தும்பைப்பூ மேனியன்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)



எங்கள் ஊரில்
எங்கள் உறவில்
எனக்குத்தெரிந்து
எத்தனையோபேர் இன்றில்லை

ஆசை அம்மாயியும்
அவர்களுள் ஒருவர்

ஒருகணம்
எல்லோரையும் நினைக்கையில்
எப்படி அந்த
வெள்ளைநாயும்
நினைவுக்கு வருகிறது!

மாமா
வளர்த்தநாய் அது

இப்போது
மாமாவும் இல்லை
வெள்ளைநாயும் இல்லை

அப்படியொரு வெள்ளையில்
அது இருந்தது

எவ்வளவு அர்ப்பணிப்பு
அதற்கு இருந்தது!

எவ்வளவு கண்ணியத்தை
அது கடைபிடித்தது!

எப்படிப்புரிந்துகொண்டு
நாகரீகம் காத்தது!

அதற்காகவும்
நாங்கள்
நான்
எங்களுக்காகவும் அது
அழத்தவறியதில்லை

அதன்
நாசியோர சிவப்பு
ரோஜா இதழைத்தான்
சொல்லும்

அழகாகவும் இருந்து
அழகாகவும் வாழ்ந்து மறைந்த
அந்தத்தும்பைப்பூ மேனியனை
இப்போது
என் நினவுக்குக்கொண்டுவந்தது
வெறும்மேனியன்
வைக்கம் பஷீரின்
ஒரு விசாரணைதான்


pichinikkaduelango52@gmail.com

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ