திராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

ஜடாயு


சென்ற திண்ணை இதழில் மு.இளங்கோவன் இப்படி ஒரு எதிர்வினையை எழுதியிருக்கிறார்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805011&format=html

முதலில் ஒரு சில்லறை விஷயம். என் பெயரை நான் எழுதுவது போலன்றி “சடாயு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெயரைப் பல வகைகளில் எல்லா மொழிகளிலும் எழுதமுடியும் தான். ஆனால் ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கையில் அப்பெயருடையவர் எழுதுவது போலவே எழுதுவது என்பது அடிப்படை நாகரீகம், பண்பு, இணைய ஒழுக்கம் (netiquette). இதிலும் கொள்கை, புண்ணாக்கு எல்லாம் கலப்பது, எனது பெயரை இப்படித் திரிப்பது என்பது அநாகரீகம்.

(“தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை” என்று தானே கம்பன் சொல்லியிருக்கிறான்? ஆமாம். ஆனால் கம்பன் சொன்னது போலவே எல்லாப் பெயர்களையும், எல்லாக் காலத்திலும், எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கிறோமா? தொல்காப்பியர் சொன்ன பெயர்ச்சொல் விதிகளின் படி தான் இப்போது எல்லாரும் பெயர் வைத்துக் கொள்கிறார்களா?)

மேலும் சொல்கிறார்:

// “அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர் உள்ளத்துள் உறைந்துள்ள எண்ணங்கள் என்ன என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது”//

அடேயப்பா! ஒருவரது ஒரே ஒரு வலைப்பதிவைப் பார்த்தே இவ்வளவு தூரம் உளவறியக் கூடிய ஜித்தர்கள் எல்லாம் இருக்கிறார்களா? ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

// “கட்டுரையைப்பற்றி எழுதியுள்ளதைவிட கிறித்தவ மதம்,திராவிட இயக்கம் பற்றித் தாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும்” //

இது அபாண்டம். என்னுடைய கட்டுரையில் நான் தொட்டுக் காட்டிய மூன்று விஷயங்கள் சுருக்கமாக –

தமிழ்ப் பழம்பெருமை, நவீனத்துவம், கடவுள்மறுப்பு ஆகிய முரண்களை சமாளிக்கத் தெரியாத திராவிட இயக்கம் கால்டுவெல்லின் “ஆரிய திராவிட இனவாதத்தை” வைத்து ஒரு சட்டகம் உருவாக்கியது இந்தச் சட்டகத்தைக் கொண்டு திருக்குறளுக்கு கண்மூடித்தனமாக உரைகண்டது, அடிப்படை தர்க்க ஓட்டைகள், சொல் பயன்பாடு போன்றவற்றைக் கூட கண்டுகொள்ளாதது இத்தகைய செயல்கள் மத்திய கால நிறுவன கிறிஸ்தவத்தின் DeHellenization முயற்சிகளின் மோசமான காப்பி போன்று இருந்தது

இதை இப்படிப் புளியைப் போட்டு விளக்கிய பின்னும், முத்திரை குத்துதல் மூலமே ஒரு வாதத்தை எதிர்கொள்ள நினைப்பவர்கள் பற்றி ஒன்றும் பேசுவதற்கில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திராவிட இயக்கத்தின் பொதுவான “சட்டக” அணுகுமுறை குறித்து நான் கூறியிருந்தவற்றை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் இந்த எதிர்வினையும் எழுதப் பட்டுள்ளது.

இப்படி எழுதிச் செல்கிறார்.
// “தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்தி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் ஆரியர்கள்” //
// தமிழ் இலக்கியங்களையும்,தமிழர்தம் கலைகளையும் சமற்கிருதமயமாக்கிக் கொண்டு தமிழ்மூலத்தை அழித்தவர்கள் //
// பின்னர் வளவன், வழுதி,பாண்டியன், சேரன் என்ற பெயர்கள் மாறிஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்,விஜயாலயன் வந்தன. தமிழ் நீச பாஷையானது.மக்கள் அடிமையாக்கப்பட்டனர். //

அடடா, என்ன அரிய கண்டுபிடிப்பு! அந்த “அடிமையாக்கப் பட்ட” தமிழினத்தில் தான் உலகெங்கும் தமிழ்ப் பெருமையை நிலைநாட்டிய ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும் தோன்றினரா? இன்றும் தமிழனின் சிற்பக் கலையைப் பறைசாற்றும் மாமல்லபுரமும், தஞ்சைப் பெருங்கோயிலும், திருவரங்கமும் தோன்றினவா?

இந்த “நீசபாஷையாக்கப் பட்ட” தமிழில் தான், தமிழின் அதிஉன்னத காவியங்களான கம்பராமாயணமும், பெரியபுராணமும், சிந்தாமணியும் படைக்கப் பட்டனவா? தமிழர் சமயத்தின் ஆணிவேர்களான சைவத் திருமுறைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் எழுந்தனவா? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனும், சங்கத் தமிழ்மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளும், தமிழ்விரகன், தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட சைவப் பெருந்தகையும் உருவானார்களா?

இந்த அடிப்படையான, எளிமையான கேள்விகளைக் கூட சிந்தித்துப் பார்க்காமல், அது எப்படி தன்னை ஒரு சட்டகத்தில் அறைந்து கொண்டு ஒரு “முனைவர்” எழுதுகிறார்? சொல்லப் போனால் இந்தக் கேள்விகளை என் முதல் பதிவிலேயே எழுப்பியாகி விட்டது.

// முகத்தை மறைத்துக்கொண்டு எழுதும் சடாயுவுக்கும் அவர் போன்றவர்களுக்கும், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் //

தொடக்கத்தில் ஜடாயுவின் ஜாதகமே தெரியும் என்ற ரீதியில் எழுதினார். இப்போது “முகத்தை மறைத்துக் கொண்டு”. என்னதான் சொல்லவரீங்க? “அவர் போன்றவர்கள்” என்பது யார்?

என்னை சில புத்தகங்கள் படிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். திண்ணை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான வரலாற்று அறிஞர் எஸ்.இராமச்சந்திரனின் “தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்” என்ற இந்த ஒரு கட்டுரையைப் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் – http://sishri.org/caldwel.html.

அன்புடன்,
ஜடாயு

http://jataayu.blogspot.com/

பின்குறிப்பு:

இதே கடிதத்தில் சம்பந்தமே இல்லாமல் வேத திருமணச் சடங்கில் வரும் ஒரு மந்திரத்தைப் பற்றிய “சட்டக” அபத்தக் கருத்து ஒன்றை அப்படியே போகிற போக்கில் உமிழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.

// இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை தூய்மை(புனிதம்)பெறும்பொருட்டு முதலில் சோமனும்,அடுத்த நாள் கந்தருவனும்அதற்கடுத்த நாள் உத்திரனும்,நான்காம் நாள் அக்கினியும் நுகர்ச்சிசெய்தபிறகு இவளை மணம்செய்தவன் புணரவேண்டும் என்ற மந்தரங்கள் அருவருப்பு ஊட்டும் தந்திர வித்தைதானே //

இதில் “இவர்கள்” என்பது யார்? பாரத நாடு முழுதும் ஏராளமான சமூகங்கள் வேதத் திருமணச் சடங்கில் நம்பிக்கை வைத்து அதன்படி மணம் புரிகின்றனர். அவர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்திருக்கிறார். இதற்கும் எடுத்துக் கொண்ட பொருளுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தமில்லையென்றாலும், தெரிந்துகொள்ள விழைபவர்களுக்காக இது பற்றிய எனது பழைய பதிவு ஒன்றை பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

பிற்சேர்க்கை:

ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வெறியர்கள் இந்து சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக வசைபாடுவது தெரிந்த விஷயம் தான். சில சமயங்களில் பித்தம் தலைக்கேறி ஏதாவது ஒரு வேதமந்திரத்தையோ அல்லது வேத இலக்கியத்தில் உள்ள படிமத்தையோ எடுத்துக் கொண்டு, அதற்குப் “பொருள் கூறி” அது உலகத்திலேயே அருவருப்பான விஷயம் என்றெல்லாம் பிரசாரம் செய்வார்கள்.

உதாரணமாக, பாணிக்ரஹணம் எனப்படும் கைத்தலம் பற்றும் சடங்கின் போது மணப்பெண்ணை நோக்கிச் சொல்லப் படும் ஒரு மந்திரம்:

सोम: प्रथम: विविदे गन्धर्वो विविद उत्तर: ॥
तृतीयो अग्निस्ते पति: तुरीयास्ते मनुष्यजः ॥

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர: |
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ: ||

(ரிக்வேதம் 10.85.40)

“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர். பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”

பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு. “மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.

முதலில் இந்த மந்திரத்தின் தாத்பர்யம் என்ன? பிறந்தது முதல் தேவர்களின் ஆசிர்வாதத்தாலும், அனுக்ரஹத்தாலும் வளர்ந்த பெண்ணை, அவர்கள் ஆசியுடன் மனிதன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக் கொள்வது என்பது.

எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர். அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள். “சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது, கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம். அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு. இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன்.
ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை. கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.

தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும் திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்கவேண்டும்? ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது. திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன.

“பெண்ணே, அர்யமாவும் பகனும் உன்னை ஆசிர்வதிக்கட்டும், என் குலம் விளங்க வரும் வரப்பிரசாதம் நீ”

“வேதத்தை அறிந்த பகன் முதலியோர், இல்லறம் என்ற புனிதமான விரதத்தை ஏற்றனர். உன் கரம் பிடித்த நானும், அந்த வம்சத்தைச் சேர்ந்தவனானேன்.”

“ஏழு அடிகள் என்னுடன் நடந்துவந்த நீ என் உயிர்த் தோழியாகி விட்டாய். நீ ரிக், நான் சாமம். நீ பூமி, நான் ஆகாயம். நீ சொல், நான் பொருள். நீ ஆத்மா, நான் மனம். இனிய சொற்களை உடையவளே, என்னைப் பின் தொடர்ந்து வந்த நீ என் வம்சத்தை விருத்திசெய்வாய்”

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சில வருடங்கள் முன்பு, சேலத்தில் அதிகமாக வசிக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு சடங்கு. சமூகப் பெரியவர் நடுவில் வந்து அமர்ந்தார். மணமகன், மணமகள் வீட்டார் இருபுறமும். சடங்கு ஆரம்பித்தது. மணமகனின் தந்தை மகளின் தந்தையிடம் ஒரு ரூபாய் கொடுத்தார், அதை அவர் மகளின் தாயிடம் கொடுத்தார், பெரியவர் சொன்னர் “இது மகளைப் பெற்று வளர்த்ததற்காக”. அடுத்தது இன்னொரு ரூபாய், “இது பாலூட்டியதுக்காக”. அப்புறம் ஒரு ரூபாய் “இது சீராட்டியதற்காக”. இப்படி ஒரு பதின்மூன்று ரூபாய் வரை போயிற்று. இந்தப் பரிமாற்றம் முடிந்ததும் பத்திரிகை வாசிக்கப் பட்டது. பக்கத்தில் இருந்த பெரிசு ஒருவர் “அந்தக் காலத்தில பதிமூணு பணம் அப்படின்னு குடுப்பாங்க, பெரிய தொகை அது.. மகளைப் பெத்துத் தந்ததுக்கான கடனைத் தீர்க்கணும் இல்லையா” என்று பேசிக் கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ திருமண நிச்சயதார்த்தங்களில், மணப்பெண் கையில் அணியும் மோதிரம் எதைக் குறிக்கிறது? அவள் முதலில் கர்த்தருக்கு மணமுடிக்கப் பட்டு பின்பு மனிதனுக்கு மனைவியாக வருகிறாள் என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவ கன்யாஸ்தீரிகள் தங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சடங்கின் போது ஏசுவின் மணமகள்கள் (Brides of Jesus) ஆவதாகவே கூறுவார்கள்.

இது போன்ற பல சடங்குகள் தமிழ்நாட்டின் பல சமூகங்களின் திருமணங்களில் உள்ளன. இதில் எல்லாம் எந்த அருவருப்பும் தென்படவில்லையா? ஆரிய, வந்தேறி குணங்கள் எதுவும் தென்படவில்லையா? பகுத்தறிவுப் பகலவனுக்கே வெளிச்சம்.


jataayu.b@gmail.com

Series Navigation