திலகபாமாவின் புத்தக வெளியீடு

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue


தேவநேயப்பாவணர் அரங்கத்தில் 28.12.02 அன்று மாலை 5.45க்கு உமா சங்கர் அவர்களின் இசை நிகழ்வோடு ஆரம்பமானது. இலக்கியக் கூட்டத்தில் இசை நிகழ்வு என்பது சென்னைக்கு ப் புதிது , தேவையா ? என்கின்ற கேள்விகளை மீறி பலரையு ம் ரசிக்க வைத்த இசை நிகழ்வில் திலகபாமாவின் கவிதைகள் இரண்டு இசையமைக்கப் பட்டு அதற்கான ஒரு நடன நிகழ்வும் திலகபாமாவால் நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஞானக்கூத்தன் அவர்கள் சூரியாள், சிறகுகளோடு அக்கினிப் பூக்களாய் என்ற இரு தொகுதிகளையும் வெளியிட க்ருஷாங்கினி பெற்றுக் கொண்டார் . தொடர்ந்து அவர் ஆற்றிய தலைமையுரையில்

‘ திலகபாமா அவர்களின் நீள் கவிதையும் , வேறு சில கவிதைகளின் தொகுப்பும் வெளியிடப்பட்டிருக்கிற இந்த தருணத்தில் , யார் யாருடைய கவிதை வெளியீடுகள் இந்த கட்டிடத்தில் நடை பெற்றிருக்கிறது என்று நினைத்துப் பார்க்கின்றேன். எனது முதல் கவிதை தொகுப்பும், த்மாநாம் கவிதை தொகுப்புகல் இங்கேதான் வெளியிடப்பட்டிருக்கின்றன.

‘ திலகபாமாவை சமீப காலமாகத்தான் எனக்குத் தெரியும். சில கவிதைகளை வாசித்திருக்கிறேன்.திலகபாமாவிற்கு ஓவியம் தெரிந்திருக்கிறது. இப்போது பார்த்தோம் நாட்டியமும் கை வந்த கலை என்று..இலக்கியக் கூட்டங்களென்றால் அதில் சங்கீதத்திற்கோ வேறு விதமான கலைகளுக்கோ இடமிருக்காது. 70களில் இலக்கிய வாதிகள் எல்லா கலைகளோடும் இலக்கியத்தை இணைத்து செயல்பட வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். அதில் ஓவியர்களின் ஒத்துழைப்பு மட்டுமே கிடைத்தது. சங்கீதமும் நாட்டியக் கலைகஅர்களின் ஒத்துழைப்பு ம் கிடைக்கவில்லை. எனவே சங்கீதமும் நாட்டியமும் பின் தங்கிய கலைகள் என்று விட்டு விட்டோம். இன்று அந்த சை கைகூடும் நாள் அருகில் இருக்கிறது என்று மனம் சந்தோசப்படுகிறது

‘ கவிதை எழுதுகின்ற பெண்களின் வாழ்வைப் பார்த்தால் அவர்கள் குடும்பத்திலும் வாழ்விலும் சிக்கல் இருப்பது தெரியும். அவ்வை, ஆண்டாள் இப்படி எல்லாருடைய வாழ்விலும் சிக்கல் நிறைந்திருக்கிறது. வங்காளத்தில் மிகச் சிறந்த பெண் கவிஞர்கள் இருக்கின்றார்கள்.

‘ திலகபாமாவின் கவிதை பெண் குரல் என்று சொல்வேன்

‘ பெண்களுக்கென்று தனியான பத்திரிக்கைகள் இருக்கின்றன . பொதுப் பத்திரிக்கைகளிலும் பெண்கள் எழுதுகின்றார்கள். இன்று பெண்களுக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம்.. கனிமொழியையும் திலகபாமாவையும் தெரிகிறது. மனுஷ்ய புத்திரன், விக்கிர மாதித்யன் ஆகியோரை தெரிந்திருப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள் .

‘ திலகபாமாவின் ‘அவதார ஆசை ‘ என்கிற கவிதையிலே வருகின்ற பூ, சங்கீதம், தீங்கனி இப்படியான சொற்கள் எழுதுகிறவர் பெண் என்பதை சுட்டிக் காட்டுகிறது. திலகபாமாவின் கவிதைகளிலே ‘நான் ‘ பலவிதமாக செயல்படுகின்றது.

‘ நெருப்புக் கோழிகள் கவிதையை திலகபாமா வீணடித்து விட்டர்.தீக்கோழி பற்றி எழுதும் போது, தன் சமூகம் சார்ந்த அக்கறையை இதோடு இணைத்து விட்டதால் அக்கவிதையை இழந்து விட்டர். கவிதை தோன்றும். தோன்றியவுடனே எழுதக் கூடாது. கவிதையை மனதில் வைத்திருக்க வேண்டும். திலகபாமாவின் கவிதைகளில் ஒரு வித பதட்டம் நிலவுகிறது.

கடிகார முட்கள் கவிதையில் வருகின்ற

சுற்றி சுற்றி வந்தாலும்

சேருவதென்னவோ முட்களிடம் தான்

அருமையான வரிகள்

என் அம்மா ஊராகிப் போயிருந்த

என் ஊர்

இந்த ஒரு வரிக்காகவே பெண் கவிஞர்கள் கவிதை எழுத வந்த சாபல்யம் அடைந்து விட்டதாக கருதுகின்றேன் ‘

இப்படியாக ஞானக்கூத்தனின் உரை இருந்தது.

‘சிறகுகளோடு அக்கினிப்பூக்களாய் ‘ இது போன்ற நீள் கவிதை முயற்சி வேறெந்த கவிஞர்களும் இதுவரை எடுத்திராத ஒன்று. நீளமான சந்தோசக் கவிதை , மலை ஆறு என் று அழகாக ஓடி வருகின்ற கவிதை நிதானித்து நிற்காமல் சடாரென்று முடிந்து விடுகின்றது. என்று கிருஷாங்கினி நூல் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

பெண் கவிஞர் பேச வருகின்றார் என்று ஞானக்கூத்தன் அவர்கள் அறிிமுகம் செய்து வைத்தார். அப்படியான அறிமுகம் தேவையா ?

.திலகபாமாவின் பையன் கையில் அழைப்பிதழ் வைத்திருந்தான். அதில் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது குடும்ப நிகழ்வாக கவிதை வெளியீடு மாறியிருப்பது மகிழ்ச்சியான விசயம்.

நான் என்பது பற்றி ஞானக் கூத்தன் பேசினார். .பெண் பேசும் போது மட்டும் இந்த நான் பெண்ணுடைய சுயம் சார்ந்த விசயமாக மட்டுமே பார்க்க ப்படுகிறது. பொது தளத்தில் பார்க்கப் படுவதில்லை.

தொகுப்பு வந்த அடுத்த வருடமே அடுத்த தொகுப்பு வந்தால் நல்ல கவிஞர் இல்லைன்னு சொல்லி விடுகிறார்கள்.அதையெல்லாம் பற்றி திலகபாமா கவலைப் படாமல் எழுத வேண்டுமென்றும் பேசினார் வெண்ணிிலா.

‘ சிறகுகளோடு அக்கினிப் பூக்களாய் ‘கவிதைத் தொகுப்பை விமரிசனம் செய்த வெங்கடேஷ் அவர்கள், சிறு சிறு சம்பவங்களை தொகுத்திருக்கும் நீள் கவிதை துள்ளல்களோடு தன் பயணத்தை நடத்தியிருக்கிறது என்றார்.

அடுத்து பேசிய அழகிய சிங்கர் அவரது கருத்துரையில், பாரதியாரின் வசன கவிதையிலிருந்து இன்றைய புதுக்கவிதை வரை மொழி கூராகும் முயற்சி யை கவிதை எடுத்துக் கொண்டுள்ளது. எழுத்துக்கு பிறகு கவிதை புதிய தளங்களைக் கண்டடைந்துள்ளது.

புத்தகங்கள் மூலம் பலர் சினிமாவுக்கு போகும் முயற்சியை கொண்டுள்ளனர்.

சிறு பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுபவர்களே கவிதைகளை தொகுப்பாக்க தயங்கக் கூடிய இந்த சூழலில் எந்த சிறு பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதாமல் தொகுப்பாக்கியிருப்பதிலிருந்து சிறு பத்திரிக்கைகளின் தயவு கவிஞர்களுக்கு தேவையில்லை என்பது தெரிகிறது.

திலகபாமாவின் கவிதைகளில் கவிதைக்கான மொழி சரியாக இருக்கிறது மொழியின் பிரவாகம் தெறிக்கிறது. பெண்ணியத் தாக்கம் இருக்கிறது

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த லஷ்மி கனகசபாபதி அவர்கள் தன்னுரையில், திலகபாமாவின் கவிதைகளை தொடர்ந்து ரசித்து ரசித்து படித்து வருகிறேன் பாரதிக்கு பிறகு இந்த மண்ணின் உயிர்ப்பை தன்னுடைய யதார்த்தப் போக்கோடு அழகியல் நோக்கோடு , எந்த ஒரு திக்க மனப் பான்மையுமின்றி ஒவ்வொரு இடத்திலும் தெளிவான பார்வையோடு சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து திலகபாமாவின் ஏற்புரையில், முன்னுரையில் சொல்லியிருப்பது போல் என் வாழ்வின் தேடல்களின் பாதையில் என்னுள் விழுந்த பாதிப்புகளும் பதிவுகளுமே என் கவிதைகள். சமீப காலமகத்தான் இலக்கிய வாதிகளையும் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன்பிருந்தே கவிதை என்னோடு இருந்திருக்கிறது

பெண் எழுத்தாளர்கள் வாழ்வில் வெற்றி அடைவதில்லை என்று சொன்னார்கள். எனக்கு அது சரியான எண்ணமாக தோன்றவில்லை.அது எப்படி சொல்ல முடியும். அவ்வை, ஆண்டாள் போன்ற பெண்கள் ஓர் ஆணைச் சார்ந்து குடும்ப அமைப்பில் வாழவில்லை என்பதற்காக அவர்கள் வாழ்வில் தோற்றவர்கள் என்று எப்படி சொல்லமுடியும். அவர்கள் வாழ்வின் இலட்சியங்களை அவர்கள் அடைந்தார்கள் என்பது வாழ்வின் வெற்றி யல்லவா.

நான் பெண்ணியம் பேசுகிறேனா இல்லையா தெரியாது ஆனால் என் உணர்வுகள் சிதைக்கப்படுகையில், அதை உணர வைப்பதாக என் கவிதைகள் அமைகின்றன. இதில் என் நான் என்பது நான் எனது குடும்பம் , சமூகம் , இப்படியாக அதன் எல்லைகள் விரிவடையும். நான் என்று பேசப்படுவதால் இது வெறும் என் சுய உணர்வுகளை மட்டுமே பேசுவதல்ல.

நான் நானாய் வாழ முடியாது என் உணர்வுகள் சிதைக்கப் படுவதை தொடர்ந்து உணர்க்கிறேன்.பல பெண்கள் தங்கள் உணர்வுகள் சிதைக்கப் படுவதை உணராமல் இருப்பதையும் என் கவிதைகள் பேசுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் நாங்களும் மனிதமாக மதிக்கப் படவேண்டுமென்பது தான் .பெண்ணுக்கான பல்லக்குகளை தூக்குவதில்லை என் கவிதைகள்.

நவீன தீவிர இலக்கிய தேடல்கள் எதுவும் எனக்குள் இல்லை. வாழ்வுக்கான தேடல்கள் தான் என்னிடம் உண்டு . என் வாழ்வுக்கான தேடலில் கவிதை என்னோடு பயணிக்கிறது.

சிவகாசியிலிருந்து சென்னை வந்து புத்தக வெளியீடு செய்ய பெரும் உறுதுணையாயிருந்த அணைவருக்கும் எனது நன்றிகள்

என்ற ஏற்புரையோடு விழா நிறைவு பெற்றது

mahend-2k@eth.net

Series Navigation