‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

ராமலக்ஷ்மி


‘தான் ‘ எனும் எண்ணத்தைதான் ‘ஈகோ ‘ என ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். அது தருகின்ற இறுமாப்பும் எழுப்பி விடும் சுய கெளரவமும் இன்றைய வாழ்வியல் சூழலுக்குப் பொருந்துமா ? சில கோணங்களில் அலசிப் பார்க்கலாமா ?

*எப்போது படம் விாித்து ஆடும் இக் கொடிய நாகம் எனக் கேட்டால்- அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் ‘சுயம் ‘ பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்…

* ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ‘ என நக்கீரன் சொன்ன போது சிவனே அதை ‘சிவனே ‘ என ஏற்றுக் கொள்ள மறுத்து, சீறிப் பாய்ந்தாரே, இந்த மானிடப் பிறவிகள் எம்மாத்திரம், என்கிறீர்களா ? அது காவியம். நாம் தீட்டுவதோ வாழ்க்கை எனும் ஓவியம். ‘தான் ‘ எனும் எண்ணத்தால் வண்ணங்கள் தவறானால்…ஓவியம்தான் உயிர் பெறுமா ?

*பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விாியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பொியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். ‘மூர்த்தி ‘ சிறிதானாலும் ‘கீர்த்தி ‘ பொிதாக இருக்கலாம்தானே!

*நாம் பார்த்து வளர்ந்த பிள்ளைகளே, சமயத்தில் நம் தவறினைச் சுட்டி, சாி செய்ய வேண்டிட நேரலாம். நியாயமாய் இருக்கும் பட்சத்தில், நெஞ்சு சுட்டாலும் ‘நமக்கு சாி நிகரா ? ‘ என்ற கோபம் தவிர்த்து கொஞ்சம் நினைக்கலாம்- ‘அவர்தம் வளர்ச்சியின் இன்னொரு பாிணாமமே இந்தப் பக்குவம் ‘ என.

*நாம் பார்த்து பணியில் சேர்ந்தவரே ஆனாலும், ‘நமக்கே படிப்பு சொல்ல வந்து விட்டாரா ? ‘ என்ற எண்ணம் தவிர்த்து ‘நம்மிடத்தில் பணி செய்த அனுபவமே பேசுகிறது ‘ எனப் பெருமையும் பெருந்தன்மையும் ஒருங்கிணைய அவர்தம் அறிவுறையை ‘ஏற்பது இகழ்சி ‘ அன்று. பாடம் சொல்ல பகவானே நோில் வர நாம் யாரும் ‘அர்ச்சுனர் ‘ அன்று.

* ‘ஐயா,ஐயா ‘ என அடிமை போலக் கையைக் கட்டியவாிடம் சேவகம் பெற்ற காலமும், ‘யெஸ் சர், யெஸ் சர் ‘ என ‘டை ‘யைக் கட்டியவர், தவறோ சாியோ எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டிய காலமும், இந்த கணினி உலகில் பழங்கதைகள்!

*வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், ‘நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம்-நடந்திருக்கலாம், இனி இப்படி இப்படி இருக்கலாம்-நடக்கலாம் ‘ என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் ‘உரை கல் ‘.

*சுயமாக நம்மைப் புடம் போட்டுக் கொள்ள இறைவன் அனுப்பிய தூதர்களாய்ச் சொன்னவரை எடுத்துக் கொண்டால் சொர்க்கம் நம் கையில். இது தெளிவானவருக்குக் கையில் கிடைக்கும் வடையோ பிரசாதம். தெளிவற்றவருக்கோ, நடுவில் தொியும் துளைதான் பிரதானம்!

*தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. ‘என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி ‘ என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், பாிதாபம். நமது தகுதி எது என்பதே நமக்கு தெளிவாகத் தொிவதில்லை!

*நாம் இன்னாாின் மனைவி/கணவன், மகள்/மகன், இன்னாாின் மருமகள்/மருமகன், சகோதாி/சகோதரன் என எந்த உறவின் அடிப்படையிலும் எழுந்து நிற்பது அல்ல ‘தகுதி ‘. நமது படிப்பு-பணம்; பதவி-புகழ்; அழகு-அந்தஸ்து நிர்ணயிப்பது அல்ல ‘தகுதி ‘. இவை யாவும் வெறும் அடையாளங்களே!

*அறிந்த தொிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே ‘தகுதி ‘. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்…

*சாியான எண்ணங்கள், சாியான பார்வைகள் சாிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.

* ‘தான் ‘ எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தொிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation