தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

ஜெயமோகன்


சமீபத்தில் ஒரு வார இதழில்[துக்ளக்] சுவாமி தயானந்த சரஸ்வதி வாசகர் கேள்விக்கு பதிலளித்தார்.

கெ. அசோகன் பள்ளியாடி

கேள்வி : யாவரும் வேதம் கற்றுக் கொள்வதும் பிறருக்கு கூறுவதும் ஆலய அர்ச்சகர் ஆவதும் குற்றம் என்று இதிகாசங்கள் கூறுகின்றனவா ?

பதில் : கடமையை செய்து மனதைப் பக்குவப்படுத்தி முழுமனிதனாக நாம் ஆகவேண்டும். இந்தப் பக்குவத்தினால்தான் மோக்ஷத்தை கொடுக்கக் கூடிய ஞானத்தை அடைய வேண்டும். கடமைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தான் கூறப்பட்டிருக்கிறது. கடமையை மாற்றினால் ஒருவர் பக்குவத்தை அடைவார் என்று சொல்ல முடியாது. ஒருவர் கடமையைச் செய்து பக்குவத்தை அடைவது நல்லது. ஏனென்றால் இது ஒன்றுதான் விசாரம் செய்து பார்க்கும்போது நிலைப்பட்டு இருக்கும் எல்லாவிதமான கொள்கைகளும் அடிபட்டுப் போகும்.

முதல் வாசிப்பில் தயானந்தர் என்ன சொல்ல வருகிறார் என்பதே எனக்குப் புாியவில்லை. மீண்டும் மீண்டும் படித்து கேள்வி கேட்கப்பட்ட தருணத்துடன் பொருந்திய போதுதான் தெளிவு ஏற்பட்டது. கேள்வி சாதி பற்றியது. ‘யாவரும் ‘ என்று குறிப்பிடப்படுவது அதுதான் எல்லா சாதியினரும் வேதம் படிக்கலாமா, அர்ச்சகராகலாமா, பிராமணர் மட்டும் அதைச் செய்தால் போதுமா என்பதே கேள்வி.

தயானந்த சரஸ்வதி ‘கடமை ‘ என்பது என்ன ? இங்கு சாதிக்கடமைதான். பிறப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் தொழில்தான். இல்லையேல் வேதம் படிப்பதும் கோயிலில் அர்ச்சகராக ஆவதும்தான் தன் கடமை என யாரும் நினைக்கலாமே ? தயானந்தர் சொல்வது இதுதான். இக்கடமையை சாிவர செய்து தான் மோட்சம் அடையமுடியும். கடமையை மாற்றுவதனால் பயனில்லை. காரணம் உண்மையில் அக்கடமை மட்டுமே நீடித்து நிற்கும். மற்ற எல்லாவிதமான கொள்கைகளும் அடிபட்டு போகும். எக்கொள்கைகள் ? மனிதன் பிறப்பால் சமம் என்றும், மனிதர்கள் அனைவருக்கும் உாிமைகளும் கடமைகளும் பொதுவே என்றும் கூறும் நவீன மனிதாபிமான முற்போக்குக் கொள்கைகள்.

ஆக, தயானந்த சரஸ்வதி மிகுந்த மொழித்திறனுடன் தன் பதிலை அமைத்திருப்பதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. இந்த தேசத்தில் அமுலில் உள்ள தீண்டாமை ஒழிப்புச் சட்டம். தன் பதில்களில் தயானந்தர் கூறுவது போல இங்கு ‘ஆன்மிக வழிகாட்டி ‘ களின் ஆலோசனைப்படி நடக்கும் அரசு வருமெனில் அச்சட்டம் ரத்து செய்யப்படலாம். தயானந்தாின் அருளுரையில் தெளிவு ஏறலாம்.

கள் உண்டு பண்ணி விற்கக் கூடிய சாதியில் பிறந்து ,தீண்டப்படாதவராக வளர்ந்த நாராயணகுரு துறவியாகி, சம்ஸ்கிருதம் மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் பெரும் புலமை பெற்று ,வேதவேதாந்தங்களில் இணையற்ற ஞானம் அடைந்து கேரளத்தின் நவீனத்துவத்தின் மூலவிதை ஆனார். நுாறு வருடம் முன்பு அருவிக்கரை என்ற கிராமத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். எதிர்த்த வைதீகர்களிடம் ‘இது பிராமண சிவன் அல்ல ‘ என்று பதில் சொன்னார்.

அப்பதிலில் அடங்கியிருந்த அத்வைத சாரத்தை வைதீகர் புாிந்து கொள்ளாவிட்டாலும் தொடர்ந்து நிகழ்ந்த மாபெரும் அறிவுப் புரட்சி அவர்களுக்கு அதன் சமூகவியல் சாரத்தை புாியவைத்தது. நாராயணகுரு நிறுவிய ஆலயங்களில் எல்லா சாதியினரும் பூசை செய்கிறார்கள். பிற ஆலயங்களிலும் அர்ச்சகர்களாக மாற்று சாதியினர் வந்துவிட்டார்கள். வேதவேதாந்தத்தில் பெரும் புலவர்களை நாராயணகுருவின் இயக்கம் உருவாக்கியது. நாராயணகுருவின் மாணவர்கள் மாணவர்களின் மாணவர்கள் மாபெரும் உரைகளை இவற்றுக்கு எழுதியுள்ளனர். இறுதியாக குறிப்பிடவேண்டியது மறைந்த நித்ய சைதன்ய யதி அவர்களின் உரைகள்.

தயானந்தர் என்ன சொல்கிறார் ? நாராயணகுரு சிறப்பாக கள் உற்பத்தி செய்திருக்கவேண்டும். அதனுாடாக மட்டுமே அவருக்கு முக்தி கிடைக்கும். கடமையை மாற்றினால் அதனால் பயனில்லை. கடமையை மாற்றியதன் விளைவான நரகத்திற்குத்தான் அவர் போவார். நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் கள் வியாபாாிகளாக இருந்திருக்க வேண்டும்.

ஐம்பது வருட முற்போக்கு மனிதாபிமானக் கொள்கைப் பிரச்சாரத்திற்குப் பிறகும் இங்கு ஒரு பிரபல இதழில் இக்கருத்தை கூச்சமின்றி எழுத முடிகிறது என்றால் என்ன அர்த்தம் ? உண்மையில் கடந்த சில வருடங்களாக இங்கு ஒரு மறு எழுச்சி நிகழ்கிறது. அடிப்படைவாதமும் பழமைவாதமும் வேகம் கொண்டு எழுகின்றன. அதற்கு முக்கியமான காரணம் இங்கு முற்போக்கு மனிதாபிமானக் கருத்துக்களைக் கூறியவர்கள் தங்களை முழு நாத்திகர்களாக அடையாளம் காட்டிக் கொண்டு ,ஆன்மிகத்தை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள் என்பதே. அவர்களில் பலர் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாகவும் சீரழிந்தார்கள்.

விளைவாக ஆன்மிகம் என்பது முழுக்க முழுக்க பழைமைவாதிகள், அடிப்படைவாதிகள் ஆகியோருக்கு விடப்பட்டது. நமது மக்களில் பெரும்பாலோர் இன்றும் ஆன்மிகவாதிகளே. யோசித்துப் பாருங்கள்; தயானந்த சரஸ்வதியின் கூற்றை மிகச் சிறுபான்மையினர் தவிர பிறர் ஏற்க முடியாது. நடைமுறையில் அது இன்று சாத்தியமும் அல்ல. ஆனால் அவர் ஆன்மிகத் தலைவராக முன்னிறுத்தப்படுகிறார்.ஏனெனில் இங்கு ஆக்கபூர்வமான முற்போக்கான ஆன்மீகம் இல்லை.

உண்மையான ஆன்மிகம் ஒரு போதும் மனிதாபிமானத்திலிருந்து விலகாது. ஒரு போதும் பழைமைவாதமாக, மக்களை கூறுபோடுவதாக, ஒருசாரார் மறுசாராரை சுரண்ட அனுமதிப்பதாக இருக்காது. யோசித்துப் பாருங்கள் இதே கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் என்ன பதில் சொல்லியிருப்பார் ?

இந்து புராணங்களில், இதிகாசங்களில், நெறிநுால்களில் மனித சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் பல உள்ளன. ஆனால் இந்து ஞானமரபின் மைய ஓட்டம் அவற்றைச் சார்ந்தது அல்ல. சுயமான, சுதந்திரமான ஞானத் தேடல்களை அனுமதிக்கும் அதன் தத்துவ அடிப்படைதான் அதன் மைய ஓட்டம். அதை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இந்துவை எந்த நெறியும் எந்த நுாலும் முழுமையாக கட்டுப்படுத்தாது. அவனது ஞானத்தேடலே அவனை வழிநடத்த வேண்டும். காலத்திற்கு ஒவ்வாத எதையும் நிராகாிக்க அவனுக்கு உாிமை உண்டு. அப்படி நிராகாிக்காத ஒரு மெய்ஞானி கூட இந்து மரபில் இல்லை.

விவேகானந்தர் அப்படித்தான் கூறியிருப்பார். வேதங்களையும், ஸ்மிருதிகளையும் பற்றிய அவரது விமாிசனங்களில் அப்படிப்பட்ட கறாரான கூற்றுகள் பல உள்ளன. இன்னொரு உதாரணம். விவேக சூடாமணிக்கு உரை எழுதுகையில் நித்ய சைதன்ய யதி சங்கராின் தத்துவதாிசனத்தை வியந்து விளக்குகிறார். ஆனால் சங்கரர் சாதி குறித்து கூறியவற்றை ‘பழைமையான மனிதாபிமானமற்ற அபத்தமான ‘ கருத்துக்களாக கூறி ‘அதீத தத்துவ விசாரம் கருணையை கொன்று விடலாம் ‘ என்று எச்சாிக்கையும் விடுக்கிறார்.

ஞானி பழைமையிலிருந்தோ, மரபுகளிலிருந்தோ ,நுால்களிலிருந்தோ தன் ஞானத்தை பெற்றுக் கொண்டவனல்ல. ஆழ்ந்த சுயதாிசனத்திலிருந்து ,பிரபஞ்சம் தழுவிய ஒருமையுணர்விலிருந்து தன் ஞானத்தைப் பெறுபவன். ஆகவே பிழையான எதையும் துாக்கி வீசும் துணிவு கொண்டவன். தன் சொந்த குருநாதர்களை நிராகாித்தவர்கள் தான் நமது பெரும்பாலான ஞானிகள்.

அத்தகைய ஞானிகளே உண்மையான ஆன்மிக வழிகாட்டிகள். மதத் தலைவர்களோ நிறுவனத் தலைவர்களோ அல்ல.

—-

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்