ம.ந.ராமசாமி
—-
மறுநாள் பிற்பகல் மூன்றுமணி அளவில் பஸ்ஸர் ஒலித்தது.
மதிய உணவுக்குப் பிறகு சிறிது லேசாகக் கண்களை மூடி இமைகளின் தழுவலின் சுகத்தை அனுபவித்துக் கொண்டு பகல் கனவுகளுடன் உறக்கத்தில் மிதப்பது என் வழக்கம். பஸ்ஸர் ஒலித்தபோது எழுந்து முகங்கழுவி வந்து கொண்டிருந்தேன்.
‘வாங்க ராமகிருஷ்ணன் ‘
வந்தான்.
‘நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் ‘
நடுக்கூடத்தில் நின்று சுற்றி பார்வையை ஓட்டினான். ‘வீட்டை அழகா வச்சிருக்கீங்க சார்! ‘
‘அப்டியா ? ‘
‘வேற யாரு உங்ககூட இருக்கா ? ‘
‘என் மனைவி இருக்கிறாள். உட்காருங்க. ‘
உட்கார்ந்தான்.
‘ராத்திரி முழிச்சிக்கிட்டே படுத்திருந்தேன் சார். பேய் பிசாசு இல்லேன்னு நீங்க சொன்னீங்களா… அப்டி ஒருவேளை இருக்காதோன்னு எண்ணிப் பார்த்தேன். இல்லைன்னு சொல்லிப் பார்த்துக் கொண்டேன். ‘
‘கனவுலே ராத்திரி பிசாசும் பேயும் வந்து பயப்படுத்தித்தாக்கும்! ‘
‘இல்லே சார். அப்டிக் கனவு ஒண்ணும் வரல்ல. நினைச்சிப் பார்த்ததுல நீங்க சொல்றதுல உண்மை இருக்குன்னு பட்டது. எதோ புதுசா ஒண்ணைக் கத்துண்ட மாதிரி மனசு சந்தோஷப் பட்டது… நிம்மதியாத் துாங்கினேன்! ‘
எனக்கு சந்தோஷமாய் இருந்தது.
‘அப்ப இன்னிக்கு ராத்திரி ஓயாமாரி கிட்ட காரில் இருந்து இறக்கி விட்டால் பயப்படாமல் நடந்து மன்னார்புரம் வந்து சேர்ந்துடுவீங்க. இல்லையா ? ‘
‘ஐயோ அப்டில்லாம் செஞ்சிடாதீங்க சார். பயம் கொஞ்ச கொஞ்சமாத்தானே போகணும்! ‘
‘அது சரி ‘ என்றேன் நான். நாற்காலியில் இதமாய்ச் சாய்ந்து கொண்டேன்.
‘ராமகிருஷ்ணன், நீங்க கடவுளை நம்புகிறீர்கள் இல்லையா ? ‘
‘ஆமா சார்! ஏன் நீங்க கடவுளை நம்பல்லியா ? ‘
‘இல்லை ‘
‘பேய் பிசாசை நம்பறதும் இல்லை. கடவுளை நம்பறதும் இல்லையா ? ‘
‘இல்லை. மனுஷன் ரெண்டைப் படைச்சிருக்கான். அதாவது கற்பனை பண்ணி இருக்கிறான். ஒண்ணு நல்லவைகளைச் செய்யும் கடவுள். இன்னொண்ணு தீங்கே செய்யும் பேய் பிசாசுகள்… ‘
‘… … … ‘
‘இந்த ரெண்டையும் நான் நம்பறது இல்லே. ஆனால் நல்லது செய்யும் மனிதனிடம் தெய்விக அம்சம் இருக்குனு நம்பறேன். அதேபோல கெடுதல் பண்ணும் மனிதனிடம் பேய் பிசாசு சாத்தான் இவற்றின் குணம் இருக்குனு நம்பறேன்… ‘
ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருந்தான்-
‘நேராகச் சாய்ந்து நல்லா உக்காந்துக்கங்க ராமகிருஷ்ணன். எனக்கு அநாவசியமான மரியாதையெல்லாம் குடுக்க வேணாம். உங்களை மாதிரி சாதாரண மனுஷன் நான். ஏதோ உங்களைவிட கொஞ்ச்சம் அதிகம் படித்திருப்பேன். நீங்க கேட்டால் சொல்வேன். உங்க எண்ணமும் கருத்தும், என் எண்ணத்துக்கும் கருத்துக்கும் ஒத்துப் போறதான்னு பார்ப்பேன். இல்லேன்னா என் கருத்தை விளக்கிச் சொல்வேன். உங்களுக்கு ஒரு கருத்து இருந்து விளக்கினீங்கன்னா கேட்டுக் கொள்வேன். உண்மையா இருந்தால் எடுத்துப்பேன். இல்லேனா விவாதிப்பேன்… என்னை உங்க நண்பன்னு நினைச்சிக்கங்க. ‘
‘சரி சார்! ‘
சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் —
‘உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ராமகிருஷ்ணன். அடிக்கடி வாங்க. ‘
‘சரி சார்! ‘
‘சாப்ட்டேளா ? ‘
‘ஆச்சு ‘
‘நான் இப்ப காபி சாப்பிடற வழக்கம். என்கூட நீங்களும் காபி சாப்பிடலாமோல்யோ ? ‘
‘சாப்பிடறேன் சார்! ‘
‘ஏது ஆபீஸ் விட்டு சீக்கிரமே கிளம்பி வந்திட்டாங்களே. ‘
‘ஆமா சார். பெர்மிஷன் வாங்கிண்டு வந்தேன். உங்களைப் பார்த்துப் பேசணும்னு இருந்தது… ‘
‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர். இல்லையா ? ‘
‘சார் ? ‘
‘அவ்வையார் பாடல் ஒண்ணு ஞாபகம் வந்தது. ‘
‘நான் பள்ளிக்கூடத்திலேயே அதெல்லாம் மறந்துட்டேன்! ‘
‘அது உங்க தப்பு இல்லே. வாத்திமார் தப்பு! ‘
—-
என்னைப் பார்க்கவும் பேசவும் இவன் வந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி.
என் நாத்திகக் கொள்கைகளைக் கேட்டுக்கொள்ளும் அப்பாவி ஒருத்தன் கிடைத்திருக்கிறான், என் வலையில் விழுந்து விட்டான், என்பதால் அல்ல. இயல்பாக நாஸ்திகன் மனிதாபிமானி. பிறவி மேதை, பிறவி கெட்டிக்காரத்தனம் என்பதுபோல நாஸ்திக எண்ணமும் பிறவி குணம்.
ஆனால் அது பிறவியில் இருந்தே பரிணமிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வயது வந்து, வளரும்போது, அறிவு வளர்ச்சி சமயம் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் எந்த வயதிலும் நாஸ்திகக் கருத்து ஒருவரின் உள்ளத்தில் உறுதியாக நிலையாகலாம்.
மகான்கள் இறைவனைப் பற்றியே சதா எண்ணிக் கொண்டிருப்பதைப் போல, நாஸ்திகனும் இல்லாத இறைவனைப் பற்றி சதா சிந்திக்கிறான்.
ஆஸ்திக எண்ணம் கொண்ட லட்சக் கணக்கான ஜனங்கள் நடுவில் ஒரு நாஸ்திகன் இருப்பது, முரண்படுவது, இழைந்து வாழ்வது அவன் கொள்கைப் பிடிப்பைக் காட்டுகிறது.
ஆஸ்திகனை நாஸ்திகனாக்கி விட யாராலும் முடியாது. ஹீரோ ஒர்ஷிப் – தனிநபர் துதி, காரணமாக சிலர் நாஸ்திகர்களாக வேஷம் போடலாம். ஆஸ்திகர்கள் இறைவனுக்குக் கொடுக்கும் அந்தஸ்தையும் மதிப்பையும் மரியாதையையும் இந்தப் பகல்வேஷ நாஸ்திகர்கள் தாங்கள் துதிபாடும் தனிநபர்களுக்குத் தருகிறார்கள்…
அந்த வகையில் ஆஸ்திகர்களுக்கும் இந்த நாஸ்திகர்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை!
மேலும் நாஸ்திகர்கள் அனைவரும் சுத்த சுயம்பிரகாச முழுமையான நுாறு சதவீத நாஸ்திகர்கள் அல்லர். இயற்கையின் வக்கிரப்போக்கின் விளையாட்டாக நல்லதோ கெட்டதோ விளையும்போது, சாதாரண இயல்பை மீறிய ஒரு வெளி சக்தி செயல்படுகிறதோ என்ற ஐயம் நாஸ்திகனுக்கும் தோன்றுகிறது!
மனிதனின் சுபாவமான பலவீனம் அது!
அதேபோல ஆஸ்திகர்களுக்கும் இறைவன் என்று ஒன்று இல்லையோ… அதனால்தான் இத்தனை அக்கிரமங்களும் நடந்து, அநீதி இழைக்கப் படுகிறதோ என்ற எண்ணம் தோன்றவும் வாய்ப்புள்ளது!
சொல்லப் போனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து ஆடி ஓடி விளையாடிய வளர்ந்த குழந்தை சட்டென்று ஒருநாள்க் காய்ச்சலில் விழுந்து அல்லது மூளை ஜுரம் வந்து மரணம் அடைய நேரும்போது, பெற்றோரில் ஒவ்வொருவரும் அந்த நேரத்தில் நாஸ்திகர்கள் ஆகிறார்கள்.
ஆனால் இவர்கள் விரைவில் தம் நிலைக்குத் திரும்பி ஆஸ்திகர்கள் ஆகிவிடுகின்றனர்!
ராமகிருஷ்ணனை நாஸ்திகனாக மாற்றுவது என் நோக்கம் அல்ல. அவனுக்காக ஐயம் எழுந்து கேள்விகள் மூலம் தன் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முயல்வானாகில், அவனுக்கு உதவ, வழிகாட்ட நான் தயாராக இருக்கிறேன்.
—-
சண்பகம் காபி கொண்டு வந்தாள்.
‘நமஸ்காரம் மாமி ‘ எழுந்து காபியைப் பெற்றுக் கொண்டான் ராமகிருஷ்ணன்.
‘சிரஞ்ஜீவியா இரு. இவரை எங்க பிடிச்சே நீ ?… உக்காரு ‘
‘கதா காலட்சேபத்ல பாத்தேன். பழக்கம் ஆச்சு. சாரோட நட்பு கிடைக்கிறதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்! ‘
‘சரிதான்! ‘ – சண்பகம் சிரித்தாள்.
‘சார் மாதிரி ஒருத்தரை நான் சந்திச்சதே இல்லை! பெரிய மனுஷர். முகஸ்துதியா நினைச்சுக்கப்டாது. உண்மையாச் சொல்றேன். ரொம்பச் சின்னவன் நான். என்னையும் மதிச்சு உக்கார வைச்சுப் பேசறாரே… ‘
— என்னைப் பற்றிய தன் எண்ணத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறான். புரிகிறது.
‘உன் ஜாதகம் இப்ப எப்டியிருக்கு ? ‘
‘ஏம் மாமி ? ‘
‘சனி வக்ரத்ல இருக்கானா பாத்துக்கோ! ‘
‘ஏம்மாமி ? ‘
ராமகிருஷ்ணன் முகத்தில் அச்சம் எழுந்தது. கையில் டபரா டம்ளருடன் சண்பகத்தைப் பார்த்தவாறு பதிலுக்குக் காத்திருந்தான்.
‘கல்யாணம் ஆச்சா. ‘
‘இன்னும் இல்ல மாமி. இப்ப அவசரம் இல்லை… ‘
‘ஏன் ? அண்ணா தங்கை யாராவது குறுக்கே நிக்கறாளா… ‘
‘அதெல்லாமில்லை. அவாளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுத்து. வேலை கொஞ்சம் உசரட்டும்னு பாக்கறேன். அப்றம் பண்ணிப்பமேன்னிருக்கு. ‘
‘சரி சரி. காபியைக் குடி, ஆறிடப் போறது. தனியா இருக்கியா குடும்பத்தோட இருக்கியா ? ‘
‘அப்பா அம்மா கூடத்தான் இருக்கேன். வயசான பாட்டி இருக்காள். ‘
மாமி சற்று நீளவிட்ட புன்னகையுடன் திரும்பவும், ‘எதுக்கும் உன் ஜாதகத்தைத் தெரிஞ்சவாகிட்ட கொடுத்துப் பார்… மாமா கூடப் பழக ஆரம்பிச்சிருக்கியே! ‘ என்றாள்.
‘மாமாவுக்கு ஜாதகம் பேய் பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது… ‘
‘ஒரு பேய் இன்னொரு பேயை நம்புமோ ? ‘ என்றபடி சண்பகம் நகர்ந்தாள்.
‘என்ன சொல்றேள் மாமி. நான் கொஞ்சம் அசடு. எதையும் உடனே சட்னு புரிஞ்சுக்கத் தெரியாது… ‘ என்றான் ராமகிருஷ்ணன் அவள் முதுகைப் பார்க்க.
நான் சொன்னேன் – ‘அவள் கிடக்காள். விடு. மாமி ரொம்பக் குறும்புக்காரி. அவளுக்கு உன்னைப்போல ஜாதகம் சோதிடம் இவற்றில் நம்பிக்கை உண்டு. ‘
‘பேய் பிசாசை நம்பறாங்களா சார் ? ‘
‘அது மட்டுமில்லை! வீட்டு வேலைக்காரி சொல்றதை உடனே நம்புவாள். நான் சொல்றதை நம்ப மாட்டாள்! ‘
‘மாமியை உங்களால மாத்த முடியலியா சார் ? ‘
‘அவள் நம்பற அந்த ஈஸ்வரனால கூட அது முடியாது! ‘
காபியை சாப்பிட்டுவிட்டு காலி டபரா டம்ளருடன் ராமகிருஷ்ணன் எழுந்தான்.
‘அதை இப்டிக் கொடு… ‘
‘நான் அலம்பி வச்சுடறேன் சார். ‘
‘வேணாம். ‘ அவற்றைப் பெற்றுக்கொண்டு சமையல் அறையில் வாஷ்பேசினில் போட்டுவிட்டு வந்தேன்.
‘சார் ‘ என்றான் ராமகிருஷ்ணன்.
‘சொல்லு ‘
‘உண்மைலயே நீங்க பெரிய மனுஷர்! ‘ என்றான் நெகிழ்ந்து. ‘முகஸ்துதிக்காகச் சொல்றேன்னு நினைச்சுக்கப்டாது. என் எச்சில் டம்ளரைக் கையில் வாங்கி எடுத்துண்டு போய் வெச்சிட்டு வந்தேளே! ‘
‘எச்சில் டம்ளரைக் கையில் எடுக்கறவன் எல்லாரும் பெரிய மனுஷன்னா ஹோட்டல்ல டம்ளர் கழுவறவங்க எல்லாரும் என்னைவிடப் பெரிய மனுஷங்க! ராமகிருஷ்ணன், நீங்க பெரிய மனுஷன்னு சொல்றதுனால நான் பெரியவன் ஆயிடப் போறதில்ல. நீங்க குறைச்சுப் பேசிட்டதால நான் சின்ன மனுஷன்னும் இல்ல! ‘
எனக்குத் தெரியாது என்கிறதாக சண்பகம் அவன் அறிய சிரிக்கிறாள். மாட்டினியா, என்கிறாப்போல!
‘என்னை எனக்குத் தெரியும். அனுபவப் பட்டிருக்கேன். பெரிய மனுஷங்க முன்னாலே நானும் சின்ன மனுஷன்தான். மகாத்மா காந்தி, விவேகானந்தர் படங்களுக்கு முன்னால நிற்கிறபோது என்னைச் சின்னவனா உணர்கிறேன்… ‘
ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருந்தான் பொறுமையாய். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவனே ஆரம்பித்தான். ‘சார் நீங்க கடவுளையும் நம்பறது இல்லையா. ‘
‘இல்லை. ‘
‘பின்ன எதைத்தான் நம்பறீங்க ? பேய் பிசாசை நம்பறது இல்லை. அதாவது பேயும் பிசாசும் இருக்குங்கறதை நம்பறது இல்லை. கடவுள் இருக்கிறார் என்கிறதையும் நம்பறது இல்லை. எதையும் நம்பறது இல்லையா ? எல்லாம் பொய்யா ? ‘
‘அப்படியில்லே ராமகிருஷ்ணன். ஏன் உன்னை நம்பறேன். அடுத்த வீட்டுக்காரரை நம்பறேன். எதிர் வீட்டுக்காரரை நம்பறேன். மனித இனத்தை நம்பறேன். இதோ மாமியை நம்பறேன். சாப்பாட்டில் அவள் விஷம் வைக்கவில்லை என்று நம்பித்தான் சாப்பிடறேன். வேலைக்காரியை நம்பறேன். சிலர் என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்… ‘
அவன் என்னையே கவனித்துக் கொண்டிருந்தான்.
‘பழைய பேப்பர்காரன் முள் நகராத தராசை வைத்துக் கொண்டு என்னை ஏமாற்றப் பார்த்தான். கண்டுபிடிச்சு, சும்மா அத்தனையும் எடுத்துண்டு போன்னு சொன்னேன். சாமின்னு கால்ல விழுந்தான். பிழைப்புக்காக தெரியாத்தனம் பண்ணிட்டேன்…னான். அப்றமா கிலோவுக்குப் பத்து பேப்பர்னு குத்து மதிப்பா கணக்கு பார்த்து பணம் வாங்கிக் கொண்டு அனுப்பினேன். ‘
‘… … ‘
‘அவங்க என்னை ஏமாத்தப் பாக்கறாங்கன்னு தெரிஞ்சதும், அதைத் தெரிஞ்சுண்டதா நான் வெளிக் காட்டிக்கறேன். இந்த வீட்ல ஒரு வேலைக்காரி இருக்கிறாள். அவள் ஒருசமயம் மாமி புடவை ஒண்ணை காம்பவுண்டுக்கு வெளியே வீசிவிட்டு, வீட்டுக்குப் போகும்போது யாருக்கும் தெரியாமல் எடுத்துண்டு போனாள்…
நான் மொட்டைமாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அன்றைக்கு சாயங்காலமே ஜவுளிக்கடைக்குப் போய் சாதாரணச் சேலை ஒண்ணை வாங்கிண்டு வந்தேன். புடவையைக் காணோம்னு மாமி தேடியபோது சமாச்சாரத்தை விவரமாச் சொன்னேன். மத்த நாள் வரை காத்திருக்கச் சொன்னேன்…
மறுநாள் வேலைக்காரி வந்தாள். எதுவுமே நடக்காத மாதிரி வீட்டு வேலைல்லாம் செய்தாள். முடிச்சிப் போறசமயம் ஒரு தட்டுல புது சேலையை வெச்சி இந்தா-ன்னு நீட்டினேன்.
திகைச்சுப் போயிட்டா. ஒரு அடி பின்வாங்கி ‘என்னய்யா ? ‘-ன்னா.
பழைய புடவையைத் திருப்பிக் குடுத்துரு. இதை வெச்சிக்கோன்னேன். கண்ல தரதரன்னு கண்ணீர் கொட்டிடுத்து. உடனே வீட்டுக்குப் போயி பழம் புடவையைக் கொண்டு வந்து மாமிட்ட திருப்பிக் கொடுத்து மன்னிப்புகேட்டாள்.
இனிமே இப்டில்லாம் செய்யாதடி இவளே… நான் மறந்துடறேன். ஆனா நீ ஞாபகம் வெச்சிக்கணும்னா மாமி… ‘
அவன் புன்னகைத்தான்.
‘அந்த வேலைக்காரி இப்பவும் இங்கதான் வேலை செய்யறா. இதுலேர்ந்து உனக்கு என்ன தெரியறது. ‘
‘நீங்க பெரிய மனுஷர்னு தெரியறது சார்! ‘
‘அட போப்பா! பழைய புடவை திருடினா புது புடவை கிடைக்கும்னு புரியல்லே ? ‘ என்று சிரித்தபடி மாமியைப் பார்த்தேன்.
‘அப்பவே வெளிய போய் அந்தப் பழைய புடவையை எடுத்துண்டு வந்து, அதையே தட்டுல வெச்சி குடுத்திருக்கலாம்! ‘ என்றாள் சண்பகம் இடக்காக.
/தொ ட ர் கி ற து/
inserted by laharijayashree@rediffmail.co
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கடிதம் பிப்ரவரி 3,2005
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- குருவிகள்
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- துணை – பகுதி 3
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- ஒவ்வாமை