தீராநதி வெளியிடாத கடிதம் – நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

பவுத்த அய்யனார்


நாள்: 08.07.2008
ஆசிரியர் அவர்கள், திண்ணை இணைய இதழ்

தீராநதி வெளியிடாத கடிதம்
தீராநதியில் வந்த நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து விமர்சனப் பார்வையுடன் ஒரு கடிதத்தை மே 2008 தீராநதி இதழில் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு ஜூன் தீராநதி இதழில் விவாதப் பொருளாக்க வேண்டியதை விட்டுவிட்டு என்னைத் தனிப்பட்ட முறையில் கன்னாபின்னாவென்று கடற்கரய்; என்பவர் எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக எனது தரப்பை எழுதியிருந்தேன். ஜூலை தீராநதி இதழில் மிதமிஞ்சிய பாராட்டுக் கடிதங்கள் மட்டுமே பிரசுரமாகியிருந்தன. எனது எதிர் வினையை வெளியிடவில்லை. இதைத் திண்ணை வாசகர்களுக்குத் தருகிறேன்.
{{{
எதிர்வினை
{{{{
ஜூன்; 2008 தீராநதி இதழில் ஒரு பக்கத்திற்கும்; மேலாக எனது மே மாதக் கடிதத்திற்குப் பதில் சொல்லியிருக்கும் குமுதம் உதவி ஆசிரியர் கடற்கரயின் பதில் பதட்டம் அவமதிப்பு ஆத்திரம் கொண்டதாக மட்டுமே உள்ளது. கூடவே, அடிப்படை நாகரீகம் அற்றதாகவும்.
{{{
“ஒரு படைப்பாளியை நேர்காணல் எடுக்கும்போது அந்தப் படைப்பாளியின் படைப்பு சார்ந்த கேள்விகளும் இருக்க வேண்டும். வாசகர்கள் அவரது படைப்பைத் தேடிப் படிக்கவும் படைப்பின் உள்நுழைய ஒரு வாசலை ஏற்படுத்தவும் அதன் மூலம் உதவ முடியம்”.

இதுவே என் கடிதத்தின் சாராம்சம்.

நான் கூறியுள்ள சாதாரண விசயத்தைக் கூடப்புரிந்து கொள்ளாது நான் ஏற்கெனவே எடுத்த நேர்காணல்களுக்குத் “தரச்சான்றிதழ்” கொடுக்க முற்பட்டிருப்பது விவாதத்திற்கான ஒரு புள்ளியை மறைத்துவிட்டு என்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதலிலேயே கவனம் செலுத்தியிருப்பது வாசகர்களை ஏமாற்றும் செயலாகும். எனது “சொல்லிலிருந்து மௌனத்துக்கு” நேர்காணல்களின் தொகுப்பு நூலை மேலோட்டமாகப் புரட்டிவிட்டு கருத்து கந்தசாமியாகி மட்டையடியாய் ஆவேசப்பட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானது. கடற்கரயிடம் நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லையென்றாலும் தீராநதி வாசகர்களுக்காக சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன்.
கடற்கரய் குறிப்பிடும் பிரம்மராஜன், அபி, நீல.பத்மநாபன் நேர்காணல்களும் அவர் குறிப்பிடாத நகுலன், கந்தர்வன், ஜெயமோகன் முதலியவர்களின் நேர்காணல்களும் புதியபார்வை இதழில் 12 ஆண்டுகளுக்கு முன்பு (1996) வெளிவந்தவை. அப்போது பின்காலனிய உலகம் இருந்ததா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால், கடற்கரய் என்பவர் நவீன இலக்கிய உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், கடற்கரய்யைப்போல பேட்டி காண்பதற்கு மாதச் சம்பளமும் கூடவே புகைப்படக்காரரும் போக்குவரத்து தங்குமிடச் செலவுகளும் யாரும் எனக்குத் தரவில்லை. எனது ஆர்வமும் விருப்பமும் சார்ந்து திருவனந்தபுரம், தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை எனப் பல இடங்களுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அலைந்து திரிந்தேன். படைப்பு சார்ந்து என்னைக் கவர்ந்தவர்களையே விருப்பு, வெறுப்பு சாராது, யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நேர்காணல்களை எடுத்தேன். இப்போது நான் இந்த வேலைக்கெல்லாம் போவதில்லை. அதனால் கடற்கரய் பயப்பட வேண்டியதில்லை. மேலும் நேர்காணல்களை பெயர் புகழுக்காகவோ அல்லது அதிகாரத்தைக் கட்டமைக்கவோ நான் எடுக்கவில்லை.
“சொல்லிலிருந்து மௌனத்துக்கு” நூலுக்கு கடற்கரய் ஏற்கெனவே பேட்டி எடுத்துள்ள பின் நவீனத்துவப் படைப்பாளி எம்.ஜி.சுரே~; இந்தியா டுடே (தமிழ்) மார்ச் 15, 2006 இதழில் மதிப்புரை எழுதியிருந்;தார்.
அதில் “இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பிரம்மராஜனின் பேட்டி முக்கியமானது. இளங்கவிஞர்கள் இதைப் படிக்க வேண்டும்.
நேர்காணல் என்பது கிட்டத்தட்ட ஒரு அகழ்வாராய்ச்சியைப் போன்றது. எழுத்தாளனின் மனக்குகையில் நுழைந்து ஒரு சிறு கைவிளக்கின் வெளிச்சத்தில் கண்ணுக்குத் தட்டுப்படும் முக்கியத் தகவல்களைத் திரட்டும் வேலைதான் அது. இந்த வேலையைச் சிரத்தையுடன் மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துக்காட்டி இருக்கிறார் அய்யனார்”.

கடற்கரய் இந்த மதிப்புரை முழுவதையும் படிக்க வேண்டும். (இத்துடன் அதன் நகல் இணைத்துள்ளேன்). ஏனெனில் கடற்கரயைவிட “பின் நவீனத்துவ அறிவு” அதிகம் கொண்டவர் எம்.ஜி.சுரே~; என்பதில் யாருக்கும் மறுப்பிருக்காது.

எதை எதைப் படிக்க வேண்டும் என்பதை யாரும் யாருக்கும் போதிக்க முடியாது; கடற்கரய் உட்பட. (இது நேர்காணல்; தொழில் செய்பவர்களுக்குப் பொருந்தாது). உம்பர்டோ ஈகோ, ரோலாண்ட் பர்த், ஜொனதன் கெல்லர், வெரியர் எல்வின்… இவர்களின் நூல்களை எல்லாம் கரைத்துக் குடித்த கடற்கரயைப் பாராட்டுவோம். (நன்றி: அடையாளம் பதிப்பகம்) ஆனால் நான் படிக்க வேண்டும் என்று சொன்னது நாஞ்சில் நாடனைப் பேட்டி காணச் சென்றால் நாஞ்சில் நாடன் படைப்புக்களைப் படிக்க வேண்டும் என்பதே. இது ஒரு அடிப்படையான மிக எளிய உண்மை. ஜூன் இதழில் வெளிவந்துள்ள சோ.தர்மன் நேர்காணலுக்கும் இது பொருந்தும். “வில்லிசை ஆய்வாளரோ” சோ.தர்மன் என்ற சந்தேகம் வரவழைக்கவே செய்கிறது. சோ.தர்மனின் சிறுகதை, நாவல் படித்ததற்கான எந்த அறிகுறியும் கேள்விகளில் இல்லை. அதுவும் சோ.தர்மனின் முதல் நேர்காணல் வேறாம். இது படைப்பாளிகளை அவமதிக்கும் செயலாகும்.

உண்மையான அக்கரையுடன் யார் விமர்சனம் செய்தாலும் எந்த எல்லைக்கும் சென்று அவமதிப்பேன் என்பதே கடற்கரயின் செய்தி. இந்தச் சச்சரவுகளில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. “வாடா போடா” என்று கடற்கரய் இனி என்னைப் பற்றி எழுதினால்கூட நான் எதுவும் எழுதமாட்டேன். நன்றி.
பவுத்த அய்யனார்
கரூர்
09.06.08

Series Navigation