ஏலங்குழலி
மேலேயிருந்த கம்பத்தை இரண்டு முறை பற்றிக் கொள்ள முயன்று, கை வழுக்கிக் கொண்டு சென்றது. செளம்யா எரிச்சலுடன் நழுவிக்கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டு, பக்கத்து சீட்டின் நுனியைப் பற்றிக்கொண்டாள். பஸ் திரும்பும்பொழுது ஓரமாகச் சாய, உட்கார்ந்திருந்த காட்டன் புடவைப் பெண்மணியின் மடி மீது ஏறக்குறைய விழுந்தாள்.
“ஸாரி,“ செளம்யா நிமிர்ந்து, தோளில் மாட்டியிருந்த பையை நேராக்கினாள். பின் சீட்டில் கோரஸாக கானா கேட்டது. இரு ஜீன்ஸ் பெண்கள் ‘களூக் ‘ கென்று சிரித்துக்கொண்டனர்.
வீடு போய்ச் சேர கண்டிப்பாக ஏழரை ஆகிவிடும். இன்று ஷாப்பிங் கேன்சல். ஆசையாக மேக்னாவுடன் போட்ட ப்ளான் எல்லாம் கோவிந்தா. இன்று பார்த்து வண்டி ரிப்பேராகித் தொலைக்கும் என்று யார் கண்டது ? மேக்னா கண்டபடி கத்தப் போகிறாள். ‘ஆறரை மணிக்கே வந்துவிடுவேன் ‘ என்று ஜம்பமாய்ச் சொன்ன பின்…
முதுகில் என்னவோ ஊர்வது போல இருந்தது. லேசாக நெளிந்தாள். ஊர்வது நின்றது.
பவர்ஹவுஸில் வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றது. கும்பல் முட்டியது. மீண்டும் முதுகில் ஊரும் உணர்ச்சி.
செளம்யாவின் புலன்கள் சட்டென்று கூர்மையடைந்தன. எவனோ கை வைக்கிறான். தன்னையறியாமல் உடலைக் குறுக்கிக் கொண்டாள். என்ன குறுக்கினாலும், அவ்வளவு கூட்டமான வண்டியில் எங்கு தப்புவது ?
பின்னால் திரும்பிப் பார்த்த பொழுது, கச்சலாக ஒரு இளைஞன் அசட்டுத்தனமாக சிரித்தான். பையிலிருக்கும் ப்ளேடை எடுத்து ஒரு கீறு கீறலாமா ? ம்ஹும். இந்த நெரிசலில் பைக்குள் கையையே விட முடியாது.
தைரியமடைந்துவிட்டான். முதுகிலிருந்து கை மேலே ஊர்ந்தது. செளம்யா கண்களின் ஓரமாகச் சட்டென்று குத்திய கண்ணீரை அடக்கிக்கொண்டாள். சீ சீ…இவன் கையை நொறுக்குவதை விட்டுவிட்டு, என்ன அழுகை ? அதுவும் பஸ்ஸில் இதெல்லாம் சகஜம்தானே ? இது அபத்தம். எவனோ ஒருத்தனின் கை வேண்டுமென்றே படும்போது, அது எப்படி சகஜமாகும் ? இவனுகளையெல்லாம்……………..
செளம்யா மீண்டும் நெளிந்ததில், கை தற்காலிகமாக நகர்ந்தது.
இனிமேல் இங்கே நின்றால் ஆபத்து. எத்தனை நெரிசலாக இருந்தாலும் பரவாயில்லை, போய்விட வேண்டும். கடவுளே, கடவுளே, என்னை இங்கிருந்து அப்புறப்படுத்து.
அடுத்த ஸ்டாப்பில் கூட்டம் இரு மடங்காகியது போல் தோன்றியது. முன்னும் பின்னுமாகக் கூட்டம் அலைமோதியது. நகர வழியில்லை. இதற்கு மேல் பொறுத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. செளம்யா அவனது காலை ஓங்கி மிதித்தாள்.
“ஆஆஆஆஆ…!!!” அவன் குனிந்தான். சற்றியிருந்தவர்கள் ‘என்ன, என்ன ‘ என்றனர். செளம்யாவைச் சூழ்ந்திருந்த கூட்டம் வளைந்து சுற்றியது. அவளது துப்பட்டா நுனி பின்னாலிருந்து இழுபட்டது. செளம்யா கலவரத்துடன் திரும்ப முயற்சிக்க, அது மேலும் நழுவியது. பஸ்ஸின் கூட்டம் முன்னும் பின்னுமாக அலைந்தது. “துப்பட்டா…” என்று அவள் முடிக்கும் முன்பு, அது கூட்டத்தில் காணாமல் போயிருந்தது.
பின்னால் நின்ற இளைஞன் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, வெற்றி பெற்ற பெருமிதத்தில் இளித்தான்.
*********
வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, ஹாலில் பாட்டியும் அத்தையும் உட்கார்ந்திருந்தனர். இரண்டு நாள் முன்னமே வந்திருக்க வேண்டியது. கிராமத்தில் திரெளபதியம்மன் கூத்து பார்த்துவிட்டு வந்ததனால், தாமதமாகிவிட்டது.
“என்ன கண்ணு, எப்புடி இருக்கே ? இப்பத்தான் ஆஃபீஸிலிருந்து வர்றியா ?“
“ஆமாத்தை. நல்லாருக்கீங்களா ?“
சமையலறையிலிருந்து அம்மா வந்தாள்.
“என்ன செளமி, ஒரு மாதிரி இருக்க ? பஸ்ஸுலே வந்தியா ?“
“ம். வண்டி ரிப்பேர்.“
அந்தப் பக்கம் பாட்டி பேசிக்கொண்டிருந்தாள். “துரியோதனன் ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு…கூட்டமே அரண்டிருச்சு.“
“அப்பறம் ?” அத்தை சுவாரஸ்யமாகக் கேட்டாள்.
“ஏண்டி, நீயுந்தான் என்னோட கூத்து பாத்தீயில்ல ? அப்புறமேட்டு என்ன ?”
“அதெல்லாம் எத்தினி முறை கேட்டாலும் அலுக்காது. நீ சொல்லு.”
“அப்புறம் என்ன ? அந்தப் பய-அவெந்தம்பி-ஆருடா ?”
“துச்சாதனன்.”
“அந்தப் பாவிப்பயதான். அவன் என்ன செய்யிறான் ? மதனியோட முந்தானையைப் புடிச்சி இழுக்குறான்…”
செளம்யா முகத்தைச் சுருக்கியவாறு மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அய்யோ…அந்தப் பொண்ணோட தவிப்ப என்னன்னு சொல்லுறது ? பொம்பளைங்கல்லாம் அழுவறாங்க…ஆம்பளைங்க கண்ணுலே கூடத் தண்ணி…”
அம்மா அப்போதுதான் கவனித்தவளாக, ‘செளமி, துப்பட்டா எங்கடி ?”
செளம்யா மின்விசிறியிலிருந்து பார்வையை அகற்றினாள். “துச்சாதனன் உருவிட்டாம்மா.”
பாட்டியும் அத்தையும் அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்க்க, செளம்யா ‘விருட் ‘டென்று எழுந்து அறைக்குள் சென்றாள்.
—————————————
v Email: elankhuzhali@yahoo.com
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- சாத்திரமேதுக்கடி ?
- பூமத்திய ரேகை
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- தேசபக்தியின் தேவை
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- பின் விளைவு
- அங்கீகாரம்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- குறியும் குறியீடும்
- காதலுக்கோர் தினமாம்
- உன்பெயர் உச்சரித்து
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- காதலர் தினக்கும்மி
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- கவிதைகள்
- நான் கேட்ட வரம்
- ஈடன் முதல் மனிதம்
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- புதிய சாதிகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- விடியும் -நாவல்- (35)
- இரு கதைகள்
- துகில்
- தேடல்
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- கண்ணா நீ எங்கே
- முதலா முடிவா ?
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- ஒரு கவிதை
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘