தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

ச. பச்சைநிலா


ச. பச்சைநிலா
உதவிப் பேராசிரியர்
பாரதிதாசன் பல்கலைக்கல்லூரி
பெரம்பலூர்

தமிழில் தலித் இலக்கியம் தோன்றி இருபது ஆண்டுகள் கடந்த நிலையில், அதனுடைய செல்நெறி மரபில் கடந்த 5வருடங்களாக எதிர்நிலை வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது தலித் இலக்கியம் பின்தங்கிவிட்டது, நீர்த்துபோய்விட்டது, முடிவுக்கு வந்துவிட்டது. தலித் இலக்கியம் என்கிற தனியான இலக்கிய வகை தேவையில்லை என்பனவாகும். முதலில் இவ்வாதங்கள் எனக்கு நகைப்பை ஏற்படுத்தியதோடு அவ்வாதங்களின் மீதான விஷமத்தனத்தையும், குரூரபுத்தியையும் கண்டு எரிச்சலடையவே செய்தேன்.

அடிப்படையில் நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் “ஒரு இனம் அழிக்கப்படும்வரை அந்த இனத்தின் பாடல் (இலக்கியம்) அழிக்கப்படுவதில்லை”. இடதுசாரி இலக்கியத்தின் நீட்சியாகவும், இடதுசாரி படைப்பாளர்களின் சார்போடும், உருவான தலித் இலக்கியம் 1990களில் அச்சித்தாந்தத்திலிருந்து முரண்பட்டும், தனித்தும், தனியரு இலக்கிய வகையாக எழுச்சிப்பெற்றது. அதற்குத் தமிழ்ச் சூழலில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் நூற்றாண்டு விழாக்கள் மிக முக்கிய ஆதாரப்புள்ளிகளாகத் திகழ்ந்தன என்பது வரலாற்று உண்மையாகும். இந்தப் பின்புலத்தில்தான் தலித் இலக்கிய எழுச்சியின் ஊடாகவே அதனைச் சிதைப்புக்குள்ளாக்கும் வேலையும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. கலகத்தை (பெரியார் சொன்ன கலகம் இல்லை) ஏற்படுத்துவதில் கை, கால், தலை எல்லாவற்றிலும் தேர்ந்தவர்களான சாதி இந்துக்கள் நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்தும் வேலையைச் செய்தனர். இவர்களில் ஒருசாரார் தலித்தியம் பேசிக் காசாக்கும் வேலையையும் செய்து கொண்டிருந்தனர் (இந்திரா பார்த்தசாரதி). ஒரு சிலர் தலித் இலக்கியத்தின் தேவையை உணர்வோடு புரிந்துகொண்டு தமது சார்பை வெளிப்படுத்தினர்.

1980களில் பெண்ணிய இலக்கியம் தோன்றி எழுச்சியோடு வளர்ந்துகொண்டு வந்தததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதன்மீது தமது ஆணாதிக்க மனநிலையைப் பிரயோகித்த இந்தப் புத்தி ஜீவிகளின் அடுத்த இலக்கு தலித் இலக்கியத்தையும் நோக்கி வருவது வியப்புக்குரியதல்ல. அவர்களை நாம் பொருட்படுத்தாது தலித், பெண்ணிய இலக்கியத்திற்கு நமது ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்துவோம்.

தலித் இலக்கியம் நோக்கிய சனாதனிகளின் கத்தல்களை, கூப்பாடுகளைப் பொருட்படுத்தி ஒரு கருத்தை அவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டிய தேவை இருக்கிறது. அதாவது சங்க இலக்கியங்களும், இலக்கண நூல்களும் எழுதப்பட்ட காலம் என்பது எத்தனையோ நூற்றாண்டுகளைக் கொண்டது. ஆனால் அவை எழுதப்பட்ட காலத்திலே மக்களுக்குப் போதிக்கப்பட்டது. அல்லது படிக்கப்பட்டது கிடையாது. மிகவும் பிற்காலத்தில்தான் அவை தொகுக்குப்பட்டும், வகுக்கப்பட்டும் குரு-சீடர் மரபின் மூலமாகத் சொல்லிக்கொடுக்கப்பட்டது அடையாளம் காணப்பட்டது. அவ்விலக்கிய இலக்கணங்கள் குறித்த வாசிப்பு அறிவு என்பதும் மிகவும் பிற்காலத்தில்தான் உருவானது. தமிழ்நாட்டில் 7கோடி மக்களும் சங்கஇலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்களா? ஏதோ தமிழ்ப் படிக்கவந்தவர்கள் அதை தெரிந்துகொண்டு வைத்திருக்கிறார்கள். இதை தமிழில் தோன்றிய எல்லா இலக்கியங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். எனவே நமது தொன்மையான இலக்கிய, இலக்கணங்கள் அனைத்தும் எழுதப்பட்ட காலத்தில் அவை பரவலாக்கம் பெறாது, பிற்காலத்தில் தான் கவனத்தைப் பெற்றன. சமகாலத்தில் இன்னும் அவ்விலக்கியங்கள் குறித்த வாசிப்பு என்பது மறுவாசிப்பு, மீள்வாசிப்பு, பன்முகவாசிப்பு என்கிற முறைகளில் செம்மொழி அங்கீகாரத்தோடு கவனத்தைப் பெற்றுவருகிறது. அத்தகைய இலக்கிய இலக்கணங்கள் முடிவுக்கு வந்துவிட்டது, பின்தங்கிவிட்டது, நீர்த்துப்போய்விட்டது என்று எவரேனும் சொல்வதுண்டா? சிலப்பதிகாரம், திருக்குறள் இவை முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்வது கிடையாது. பிறகு ஏன்? தலித் இலக்கியம் முடிவுக்கு வந்துவிட்டது, பெண்ணிய இலக்கிய முடிவுக்கு வந்துவிட்டது என்று மட்டும் கத்துகிறார்கள் புத்தி ஜீவிகள். இவ்விரண்டு இலக்கியத்தின் மீது எப்போதும் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள் பொது இலக்கிய வடிவத்திற்குள் வராது இவை பொது இலக்கிய வடிவத்திற்குள் தான் வரவேண்டும் என்று, பொது இலக்கிய வடிவத்திற்குள் (அ) பெருங்கதை மரபிற்குள் இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதற்காகத்தான் இம்மக்கள் குறித்த இலக்கியம் தனித்து பேசப்படுகிறது. நீ என்னைப் பற்றி பதிவு செய்தால் நான் ஏன் தனித்து நிற்கபோகிறேன், பேசப்போகிறேன். எனவே தலித், பெண்ணிய இலக்கியங்கள் தனித்து நின்றே மைய்யநீரோட்ட அரசியலை எதிர்கொள்ளும்.

தலித், பெண்ணிய இலக்கியங்கள் குறித்த வாசிப்பு முழுமையான அளவில் பரவலாக்கம் பெறவில்லை. அதற்குள்ளாகவே அவை முடிவுக்கு வந்துவிட்டது, பின்தங்கிவிட்டது என்கிற வெற்றுகத்தல்களைப் பொருட்படுத்தாது அவ்விலக்கியங்கள் குறித்த இரண்டாம்கட்ட வாசிப்பை முழுமையான அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதற்குச் சமகால படைப்பாளர்கள் பிரயத்தனப்பட வேண்டும். தலித், பெண்ணிய இலக்கியத்தில் ஒரு வாசிப்பே முழுமைப் பெறாத நிலையில் அதனைத் தடுத்துநிறுத்தும் சனாதனி மற்றும் ஆணாதிக்கவாதிகளின் முகத்திரைகள் கிழித்தெறியப்பட வேண்டுமானால் இவ்விரு இலக்கியங்களும் பொதுஜனத்திரளை நோக்கிய பதிவை, வாசிப்புப் பரவலாக்கத்தை முன்னிறுத்த வேண்டும்.

இனி தீராநதி, காலச்சுவடு இவ்விரு பத்திரிகைகளிலும் தலித் இலக்கியம் குறித்து கருத்துசொன்ன இரு அறிவுஜீவிகளின் வாதம் குறித்து சில எதிர்உரையாடலை முன்வைப்போம். தீராநதி (2008) சோ.தர்மன் தலித் இலக்கியம் பின்தங்கிவிட்டது என்றார். காலச்சுவடு மற்றும் பொது இலக்கிய மேடைகளில் இமையம் தலித்இலக்கியம் முடிவுக்கு வந்துவிட்டது, தலித் இலக்கியம் தேவையில்லை என்று சொல்லிவருகிறார். முதலில் இவ்விருவரின் கத்தல்களில் உள்ள நேர்மையைற்ற, ஆதரமற்ற தன்மைகளை மறுகருத்தாடல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

1990களில் பெருத்த எழுச்சியோடும் எதிர்பார்போடும் முன்னெழுந்த தலித் இலக்கியத்தால் அதுவரை பேசப்பட்டுவந்த புனிதங்கள், கற்பிதங்கள், பெருங்கதையாடல்கள் எல்லாம் ஆட்டம் காண ஆரம்பித்ததோடு அதிர்ச்சிக்கும் உள்ளானது.

இலக்கிய வாசிப்பு என்பதும் பொதுவாசகன் தலித் வாசகன் என இருநிலை வாசிப்பு சாத்தியமானது, படைப்பாளன் பொதுப் படைப்பாளன், தலித் படைப்பாளன் என இருநிலைப்பட்ட படைப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மொத்தத்தில் தலித்இலக்கியம் கலக இலக்கியமாக (பெரியார் சொன்ன கலகம்) கால்பரப்பி நின்றது. இத்தகைய தலித் இலக்கிய அடையாளத்தின் வழி அங்கீகாரம் பெற்றவர்கள்தான் சோ.தர்மனும் இமையமும். தலித் இலக்கிய எழுச்சியில் இவ்விருவரின் தொடக்ககால பங்களிப்புகள் வெகு சிரத்தையாக இருந்தன. சோ.தர்மனின் தூர்வை (1996), கூகை (2006) நாவல்களும், இமையத்தின் கோவேறு கழுதைகள் (1994), ஆறுமுகம் (1996), செடல் (2005) நாவல்களும் தலித் இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கிய ஆதர்சமாகத் திகழ்ந்தன. சாதி இந்துக்களின் கை அசைவிற்கேற்ப அவர்களின் கைபாவைகளாகச் சொல்லபடுகின்ற இவ்விருவரின் பேச்சு வியப்பிற்குரிய ஒன்றல்ல. சோ.தர்மன் இடதுசாரிகளின் பிடியில் வளர்ந்தவர் அவர் வர்க்க அரசியலைத்தான் ஆதரிப்பார். மாறாகச் சாதி எதிர்ப்பை முன்வைக்கிற தலித் இலக்கியத்தை அவர் ஆதரிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோல இமையம் திராவிட இயக்கத்தின் இலக்கிய போர்வாள் அவருக்கு திராவிடர் என்ற அங்கீகாரம் மட்டும் போதும் எனவே இவ்விருவரின் பேச்சும் இயக்கச் சார்போடு கூடிய பேச்சு. எனவே சாதி ஒழிப்பை முன்வைக்கிற தலித் இயக்கத்தை அவர்கள் எதிராகத்தான் பார்ப்பார்கள்.

தலித் இலக்கிய எழுச்சியை சிறிதும் பொருத்துக்கொள்ளாது அதன்மீது குரூரத்தைப் பாய்ச்ச நினைத்து சாதி இந்து அறிவுஜீவிகள் தன் கையைக் கொண்டு தன் கண்ணையே குத்துவது போல சோ.தர்மனையும், இமையத்தையும் பயன்படுத்திக்கொண்டனர் (ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொன்னது சரிதான் போலும்). சாதிய சனாதனிகளின் குரூரத்திற்கு காலந்தோறும் ஒடுக்கபபட்ட மக்கள் பலியாவது போல இன்று தலித் அறிவுஜீவிகளும் (சோ.தர்மன், இமையம்) பலியாகி நிற்பது வேதனையளிக்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் வளைந்து கொடுக்காது சமகாலத்தில் சில தலித் படைப்பாளர்கள் (அழகியபெரியவன், ஆதவன்தீட்சண்யா, சுகிர்தராணி, அரசமுருகபாண்டியன், விழி.பா.இதயவேந்தன்) எழுதிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இந்துதுவத்தின் சூழ்ச்சிக்கும், சனாதனிகளின் பிடிக்கும் சிக்காது தமது வலிகளையும், காயங்களையும் காட்டி காத்திரமான சொல்லாடல்களால் எழுதிக்கொண்டு வருகிறார்கள்.

சோ.தர்மனும், இமையமும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இலக்கிய வகை முடிவுக்கு வந்துவிட்டது, பின்தங்கிவிட்டது என்பதை முடிவுசெய்வது படைப்பாளன் இல்லை, வாசகர்தான் அதனை முடிவுசெய்ய வேண்டும். எனவே இவ்விருவரின் கத்தல்களும், கூப்பாடும் அர்த்தமற்றது, நியாமற்றது. அதனை வாசகர்களாகிய நாம் நிராகரிப்போம். இவ்விருவரும் தாங்கள் எழுதியது தான் தலித் இலக்கியம் தங்களுக்குப் பிறகு தலித் இலக்கியத்தை எழுத முடியாது, எழுதுவதற்கு ஆள் இல்லை. எனவே தலித் இலக்கியம் முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார்களா? இல்லை இந்தக் காலத்தில் யார்? சாதி பார்க்கிறார்கள், எங்கே? சாதி கொடுமை, தீண்டாமை (இன்றும் உத்தப்புரத்தின் சுவர் தொடர்கிறது, வெண்மணி எரிகிறது) இருக்கிறது, எல்லாம் மறைந்துவிட்டதே இனி ஏன்? தலித் இலக்கியம் எழுதவேண்டும் என்பதற்காக கத்துகிறார்களா? என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

தலித்இலக்கியம் சாதிய ஒழிப்பை முன்னெடுக்க வந்த இலக்கியம் என்பதை இவ்விருவரும் விளங்கிக்கொள்ளவில்லை. சாதியால் மக்கள் ஒடுக்கப்படும்வரை தலித்இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும். அதனை இவ்விரு கத்தல்களும் முடிவுக்குக் கொண்டுவரவும் முடியாது அதனைப் பின்தங்கச் செய்யவும் முடியாது. தலித் இலக்கியத்திற்குள் தற்காலத்தில்தான் மிகுதியான படைப்பாளர்கள் எழுத முன்வருகிறார்கள் (யாழினி முனுசாமி, தஞ்சை சாம்பான், துடி.பார்த்திபன், ஸ்டாலின்ராஜாங்கம், கோ.ரகுபதி, மீனாமயில், முத்துகந்தன், வேதசாமிநாதன், உமாதேவி, மு.ரமேஷ்). ஆனால் இவர்கள் குறித்த எந்தப் பதிவையும் தலித் இலக்கியம் செய்வதில்லை. வெகுசன வாசகர் தளத்தில் அறியப்பட்ட தலித் படைப்பாளர்கள் பற்றி மட்டுமே திரும்ப திரும்ப தலித் இலக்கியத்திற்குள் பேசுகிறோம். அப்படியே புதிய தலித் படைப்பாளர்களைப் பற்றி பேசினால் அது வலிந்து பேசுவதாகவே ஒரு சிலரால் புரிந்துகொள்ளப்படுகிறது. அது கூடாது புதிய படைப்பாளர்கள் குறித்த பார்வையும் பதிவும் அவசியமாகும்.

தலித்இலக்கியம் குறித்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தச் சூழலில் அதனைப் பேசி காசாக்கிக் கொணட (இந்திரா பார்த்தசாரதி, பழமலய், மற்றும் சில இடதுசாரிகள்) அறிவுஜீவிகளையும் நாம் இந்த நேரத்தில் நன்றியோடு பதிவுசெய்ய வேண்டும். அவர்களுக்குச் சாகித்ய அகாடமி விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதுகளும் கொடுக்கப்பட்டது. இது ஒருபுறம் நடந்துகொண்டிருந்த சூழலில் பதிப்பகம் சார்ந்தும் தலித் ஆதரவை வெளிப்படுத்தி தங்களது தலித் ஆதரவைக் கொடுத்த பணம் பார்த்த பதிப்பகங்களும் (காவ்யா, மற்றும் சில) இச்சூழலில் நன்றியை உரித்தாக்க வேண்டும். இத்தகைய கேலி கூத்தாடிகளுக்கும் பச்சோந்திகளுக்கும் மத்தியில்தான் இவ்விரு கத்தல்காரர்களும் தொடக்ககாலத்தில் தங்களது தலித் உணர்வை, சார்பை வெளிப்படுத்தி இன்று அதற்கு முடிவுக்கட்டி, பின்னுக்குத்தள்ளி பொது ஜனத்திரளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் தலித் இலக்கியம் முடிந்துவிட்டது, பின்தங்கிவிட்டது என்று சொல்வது எல்லாம் அதனை முடிவுக்கு கொண்டுவரவும், பின்னுக்குத் தள்ளவும் சொல்கிறவர்கள் இவர்களின் பேச்சை நிராகரிப்போம்.

தலித்இலக்கியத்திற்குள் பெருங்கதையாடல்களை முன்வைத்து எழுதப்படும் காலக்கட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதோடு தலித்இலக்கியத்திற்குள் வாசிப்பு பரவலாக்கம் உருவாக வேண்டும். அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும். அதோடு இனி எழுதப்படும் தலித்இலக்கியத்திற்குள் தலித் மக்களின் வலிகள், காயங்களோடு அவர்களின் கொண்டாட்டங்களும், எழுச்சிகளும், கலைகளும், விளையாட்டுகளும் சேர்த்து எழுதபடவேண்டும். இரக்கத்தை யாசித்து நிற்பது மட்டும் தலித் இலக்கியம் இல்லை இலக்கிய ரசனையையும் வெளிப்படுத்துவதும் தான் தலித் இலக்கியம் என்கிற கருத்தாடல் வலுப்பெற வேண்டும். அதற்கான சாத்தியபாடுகள் இரண்டாம்கட்ட தலித் படைப்பாளர்களால் முன்னெடுக்கும் சூழல் இன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே தலித் இலக்கியத்தை நோக்கிய சாதி இந்துக்களின் பேச்சையும் சோ.தர்மன், இமையம் போன்றோர்களின் கத்தல்களையும் தவளைகளின் கத்தல்களாக நிராகரிப்போம்.

Series Navigation