தீபமடியோ தீபம் !

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

கற்பகம்


சித்திரமாய்ச் சிரிக்கும்
சிங்காரமாய் அசையும்
தீபமடியோ தீபம்
வண்ணத் தீபம் !

சந்தனப்பொற் சிமிழெடுத்து
சர்க்கரையால் திரி நிறுத்தி
செங்கதிரை உருக்கியூற்றி
செங்குத்தாய் ஏறுமிந்த
தீபமடியோ தீபம்
தங்கத் தீபம் !

பொன்னிலவுக்குப்
போட்டி விடுக்கும்
கும்மிருட்டையும்
ஓட்டித் துரத்தும்
மின்னல் விதைகள்
காட்டி மிளிரும்
வாழ்வு துலங்க
வெற்றியளிக்கும்
தீபமடியோ தீபம்
முத்துத் தீபம் !

அன்பு முழுதாய்
அள்ளிக் கொடுத்தால்
காற்றிலிருந்தே
காத்து அணைத்தால்
வீட்டு முற்றத்தில்
ஏற்றி வளர்த்தால்
நல்ல வரமளிக்கும்
தேவியடியோ தீபம்
வஞ்சித் தீபம் !

கவனிக்காமல்
கண்கள் மூடினால்
வஞ்சகத்தால் நெய்
வற்றிட வைத்தால்
புகைபிடிக்க கற்புத்
தீபத்தைக் கேட்டால்
கொளுத்திவிடும்
தீப்பந்தமடியோ தீபம்
கன்னித் தீபம் !
***
m_karpagam@hotmail.com

Series Navigation

கற்பகம்

கற்பகம்