தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

பாவண்ணன்


ஒரு புத்தகத்துக்கும் ஒரு வாசகனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. வாக்கியங்களின் வழியாக ஒரு படைப்பு முதலில் ஏதோ ஒரு சித்திரத்தைத்தான் வாசகனுக்கு முன்னிலைப்படுத்துகிறது. அச்சித்திரத்தின் வசீகரம் முதலில் அவனை வியப்புக்குள் ஆழ் த்துகிறது. பிறகு, அந்த வசீகரம் எதனால் ஏற்படுகிறது என அலசத் தொடங்குகிறது வாசகனுடைய மனம். தொடர்ந்து அழகைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் அடுக்கடுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஏதோ ஒரு விதத்தில் தன் வாழ்க்கையையே புரிந்துகொள்வதற்கு நிகரானதாக அம்முயற்சிகள் அனைத்தும் இருப்பதாகத் தோன்றுகிறது. இறுதியில் தன்னைத்தானே புரிந்துகொள்வதற்கும் அதுவே துாண்டுதலாக அமைகிறது.

எல்லாப் புத்தகங்களிலும் காந்தத்தைப்போல மனசை ஈர்க்கிற சில வரிகள் உண்டு. அவை உரையாடலின் ஒரு பகுதியாகவோ அல்லது விவரணைக்குறிப்பின் ஒரு தொடராகவோ இருக்கக்கூடும். அவ்வரிகள் என்னும் அதிசயக் குளத்தில் மனமீன் நீந்திக் களிக்கத் தொடங்குகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் குளங்கள் வற்றுவதில்லை. புத்தம்புது புனலின் நீர் நிரம்பிய குளங்களாகவே இருக்கின்றன. அவை தரும் குளிர்ச்சிக்கும் இன்பத்துக்கும் ஒரு குறையும் இருப்பதில்லை. சூரியனையும் சந்திரனையும் வானத்தையும் தமக்குள் அவை பிரதிபலித்துக் காட்டும் ஆற்றல் குறைவதுமில்லை. எல்லாத் தரப்பு வாசகர்களுக்குள்ளும் இத்தகைய அதிசயக் குளங்கள் உண்டு.

நாவலாசிரியர்கள், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள் என எல்லாத் தளங்களிலிருந்தும் பத்தொன்பது படைப்பாளிகளின் நுால்களை ‘வாக்கியங்களின் சாலை ‘ என்னும் தொகுப்பில் அறிமுகப்படுத்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன் . ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு நுால் தன்னை வந்தடைந்த விதத்தையும் அந்த நுாலுக்கும் தனக்கும் வலிமையான உறவு உருவாகக் காரணமாக இருந்த வாழ்க்கைச் சூழலையும் மனிதர்களையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள அந்த நுாலின் பகுதிகள் உதவியாக இருந்த சந்தர்ப்பங்களைப்பற்றியும் மறக்க முடியாத இனிய ஞாபகமாக அந்த நுால் மனத்தில் இன்னும் தங்கியிருப்பதற்கான காரணைத்தையும் கதைப்பாங்கோடு அழகாக எடுத்துச்சொல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதையைப் படித்து முடித்த நிறைவைக் கொடுக்கிறது. ஒரு சுயசரிதையைப் படிக்கிற விறுவிறுப்பு எல்லாக் கட்டுரைகளிலும் படிந்திருப்பதை நுாலின் மிகப்பெரிய பலமாகச் சொல்லவேண்டும்.

இதாலோ கால்வினோ, போர்ஹெ, ஸ்டாபன் ஹாக்கிங்ஸ், ஜாக் லண்டன், மார்க்யூஸ், காஃப்கா, ஹெர்மன் ஹெஸெ என உலக இலக்கியப்பரப்பில் முக்கியமானவர்களாக விளங்குகிற பலருடைய படைப்புகள் முன்வைக்கப்படுகின்றன. ‘நாக்கு மட்டுமே உணவை ருசிக்க முடியும். பாத்திரங்கள் ஒருபோதும் உணவின் சுவையை அறிவதில்லை ‘ என்ற புத்தரின் வாக்கியத்தை எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் முன்வைக்கிறார். மனப்பசியைத் தணிக்கும் புத்தகங்களுக்கும் உணவுக்குள்ளதைப்போன்ற சுவையுண்டு. தீராத பசியுடன் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சுவையையும் அறிந்தவராக இருக்கிறார். நுாலின் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படும் அவருடைய சுவையுணர்வு நம்மையும் அந்த நுால்களைத் தேடும்படி துாண்டுகிறது.

ஜென் கதைகளைப்பற்றிச் சலிப்பில்லாமல் பேசக்கூடியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதை அவருடன் நேரில் பழகியவர்கள் அறிந்திருக்கக்கூடும். சின்னச்சின்ன கதைகளையும் கவிதைகளையும் அவர் மேடைப்பேச்சிலும் நேர்ப்பேச்சிலும் தற்செயலாக நினைவுபடுத்திச் சொல்லும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம்போலத் தோன்றும். பால்ராப்ஸ் நயோஜன் கென்ஜாய் எழுதிய ‘ஜென் எலும்புகள் ஜென் கதைகள் ‘ என்கிற நுாலைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் அதே விதமான இனிய அனுபவத்தைக் கொடுக்கிறது. ‘நதி அமைதியாக உறைந்திருக்கிறது, மலைகள் நீந்திக்கொண்டிருக்கின்றன ‘ என்று சுட்டிக்காட்டும் ஒருவரி ஒரு பேரருவியின் சாரலில் நனைந்து சிலிர்த்த அனுபவத்தைத் தருகிறது. ஒருகணத்தில் உறைவுநிலையில் இருப்பது நீந்திக் களிக்கும் உயிராகவும் ஓடிக்கொண்டே இருப்பது உறைந்த நிலைக்கு மாறும் உயிராகவும் உருமாற்றம் கொள்கின்றன. நீந்தத் தொடங்கும் மலை எதைநோக்கிச் செல்லும் ? நதியின் ஆழத்தை அதனால் அறியமுடியுமா ? கேள்விகள் பெருகப்பெருக கற்பனையின் உலகம் விரிவிடைந்தபடியே செல்கிறது. மனித வாழ்வுக்குள் இக்காட்சியை உடனே நம் மனம் தளம்மாறற்ிப் பார்க்கவிழைகிறது. யாரோ ஒருவர் மலையாக இருக்கிறார். யாரோ இன்னொருவர் நதியாக இருக்கிறார். மலையாக இருப்பவர் நதியாக இருப்பவரின் மனத்தில் நீந்துகிறார். அடுத்தவர் மலையாக நீந்திக்களிக்க இவரும் நதியாக மாறுகிறார். இந்த எண்ண ஓட்டத்தின் தொடர்ச்சியில் ஒருவரே மலையாகவும் நதியாகவும் இருப்பதை உணர்கிறோம். அன்பால் மட்டுமே இந்த ஒருமையுணர்வு சாத்தியமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டிய இந்த நூலின் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பேரனுபவத்துக்கு இட்டுச்செல்லும் சாலை. ‘சொர்க்கத்தின் கதவு எங்கே இருக்கிறது ?, நரகத்தின் கதவு எங்கே இருக்கிறது ? ‘ என்று கேள்வியை முன்வைத்துச் சொல்லப்படும் சின்னஞ்சிறு கதையும் யோசிக்கயோசிக்க விரிவான பொருள்களைப் பெற்றுக்கொள்ள விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

விளாதிமிர் நபக்கோவின் ‘லோலிதா ‘ நாவலைப்பற்றி எழுதியிருக்கும் கட்டுரை பலவகைகளில் முக்கியமானது. ஊடகங்களால் இந்த நுால்மீது படிந்துபோன கறைகளை விலக்கி நாவலுக்குள் துடிக்கும் லோலிதாவின் இதயத்துடிப்பைக் காதுகொடுத்துக் கேட்க வைக்கிறது இக்கட்டுரை. இந்த நாவலுடன் இணைத்தப் பார்த்துச் சொல்லப்படும் எட்கர் ஆலன்போவின் வாழ்க்கைக் குறிப்பும் கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது. ஜாக் லண்டனுடைய ‘கானகத்தின் குரல் ‘, லுாயி கரோலினுடைய ‘ஆலிஸின் அற்புத உலகம் ‘ ஆகிய நுால்கள் குழந்தையின் குதுாகல உணர்வோடும் வற்றாத ஆனந்தத் துள்ளலோடும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நார்னியா என்ற கற்பனை உலகத்தைக் கட்டி பேத்தியின் மகிழ்ச்சிக்காக சி.ஆர்.லுாயிஸ் என்னும் படைப்பாளி படைத்த ஏழு நூல்களைப்பற்றிய தகவலையும் சொல்கிறது ஒரு கட்டுரை.

ஆந்த்ரே தார்க்கோஸ்கியை அறிமுகப்படுத்தும் கட்டுரையின் தொடக்கத்தில் தன் சொந்த அனுபவமாக விவரிக்கும் பகுதி எல்லா இளைஞர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் நிகழ்ந்ததாகவே இருக்கும். திருட்டுப்படம் பார்ப்பதில் இருக்கிற சுகம், அகப்பட்டுக்கொண்டதும் மனம் கொள்கிற அவமானம், புறக்கணிப்பால் உருவாகும் வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளும் வேகத்தில் சட்டென உருக்கொண்டு விடுகிற படிப்பு வேகம் அனைத்துமே ஒன்றுவிடாமல் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன. ருஷ்யப்படங்களுடைய இசையின் தொடர்ச்சியாக சுப்பபையா நாயுடுவின் இசைப்பாடல்களை எஸ்.ராமகிருஷ்ணன் ஞாபகப்படுத்திக்கொள்ளும் தருணத்திலும் ‘மிஸ்ஸியம்மா ‘ திரைப்படத்தில் ‘எனையாளும் மேரிமாதா ‘ என்று பாடும் சாவித்திரியின் வெண்ணிறமான முகம் வழியே ருஷ்யக்கதைப்பாத்திரங்களை நினைவு படுத்திக்கொள்ளும் தருணமும் மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன் என்னும் படைப்பாளியின் மொத்த ஆளுமையைப் புரிந்துகொள்ள இப்பகுதி துணைநிற்கிறது. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியை நோக்கித் தாவும் வேகமும் கச்சிதமும் ஆர்வமும் நம்மைத் தீரா வியப்புக்குள் ஆழ்த்துகிறது. இப்புள்ளிகளிடையே காட்சி தரும் வாழ்வின் கோலம் அவர் தம் படைப்புகளில் சித்தரிக்க முனைகிற பெரும்காட்சிகளைப் புரிந்துகொள்ள உதவும் பகுதியாக அமைந்துவிடுகிறது. தீராத வியப்பு தரும் ஓர் ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன்.

லுாயி மிராண்டாலோவின் ‘எழுத்தாளனைத் தேடும் ஆறு கதைப்பாத்திரங்கள் ‘ என்னும் நாடக நுாலைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டபோது ஐரோப்பாவில் எழுந்த முணுமுணுப்புகளும் அவையனைத்தும் அடங்கி மெல்லமெல்ல ஒரு வெற்றியாக உருமாறி மிராண்டாலோவின் பெயரை நாடகஉலகில் நிலைநிறுத்திய விதமும் விறுவிறுப்பாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாடக நுாலை ஒரு தமிழ்வாசகன் உள்வாங்கும் விதத்தில் மதுரை ஸ்பெஷல் நாடகக் குழுக்களின் செயல்பாடுகளையும் வள்ளித்திருமணம் நாடகத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளதைக் குறிப்பிடவேண்டும்.

லுாயி ஃபிஷர் என்னும் ஆங்கில நுாலாசிரியர் எழுதிய ‘காந்தியின் வாழ்க்கை ‘ வரலாற்று நூலைப்பற்றிய அறிமுகத்தில் இதைத் தமிழில் மொழிபெயர்த்தவராக தி.ஜானகிராமனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர. என்னும் எழுத்தாளரே இதன் மொழிபெயர்ப்பாளர். 1962 ஆம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாக இந்த நுால் முதலில் வெளிவந்ததது.

ஒரு புத்தகத்தைப்பற்றிப் பேசுவது எப்போது ஒரு நல்ல வாசகனுக்கு உற்சாக்முட்டும் விஷயமாகவே இருக்கும். அதைப்பேசும் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் காலத்தைக் கடந்து சென்று அதைப்படித்த காலத்தின் படிக்கட்டில் உட்கார்ந்துவிட்டுத் திரும்பும் அனுபவம் கிடைக்கிறது. பழைய படிக்கட்டில் உட்கார்ந்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் அவன் அளவில்லாத ஆற்றல் உடையவனாகிறான். இந்த அளவில்லாத ஆற்றலைப்பெறும் ஆசையில் ஒரு வாசகன் மீண்டும் மீண்டும் படித்ததைப்பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறான். காலத்துக்கிடையேயான பயணம் என்பது அவனுக்கே சாத்தியமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள ‘வாக்கியங்களின் சாலை ‘ என்னும் நூல் பல புதிய வாசகர்களை உருவாக்கும் வலிமை கொண்டது.

(வாக்கியங்களின் சாலை- எஸ்.ராமகிருஷ்ணன், வெளியீடு: அட்சரம், 130/11, மதுரா கோட்ஸ் காலனி, விருதுநகர். விலை3ரு65)

—-

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்