திரைக்கடலோடியும் –

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

K.V.ராஜா


அவனுக்கு விமானத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததில் சந்தோஷம் பிடிப்படவில்லை. அது மட்டுமா சந்தோஷம், இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கும் அன்பு மனைவி, கொஞ்சும் மழலையில் அப்பா என அழைக்கக் காத்திருக்கும் ஃபோட்டோவில் மட்டுமே பார்த்த அவனது மகள். அவன் சவுதி அரேபியா சென்ற ஆறு மாதம் கழித்து தான் குழந்தை பிறந்தாள். குழந்தையை பார்க்க வேண்டும் என்பதாலோ என்னவோ, மூன்றாவது முறையாக விடுமுறைக்கு சென்றாலும் ஏதோ முதல்முறை செல்வது போல ஒரு துடிப்பு.

அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான், மணி காலை ஐந்து ஆகி இருந்தது. விமானத்தில் ஏறியதுமே இந்திய நேரத்திற்கு கடிகாரத்தில் நேரத்தை மாற்றி வைத்துவிட்டான். பயணச்சீட்டில் காலை ஏழு மணிக்கு விமானம் சென்னையை அடையும் என்று குறிப்பிட்டு இருந்தது. வெளியில் வானம் ஆரஞ்சும் கறுநீலமுமாய் ஓவியம் வரைந்திருந்தது. மணி ஏழாகி சென்னை சீக்கிரம் வரக்கூடாதா என்று மனம் துடிக்கத் தொடங்கியது. பக்கத்து இருக்கையில் பார்த்தான், ஒரு பெரியவர் சிறு குறட்டையோடு இவன் தோளில் சாய்ந்து உறங்கிக்கொண்டு இருந்தார். அடிக்கடி தோளில் அவர் தலை விழுவது அசெளகர்யமாக இருந்தாலும் அவர் தூக்கத்தைக் கலைத்த பாவம் வேண்டாம் என்று தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான். அவரது உருவத்தை வைத்து நோக்கும்போது இதுவரை இருபது வருடங்களாவது பாலைவன வாழ்க்கையை அனுபவித்து இருப்பார் என்று தோன்றியது. வருடத்திற்கு ஒரு மாத விடுமுறை என்று கணக்கில் கொண்டாலும் இத்தனை வருடங்களில் அவர் அதிகபட்சம் குடும்பத்துடன் வாழ்ந்தது இரண்டு வருடங்களாக இருக்கும். ஆறு வருடம் இருந்ததற்கே நாம் இவ்வளவு அலுப்பு தட்டிவிட்டோமே என்று எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டான். அடுத்த சீட்டில் ஒரு இருபத்தியைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் தலை மேலிருந்த விளக்கை ஒளிரவிட்டு ஏதோ ஒரு ஆங்கில நாவலில் மூழ்கி இருந்தான். அவனிடம் தமிழ் புத்தகம் ஏதேனும் இருக்குமா என்று கேட்க நினைத்தவன், புத்தகத்தில் மனம் செல்லாது என்று நினைத்தானோ என்னவோ… கேட்கவில்லை.

இப்போது வெளியில் பார்க்க, வானம் வெளிர் நீல நிறத்தில் அழகாக இருந்தது. விமானம் சிறிது சிறிதாக தாழ ஆரம்பிப்பது உணர முடிந்தது. சில சமயங்களில் வெண்மேகங்கள் ஜன்னலின் வெளியே பறந்தன. மேகத்தைப் பார்க்கும்போது ஊட்டி தேனிலவில், மேகங்கள் அவனை தழுவ, அவன் புது மனைவியை தழுவிய காட்சிகள் மனதிற்குள் நிழலாடியது. மனைவியை விட்டுப்பிரிந்தது நினைத்து மனதில் சோகம் கப்பியது. அவனுக்கு மட்டும் குடும்பம் முழுவதும் பிரிந்து பாலைவனத்தில் கஷ்டப்படவேண்டும் என்ற ஆசையா என்ன… உடன்பிறந்த இரு தங்கைகளுக்கு திருமணம் முடித்துவைக்கவே இவனது நான்கு வருட சவுதி வாழ்க்கை ஓடிவிட்டது. அதற்கு பிறகு இவனது திருமணம், அது முடிந்து இரண்டு வருடம் கழித்து இதோ இரண்டு மாத விடுப்பில் செல்கிறான்.

விமானம் சிறிது சிறிதாக தாழ ஆரம்பித்தது. இருக்கைப்பட்டியை கட்டிக்கொள்ள வேண்டி விளக்கு ஒளிரவும் வேகமாக கட்டிக்கொண்டான். தூங்கிக்கொண்டு இருந்த பலர் எழுந்து முகம் கழுவ சென்றனர். கீழே நோக்கினான், சில கட்டிடங்கள் புள்ளிகளாக தெரிய ஆரம்பித்தன. புள்ளிகளுக்கு நடுவே மங்கலான கருப்பு கோடு வளைந்து வளைந்து செல்ல, ஆகா சென்னை தான் என உறுதிப்படுத்திக் கொண்டான். கூவம் நதி கூட வானிலிருந்து பார்க்கும்போது எத்தனை அழகு. கொஞ்சம் கொஞ்சமாக சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியே வர… இதோ வங்கக்கடல், அலைகளும் துறைமுகத்தின் அடுத்துள்ள பகுதிகளும் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தன. மனம் விமானத்தை விட வேகமாக இறங்கி ஓட துடித்தது. வங்கக்கடலின் காட்சிகள் மாறி மரங்களும் குன்றுமாய் தெரிய ஆரம்பிக்க அடுத்த சில நிமிடங்களில் தடக்கென விமானம் ஓடுதளத்தில் இறங்கியது. விமானம் முழுவதுமாக நின்றதும் கைப்பெட்டியோடு விரைந்தான்.

குழந்தைக்கு பொம்மைகளும், வீட்டினருக்கு சில துணிவகைகளும், நண்பர்களுக்கு வாசனை திரவியங்களும், சில பருப்பு வகைகளும் மட்டுமே கொண்டு வந்திருந்ததால் சுங்கவரி பிரச்சனைகள் இல்லாமல் வேகமாக வெளியில் வர முடிந்தது. அவன் வீட்டிலிருந்து யாரையும் வரச்சொல்வதில்லை. அவனது அக்கா மகன் ஒருவன் மதுரை மேலூரில் டாக்ஸி ஓட்டிக்கொண்டு இருக்கிறான், அவன் மட்டும் கடந்த முறை போலவே வந்திருந்தான். குறைந்தது எட்டு மணி நேரங்களாவது ஆகும் மேலூரை அடைய… டாக்ஸியில் போகும்போது இவனுக்கு ஒரு விசா இந்த முறை ஏற்பாடு செய்யவேண்டும் என மனதிற்குள் கூறிக்கொண்டான்.

மேலூர் பஸ் ஸடாண்டு சந்திப்பில் கக்கன் சிலையை அடையும்போதெல்லாம் இதயத்துடிப்பின் அதிர்வுகளை அவனாலேயே உணர முடிந்தது. கண்கள் ஒரு இடமாக நில்லாமல் பறக்க தொடங்கியது. வீட்டை அடைந்ததும் காரின் ஓசைக்கேட்டு அவனது அம்மா தான் ஆலம் கரைத்து எடுத்து வந்தார்கள், மனைவியையும் குழந்தையையும் கண்கள் தேடின. குழந்தையைக் கண்டதும் சந்தோஷத்தில் அழுகையின் உச்சநிலை. எல்லோரும் அடுத்து இருந்ததால் மனைவியோடு அவனது உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை.

இரவு தான் மனைவியோடு தனியே நேரம் செலவிட முடிந்தது. பகல் முழுவதும் தனது மகளுக்கு விளையாட்டு காட்டி கொஞ்சவும், காண வந்த நண்பர்களை உபசரிப்பதிலுமே நேரம் போய்விட்டது. இன்னமும் வெட்க ஆடை அனிந்த மனைவிக்கு புதிதாய் வாங்கி வந்த கழுத்து சங்கிலியை அணிவிக்க, அவளோ இரு வருடப் பிரிவில் நெஞ்சில் சாய்ந்து விம்மத் தொடங்கினாள். அவனுக்கும் கண்ணீர் துளிர்த்தாலும் வெளியில் காட்டாது மனைவியை சமாதானப்படுத்தினான். இந்த விடுமுறை கழிந்தால் அடுத்த ஆறு மாதத்தில் இப்போது உள்ள வேலைக்கான ஒப்பந்த காலம் முடிந்துவிடும். மீண்டும் ஊருக்கே திரும்பவந்து ஏதேனும் சிறு மளிகைக் கடை நடத்திப் பிழைத்துக்கொள்ளலாம். இந்த விடுமுறை வாழ்க்கை பின்னர் இல்லை. மனைவி, மக்கள், பெற்றோர் என்று எளிமையும் இனிமையுமாய் வாழ்க்கை ஓட ஆரம்பித்துவிடும்.

***********************************

விடுமுறை ஓடிய வேகம் தெரியவில்லை. விருந்துக்கு அழைத்த சொந்தங்கள், இருக்கும் இடத்தில் கோயில்கள் இல்லாத குறைக்கு போகும் தூரத்தில் உள்ள கோயில்கள் என்று இரண்டு மாதமும் இரண்டு நாட்களாய் ஓடிவிட்டது. இரண்டு வருடத்தில் இழந்த சந்தோஷங்களை எல்லாம் இழுத்து வைத்து அனுபவித்துவிட்டான். காதலுடன் விடைப்பெற்ற மனைவியிடம் கண்ணீரை மட்டும் கடனாக பெற்று இதோ மீண்டும் அதே பாலைவன வாழ்க்கை. வேலை, சாப்பாடு, தூக்கம், வெள்ளிக்கிழமை ஆனால் வீட்டிற்கு ஃபோன் என்று இயந்திரமயமாய் ஓடத் துவங்கிவிட்டது.

***********************************

மீண்டும் சவுதி அரேபியா வந்து ஆறு மாதங்களும் ஓடிவிட்டது. வேலை செய்யும் முதலாளியிடம் வேலை ஒப்பந்தத்தை அடுத்து இரு வருடங்களுக்கு நீட்டிக்க சொல்லிவிட்டான்.

கடந்த வெள்ளியன்று வீட்டிற்கு ஃபோன் செய்த போது அம்மாவும், மனைவியும் சிவகங்கை செல்லும் சாலையில் இருபத்தியைந்து செண்ட் இடம் ஒன்று குறைந்த விலைக்கு வருகிறது, அந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு கல்லூரிக் கட்டப்பட போவதால் பின்னர் வாங்கிய இடத்தை விற்க வேண்டி வந்தால் நல்ல விலைக்கு போகுமென்றும், மகளின் பிற்கால வாழ்க்கைக்கு ஒரு நல்ல சேமிப்பாக இருக்கும் என்று சொல்லி பணம் அனுப்ப சொல்லி இருந்தார்கள். முதலாளியிடம் வேலைக்கான முன்பணம், நண்பர்களிடம் கடன் என்று பல சிரமங்களுடன் பணத்தை அனுப்பிவிட்டான். வாங்கிய கடன்களை அடைக்க எப்படியும் இரு வருடங்களேனும் இனியும் இங்கே உழைக்க வேண்டிவரும்.

இப்போது அவனது மனைவி ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறாள். பிறக்கப்போவது மகன் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அடுத்து மீண்டும் மகனின் படிப்பு செலவுக்கான சேமிப்பாக இரண்டு வருடங்களோ நான்கு வருடங்களோ இருக்க வேண்டிவரும். அவனுக்கும் இந்த விடுமுறை வாழ்க்கை பழகிப்போய் என்றேனும் ஒரு நாள் சுயநிலை மறந்து பக்கத்திலிருப்பவர் தோளில் சாய்ந்து உறங்கிக்கொண்டே விமானத்தில் பயணிக்கக்கூடும்.

***********************************

kvraja@awalnet.net.sa

Series Navigation