தாய்க்கு ஒரு நாள்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

சந்திரலேகா வாமதேவா


மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிறு அன்று, அதாவது எதிர் வரும் 9ம் தேதி தாய்க்குரிய நாள், அதாவது Mother ‘s day, உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படவுள்ளது. தம்மைப் பெற்று, அன்பு பாராட்டி, மார்பிலும் தோளிலும் தூக்கிச் சீராட்டி வளர்த்து, ஆளாக்கிய தாயை இந்த நாளில் அனைவரும் நினைவு கூருகின்றனர். கஷ்டமாயினும், நஷ்டமாயினும் நோயாயினும், வறுமையாயினும் எந்த நிலை வந்த போதும் மாறாத தாயின் எதிர்பார்ப்பில்லா அன்புக்கு ஈடாக எதைக் கூறமுடியும் ? ‘God could not be everywhere and therefore he made mothers. ‘ அதாவது கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததால் தாயைப் படைத்தார் என்று ஒரு யூதப் பழமொழி கூறுகிறது. கடவுள் எவ்வாறு வேறுபாடின்றி உயிர்களை இடைவிடாது என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாரோ அப்படியே தாயும் தனது பிள்ளைகளை என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாள். இருவரின் அன்பிலும் ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, பிரதி பலனை எதிர்பார்க்கும் தன்னலமும் இல்லை. தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்று கூறும் தமிழ்ப் பழமொழியும் இதே கருத்தில் அமைந்தது தான். அதில் இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது. அதாவது தாய்க்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது என்பது கோயிலில் போய் கடவுளை வழிபாடு செய்வதை விடச் சிறந்தது என்பதாகும்.

தாயுடன் சுவை போகும் என்று இன்னுமொரு பழமொழி உள்ளது. இது பிறந்த நாள் தொடக்கம் என்றும் நேரம் தவறாது தனது பிள்ளைகளுக்கு உணவளிக்கும் தாயின் பணியுடன் தொடர்புள்ளது. தாய்ப்பாலுக்கு ஊடாகவே பிள்ளைக்கு பல்வேறு சுவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்றும் அந்தச் சுவையே பிள்ளையுடன் வாழ்நாள் முழுவதும் தங்குகின்றது என்றும் அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. அத்துடன் உடல் வளர்ச்சியுறும் இளம் பருவத்தில் அதாவது பசி மிகுந்த பருவத்தில், பிள்ளைகளின் சுவைக்கேற்ப உணவு தயாரித்து வழங்குவதும் தாயே. தாய் அளித்த உணவின் சுவை பிள்ளைகளுடன் நிரந்தரமாகத் தங்கி விடுவதால் அவளின் மறைவுடன் அந்த சுவை மிகுந்த உணவு கிடைப்பது முற்றுப் பெறுகிறது. தாயைப் பற்றிக் கூறும் பழமொழிகள் தாயின் சிறப்பையும் அவளது பங்களிப்பையும் காட்ட முற்படுவன. ஆயினும் தாயின் எதிர்பார்ப்பற்ற அன்பை எடை போட இந்த உலகில் யாரால் முடியும் ?

ஒரு பிள்ளையின் வாழ்வில் ஏற்படும் தாயின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த தாய்க்குரிய நாள் ஏற்படுத்தப்பட்டது. எமது தமிழ்ப் பண்பாட்டில் தாய்க்குரிய மதிப்பைக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் தேவையற்றது. மற்றைய பல பண்பாட்டினர் போலன்றி எமது பண்பாட்டில் தாய்மாரின் பங்களிப்பு அளவற்றது. தமது இன்பங்களை முற்றாகப் புறக்கணித்து பிள்ளைகளின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது. பிள்ளைகளைக் கண்ணின் மணி போல கவனத்துடன் பேணி அன்புடன் வளர்க்கும் தாய்மார் இறுதி வரை பிள்ளைகளின் நலன்களையே கருத்தில் கொள்கின்றனர். அதனால் பிள்ளைகள் அவர்களது காலம் உள்ள வரை தமது நன்றியையும் அன்பையும் கரிசனையையும் அவர்களுக்குத் திருப்பிக் காட்டக் கடமைப்பட்டவர்கள். அந்தக் கடமை ஒரு நாளுக்குக் குறுக்கப்படக் கூடியதல்ல. இதனாலேயே காலம் உள்ள வரை தாயை அன்புடன் பேணி அவள் இறந்த பின் ஒரு நாளில் இந்துக்கள் விரதமிருந்து அவளை நினைவு கூருகின்றனர். மே மாதம் 4ம் தேதி, அதாவது தமிழ் நாட்காட்டியின் படி, சித்திரை மாதத்தில் வந்த பூரணையில் இறந்த தாயை நினைவு கூரும் நாள் வந்ததை நாம் அறிவோம். வருடம் தோறும் வரும் சித்திரைப் பூரணையில் இறந்து போன தாயை நினைவு கூருவது தமிழ் இந்துக்களின் வழக்கம்.

எமது பண்பாட்டுக்கு உரியதால்லாவிடினும் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் இந்தத் தாய்க்குரிய நாள் எவ்வாறு தோன்றி வளர்ந்தது என்பது பற்றி பார்ப்போம். தாய் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட பண்டைய வஸந்த விழாவே தாய்க்குரிய நாளின் முன்னோடி என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பண்டைய கிரேக்க சாம்ராச்சியத்தில் தெய்வங்களின் தாயாகிய Rhea வை கெளரவிக்க வஸந்த காலத்தில் விழா எடுக்கப்பட்டது. மற்றொரு தாய் தெய்வமான ஸிபெலியின் (Cybele) வழிபாடு ஏறக்குறைய தாய்க்குரிய நாள் விழா போல ரோமாபுரியில் கொண்டாடப்பட்டது. கிறீஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 250 வருடங்களின் முன்னர் தொடக்கம் மார்ச் 15 தொடக்கம் 18ம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்பட்டது.

இங்கிலாந்தில் ஏறக்குறைய தற்போதைய தாய்குரிய நாளை ஒத்த Mothering Sunday என்பது நோன்புக் காலத்தின் நடுப்பகுதியில் வரும் நாலாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ஆரம்பகால தேவாலயம் ஸிபெலி Cybele ஐ கெளரவிக்கும் விழாவை ஏற்று, அதனை யேசுவின் தாயான கன்னி மரியாளைப் போற்று வகையில் மாற்றி அமைத்ததாகச் சிலர் கருதுகின்றனர். தாய் தெய்வத்திற்கென அமைக்கப்பட்ட தேவாலயத்தில் மக்கள் ஞானஸ்நானம் பெறுவதற்காக இந்த நாளில் சென்றதால் இந்த மரபு ஏற்பட்டதாக வேறு சிலர் கருதுகின்றனர். மக்கள் தமது பகுதிகளில் உள்ள தேவாலயத்திற்கு இந்த நாளில் சென்று வழிபாட்டுப் பொருட்களை அர்ப்பணித்தனர். 1600 களில் இங்கிலாந்தில் தொழிலாளர்களாக கடமையாற்றிய இளம் ஆண்களும் பெண்களும் இந்த Mothering Day யில் தத்தமது தாய்மாரைச் சென்று சந்தித்தனர். அப்போது தமது தாய்மாருக்கு Mothering cake, அணிமணிகள் போன்றவற்றைப் பரிசுப் பொருட்களாக எடுத்துச் சென்றனர். இந்நாளில் கோதுமையை இனிப்பூட்டிய பாலில் சமைத்துப் பரிமாறும் வழக்கமும் காணப்பட்டது. அத்துடன் வட இங்கிலாந்திலும் ஸ்கொட்லாந்திலும் பட்டரில் பொரிக்கப்பட்ட peas இலிருந்து தயாரிக்கப்பட்ட pancake ஐ உண்ணும் வழக்கம் இருந்தது. Simnel cake எனப்பட்ட பழக் கேக்கை Mothering cake ஆகத் தயாரித்த போதும், அக்காலத்தில் நோன்பு வருவதால் அப்போது உண்ணாது அதைப் பாதுகாத்து வைத்திருந்து ஈஸ்ரர் அன்று உண்டனர். தொழிற்புரட்சியால் ஏற்பட்ட வேலை மாற்றங்களால் இந்த மரபு நின்று போயிற்று. பின்னர் 20ம் நூற்றாண்டில் தாய்க்குரிய தினம் விடுமுறையாக்கப்பட்டது.

தற்போதைய தாய்க்குரிய நாளை ஆரம்பித்தவராக Anna M Jarvis என்பவர் கருதப்படுகிறார். இவர் 1864ல் பிறந்து 1948ல் மரணமடைந்தார். அவர் ஒரு போதும் திருமணம் செய்யவில்லை. தனது தாயான Reese Jarvis இல் அளவுக்கு அதிகமான அன்பு கொண்டவர். ஒரு minister இன் மகளான அவரது தாய், மேற்கு வேஜீனியாவில் உள்ள Andrews Methodist Church இன் ஞாயிறு பாடசாலையில் 20 வருடங்களாகப் போதித்து வந்தவர். Anna மேற்கு வேர்ஜீனியாவிலுள்ள Wheeling என்ற இடத்திலுள்ள பெண்களுக்குரிய கல்லுரியில் பயின்று Grafton இல் படிப்பித்து வந்தார். பின்னர் அவர்களது குடும்பம் Pennsylvania வில் உள்ள Philadelphia வுக்கு குடிபெயர்ந்தது. Anna வின் தாயான Reese Jarvis 1905 ம் ஆண்டு மே மாதத்தில் காலமான போது, திருமணம் செய்யாது தனது பார்வையற்ற சகோதரியுடன் தனித்து விடப்பட்ட Anna வுக்குத் தாயின் பிரிவைத் தாங்க முடியாதிருந்தது. துன்பத்தில் ஆழ்ந்திருந்த அவருக்குத் தாயின் நினைவாக தாய்க்குரிய நாளைக் கொண்டாடும் எண்ணம் வந்தது.

தாய் இறந்து இரு வருடங்களின் பின், அதாவது 1907ல், செல்வாக்குள்ள அமைச்சர்கள், வர்த்தகர்கள், கொங்கிரஸ் அங்கத்தவர்கள் ஆகியோரது ஆதரவைப் பெறுவதற்காக அனாவும் அவரது நண்பர்களும் தேசிய ரீதியில் தாய்க்குரிய நாள் விடுமுறையை ஏற்படுத்தும்படி ஒரு கடிதப் பிரசாரத்தை ஆரம்பித்தனர். தாய்மார் உயிருடன் இருக்கும் போது பிள்ளைகள் அவர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து கொள்வதில்லை என்று அனா கருதினார். தாய்க்குரிய நாள் கொண்டாட்டம் தாய்மாருக்குரிய மதிப்பை அதிகரிப்பதுடன் குடும்ப பந்தத்தையும் உறுதிப்படுத்தும் என்றும் அவர் நம்பினார். 1908ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இடம்பெற்ற முதலாவது தாய்க்குரிய நாளில் அனாவின் கோரிக்கையின் படி, மேற்கு வேஜீனியாவில் உள்ள Grafton இலும் பென்சில்வேனியாவில் உள்ள Philadelphia விலும் உள்ள தேவாலயங்களில் திருமதி Reese Jarvis இன் நினைவைக் கெளரவிக்கும் முகமாக விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன. தனது தாய்க்கு மிகவும் பிடித்தமான வெள்ளை Carnation மலர்களை இந்த முதலாவது ஆராதனையில் அனா அனைவருக்கும் வினியோகித்தார். தாயின் அன்பில் நிறைந்துள்ள இனிமை, தூய்மை, பொறுமை, நீடித்துழைக்கும் திறன் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலேயே வெள்ளை Carnation மலர்கள் தெரிவு செய்யப்பட்டன. பின்னர் காலப்போக்கில் சிவப்பு Carnation மலர்கள் வாழும் தாயின் சின்னமாக மாறியது. வெள்ளை Carnation மலர்கள் இறந்த தாயைக் குறிக்க பயன்படுத்தப்பட்டன.

மேற்கு வேஜீனியாவைச் சேர்ந்த Governor ஆல் 1910 ம் ஆண்டில் முதலாவது தாய்க்குரிய நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் Oklahoma மாநிலத்திலும் தாய்க்குரிய நாள் கொண்டாடப்பட்டது. 1911ம் ஆண்டளவில் ஒவ்வொரு மாநிலமும் தத்தமக்குரிய வகையில் தாய்க்குரிய நாளைக் கொண்டாடின. அதே காலத்தில் மெக்சிகோ, கனடா, சீனா, ஜப்பான், தென் அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய இடங்களிலும் தாய்க்குரிய நாள் கொண்டாடப்பட்டது. தாய்க்குரிய நாளில் அர்த்தபூர்வமான கொண்டாட்டங்களை மேற்கொள்ளும் முகமாக 1912ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி Mother ‘s day international association நிறுவப்பட்டது.

ஜனாதிபதி, கொங்கிரஸ் அங்கத்தவர்கள், மற்றும் சகல அரச உத்தியோகத்தர்களும் தாய்க்குரிய நாளில் வெள்ளைக் Carnation மலரை அணிய வேண்டுமென்று பாராளுமன்றத்தின் மக்கள் சபைப் பிரதிநிதிகள் 1913ம் ஆண்டு மே மாதத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை தாய்க்குரிய நாளாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானம் ஒன்றை, 1914ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி, கொங்கிரஸ் ஏற்று நிறைவேற்றியது. தாய்க்குரிய நாளில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாய்மாருக்கு அனைவரும் தமது அன்பையும் மரியாதையையும் காட்டும் முகமாக அரசாங்க கட்டடங்களிலும் வீடுகளிலும் அமெரிக்கக் கொடி பறக்கவிடப்பட்டது. ஜனாதிபதியான Woodrow Wilson தாய்க்குரிய நாளை தேசிய பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தினார்.

ஆரம்பத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற தாய்க்குரிய நாள் ஆராதனைகளில் மக்கள் கலந்து கொண்டனர். அந்நாளில் ஒவ்வொருவரும் தத்தமது தாய்மாருக்கு கடிதம் எழுதினர். பின்னர் காலப் போக்கில் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள், பூக்கள் என அனுப்பும் அல்லது கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்தது. தாயை அன்புடன் நினைவு கூருதலன்றிப் பரிசு வழங்குதல் என்பது அதிக அளவு இடத்தைப் பெற ஆரம்பிக்கவே தாய்க்குரிய நாளை ஸ்தாபிக்க உதவிய அனா மிகவும் கோபமடைந்தார். வர்த்தகர்களின் பேராசையாலும் லாப நோக்கினாலும் அந்த நாளுக்குரிய புனிதத்துவம் கெடுவதாக அவர் நினைத்தார். 1923ல் அவர் தாய்க்குரிய நாள் விழாவை நிறுத்தும்படி வழக்குத் தொடர்ந்தார். Carnation மலர்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியின் அமைதியைக் குழப்பியதாக அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். 1948ல் இறப்பதன் முன்னர் இந்த தாய்க்குரிய நாள் மரபை ஏற்படுத்தியதற்காக அவர் மிகவும் மனம் வருந்தினார் என்று கூறப்படுகிறது. ஆயினும் அமெரிக்காவில் இந்த தாய்குரிய நாள் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலியம் அடைந்தன. அந்த நாளை தாயுடன் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிப்பதற்கான நாளாக அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சகல வயதுள்ள பிள்ளைகளும் அன்று தத்தமது தாய்மாருக்கு விசேடமாக ஏதாவது காரியம் செய்து தாயின் கரிசனைக்கும் அன்புக்கும் நன்றியும் பாராட்டும் செலுத்துவர். காலை உணவை படுக்கையில் வழங்குவது அவற்றில் ஒன்று. வளர்ந்த பிள்ளைகள் உயிருடன் இருக்கும் தாய்க்கு சிவப்பு Carnation மலர்களை வழங்குவர். தாய் இறந்துவிட்டால் அவரது கல்லறையில் வெள்ளை Carnation மலர்களை வைத்து நன்றி கூறுவார்கள். இன்று தாய்க்குரிய நாள் உலகம் முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்க்குரிய நாள் பல நாடுகளில் சிறப்புப் பெற்ற போதும், அதற்கு மேலாக ஒவ்வொருவருக்கும் தமது தாயின் அன்பு என்பது மிக உயர்வானது மட்டுமல்ல தனித்துவமானதும் கூட. தாம் அனுபவித்த தமது தாயின் அன்பையும், தாயால் தாம் பெற்ற உயர்வையும் காலம் தோறும் பலர் கூறி வந்துள்ளனர். அவ்வாறான சில அனுபவங்களை இங்கு பார்ப்போம்.

தாயின் கரங்கள் மென்மையாக ஆக்கப்பட்டுள்ளன. பிள்ளைகள் அதில் ஆழ்ந்து உறங்குவார்கள். இதனைக் கூறியவர் பிரான்சில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த நாவல் நாடக எழுத்தாளரான Victor Hugo.

நான் எப்படி இருக்கிறேனோ அல்லது எப்படி வரவேண்டும் என்று விரும்பினேனோ அப்படி ஆனதற்கு நான் தேவதை போன்ற எனது தாய்க்குக் கடன்பட்டுள்ளேன். நான் எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவில் வைத்திருக்கிறேன். அவை எப்போதும் என்னைத் தொடர்ந்து வந்துள்ளன. என் வாழ்நாள் முழுவதும் என்னைச் சூழ்ந்து அவை என்னுடன் இணைந்து வந்துள்ளன. இந்த அனுபவம் 19ம் நூற்றாண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கனுடையது.

கடும் சோதனைகள் தீடாரென எமது வாழ்வில் வரும் போது எமக்குள்ள உண்மையான தோழி தாயே. எமக்கு செல்வம் போய் வறுமை வரும் போது, எமது சந்தோஷத்தில் பங்கெடுத்த நண்பர்கள் அது கண்டு எம்மை விட்டு விலகும் போதும், கஷ்டங்கள் எம்மைச் சூழும் போதும் எம்மோடு இருப்பவள் எமது தாயே. அவள் தனது அன்பு வார்த்தைகளாலும் ஆலோசனைகளாலும் எம் வாழ்வில் இருளை அகலச் செய்து எமது இதயங்களில் அமைதியை ஏற்படுத்துகிறாள். இதனைக் கூறியவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தாளரான Washington Irving.

ஒரு தாயின் தோற்றம் சிறிதாயினும் அனைவரது துன்பத்தையும் அனைவரது மகிழ்ச்சியையும் ஏற்று அன்புடன் அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் அவளது இதயமோ மகா பெரியது. இதனைக் கூறியவர் கதாசிரியரான Mark Twain.

பெண்களுக்குள்ள உரிமைகள் அனைத்திலும் தலையாயது தாயாக ஆவதுவே. இதனைக் கூறியவர் Lin Yutang.

ஒரு தாயின் இதயம் ஆழமானது. அதனது அடித்தளத்தில் நீங்கள் எப்போதும் மன்னிப்பைப் பெறலாம். இதனைக் கூறியவர் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்சிய நாவலாசிரியரான Honore ‘ de Balzac (1799-1850).

நான் கண்ட பெண்கள் அனைவரிலும் அழகானவள் எனது தாயே. நான் இன்று எவ்வாறிருக்கிறேனோ அதற்கு நான் எனது தாய்க்குக் கடன்பட்டுள்ளேன். நான் என் தாயிடமிருந்து பெற்ற ஒழுக்கம், உடலியல் கல்வி, புத்திபூர்வமான கல்வி ஆகியவற்றினாலேயே நான் எனது வாழ்வில் சகல வெற்றிகளையும் பெற்றேன். இது 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாவது அமெரிக்க ஜனாதிபதியான George Washington (1732-1799) அனுபவம்.

முறையான இடைவேளையின்றி வேலை செய்யும் தொழிலாளர் தாய்மாரும் மனைவிமாருமே. அவர்கள் விடுமுறையற்று வேலை செய்யும் ஒரு சிறந்த தொழிலாளர் பிரிவு. இந்தக் கருத்துக்குரியவர் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த Anne Morrow Lindbergh (1907- )

தாயின் இதயமே பிள்ளையின் பாடசாலை வகுப்பறை. Henry Ward Beecher (1813-1887).

இளமை போகும், காதல் வாடும், நட்பு என்ற இலை உதிரும். ஒரு தாயின் ரகசிகமான நம்பிக்கை இவற்றை எல்லாம் போக்கி நீண்டு வாழும். இதனைக் கூறியவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவத்துறைப் பேராசிரியரும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவருமான Oliver Wendell Holmes (1809-1894).

ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய முக்கியமான பணி அவர்களது தாயில் அன்பு செலுத்துவதே. இதனைக் கூறியவர் பெயர் தராத ஒருவர்.

Howard Johnson என்பவர் ஏறக்குறைய 1915ம் ஆண்டில், தாய் என்ற சொல்லின் ஆங்கிலப் பதமான mother என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்துக்கும் கருத்துக் கூறியுள்ளார்.

‘M ‘ is for the million things she gave me,

‘O ‘ means only that she ‘s growing old,

‘T ‘ is for the tears she shed to save me,

‘H ‘ is for her heart of purest gold;

‘E ‘ is for her eyes, with love-light shining,

‘R ‘ means right, and right she ‘ll always be,

Put them all together, they spell ‘MOTHER, ‘

A word that means the world to me.

இணையத்தில் பலர் தமது தாய்க்கென பக்கங்கள் செய்து அதில் அவர்களைப் புகழ்ந்து கவிதைகள் எழுதியுள்ளனர். அவ்வாறு காணப்பட்ட கவிதைகளில் என்னைக் கவர்ந்த இரண்டின் தமிழாக்கத்தைத் தருகிறேன். MORE THAN A MOTHER என்ற தலைப்பில் அமைந்த ஒரு கவிதையின் தமிழாக்கம் இதோ-

கடவுள் உலகைப் படைத்தான்

அதனை உரிய இடத்தில் நிறுத்தி வைத்தான்

அழகுபடுத்த விருப்புக் கொண்டு

வானத்துத் தாரகையை வைரமாய் தொங்கவிட்டான்

நிலத்தையும் நீரையும் படைத்து வைத்தான்

பின் என்னையும் உன்னையும் உருவாக்கி மகிழ்ந்தான்

ஆற அமர்ந்து படைப்பை நினைந்து

இருக்குமிடத்தில் அனைத்தும் உண்டென

மகிழ்ச்சி கொள்கையில் ஏதோ ஒன்று இல்லை என்று

நினைவை நெருடியது, என்ன அது ? என்ன அது ?

சட்டென்று நினைவில் வந்தது.

ஓ அதுவே தாய், அதுவே தாய்

மகிழ்ச்சியுடன் அவளைப் படைத்தான்.

எதற்கு அவளைப் படைத்தான் ?

பிள்ளையின் முகத்தில் தன்னை விளக்கிட

அந்தப் படைப்பு என அவன் கொண்டான்.

உலகில் தாய்கொரு சிறப்பிடம் உண்டென அறிந்தான்

பிள்ளையின் முகத்தில் சிரிப்பினைக் காண

கடுமையாய் உழைக்கத் தயங்கிட மாட்டாள்

கல்லும் சீமந்தும் கொண்ட கட்டடத்தை

அன்பு நிறைந்த வீடாக்கிடுவாள்

படிப்பா ? வாழ்வா ? உதவிடுவாள் தாய்

அருகில் என்றும் நீங்காது நின்றிடுவாள்

துன்பமா ? கஷ்டமா ? வேறெதுவும் பிரச்சினையா ?

அருகில் நின்று உதவிடுவாள் அன்புத் தாய்

உறுதியுடன் நீ காலூன்றும் வரை

உதவிக்கரம் நீட்டிடுவாள்

நீ விழும்போது தூக்கி நிறுத்திடுவாள்

நண்பனாய் நட்பு வழங்கிடுவாள்

ஆரவாரமின்றி அருகில் நின்று உதவிடுவாள்

உறுதி தேவையா ? தந்து நீ வென்றிட உழைப்பாள்.

சாய்ந்திட தோள் தேவையா ?

தோள் கொடுக்கக் காத்திருப்பாள்

அவளே தாய்.

தாய் என்பவள் யார் ? என்று இன்னொரு கவிதை. Katherine Nelson Davis என்பவர் எழுதிய கவிதையின் தமிழாக்கம் இது.

எம்மைப் காத்து வழிநடத்துவாள்

நாம் தவறு செய்யினும் எம்மில் அன்பு காட்டுவாள்

முடிவற்ற பொறுமை காட்டி நன்கு புரிந்துணர்வாள்

அவளது மென்மைக்கு உவமை ஏது ?

சிறு பிள்ளைப் பயத்தை அன்போடு போக்கி

வாழ்வில் நம்பிக்கை ஊட்டுவாள்

மென்மையுடன் பிள்ளைகளை பொக்கிஷமாகப் பேணுவாள்

தவறு பெரியதாயினும் தவறு சிறிதாயினும்

தாயின் இதயம் மன்னிக்கும் ஒரு பொற்கோயில்

தன் தேவைகளை ஒடுக்கி ஒடுக்கி

குடும்பத்துத் தேவைகளை முன்னெடுக்கும் தயாநிதி

அவளது சிரிப்பு வீட்டுக்கு ஒளியூட்டும்

அது எமது வாழ்வுக்கு இனிமை கூட்டும்

அளவில்லா ஞானம் உள்ளுணர்வு திறமை

நிறைந்தவள் எமது அன்புத் தாய்

மானிட இதயத்தில் ஒரு விசேட மூலையுண்டு

அதனை அன்பால் நிறைத்திட தாயாலேயே முடியும்.

தாயன்பின் சிறப்பைக் காட்ட எத்தனையோ கதைகள் இருக்கலாம். ஆயினும் என் மனதைத் தொட்ட கதை ஒன்றுண்டு. அதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். சர்வர் சுந்தரம் என்ற படத்தை நான் பார்க்காத போதும் அதில் நாகேஷ் இந்தக் கதையைக் கூறுவதாக முன்னர் வானொலியில் கேட்டிருக்கிறேன். அக்கதை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும் மனதைத் தொடும் அக் கதை என் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அதனைத் தெரியாதவர்களுக்காகக் இங்கு கூறலாம் என்று நினைக்கிறேன்.

ஒருவன் ஒரு பெண்ணை மிக அதிகமாகக் காதலித்தான். ஆனால் அவள் மிக கொடுமையான மனம் கொண்டவள். எனவே, தான் அவனைத் திருமணம் செய்வதானால் அவன் தனது தாயின் இதயத்தைப் பரிசாகத் தரவேண்டும் என்ற ஒரு கொடிய வேண்டுகோளை இதயமே அற்றவளாகக் கேட்டாள். அவனுடைய கண்களை காதல் முற்றாக மறைத்திருந்தது. அவன் அவளது கோரிக்கைக்குச் சம்மதித்து தனது தாயைக் கொன்று அவளது இதயத்தை ஒரு தட்டில் வைத்து காதலிக்குத் தருவதற்காக எடுத்து வந்தான். வரும் வழியில் அவன் படி தடக்கி ஓரிடத்தில் விழுந்து விட்டான். அப்போது அந்தத் தட்டில் இருந்த தாயின் இதயம் கேட்டது மகனே நோகிறதா ? இதுவே தாயின் தூய அன்பு.

தாய்மை அன்பு என்பது மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஜீவராசிகள் அனைத்திற்கும் தமது குட்டிகளில் குஞ்சுகளில் பாசம் உண்டு. ஆனால் அது மனிதருடையது போல நிரந்தரமானதல்ல. குட்டிகள் வளரும் வரை மிருகங்கள் அன்புடன் பேணி வளர்ப்பன. வளர்ந்ததும் துரத்தி விட்டு அவற்றை மறந்து விடுவன. பறவைகளும் அப்படியே. குஞ்சுகள் பறக்கப் பழகும் வரை அவற்றுக்கு உணவு கொணர்ந்து ஊட்டி பகைவர்களிடமிருந்து பாதுகாத்து வளர்ப்பன. இனம் பெருகுவதற்காக இவ்வாறான தாய்மை இயல்பு அவற்றிற்கு ஏற்பட்டுள்ளன. கொறில்லா குரங்கினம் ஏறக்குறைய மனிதரைப் போன்ற இயல்புடையது. குட்டிகளை ஓரளவு அதிக காலம் பேணிப் பாதுகாப்பன. குட்டி இறந்தால் மனிதரைப் போல துக்கம் அனுஷ்டிப்பன. ஆயினும் அவை எந்தளவு தூரத்திற்குப் பேணிப் பாதுகாக்க வல்லன என பல வருடங்களின் முன் விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனை செய்து பார்த்தனர். குரங்கையும் குட்டியையும் ஒரு அறையில் விட்டு அதற்குள் நீரை சிறிது சிறிதாக நிறைத்தனர். இடுப்பளவில் நீர் நிறைந்த போது குரங்கு தனது கைகளால் குட்டியை சிறிது சிறிதாக மேலே உயர்த்தியது. நெஞ்சு மட்டத்திற்கு நீர் உயர்ந்த போது குட்டியைத் தனது தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தது. கழுத்து மட்டத்திற்கு உயர்ந்த போதும் குட்டியை முடியுமான வரையில் உயர்த்தியது. நீர் வாய் அளவில் உயர்ந்த போது குரங்கு குட்டியைக் கீழே நீருக்குள் போட்டு அதன் மேல் தான் ஏறி நின்றது. உயிர் போகும் ஆபத்து வந்த போது அது தன்னைப் பாதுகாப்பதையே கருத்தில் கொண்டது. ஆனால் மனிதத் தாய் என்பவள் அப்படியல்ல. தனது பிள்ளையைக் காப்பாற்ற தனது உயிரை முழுமையாக அர்ப்பணிக்கத் தயங்கமாட்டாள். இதுவே தாயின் பெருமை.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த என்னையும் எனது சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்கி உயர் கல்வி கற்பதற்கு வாய்ப்புக்களைத் தந்து எமது பண்பாட்டின் பெறுமதிகளை மனதில் ஆழப் பதிய வைத்து நன்மக்களாகியவர் எனது தாய். 15 வருடங்களின் முன் இறந்து போன அவருக்கு தாய் பற்றிய இந்த கட்டுரையை அர்ப்பணிக்கிறேன்.

—-

vamadevk@bigpond.net.au

Series Navigation

சந்திரலேகா வாமதேவா

சந்திரலேகா வாமதேவா