தாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் ?

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇரவும் பகலும் எந்நேரமும்
இதயக் கருவில் அமர்ந்து கொண்டு
என் வாழ்க்கை வீணையில்
எண்ணிலா இன்னிசைகளை
இசைத்து வருபவன் யார் ?
அதைக் கேட்பார் சிலர் !
விரும்ப மாட்டார் சிலர் ! அதன்
பொருள் எனக்குப்
புரிவ தில்லை !
தரணி மாந்தர் உள்ளத்தை
இங்கு மங்கும் இழுத்த டிக்கும்
இறைவன் ஆணையைக் கண்டு
தடுமாற்றம் அடைவார்
அறிஞரும் முனிவரும் கூட !

சேயும் தவிர்க்கும் விளையாட் டாக
கனிந்து திரண்டு பொங்கும்
தாய் முலைப் பாலை !
வாலிபத்தில் அது போல்
மோகத்தில் மூழ்கி
உணர்ச்சி அலைகளில் நானும்
உல்லாசமாய் மிதந்தேன் !
புல்லாங் குழல் ஊதிப்
பொருளற்ற முறையில்
பூரித்தேன் !
குழந்தைக் களிப்பினிலே நான்
விழுந்து கிடக்கிறேன்
வலுவில் லாத என் ஆத்மா
ஊட்டி
வளர்க்கப்பட்டு !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 15, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா