தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

பாவண்ணன்


ஆண்டிகள் கூடி மடம் கட்டத் திட்டமிட்ட கதையைச் சிறுவயதில் எங்கள் அம்மா சொன்னதுண்டு. மரத்தடியில் இரவுநேரத்தில் கூடுகிற ஆண்டிகள் அனைவருக்கும் ஒதுங்கி ஓய்வெடுக்கத் தமக்கென்று ஒரு மடமில்லையே என்று வருத்தம் தோன்றுமாம். உடனே எல்லாரும் புதுசாக ஒரு மடம் கட்டுவதைப்பற்றித் திட்டமிடுவார்களாம். அடுத்தநாள் காலையில் முதல்வேளையாக திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இறங்கவேண்டும் என்ற முடிவெடுப்பார்களாம். ஆனால் காலை விடிந்ததுமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிடாமல் எழுந்து ஓடிப்போவார்களாம். இப்படியாக அந்த ஆண்டிகள் மடம் இன்றுவரைக்கும் கட்டப்படவே இல்லை என்று சொல்லிக் கதையை முடிப்பாள் அம்மா. நாங்கள் எல்லாரும் ஓவென்று கைகொட்டிச் சிரிப்போம்.

பெல்லாரி மாவட்டத்தில் நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த இடம் மிகவும் பின்தங்கிய பகுதி. ஒன்றிரண்டு மாதப்பழக்கத்தில் எனக்கு அங்கே சில நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் மூலம் அங்கே வசிக்கிற பல மாணவர்கள் ஆங்கிலம் வாசிப்பதில் தடுமாறுவதை அறிந்தேன். உடனே நான் அவர்களுக்கு ஆங்கிலம் போதிப்பதாகச் சொன்னேன். வெறுமனே நடைப்பயிற்சியில் கழிகிற சாயங்கால வேளைகளில் ஒன்றிரண்டு மணிநேரத்தை இதற்காகச் செலவு செய்வதில் எனக்கு எந்தத் தடையுமில்லை. என் எண்ணத்தையொட்டி நண்பர்களும் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மாணவர்கள் அமர்ந்து கற்றுக்கொள்ள மின்வசதியுள்ள ஒரு கூடம் மட்டுமே தேவையாக இருந்தது.

ஒன்றிரண்டு நாள்களில் ஏற்பாடு செய்துவிட முடியும் என்று சொன்னார்கள் நண்பர்கள். நானும் ஒவ்வொரு மாலையும் அவர்களுக்காகக் காத்திருந்தேன். ஏறத்தாழ இரண்டு வாரங்களாகியும் பதில் இல்லை. இதற்கிடையில் அவர்கள் என்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பதையும் உணர்ந்தேன். வகையாக ஒருநாள் அவர்கள் கடைத்தெருவில் அகப்பட்டதும் நான் மறுபடியும் கூடத்துக்கான ஏற்பாட்டைப்பற்றியும் ஆங்கிலப் பயிற்சியைப்பற்றியும் விசாரித்தேன். அவர்களில் இருவர் எதைஎதையோ பூசி மெழுகித் தவிர்க்கப் பார்த்தார்கள்.

ஒருவன் மட்டும் உண்மையைச் சொன்னான்.

இப்படி ஒரு ஏற்பாடு நடந்தால் கூடத்தைக் கொடுத்துதவுவதாக முதலில் சொன்ன பெரிய மனிதர் கூடத்துக்காக அணுகியதுமே எத்தனை பிள்ளைகள் வருவார்கள், எந்தெந்த சாதிக்காரர்கள் வருவார்கள், தாழ்ந்த சாதிக்காரர்கள் வருவார்களா, எல்லாரையும் ஒரே வரிசையில் எப்படி உட்கார வைப்பது, சொல்லித் தருபவன் எந்தச் சாதி, மாணவர்களையெல்லாம் அவன் தொட்டுச் சொல்லித் தருவானா, தொடாமல் சொல்லித் தருவானா, சாப்பிடவோ வேறு ஏதாவது வேலைகளுக்கோ கூடத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வானா என ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டார் என்றும் பிள்ளைகள் படிப்பதில் பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறை எங்கிருந்தோ வந்த இவனுக்கேன் வருகிறது, ஏதாவது உள்நோக்கம் இருக்குமா, வெளியூர்க்காரன் வார்த்தையில் உள்ளூர் இளைஞர்கள் அகப்பட்டு விடக்கூடாது என்றெல்லாம் குழப்பிவிட்டார் என்றும் சொன்னான். அவரை விட்டு ஊர்க்கடைசியில் வேறொரு இடத்தைத் தயார் செய்துகொண்டு பிள்ளைகளை அழைக்கப்போனபோது ஏற்கனவே ஒத்துக்கொண்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்களை அனுப்பத் தயாராக இல்லையாம். எல்லாருடைய மனங்களிலும் ஏதேதோ சந்தேகம். ஏதேதோ பொய்க்காரணங்கள் சொல்லித் தட்டிக் கழித்தார்களாம். எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக ‘அந்தப்பையன் கூட உங்களுக்கென்ன பேச்சு ? ‘ என்று என்னோடு பேசுவதை நிறுத்துமாறு கட்டுப்படுத்தினாரகளாம். இறுதியாக ‘இந்த ஜனங்களே இப்படித்தான் சார், ரொம்ப மோசமானவங்க ‘ என்ற சொல்லிவிட்டுத் தம்மை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டபடி புறப்பட்டுப் போனார்கள்.

அன்றிரவு நடந்ததையெல்லாம் தொகுத்து நிதானமாக யோசித்துப் பார்த்தேன். அம்மா சொன்ன ஆண்டிகள் மடம்கட்டிய கதையையும் நினைத்துக்கொண்டேன். எனக்கு யார்மீதும் கோபம் வரவில்லை. அவர்களைப் புரிந்துகொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பாக அச்சம்பவத்தை நினைத்துக்கொண்டேன். நடுத்தட்டு மக்களின் மனநிலையே அப்படித்தான் என்று தோன்றியது. அவர்கள் வேகவேகமாகப் பேசுவார்கள். எதைப்பற்றியும் விமர்சிப்பார்கள். வார்த்தைகளாலேயே நார்நாராகக் கிழித்துத் தொங்கவிடுவார்கள். உணர்ச்சிபூர்வமான நிலையில் என்ன பேசுகிறோம் என்ற தெளிவே இல்லாமல் அள்ளித்தெளிப்பார்கள். ஆனால் செயல்பூர்வமாக ஒரே ஒரு சின்னக்காரியத்தைக்கூட செய்ய மாட்டார்கள். புதுசாக ஆயிரமாயிரம் காரணங்களைக் காட்டித் தள்ளிப்போட்டு விடுவார்கள். ‘நாம எல்லாரும் அண்ணந்தம்பி மாதிரிப்பா ‘ என்று தேனொழுகப் பேசுகிறவர்களை நெருங்கிக் கைகொடுக்கும்போது ‘தம்பிக்கு எந்தப்பக்கம் ? எந்த சாதி ? ‘ என்ற தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். வாய்ச்சவடால்களிலேயே அவர்கள் காலம் கழிந்துவிடும். துரதிருஷ்டவசமாக இந்தியாவின் நடுத்தட்டு மக்களில் பெரும்பாலோர் இப்படிப்பட்ட வாய்ச்சொல் வீரர்களே.

வாய்ச்சொல் வீரத்தைப்பற்றிய எண்ணம் மனத்திலெழும்போதெல்லாம் சி.ஆர்.ரவீந்திரனுடைய சராசரிகள் என்கிற சிறுகதையையும் மனம் அசைபோடும். சுற்றிலும் கருவேல மரங்கள் நிறைந்திருக்கும் ஒரு சரிவு அக்கதையில் இடம்பெறுகிறது. சரிவின் முகட்டில் அங்கங்கே புதர்களும் இருக்கின்றன. புல் மொசுமொசுவென்று வளர்ந்திருக்கிறது. அங்கே நிலவும் அமைதிச்சூழலால் அந்த இடத்தைப் படிக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறான் துரை என்னும் இளைஞன். தேர்வுச் சமயங்களில் பொழுது சாயும் வரை அந்த இடத்தில் படித்துக்கொண்டிருப்பது அவன் பழக்கம்.

அமைதியைக் கிழித்துக்கொண்டு யாருடைய குரலோ எழுவதைக் கேட்டு அந்தப் பக்கமாய்ப் பார்க்கிறான் துரை. இரண்டு இளைஞர்கள் ஒரு பாம்பைத் தொடர்ந்து வருகிறார்கள். அது எந்த வகையான பாம்பு என்பதில் இருவருக்கும் குழப்பம் நிலவுகிறது. ஆளுக்கு ஒரு பேரைச் சொல்கிறார்கள். நாகப்பாம்புதான் என்று உறுதியாகத் தெரிகிறபட்சத்தில் அதை உடனே அடித்துக்கொல்லத் தயாராக இருக்கிறான் ஒருவன். ஒருவன் கையில் அடிப்பதற்கென்றே சில கற்கள் உள்ளன. மற்றொருவன் கையில் உண்டிவில் இருக்கிறது. பாம்பு நெளிந்து நெளிந்து முன்னால் போய்க்கொண்டே இருக்கிறது. தமக்குள் விவாதித்தபடியே இளைஞர்களும் பின்தொடர்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத்தாலும் பேச்சாலும் ஈர்க்கப்பட்ட துரை படிப்பதை விடுத்து அவர்களுடன் சேர்ந்துகொள்கிறான். வெளிச்சம் மங்கிக்கொண்டே வருகிறது. பாம்பைப்பற்றி அவனாலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை.

சற்றே துணிச்சல் வரப்பெற்ற துரை சிறிய மண்ணாங்கட்டியை எடுத்துப் பாம்பின் தலைப்பக்கமாக உருட்டிவிட்டான். இரைவிழுங்கிய பாம்பு லேசாகத் தலையைத் துாக்கிப் பார்த்துவிட்டுத் திரும்பவும் ஊர்ந்தது. அவனாலும் அதைச் சரியாக இன்னதுதானென்று சொல்லமுடியவில்லை. மற்ற இருவரில் ஒருவன் அது கருநாகமாக இருக்கலாமென்று சொல்கிறான். மற்றவன் கோதுமை நாகமாக இருக்கலாமென்று சொல்கிறான். அப்படியென்றால் அடித்தே தீருவது என்று கற்களைப்பொறுக்கிறான் துரை.

அந்த நேரத்தில் சரிவிலிருந்து இறங்கி வந்த ஒரு ஆள் என்ன விஷயமென்று விசாரித்தபடி இவர்கள் பக்கமாக வருகிறான். பாம்பு என்று சொன்னதும் சரிவுக்கு அந்தப்பக்கமாக இருந்தவனைச் சத்தம்போட்டுத் துணைக்கு அழைக்கிறான். இப்போது ஐந்து பேராக அந்தப் பாம்பைத் தொடர்கிறார்கள். ஒவ்வொருவரும் இதற்கு முன்னர் பாம்பைக் கொன்ற கதைகளைச் சொல்கிறார்கள். முன்னால் ஊர்ந்துகொண்டிருந்த பாம்பு திடுமென திரும்பி தலையை உயர்த்திப் படமெடுக்கிறது. எல்லாருடைய கைகளிலும் கற்கள் இருந்தன. ஆனாலும் யாரும் அடிக்கவில்லை.

ஒவ்வொருவரும் பாம்பை அடிக்குமாறு மற்றவர்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். பாம்பை அடித்துக் கொன்றதற்காகத் தன் மாமா முன்னொரு முறை திட்டியிருப்பதால் மறுபடியும் அதே தவறைச் செய்ய விரும்பவில்லை என்று தயங்குகிறான் ஒருவன். கை வலிப்பதால் தன்னால் குறிபார்த்துச் சரியாக அடிப்பதில் சிரமமிருப்பதாகச் சொல்லிச் சமாளிக்கிறான் இன்னொருவன். தன் மனைவி முழுகாமல் இருக்கிற நிலையில் பாம்பை அடித்துக்கொல்வது பாவமென்ற சொல்லித் தயக்கம் காட்டுகிறான் மற்றொருவன். இருட்டிக்கொண்டு வருகிற சூழலில் குறிபார்த்து அடிப்பது சாத்தியமில்லை என்றும் அடிவாங்கிக்கொண்டு தப்பித்துவிட்டால் அது பழிவாங்க அலையுமென்றும் சொல்கிறான் இன்னொருவன். பேசிக்கொண்டே எல்லாரும் பாம்பைப் பார்த்தபடி நின்றிருக்கிறார்கள். அது படமெடுத்து இரண்டடி உயரத்துக்குத் தலையை நிமிர்த்தி இவர்களைப் பார்க்கிறது.

பாம்பைக் கொல்லும் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பிவிடுகிறார்கள் எல்லாரும். யாருக்கும் தன் இயலாமையை ஒப்புக்கொள்ளும் மனமில்லை. ஒவ்வொருவரும் இதற்கு முன்னர் பாம்புகளை அடித்த வீரப்பிரதாபங்களை மாறிமாறிச் சொன்னவண்ணம் சரிவிலிருந்து ஊரைநோக்கி நடந்து வருகிறார்கள். குளத்தைக் கடந்து ஊர்முனையில் நின்று மூலைக்கொருவராய்ப் பிரிந்து போனர்கள். துரை மற்றொரு முறை கருவேல மரங்கள் அடர்ந்த அச்சரிவைத் திரும்பிப் பார்க்கிறான். இனிமேல் அந்தப் பக்கமே செல்லக்கூடாது என்கிற முடிவைத் தனக்குள் முணுமுணுத்தபடி வீட்டை நோக்கி நடக்கிறான்.

கதையில் பாம்பு வலிமையான படிமமாகச் செயல்படுகிறது. அழித்தொழிக்கப்பட வேண்டிய பல அம்சங்களின் குறியீடாக இருக்கிறது பாம்பு. வறுமை, சாதி, ஊழல், லஞ்சம், சர்வாதிகாரம், சுரண்டல் எனப் பல தளங்களுக்கு கதையை விரிவுபடுத்திக்கொள்ளலாம். பொறாமை, ஆசை, அகம்பாவம், கள்ளம் என்றம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். எல்லாமே ஒழிக்கப்பட வேண்டியவைதாம். ஒழிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தே இல்லை. ஒழித்தே தீரவேண்டியதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன. அவற்றைப் பட்டியலிட்டுத் தாம் பட்ட சிரமங்களைச் சொல்வதிலும் எல்லாரும் ஊக்கம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவற்றை அகற்றும் செயலில் ஈடுபட மட்டும் தயக்கமிருக்கிறது. சிக்கலில் அகப்பட்டு சிரமப்படக்கூடாதே என்கிற பாதுகாப்பு உணர்வால் பின்வாங்குகிறார்கள். ஆயிரம் சாக்குபோக்குகள் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்கள். பொதுநலனுக்காக ஒன்றை ஒழிப்பது அல்லது ஒன்றை வளர்த்தெடுப்பதைவிட சுயபாதுகாப்பே ஒவ்வொருவருக்கும் முக்கியமாக இருக்கிறது. கோலை ஒங்கியடிக்காமல் பாம்பைச் சாகடிக்கிற சாகசத்தைப்பற்றிப் பேசிப்பேசியே காலம் தள்ளுகிற நடுத்தட்டுச் சராசரிகளைக் கோழைகள் என்று சொல்ல முடியாது. மாறாக, காரியவாதிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்