‘ஓகோ ‘ என்றான்.
இது எவ்வளவு பெரிய வேலை. எவ்வளவு சிக்கல். அவன் ஓகோ என்று தள்ளிவிட்டான்.
முட்டாள். ஒரு பெண் இவ்வளவு பெரிய பொறுப்புள்ள பதவியில் இருக்கிறேன். இவனுக்கு
ஒரு இழவும் புரியவில்லை.
பணிப்பெண் இரு கிண்ணங்களில் ஷாம்பெய்ன் கொண்டு வந்து மேசையில் வைத்தாள்.
‘ஷாம்பெய்ன் சாப்பிடுங்கள் ‘ என்று அவன் கிண்ணத்தை நகர்த்த அவள் மறுத்தாள்.
தன்னைப் பற்றி தன் திறமையை அவன் தெரிந்து கொள்ளாததற்கு தான் சரியாக
விளாக்காததும் ஒரு காரணமோ என்று தோன்றியது.
‘நான் என் கம்பெனியில் ஒரு சீனியர் டைரக்டர். இரண்டு கம்பெனிகளை இணைப்பது
சாதாரண விசயமல்ல. இரண்டின் சொத்து, கடன், நிர்வாக அமைப்பு, திறன், உற்பத்தி,
பங்கு விலை, எதிர்கால வளர்ச்சி எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து மதிப்பு போட்டு
விலை நிர்ணயித்து பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இரண்டு
கம்பெனி ஊழியர்களும் அறியாமல் நடத்தி முடிக்கிற காரியம். சேர்ந்தபிறகு ஊழியர்
பதவி நீக்கம், பதவி உயர்வு, உற்பத்தி அதிகரிப்பு, புதிய விளம்பர உத்திகள், பங்குதாரர்
மகிழ்ச்சி… ‘
அவள் சொல்லி முடிக்குமுன் ‘பெரிய வேலைதான் ‘ என்றான்.
‘ ஆமாம். எல்லாருக்கும் கிடைக்காது. எனக்கு பொருளாதாரம், கணிதம் இரண்டிலும்
மாஸ்டர்ஸ் டிகிரி உண்டு ‘ என்றாள்.
‘பெரிய படிப்புதான் ‘ என்றான்.
இவ்வளவுதான் இவனுக்கு சொல்ல வருமா ? முட்டாள். உண்மையில் வயித்தெரிச்சலாயிருக்கும்
ஒரு பெண் மேல்படிப்பு படித்திருக்கிறாள், பெரிய பதவியில் இருக்கிறாள் என்றாள் இந்த
ஆண்கள் புழுங்கி சாவார்கள். இவர்களுக்கு பெண்கள் சமைத்துப் போடுகிறவளாக,
பள்ளிப்படிப்பு படித்து எளிய வேலையில் இருப்பவளாக இருக்க வேண்டும். நான் மட்டும்
டைப்பிஸ்டாக இருக்கிறேன் என்று சொன்னால் ‘நீ எத்தனை வார்த்தை அடிப்பாய், ஷார்ட்
ஹேண்டு தெரியுமா ‘, என்று ஆவலாக கேள்வி கேட்டிருப்பான்.
‘ஷாம்பெய்ன் சில்லென்று இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள் ‘ என்றான் அவன்.
அவளுக்கு பத்திக் கொண்டு வந்தது கோபம். ஷாம்பெய்னை எடுத்து அவன் மூஞ்சியில்
வீசினாலென்ன ? ஒரு கணம் அவளுக்கு பாவமாகவும் இருந்தது. எனக்கு கொடுத்துதான்
குடிக்க வேண்டும் என்று அவனுக்கு தலைவிதியில்லை. அன்பாகத்தானே கேட்கிறான்.
வாய் வேண்டாமென்றாலும் கை தானாக எடுத்து ஒரு வாய் குடித்தாள். அந்த சில்லிப்பு
நன்றாகவே இருந்தது. இவனைப்பற்றி கேட்க மறந்து விட்டோமே என்று தோன்றியது.
‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் ? ‘
‘நான் ஒரு தூதன். மெசன்ஜர். ‘ என்றான் சுருக்கமாக.
‘என்ன மாதிரி தூதன் ? ராஜாக்கள் சண்டை, சமாதானம் கேட்டு அனுப்புவது போலவா ?
அவளுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டாள்.
அவன் பொறுமையாக ‘துக்க செய்தி சொல்லுவது என் வேலை ‘ என்றான்.
‘என்னது துக்க செய்தியா ‘
‘ம். ஒருவர் காலமாகிவிட்டால் அவர்களது நெருங்கிய உறவினரிடம் போய் செய்தி
சொல்லணும். எங்க ஆபீசில எங்க போகணும்னு சொல்லுவாங்க ‘
‘இதுக்குனு ஒரு ஆள் போய் சொல்லணுமா ? அதுவும் இந்தக் காலத்துல. தபால், தந்தி,
டெலிபோன் இப்படி எவ்வளவு வசதி இருக்கு. நேரே போய் சொல்றது பேத்தல் இல்லியா ? ‘
‘நேரில் போய் சொல்வது ஒரு நாகரீகம் ‘
‘நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் ? ‘
அவன் நெளிந்தான். ‘சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றுமில்லை. அதுவும் உங்களோடு
ஒப்பிடும் வகையில் ‘
அவளுக்கு மனம் குளிர்ந்தது. பயலுக்கு தாழ்வு மனப்பான்மை. ஹைஸ்கூல தாண்டிருக்க
மாட்டான்.
‘என்ன சம்பளம் கிடைக்கும்/ ‘
‘சொற்ப பணந்தான் ‘
‘எனக்கு சம்பளம், மாசம் இருபதாயிரம் டாலர். ஒவ்வொரு மெர்ஜருக்கும் தனியா
ஒரு பெரிய போனஸ் வேற ‘
‘நல்லது ‘ என்றான் அவன்.
அவளுக்கே பாவமாகிவிட்டது. இவனுக்கு மிஞ்சிபோனால் வருசத்துக்கே இருவதாயிரம் டாலருக்கு மேல
இருக்காது. தன் சம்பளத்தை சொல்லி இவன் வயித்தெரிச்சலை ஏன் அதிகப் படுத்த
வேண்டும் ?
வாய்க்கொழுப்பு விடவில்லை. அவனைத் தேற்றுவது போல ‘ம்.ம்.படிப்புக்கு தகுந்த வேலைதானே
கிடைக்கும் ? நீங்கள் முயற்சி செய்தால் மாலைக் கல்லூரியில் சேர்ந்து படித்து நல்ல வேலை
தேடிக் கொள்ளலாம் ‘
அவன் இதை ரசிக்கவில்லை.
சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.
பிறகு அவளைப் பார்த்தான்.
‘மிஸ். நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள். நல்ல வேலை, மோசமான
வேலை என்பதில்லை. எல்லாம் வேலைதான். எல்லாம் அவசியம் தான். இந்த விமானத்தை
ஓட்டுகிற விமானிக்கு பெரிய சம்பளம். ஷாம்பெய்ன் கொடுத்த பெண்ணுக்கு குறைந்த
சம்பளம். நமக்கு விமானியும் வேண்டும். பணிப்பெண்ணும் வேண்டும். எல்லாரும் விமானி
வேலைக்கு படித்து இங்கே வந்துவிட்டால் விமானிக்கு குறைந்த சம்பளமும், பணிப்பெண்
வேலைக்கு ஆள் கிடைக்காமல் அதிகப் பணமும் கிடைக்கும். சம்பளம் அதிகமா குறைவா
என்பதல்ல. சின்ன பதவியா பெரிய பதவியா என்பதல்ல. உனக்கு கொடுத்த வேலையை
நீ ஒழுங்காக செய்கிறாயா ? கிடைத்த ஊதியத்தில் மகிழ்வாக இருக்கிறாயா ? அதுதான்
முக்கியம். இப்ப நாம் இருவரும் இந்த ஷாம்பெய்ன் குடிக்கிறோம். எனக்கு இது
குறைவாகவும் உங்களுக்கு அதிகமாகவும் ருசிக்கிறதா ? நீங்கள் கம்பெனிகளை
சேர்த்து வைக்க வேண்டும் . நான் செய்திகளை நேரடியாக சொல்ல வேண்டும் ரெண்டும்
வேலைதான். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹூஸ்டனில் இந்த விமானம் நிற்கும். துப்புறவு
பணியாளர்கள் உள்ளே ஏறி கழிப்பறயை சுத்தம் செய்வார்கள். அவர்கள் சொல்ப சம்பளத்துக்கு
வேலை செய்பவர்கள். படிப்பு இல்லாதவர்கள். சில பேர் விசா கூட இல்லாமல் மெக்சிகோவிலிருந்து திருட்டு
தனமாய் கூட வந்திருக்கலாம். அவர்களுக்கு ரெண்டு மாஸ்டர்ஸ் டிகிரி இல்லை. உங்களைப்
போன்ற இரண்டு டிகிரிக்காரர்களும் இதைச் செய்ய முன் வரமாட்டார்கள். கழிப்பறை சுத்தமாகாவிட்டால் இந்த
பிளேன் நாறிவிடும். அதுக்கும் ஒரு ஆள் தேவைப்படுகிறதல்லவா ‘
இரண்டு மடக்கு ஷாம்பெய்னை குடித்தான்.
அவள் தயக்கத்துடன் ‘உங்கள் மனத்தை நான் புண்படுத்தி விடவில்லையே ‘ என்றாள்.
‘இல்லவே இல்லை. மாறாக உங்களைப் போன்ற ரொம்பப் படித்தவருடன் பேச எனக்கு வாய்ப்பு
கிடைத்தது என் அதிர்ஷ்டம் ‘
அவளுக்கு அவன் வேலையில் தான் அக்கறை காட்ட வேண்டும் என்று தோன்றியது.
‘நீங்கள் ஹூஸ்டனிலிருந்து அயோவாவுக்கு எதற்கு போகிறீர்கள் ‘
‘அங்கே ஒரு பண்ணையில் இருக்கும் பெண்மணியின் கணவன் ஒரு கார்விபத்தில்
செத்துவிட்டான். அவளிடம் போய் நான் இதை சொல்ல வேண்டும் ‘
‘முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் இதைபோய் சொல்ல உங்களுக்கு கூச்சமாக
இருக்காதா ? அவள் அழுது துடிப்பதை ரசிப்பீர்களா ? இது சாடிசமில்லயா ? ‘
‘சொல்லும்போது எனக்கு கஷ்டம்தான். இது என் வேலை நான் சொல்லித்தான் ஆக
வேண்டும். டாக்டர் நோயாளியொடு பேசிக்கொண்டே சட்டென்று
கட்டியை அமுக்கி சீழை எடுப்பதில்லையா ? அது சாடிசமா. டிரீட்மெண்டு. ‘
‘அவர்கள் எப்படி இதை எடுத்துக் கொள்வார்கள் ‘
‘அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நான் முன்பின் தெரியாதவன். என்னைக் கட்டிகொண்டு
அழமுடியாது. செய்தி கொண்டுவந்த என்னை ஒரு விருந்தாளியாய் பார்ப்பார்கள். டா வேண்டுமா
என்பார்கள். நானும் டா குடித்து விட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்து விடுவேன்..
அதற்குள் அந்த அதிர்ச்சி அவர்களுக்குள் இறங்கிவிடும். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
வந்துவிடும் ‘
சீ இப்படியும் ஒரு வேலை.
ஆனால் என் வேலையிலும் இப்படி ஒரு இக்கட்டு உண்டே.
‘உன் கம்பெனியின் பங்கு மதிப்பு நீ நினைக்கிறால்போல் இருபத்தி எட்டு டாலர்
இல்லை. இரண்டேகால் டாலர்தான் என்று முதலாளிகளிடம் சொல்ல வேண்டியிருக்கிறதல்லவா ?
அதற்கு சப்போர்ட்டாக கணக்கை காட்டினால் மரியாதையாக மூஞ்சி வெளிறி ஒப்புக்
கொள்கிறார்கள் அல்லவா ?
அவள் அவனைப் பார்த்தாள். அவன் வசீகரமாகவே இருந்தான். அவளுக்கு சட்டென்று ஒன்று
புலப்பட்டது. தனக்கு ஒரு காதலன், கணவன் கிடைக்காததற்கு காரணம் தானே என்று
தோன்றியது. எந்த ஆண் நெருங்கினாலும் நீ என்ன படித்திருக்கிறாய், என்ன சம்பாதிக்கிறாய்
என்னைப்போல நீயும் பெரிய பதவியில் இருக்கிறாயா என்று பெருமை பேசியே துரத்தி விட்டேன்.
கிழங்கள் தான் ஏதாவது கம்பெனி மெர்ஜருக்கு பயன்படுவாள் என்று ஜொள்ளுவிடுகிறார்கள்.
இளைஞர்கள் என்னைப் பார்த்து இரண்டு நிமிசத்தில் விலகி விடுகிறார்கள். காதலுக்கு
படிப்பா முக்கியம் ? பணமா முக்கியம் ? காதலன் தன்னிடம் அன்பாக இருந்தால் போதுமே ?
ஏன் இவனையே காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன எனக்கு குறைந்து போய்விடும் ?
இன்னும் ஐந்து நிமிசத்தில் விமானம் ஹூஸ்டனில் இறங்கிவிடும். அப்புறம் இவனை
எப்போது பார்க்க முடியுமோ ? கல்யாணம் பண்ணிக்கோ என்று நேரடியாக கேட்டால்
அது அசிங்கமாக டிராமா மாதிரி ஆய்விடும். நாசூக்காக சொல்லிவிடலாம்…
‘மைக்கேல், நீங்கள் எனக்கு மனமகிழ்ச்சி கொடுத்தீர்கள். நான் உங்களை அடிக்கடி
சந்திக்க விரும்புகிறேன். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால் திருமணத்திலும்
முடியலாம். இந்தாருங்கள். என் விசிட்டிங் கார்டு. நான் ந்யூயார்க் வேலையை முடித்துக்
கொண்டு அப்படியே ராச்செஸ்டர் போய் என் தாயுடன் தாங்க்ஸ்கிவிங் கொண்டாடிவிட்டு
லாஸ் ஏஞ்சலஸ் திரும்புவேன். வந்தபின் என்னை போனில் அழையுங்கள். உங்கள் விசிட்டிங்
கார்டு இருக்கிறதா ? ‘ ‘
அவன் ஆர்வத்தோடு வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான்.
‘மேரி. எனக்கு கார்டு இல்லை. ஒரு பேப்பரில் எழுதித் தருகிறேன் ‘ என்று சொல்லி தேடினான்.
கடைசியில் ஷாம்பெய்ன் கீழ் இருந்த பேப்பர் நாப்கினில் சரசரவென எழுதினான்.
கண்களில் காதலோடு அவளைப் பார்த்தான்.
‘மேரி. உன்னைப்போல ஒரு பெண் என்னிடம் அன்பாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
இந்த நாப்கினில் என் பெயர் விலாச விசயம் இருக்கிறது. இதை உங்கள் கையில் கொடுத்தால்
வாயைத்துடைத்துக் கொண்டு அருகாமையில் உள்ள குப்பைத்தொட்டியில் மறந்து போய் போட்டு
விடுவீர்கள். அதனால் ஒரு உறையில் போட்டு தருகிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் போனதும் இதை
உங்கள் டயரியில் குறித்துக் கொள்ளுங்கள் ‘ என்று சொல்லி
அதை ஒரு உறையில் இட்டான். அவளிடம் கொடுத்தான்.
மேரி அதை கைப்பையில் வைத்தாள்.
‘ ‘ஹூஸ்டனில் இறங்கப்போகிறோம். இங்கு வானம் தெளிவாக இருக்கிறது. உஷ்ணம்
எண்பது டிகிரி பாரன்ஹீட். காற்றின் வேகம் மணிக்கு பத்து மைல். பயணிகள் சீட்
பெட்டை இறுக்கிக் கொள்ளுங்கள். ஹூஸ்டனில் இறங்கும் பயணிகளுக்கு
எங்கள் விமானைத்தில் பயணம் செய்ததற்கு நன்றி. ந்யூயார்க் போகும் பயணிகள்
கீழே இறங்கினால் பதினைந்து நிமிசத்தில் திரும்பிவிடவும் ‘ என்ற அறிக்கை வந்தது.
ஹூஸ்டனில் இறங்கியதும் அவளிடம் அவன் விடை பெற்றான். அவளும் பாத்ரூம் போய் முகம் கழுவி
மீண்டும் விமானத்திலேறி பயணத்தைத் தொடர்ந்தாள்.
விமானம் விண்ணிலேறி வேகம் சரியாகிய பிறகு பணிப்பெண் பானங்களை கொடுக்கலானாள்.
மேரியிடம் வந்தவுடன் ‘முன்பு போல் மறுபடியும் ஷாம்பெய்ன் தானே ‘ என்றாள்.
மேரி மெளனமாய் தலையசைக்க அவள் ஒரு கோப்பையை வைத்து ஷாம்பெய்னை ஊற்றினாள்.
ஷாம்பெய்ன் வாய்க்கு இதமாக இருந்தது.
மேரிக்கு அந்த இளைஞன் நினைவு வந்தது.
அவன் கொடுத்த உறையை எடுத்தாள். எதற்கு
ஊருக்குப் போனபின் டயரியில் குறிக்க வேண்டும். இப்பவே எழுதிக்கொண்டால் ? கிழித்தாள்.
நாப்கினில் எழுதியிருந்ததை படித்தாள் ‘அன்புள்ள மேரி. என் மனம் உன்னைப் பார்த்து சற்று
சலனப்பட்டது உண்மைதான். ஆனால் பழகவோ உன்னை திருமணம் செய்து கொள்ளவோ
முடியாது. என் வேலையின் விதிகளை மீறி உனக்கு ஒன்று சொல்ல வேண்டியுள்ளது.
நான் அயோவாவிலிருந்து அடுத்த வேலையாக ராச்செஸ்டர் போய் உன் தாயிடம் நீ
விமான விபத்தில் இறந்ததைத் தெரிவிக்க வேண்டும். உன் அன்பிற்கு என் நன்றி. இப்படிக்கு
மைக்கேல் மார்ட்டின். ‘
விமானம் சற்று நிலை குலைந்து குலுங்கியது. சேம்பெய்ன் கீழே கொட்டியது. மேரி
கலவரத்துடன் சன்னலூடே பார்த்தாள். விமானத்தில் இறக்கையில் கரும்புகையூடே
செந்தீ நாக்குகள் பரவிக்கொண்டிருந்தன.
சில வினாடிகளில் விமானம் வெடித்து சிதறியது.
====
(This story is an adaptation of the science fiction story called ‘the messenger ‘ by Jacklyn Butler (1992)
nswaminathan@socal.rr.com
- கடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்
- மக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை
- புதுவை ஞானத்தின் கட்டுரை : நீதாம், பாரம்பரிய அறிவு – ஒரு குறிப்பு
- இருளிலிருந்து பேரிருளுக்கு
- மெய்மையின் மயக்கம்-22
- எழுத்து வன்முறை
- அமெரிக்காவில் அல்பங்கள் ஆயிரம்…
- ஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!
- நாணயமா ? நமக்கா ? – நான் சொல்வதெல்லாம் நம்பிடும் உடன்பிறப்பே பொங்கியெழு
- திலகபாமாவின் ‘நனைந்த நதி ‘ சிறுகதை தொகுதி வெளியீடு- ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி 31.10.04, ஞாயிறு மாலை 5 மணி
- கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்!
- கடிதம் அக்டோபர் 21,2004
- வெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்
- கடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு
- கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை
- காலச்சுவடு – மாத இதழாகிறது
- இருந்திருக்கலாம்..ம்ம்
- பெரியபுராணம் – 14 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- சாலை
- கவிதை
- அழியாத குற்றங்கள்
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் – ஓர் பார்வை
- ஓவியப் பக்கம்- மூன்று : பிலிப் கஸ்டன் (Philip Guston) – இனவாதத்தின் எதிர்ப்புக் குரல்
- ‘விண் ‘-தொலைக்காட்சிக் கவிதை – 2 எங்கள் கிராமத்து ஞானபீடம்
- சுதந்திரம் என்றால் என்ன ?
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42
- நெருப்புக் கோழி
- தூதன்
- வாரபலன்- அக்டோபர் 21,2004 – லதா நாயரின் வி ஐ பி படலம், யானைக் கடன் படலம், அரபிப் பொன் படலம்
- கலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்
- தியாகத் திருவுரு வீர சாவர்க்கர்
- கீதாஞ்சலி (1) (உடையும் பாண்டம்) மூலம் : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- சாலை
- கவிதை
- கவிக்கட்டு 32-வாழ்க்கை வியாபாரம்
- அது மறக்க முடியாத துயரம்..
- அய்யோ…. அய்யோ….
- அஃறிணைகள்
- ஒத்திகை
- துடுப்புகள்
- அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு
- சரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)
- உரத்த சிந்தனைகள்- 4
- அ.முத்துலிங்கம் பரம்பரை -5
- தந்தை தாயான கதை