துணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

பாவண்ணன்


மூன்று மாத இடைவெளியில் இந்தத்தொகுதியை இருமுறை படித்தேன். பிறகு ஓய்வுப்பொழுதுகள் வாயக்கும்போதெல்லாம் தோராயமாக ஒரு பக்கத்தைப் புரட்டி அதிலிருந்து சில பக்கங்களை மட்டும் படித்துவிட்டு அசைபோடுவது பழக்கமானது. தொகுப்பாசிரியர் தீண்டிய இலக்கிய வரிகளை என் எண்ணமும் தீண்டும்போது கிட்டிய இன்பத்தை மறக்கவியலாது. அப்போதெல்லாம் ‘மக்கள் உடல்தீண்டல் மெய்க்கின்பம் ‘ என்னும் திருக்குறள் வரி மனத்தில் மிதந்துவரும். அழகான படிமங்களும் உவமைநயங்களும் வாழ்வின் சாரமான கருத்துகளும் பொதிந்த இலக்கிய வரிகள் பிஞ்சுக்குழந்தைகளின் உடல்போல உள்ளன. வாழ்நாளில் பெரும்பொழுதை இவ்வரிகளுடன் வாழ்ந்த வாசகராகத் தென்படுகிறார் எஸ்.சிவக்குமார். மனம் தோய்ந்த சில பாடல்களை மட்டும் தொகுத்து நமக்கு அளித்துள்ளார். ‘அறிதோறு அறியாமை கண்டற்றால் ‘ என்பதைப்போல இத்தொகுதியில் அமிழஅமிழ நாம் அறியாத ஏராளமான வரிகளைக் கண்டறியும் ஏக்கம் உருவாகிறது. ஒரு புதிய வாசகனிடம் இத்தகு ஏக்கத்தை உருவாக்குவதையும் இந்த வரிகளின் திசைகளை நோக்கி ஈர்ப்புடன் அவர்களை அழைத்துச் செல்வதையும் இத்தொகுதியின் வெற்றி என்றே சொல்லவேண்டும்.

சங்க இலக்கியம்முதல் சிற்றிலக்கியம்வரை பல நுாற்றாண்டுகளைக் கடந்த தமிழ்ப்பரப்பிலிருந்து வகைக்கு ஒன்றாகவோ அல்லது கூடுதலாகவோ தேர்ந்தெடுத்து இத்தொகுதியை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார். ஒவ்வொரு பாடலுக்கும் கீழே சுருக்கமான உரையும் புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் தரப்பட்டுள்ளது. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். மன அடுக்கின் பல்வேறு கோணங்கள் இப்பாடல்களில் காணக்கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக அகநானுாறு பகுதியில் எட்டுப் பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் பாடலில் அப்பாவித் தலைவியின் நிலைமையையும் நெருக்கடிகளுக்கிடையே தவிக்கும் தன் நிலைமையையும் எண்ணித் தவிக்கும் ஒரு தலைவன் தன் இயலாமையை தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சுயவருத்தத்தின் குரல் ஒலிக்கிறது. இன்னொரு பாடலில் காதலின் இன்பத்தை அடையாளம் காட்டிக் களிப்பூட்டிய தலைவன் பிரிவைத் தாங்கவியலாத தலைவியின் வருத்தம் தோய்ந்த குரல் ஒலிக்கிறது. மற்றொரு பாடலில் போருக்காக காடுதாண்டிச் சென்ற தலைவன் விரைவில் வந்துவிடுவான் என ஆறுதல் மொழியும் தோழியின் குரல் ஒலிக்கிறது. பிறிதொரு பாடலில் மகளுடைய காதல் விவகாரத்தைக் கேள்விப்பட்டதும் அவள் தலைமுடியை இழுத்து பூமாலைகள் குலைய முதுகில் அடித்த தாய், யாருமறியாமல் காதலனுடன் கடுமையான பாலைவழியாகச் சென்றுவிட்டதை அறிந்ததும் வழிப்பயணத்தின் சங்கடங்களை அவள் எப்படித் தாங்கிக்கொள்வாளோ என்று நினைத்துத் துயருடன் மனம்சோரும் தாயின் குரல் ஒலிக்கிறது. எல்லாக் குரல்களிலும் ஒருவித பரிவு ஒலிப்பதைப் பார்க்க முடிகிறது. தலைவியை எண்ணிக்கொண்டிருக்கும் தலைவனுடைய பரிவு. தலைவனை எண்ணிக்கொண்டிருக்கும் தலைவியின் பரிவு. தலைவியின் துயரம் விரைவில் தீர்ந்து இன்பம் மலர நினைக்கும் தோழியின் பரிவு. செல்லமாக வளர்ந்த மகள் எந்தத் தொல்லையுமின்றி மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமே என்றெண்ணும் தாயின் பரிவு. பரிவே மானுடகுலத்தின் ஆதாரமான குணம். இதுவே காதல். இதுவே கருணை. இதுவே நட்பு. இதுவே தாய்மை. பரிவின் சுவடுகள் இல்லாமல் வாழ்வும் இல்லை. இலக்கியமும் இல்லை. சிவக்குமாரின் தொகுப்புமுறை அழைத்துச்செல்லும் திசையின் பயணம் முடிவற்றதாக உள்ளது.

சிவக்குமாரின் தேர்வில் ஐங்குறுநுாறிலிருந்து இடம்பெறும் ஓரம்போகியாரின் ஒரு கவிதையின் சித்திரம் இன்றும் பொருத்தமான ஒன்றாக இருப்பதைக் காணமுடிகிறது. மிகச்சிறந்த இக்கவிதையில் ஒட்டுமொத்த பெண்குலத்தின் சார்பாக பேசுகிற ஒருகுரல் ஒலிப்பதை உணரமுடிகிறது. பொய்கையில் ஆமையொன்று வாழ்கிறது. தன் குட்டிகளை அது பேணாவிட்டாலும் அக்குட்டிகள் தாய்ஆமையின் முகத்தைக்கண்டு அந்த ஆறுதலிலேயே வளர்கின்றன. அதுபோல தலைவனின் மார்பையே பார்த்து வாழ்கிறவள் தலைவி. அவளைக் காதலுடன் பார்த்துக்கொள்வது தலைவன் கடமை. ஒரு தோழியின் பரிவுமிகுந்த குரலாக இவ்வரிகள் பாடலில் ஒலிக்கின்றன. சாதாரணமான ஒரு பிச்சைக்காரனுக்கு ஐம்பதுபைசா போடக்கூட பத்துமுறை யோசிக்கிறவர்கள் வாழும் இந்த மண்ணில் குழந்தைப்பருவம்முதல் இளமைப்பருவம்வரை பூப்போல வளர்த்த மகளை ஆடவன் ஒருவனுக்கு மணம்முடித்துவைக்கிற ஒவ்வொரு பெற்றோரின் அடிமனமும் பதற்றத்துடன் யாசிக்கிற குரலையே இப்பாடலில் தோழி முன்வைக்கிறாள். பொன்னையோ பொருளையோ கோராத அக்குரல் காதலையே கோருகிறது. இன்றுவரை இல்லறத்தில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணும் ஆணிடம் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது காதலைமட்டுமே. மானுட நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிற இக்காதல் ஊற்றைப்போல பொங்கி அருவியைப்போல வழிந்தோடியபடி இருப்பதே இல்லறத்தின் அழகு. ‘காதலினால் மானுடர்க்கு.. ‘ என்று தொடங்கும் பாரதியின் கவிதை வரிகளை இத்துடன் இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம். இல்லற வாழ்வில் காதல் ஏன் வலியுறுத்தப்படுகிறது என்று புரிந்துகொள்ள இது உதவும். இக்குரலும் கோரிக்கையின் தேவையும் இன்னும் இருப்பதாலேயே இரண்டாயிரம் ஆண்டுகள் முற்பட்ட தோழியின் குரல் இன்றைய குரலாக உடனடியாக மாற்றமடைந்துவிடுகிறது.

சிற்றிலக்கியப் பகுதியில் குழந்தைக்கவிராயர் எழுதிய ‘மான்விடுதுாது ‘ நூலிலிருந்து சில வரிகளைச் சிவக்குமார் சுட்டிக்காட்டுகிறார். கவிராயர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நுாற்றாண்டு. இக்கவிதை கண்ணிகளால் ஆனது. 1880 ஆம் ஆண்டில் உ.வே.சா. இந்த நுால் சுவடியை மதிலைப்பட்டியில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் வீட்டிலிருந்து பெற்றதாக ஒரு குறிப்பு உண்டு. இந்நீள்கவிதையின் 301 கண்ணிகளிலும் வெளிப்படும் குரல் காதலைக் கோரும் குரலே. காதலைச் சொல்வதற்காகவே தலைவனை நோக்கி மான் துாதாக அனுப்பப்படுகிறது. சிலப்பதிகாரம், பெருங்கதை, கம்பராமாயணம், பக்தி இலக்கியப் பாடல்கள், நளவெண்பா என எங்கு தொட்டாலும் ஒலிக்கும் குரலாக இது உள்ளது. காதல் இல்லாமல் மனித வாழ்வுக்கு பொருளே இல்லை. இதனாலேயே காதலின் களிப்பும் காதலற்றுப் போனதால் உருவாகும் துயரமும் மாறிமாறி பாடப்பட்டிருக்கிறது போலும்.

‘காடோ ? செடியோ ? கடற்புறமோ ? கனமே மிகுந்த

நாடோ ? நகரோ ? நகர்நடுவோ நலமே மிகுந்த

வீடோ ? புறந்திண்ணையோ ? தமியேன் உடல்வீழுமிடம்

நீடோய் கழுக்கன்றில் ஈசா உயிர்த்துணை நின்பதமே ‘

சிவக்குமார் எடுத்துக்காட்டும் பட்டினத்தாரின் ஒரு பாடல் இது. தன் உயிர் பிரியும் இடம் எதுவாக இருந்தாலும் அந்த உயிருக்கு உறுதுணையாக இறைவனே இருக்கவேண்டும் என்னும் ஆதங்கத்தை முன்வைக்கிறது பாடல்.

‘எல்லாம் எவனோ பதடி வைகல்

பாணர் படுமலை பண்ணிய எழாலின்

வானத்து எழுச்சுவர் நல்லிசை வீழ

பெய்த புலத்துப் பூத்த முல்லைப்

பசுமுகைத் தாது நாறுந் நறுநுதல்

அரிவைதோள் அணைத்துஞ்சிக்

கழிந்தநாள் இவண் வாழும்நாளே ‘

குறுந்தொகையிலிருந்து சிவக்குமார் எடுதடிதுக்காட்டும் ஒரு பாடல் இது. தலைவியின் துணையுடன் வாழும் நாள்களுக்கு மட்டுமே பொருள் இருப்பதாகவும் அவள் துணையில்லாத நாள்கள் அரிசி இல்லாத பதரைப்போன்றது என்றும் தன் தோழனிடம் தலைவன் சொல்லிப் பகிர்ந்துகொள்வதைச் சித்தரிக்கிறது பாடல்.

இந்த இரு பாடல்களையும் முன்வைத்து மானுட மனம் இயங்கும் விதத்தைக் கண்டடையலாம். மனத்துக்குத் தனித்தியங்கும் தன்மை உண்டு. ஆனால் அது ஒருபோதும் தனிமையை விரும்புவதில்லை. தன் இருப்புக்கு அர்த்தத்தைக்கொடுக்கிற மற்றொரு துணையை அது சதாகாலமும் தேடி அலைந்தபடி இருக்கிறது. அகத்தளத்தில் ஆணுக்குப் பெண்ணாகவும் பெண்ணுக்கு ஆணாகவும் அத்துணை அமைகிறது. புறத்தளத்தில் பரம்பொருளையே துணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. துணையொன்று தனக்குண்டு என்னும் நம்பிக்கையால் மனத்துக்குக் கிட்டும் வலிமை மிகப்பெரியது. நுட்பமானதும்கூட. சிவக்குமாரின் பாடல்தேர்வுகள் இந்த உண்மையைச் சொல்லாமல் சொல்வதைப்போல அமைந்துள்ளது.

இப்படி பல சிறப்புகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. சிவக்குமாருக்கு தமிழ்வாசக உலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. தேர்ச்சியான ரசனைஉணர்வுடன் பல புதிய வாசகர்கள் இத்தொகுதியால் உருவாவார்கள் என்பது உறுதி. நுாலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றுள்ள உரையாசிரியரும் உரைவளமும் முக்கியமான கட்டுரை. உரையாசிரியர்களின் தனித்திறமையைச் சுருக்கமாக இப்பகுதி சுட்டிக்காட்டுகிறது. பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், பட்டர், நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை என முக்கியமான உரையாசிரியர்களின் பங்கை வாசகர்களுக்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் விதம் அழகாக உள்ளது. சிக்கலான பாடல் வரிகளுக்கு அவர்கள் பொருளறிந்து உரைக்கும் அழகு அவர்களுடைய இலக்கியப்பற்றையும் வரிகளின் ஆழத்துக்குப் பயணம் செல்லக்கூடிய ஆற்றலையும் படம்பிடித்துக்காட்டுகின்றன.

பாடலாசிரியர்பற்றியும் நுாலைப்பற்றியும் சிவக்குமார் எழுதியிருக்கும் முன்னுரைக் குறிப்புகளும் முக்கியமானவை. இவை எல்லாப் பகுதிகளிலும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளன. சில பாடல்களுக்கு பொருளோடு தொடர்புடைய வேறு சில கருத்துகளும் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ‘குத்துவிளக்கெரிய.. ‘ என்று தொடங்கும் ஆண்டாளின் பாடலுக்கும் நந்திக் கலம்பகத்தில் இடம்பெறும் வானுறு மதியை அடைந்ததுன் வதனம் எனத் தொடங்கம் பாடலுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு உரைகளைச் சொல்லலாம்.

சிவக்குமார் எடுத்தாண்டிருக்கும் திருமூலரின் ஒரு பாடல் பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

‘ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை

ஆரறிவார் அதன் அகலமும் நிகளமும்

பேரறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன்

வேரறியாமை விளம்புகின்றேனே ‘

வடிவமும் பெயரும் எல்லையும் அற்று அனைத்தையும் தழுவி நிற்கும் பெருஞ்சுடரை அறிந்ததாக எண்ணிச் சொல்வதெல்லாம் அறியமுடியாத அறியாமையை மட்டுமே என்று தொனிக்கும் குரலை இப்பாடலில் கேட்க முடிகிறது. வாழ்வின் நீண்ட பரப்பை முன்வைப்பதாக எண்ணி எழுதப்படும் இலக்கிய எழுத்துகள் அனைத்தும் முன்வைப்பது அதை அறிய முடியாத அறியாமையையே என்று இதன் பொருளை விரிவாக்கம் செய்துகொள்வதில் பிழையில்லை. அறியாமையை எடுத்துரைக்கும் இலக்கிய வரிகளைத் தீண்டிய இன்பத்தின் சாரலையே இதயத்தால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்கிற நிலையில் முழுமையையே தரிசிக்கும் தருணத்தில் என்ன நேருமோ, யாரால் சொல்ல முடியும் ? தேர்ந்தெடுத்த பாடல்களைக் கொண்ட கொங்குதேர் வாழ்க்கை தொகுப்பு தரக்கூடிய பேரின்பம் மறக்க முடியாத அனுபவம். அழகுணர்ச்சியோடு வெளியிட்டிருக்கும் யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகம் தமிழ்வாசக உலகத்தின் பாராட்டுக்குரியது.

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>