தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

விஸ்வாமித்ரா


10-12-2001:

என் மக்கள்

மடிந்தனர் தீ அணைவதுபோல

ஒரு சுவடுமின்றி – அடோனிஸ்

நானும் ரவிகார்த்திகேயனும் ஆலப்பாக்கத்தில் சென்று இறங்கியபோது அந்தச் சேரி தணிந்து எரிந்து கொண்டிருந்தது. சாலை மறியல் போராட்டம் நடத்திய வன்னியர்கள் வைத்த நெருப்பு. நண்பர் ரவிகார்த்திகேயன் அப்போது மாலைமலரில் நிருபர். செய்திகேட்டு நானும் அவருடன் சென்றேன்.

பொழுது விழத்தொடங்கிய நேரம். ஒளிமங்கி எங்கும் சாம்பல் பூசினாற்போல ஒரு தோற்றம். கரிந்துகொண்டிருக்கும் வீடுகளிலிருந்து புறப்பட்டு அலையும் புகைமூட்டம். நடுத்தெருவில் அமர்ந்திருந்தார்கள். நடந்ததைச் சொல்லக்கூட நா எழவில்லை.

இப்போதும் கடலூரிலிருந்து சிதம்பரம்போகும்போது ஆலப்பாக்கத்தைப் பார்க்கிறேன். சாம்பல் படிந்த அதன் தோற்றம் எனக்குள் மாறவே இல்லை.

>====

இந்தியா டுடே ஜூன் 21-ஜூலை 5 1997:

மனசாட்சி உள்ளவர்கள், வரலாறு தெரிந்தவர்கள் முக்குலத்தோரிடையே இல்லையா ? அவர்களுக்குத் தமது வரலாறு மறந்துவிட்டதா ? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1911ஆம் ஆண்டில் குற்றப்பரம்பரையினர் சட்டத்தின்கீழ் தாங்கள் கொண்டுவரப்பட்டு அனுபவித்த கொடுமைகளும் மறந்துவிட்டனவா ? அரசாங்கம் அவர்களை நசுக்கியபோது அவர்கள் என்ன செய்தார்கள் ? அவர்கள் மற்றவர்களை ஒடுக்கினார்கள். திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கள்ளர், மறவர்களால் தலித்களுக்கு எதிராக எட்டுக் கட்டளைகள் போடப்பட்டன. தலித்கள் நகை அணியக் கூடாது; மட்பாண்டங்கள் மட்டும்தான் வைத்துக் கொள்ள வேண்டும்; தலித் பெண்கள் மார்பகங்களை மறைக்க ரவிக்கை போடக்கூடாது; ஆண்கள் சட்டை, பனியன் போடக்கூடாது; தலித் பெண்கள் பூவைக்கக் கூடாது; தலித்கள் செருப்பு போடக்கூடாது; குடைபிடித்துச் செல்லக்கூடாது; இம்மக்கள் கோயில் பக்கமே வரக்கூடாது என்பன அந்த எட்டுக் கட்டளைகள்.

இப்படியான கட்டளைகளை தலித்கள் ஏற்க மறுத்ததால்தான் அன்றிலிருந்து இன்றுவரை தென்மாவட்டங்களில் ‘கலவரங்கள் ‘ நடக்கின்றன.

>====

தலித் முரசு நவம்பர் 1998:

‘விழுப்புரம் மாவட்டத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். ஏறத்தாழ 27 லட்சம் மக்கள்தொகை கொண்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களால் ஆன மாவட்டம் அது. நான்காயிரம் கிராமங்கள் என்றால் நான்காயிரம் சேரிகள் உள்ளதென்று பொருள். ஆக நான்காயிரம் கிராமங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் தீண்டாமை இருக்கிறதென்று பொருள். ஆனால் இந்த ஆண்டில் இந்த மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான வழக்குகள் 31 மட்டுமே. அவற்றில் 19 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. ஒன்பது கிடப்பில் போடப்பட்டன. மூன்று வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு சொல்லப்பட்டது. ‘

‘தலித் மக்களின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்க முன்வரும் ராமதாஸ், தலித் மக்களின் சமூக, அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கத் தயங்குகிறார். அவரது கட்சியில் பெருகிவரும் சாதி வெறிக்குரல்களைக் கண்டு அஞ்சுகிறார். இது அமைதியை நிலைநாட்டும் வழியாக இருக்க முடியாது. தலித் மக்களுக்கு ஆதரவாக அவர் ஆற்றிவரும் நல்ல பணிகளை அங்கீகரிக்கும், பாராட்டும் அதே வேளையில் இதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

மற்ற அரசியல் தலைவர்களைப்போல அவரை நாம் மதிப்பிட முடியாது. ஆனால் ‘வன்னிய சிங்கங்கள் ‘ என்ற போர்வையில் கிளம்பியுள்ள சாதிவெறிக் கும்பலைக் கண்டித்துக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்குள்ளது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். இந்த சாதி வெறிக் கும்பலின் பின்னணியில், பெரம்பலூர் பகுதியில் ‘தலைவெட்டி ‘ அரசியல் நடத்திக் கொண்டிருந்த கூலிப்படையினரின் கொடுங்கரம் மறைந்திருப்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ‘

‘சண்முகையா பாண்டியனுக்குப் பத்திரிகைகளில் தரப்படும் முக்கியத்துவம், வன்னிய சிங்கங்கள் என்ற சாதிவெறிக் கும்பலுக்கு வலிந்து உண்டாக்கப்படும் விளம்பரம் அனைத்தும் பார்ப்பன சக்திகளின் சூழ்ச்சியேயாகும். ‘

>====

தலித் முரசு – ஜனவரி 1999:

‘உங்கள் வீடு அடித்து நொறுக்கப்பட்டதுண்டா ? உங்கள் மனைவி தப்பி ஓட முடியாமல் அடிபட்டு கர்ப்பம் கலைந்ததுண்டா ? உங்கள் வீட்டில் உள்ள ஒரு செம்பைக்கூட விட்டுவைக்காமல் யாராவது நொறுக்கிப் போட்டதுண்டா ? உங்கள் அப்பா, அண்ணன், தம்பி இரும்பு பைப்பால் அடிக்கப்பட்டு கை, கால் முறிந்ததுண்டா ? இந்த மார்கழி மாதத்துக் குளிரில் உயிருக்குப் பயந்து உங்கள் குழந்தைகளோடு ராத்திரி முழுக்க கரும்புக் கொல்லைக்குள் நீங்கள் பதுங்கிக் கிடந்ததுண்டா ? உங்களுக்கு ஏற்படாமல் போயிருக்கலாம் இந்தக் கொடிய அனுபவங்கள். ஆனால் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது, புலியூர் என்ற கிராமத்தில்.

கடலூரிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில், குள்ளஞ்சாவடியிலிருந்து வலதுபுறம் திரும்பிச் செல்லும் நல்ல தார்சாலையின் ஆறாவது கிலோமீட்டரில் உள்ளது அந்த கிராமம். புலியூர் சேரி, சுற்றிலும் வன்னிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. காட்டுசாகை, புதுத்தெரு, சம்மட்டி குப்பம் என ஏழு கிராமங்கள் – முழுவதும் வன்னியர்கள். தலித் மக்கள் ஏறத்தாழ 500 குடும்பங்கள். 1300 வாக்காளர்கள். இப்போது சென்று பார்த்தால் கூரை வீடுகள் தவிர, அரசு கட்டித் தந்துள்ள சேரி வீடுகள் எல்லாம் நொறுங்கிக் கிடக்கின்றன. காவல்துறை வண்டியும், தீயணைப்பு வண்டியும் சாலையை மறித்து நிற்க காக்கிச் சட்டைகள் பொழுதுபோக்க வழியில்லாமல் கொட்டாவி விடுகின்றனர். ‘

‘தாக்கிய சாதி வெறியர்களைக் கைது செய்யக் கூடாது என பா.ம.க. தரப்பிலிருந்து காவல்துறைக்கு நெருக்கடி தரப்படுவதாக புலியூர் சேரி மக்கள் சொல்கிறார்கள். பா.ம.க.வின் இளைஞரணி செயலாளர் வேல்முருகன், புலியூரைச் சேர்ந்தவர்தான். ‘முதல்நாள் இரவே தாக்குவதற்குக் கிளம்பினார்கள். நான் தடுத்து நிறுத்திவிட்டேன். மறுநாள் காலை எனக்குத் தெரியாமல் இப்படி நடந்துவிட்டது ‘ என அவர் தெரிவித்துள்ளார்.

>====

எழுச்சி தலித் முரசு மே 1999:

மினுக்கும் கானல், தொண்டை காயும் வெயில், பரபரப்பாக இயங்கும் உலகுக்கு அப்பால் இருக்கிறது அனுக்கூர். விழுப்புரம் திருச்சி சாலையில் தொழுதூரைத் தாண்டி வற்றிய ஓடைபோல கல்பரவிக் கிடக்கும் சாலையில் இருபது கிலோமீட்டர்களைக் கடந்தால் அனுக்கூருக்குள் நுழையலாம்.

சாதி இந்துக்கள் வாழும் காரை வீடுகள்; ஒரு பேருந்து நிலையத்தில், ரசிகர் மன்ற போர்டுகள். அரசியல் கட்சிகளின் வாசனைகூட அவ்வளவாக இல்லாத சூழல். வழக்கம்போல ஊர் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி. சேரிக்கு அடையாளமாகப் பெரியபுராணக் காலத்திலிருந்து கூறப்படும் குடிசைகள் ஒன்றுகூட அனுக்கூரில் இல்லை. எல்லாம் எரிக்கப்பட்டு சாம்பல் மேடாய்க் கிடக்கின்றன. சாம்பலை அள்ளி வந்து காற்று முகத்தில் அறைகிறது. பாதி கருகி நிற்கும் வேப்பரமத்தின் கீழ் மிச்சமாக இருக்கிறது. ஓடு வேய்ந்த ஒரு கோயில் மண்டபம். அதன் திண்ணையில் போலீஸ்காரர்கள் சீட்டு விளையாடுகிறார்கள்.

ஊர் மக்கள் அசைவின்றி ஆங்காங்கே உச்சிவெயிலில் நிற்கிறார்கள். பொங்கித்தின்ன ஒரு நிழல் இல்லை. ஐம்பத்தேழு வீடுகள் கொளுத்தப்பட்டன. முப்பது ஆடுகள் பொசுக்கப்பட்டன. ஒரு கன்றுக்குட்டியைத் தூக்கி நெருப்பில் வீசிவிட்டார்கள். யார் செய்தது இந்தக் கொடுமைகளை ?

அனுக்கூரில் தலித் மக்கள் 120 குடும்பங்கள். வன்னியர்கள் 800 குடும்பங்கள். இவர்களைத் தவிர ஊராலிக் கவுண்டர்கள் 40, 50 குடும்பங்கள். உடையார் சாதியைச் சேர்ந்தவர்கள் 15 குடும்பங்கள். பஞ்சாயத்து தலைவராயிருக்கும் ஆனைமுத்து திமுகவைச் சேர்ந்த வன்னியர்.

தாழ்ந்த சாதிப் பயல்கள் நம்மை அடிப்பதா ? என்று கொதித்தெழுந்த வன்னியர்கள் கூடிப்பேசித் திட்டமிட்டு, மறுநாள் அதிகாலையிலிருந்து தாக்குதலைத் துவக்கி விட்டார்கள். ‘

>====

எழுச்சி தலித் முரசு அக்டோபர் 1999:

‘சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றுவரும் வன்முறை, திமுக ஆட்சி யாருக்கானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ‘

‘ஒரு லட்சத்திற்கும் அதிகமான தலித் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாத நிலை உண்டாக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குகளைப் பாட்டாளி மக்கள் கட்சியினரும், திமுகவினரும் கள்ள ஓட்டுகளாகப் போட்டுக் கொண்டனர். இதைத் தடுத்து நிறுத்த முற்பட்ட தலித் மக்களை வெட்டிச் சாய்த்தது சாதிவெறிக் கும்பல். தலித் மக்களின் வீடுகள் கொளுத்திச் சாம்பலாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள தகவலின்படி, இதுவரை 504 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. ஒண்டிக் கொள்ள நிழல் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ‘

‘பறையடிக்க மறுத்ததற்காக, தலித் மக்கள் மீது வன்னியர்கள் நடத்திய தாக்குதலால் கலவரத்தின்போது, போலீஸ் சுட்டதில் குருங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்னும் பட்டதாரி தலித் இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டார். ‘

‘சிதம்பரம் தொகுதியில் தேர்தலுக்கு முன்பிருந்தே, சாதிவெறித் தாக்குதல் நடக்கலாமென்ற அச்சமும் பதற்றமும் நிலவியது. திருமாவளவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவரை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்ற வெறி ராமதாஸ் கட்சியினரிடம் உண்டாக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் என கருணாநிதி மிரட்டியதால் சிதம்பரம் பகுதி அமைச்சரான முட்டம் பன்னீர்செல்வமும் வெறியோடு களத்தில் குதித்தார். ‘

‘அவரும் ராமதாசின் அடியாளான காடுவெட்டி குருவும் சேர்ந்து தேர்தல் வேலை பார்க்க ஆரம்பித்ததுமே, இங்கே ரத்த களரி நடக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு விட்டனர். ‘

>====

தலித் முரசு ஜூன் 2000:

ஒரு சத்தம் கிடையாது. கையைக் காலை உதைத்துப் போராடியதற்கான அடையாளம் கிடையாது. மூன்று பேரும் பக்கம் பக்கமாக அப்படியே படுத்திருக்கிறார்கள். தலை துண்டாகிக் கிடக்கிறது. கழுத்து அறுக்கப்பட்டு காந்தி, வெள்ளையன், மதியழகன் என்ற மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். சிதம்பரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையோரமாக இருக்கிறது புளியங்குடி கிராமம். தலித் கிராமங்கள்120 உள்ளன. வன்னியர்கள் சுமார் 1000 குடும்பங்கள் இருக்கிறார்கள். தலித்துகளில் ஒருத்தருக்கும் நிலங்கள் கிடையாது. அரசு கட்டித் தந்த சில வீடுகள் தவிர மற்ற எல்லாமும் குடிசைகள்தான். வன்னியர்கள் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து, தோப்பு துரவு என்று வளமாக இருக்கிறார்கள். ‘

புளியங்குடி கிராமம் சாதிய ஒடுக்குமுறைக்குப் பெயர்போன ஊராகும். 1946இல் இந்த ஊரில் வடமலை என்ற ஒரு தலித் இளைஞர் கட்டிவைத்து மூன்று நாட்களுக்குச் சித்திரவதை செய்யப்பட்டார். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து திரும்பியவர். அவர் மீசை வைத்திருந்தார் என்பதற்காக அவரைக் கட்டிவைத்து வன்னியர்கள் அவரது மீசையை நெருப்பு வைத்துக் கொளுத்தியுள்ளனர். ‘

வன்னியர் கட்சியான பாமக கோபம் கொள்ளும் என்பதற்காகவே கருணாநிதி அரசு கொலையாளிகளைக் கைது செய்யத் தயங்குகிறது. ‘

>====

தலித் முரசு ஜூலை 2000:

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொலையுண்டவர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. காட்டுக்கூடலூர் தட்சிணாமூர்த்தி, கவரப்பட்டு கந்தசாமி, வேப்பங்குறிச்சி கலியன், வீரமுடையான் நத்தம் முருகேசன், மணிக்கொல்லை பெரியசாமி, நெய்வேலி மாவீரன், தியாகவல்லி முரளி, பாலூத்தங்கரை பிச்சையப்பிள்ளை, திருக்கண்டேசுவரம் ஆனந்தராஜ், புளியங்குடியில் காந்தி, வெள்ளையன், மதியழகன் ஆக 12 ஆண்கள் அத்துடன் கீழ்குமாரமங்கலம் விக்டோரியா, கோ.ஆதனூர் பொன்னருவி, மேலப்பாலையூர் சகுந்தலா, சிறகிழந்தநல்லூர் மாலதி, செல்லஞ்சேரி சிவகாமி, கருக்கை அம்சவல்லி, செங்கமேடு காந்திமதி தற்போது விழப்பள்ளம் நிர்மலா ஆக எட்டுப் பெண்கள். ‘

‘ராமதாஸோடு திருமாவளவன் ஒரே மேடையில் பேசுவது புதியதல்ல. ஏற்கனவே பலமுறை பேசியும் இருக்கிறார்கள். ராமதாசுக்குத் தமிழ்க்குடிதாங்கி என்று பட்டமளித்துச் சிறப்பித்தவர் திருமாவளவன். ஆனால் இன்று இருக்கிற ராமதாஸ் அல்ல அது. இப்போதும்கூட ராமதாசோடு பேசலாம். தலித்கள் போடும் மேடையிலேறி ராமதாஸ் பேசட்டும். நடந்த கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கட்டும். கொலையாளிகளைப் பிடித்துதர உதவி செய்யட்டும். செய்வாரா ராமதாஸ். அவரது அரசியல் சாதிவெறியைத் தூண்டி கலவர பூமியாக வட மாவட்டங்களை மாற்றுவதில்தான் தங்கியுள்ளது. ‘

>====

மேலே பட்டியலிடப்பட்ட மேற்கோள்கள் அனைத்தும் தலித் சிந்தனையாளர் ரவிக்குமார் எழுதிய கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்பட்டவை. மேலே காணப்படும் மேற்கோள்கள் அனைத்தும் ‘கொதிப்பு உயர்ந்து வரும் ‘ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே. காலச்சுவடு பதிப்பகம். விலை ரூ 75/- இந்தப் புத்தகத்தில், தலித்துக்களுக்கு எதிரே நடந்த பல சம்பவங்கள் விவரிக்கப் பட்டுள்ளன. தலித் மக்கள் மீது காலம் காலமாக ஏவப் பட்டு வரும் அனைத்து வன்முறைகளையும், அடக்கு முறைகளையும் இவரது கட்டுரைகள் ஆவணப் படுத்தியுள்ளன. திருமா வளவின் அரசியல் ஆலோசகராகவும் ரவிக்குமார் கருதப் படுகிறார். இந்தப் புத்தகத்தைப் பாராட்டி முன்னுரை எழுதியளித்திருப்பவரும் திருமாவளவன் தான்.

இப்படி வன்னியர்கள் தலித்கள் மேல் தொடர்ந்து இழைக்கும் அராஜகங்களைக் கடுமையாக எதிர்த்தவர் திருமாவளவன். அப்படியாகப் பட்ட திருமாவளவன், தலித் மக்களை வன்னியர்களின் வன்முறைப் பிடியிலிருந்து காப்பதற்காக அவதாரமெடுத்திருக்கும் தலித் மக்களின் காவலன், தலித் மக்களைத் தேவர்களின் அடக்குமுறைகளிலில் இருந்து விடுவிக்க வந்திருக்கும் தளபதி, இப்பொழுது என்ன செய்கிறார் ?

போராடுகிறாராம். யாருக்காக ? துயர் படும் ஏழை எளிய தலித் மக்களுக்காகவா ? இல்லையாம் !! பின்னே ?

தமிழுக்காகவாம் !! ஓ தமிழுக்காகவா!!, யாருடன் சேர்ந்து கொண்டு ?

யாரை இத்துனைக் காலமும் தலித் இன மக்களின் எதிரியாக, அடக்கி ஆள்பவராக இனங் கண்டாரோ அதே, வன்னியத் தலைமையுடனாம்!! அதே முக்குலத்தோர் இனத் தலைவருடனாம்!!

அப்படியானால், இப்பொழுது தலித்களின் மீதான வன்கொடுமை சுத்தமாக அகன்று விட்டதா ?

இரட்டைத் கோப்பை முறை அறவே ஒழிந்து விட்டதா ?

கீரிப்பட்டியிலும், பாப்பாரப் பட்டியிலும் தலித் பஞ்சாயத்து தலைவர்களை அனைத்து கிராம மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனரா ?

தலித் மக்கள் வன்னியர் தெருவிலும், தேவர்கள் முன்னாலும் செருப்புப் போட்டுக் கொண்டு போக தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் அனுமதி அளித்து விட்டனாரா ?

கண்டதேவியில் தேர் இழுக்க அனுமதியளித்து விட்டனரா ?

எது நடந்து விட்டது தமிழ்நாட்டில் ?

எங்கே தீண்டாமை ஒழிந்து விட்டது ?

ரவிக்குமார் இட்ட பட்டியல் எல்லாம் கனவாய், கற்பனையாய்க் காணாமல் போய் விட்டனவா ? சமத்துவமும் உள்ள சமுதாயம் மலர்ந்து விட்டனவா ? நெஞ்சை நிமிர்த்தித் தன் மனசாட்டியைக் கேட்டு சொல்ல முடியுமா திருமாவளவனால் ?

அட திருமாவளவன் தான் தமிழைக் காக்கப் போராடுகிறார், அவருக்கு மனசாட்சியுடன் எல்லாம் பேச நேரமிருக்காது!! தலித்துக்களின் அவல நிலைமைகளை ஆவணப் படுத்திய ரவிக்குமாராவது திருமா வளவனிடம் சற்றுக் கேட்டுச் சொல்லலாமே ? சொல்வாரா ?

தமிழைக் காக்கவும் வளர்க்கவும், போற்றவும், பெருக்கவும், பிற நாடுகளில் உள்ள தமிழர்களையும் கூடத் தமிழ் மொழி படிக்க வைக்கவும், எண்ணற்ற அரசியல் கலவாத, தமிழறிஞர்கள் அமைதிப் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் தமிழ் வளர்ச்சியை. ஆனால் அவர்களாலெல்லாம் முடியாத பணிகள் பல உள்ளன. திருமாவளவன் போன்ற தலித் மக்கள் நம்பி வந்த இளைய தலைவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. தமிழ்ப் பணியும் அதில் ஒன்றாக இருக்கலாம், அதைச் செய்ய வேண்டிய முறையும், இடமும், காலமும் வேறு.

இதை உணராதவரா திருமாவளவன் ? புரியாதவரா திருமாவளவன் ? இருந்தும் ஏன் இந்த தமிழ் நாடகம் ? தமிழின் பெயரைச் சொல்லி தார் பூசும் அரசியல் அவலம் ? அவரை நம்பி வந்த லட்சக்கணக்கான தலித் மக்களுக்கு விளங்க வைப்பாரா அவர் ஏற்று செய்யும் இந்த ஏமாற்று வேலையினால் அவர்களுக்கு என்ன பயன் என்று ?

இவர் ஆங்கிலப் பலகைகள் மேல் பூசும் தாரால், வன்னியர் தலித்துக்கள் மேல் காட்டும் அரஜாகம் அழிந்து விடப் போகிறதா ? இவர் ஆங்கிலத்தை விரட்டுவதனால், தலித் மக்களுக்கு தமிழ் நாட்டில் தடையில்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்கப் போகிறதா ? ஒரு வேலை இவர் ஆங்கிலத்தை அகற்றி விட்டுத் தமிழ் வளர்ப்பதால் தீண்டாமை ஒழிந்து விடுமோ ?

தலித்களின் மீதும் தமிழின் மீதும் உண்மையான ஆதரவாளர்களாக, அக்கறை கொண்டுள்ளவர்களாக இந்தக் கேள்விகளைத் திருமாவளவன் முன்வைக்கிறோம்.

1. ஆங்கிலப் பெயர் பலகைகளைத் தார் பூசி ராமதாசுடனும் சேதுராமனுடனும் சேர்ந்து அழிப்பதால், வன்னியர்களும் தேவர்களும் தலித்துகளுக்கு இழைத்த கொடுமைகளை அழித்துவிட முடியுமா ? அந்தக் காயங்களையும் வலிகளையும் ஆற்றிவிட முடியுமா ? அல்லது இனியாவது அது போன்ற கொடுமைகள் நடக்கா வண்ணம் தடுக்க இவர்கள் உறுதி மொழியளித்துள்ளனரா ? அப்படியாயின் சேது ராமன் பாப்பாரப்பட்டியிலும், கீரிப் பட்டியிலும் சென்று முகாம் போட்டு, அங்குள்ள பிறமலைக் கள்ளர்கள் வீட்டில் விருந்துண்டு, அவர்களுக்கு நல்ல புத்தி கூறி தலித் பஞ்சாயத்து தலைவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கலாமே ? ஏன் செய்யவில்லை ? அவர் அதுவும், புகழ் பெற்ற டாக்டர் சேதுராமன், மதுரையின் பிரமாண்டமான மீனாட்சி மிஷன் (மிஷன் என்பது தார் அடிக்க வேண்டிய ஆங்கிலம் அல்ல தூய தமிழ் என்று திருமாவளவன் படித்த தமிழ் அகராதியில் இருக்கிறது போலும்) தமிழ் வளர்க்கக் காட்டும் அக்றையில் நூற்றில் ஒரு பங்காவது பாப்பாரப்பட்டியில் இவர்கள் காட்டியிருக்கலாமே ? ஏன் காட்டவில்லை ? ஆகக் கூட்டு தார் அடிக்க மட்டுமே!! அப்படித்தானே ? பதில் கூறுவாரா திருமா ?

2. தமிழ் வாழ்ந்தால் தலித்துகள் வாழ்ந்துவிடுவார்களா ? ரவிக்குமார் தருகிற ஆதாரத்தின்படி தலித்கள் மீது வன்கொடுமை நிகழ்த்தி வந்த வன்னியர்களும் தேவர்களும் தமிழர்கள்தானே ? தமிழ் தலித்துகளைக் கொடுமையிலிருந்து கடந்த காலத்தில் காப்பாற்றியிருக்கிறதா ? சரி தமிழ் மட்டுமே படித்து விட்டால் அரசாங்க வேலைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், பிற ஜாதியினருடன் போட்டியிடும் தகுதியைத் தலித் இளைஞர்களுக்குப் பெற்றுத் தருமா ? இதுவா, அவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு தலைவனின் வழிநடத்தும் பாங்கு ? இது போன்று தலித் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் ஒரு தலைவனை நம்பி எத்துனை நாள் தலித் இளைஞர்கள் செல்வார்கள் ?

3. தலித்களின் மொழி தமிழ் மட்டும்தானா ? தமிழ் தவிர பிறமொழிகள் பேசுகிற தலித்கள் தமிழகத்தில் இல்லையா ? அவர்கள் அனைவரையும் தமிழர் இல்லை என்பதால், தமிழ்ப்பிரஷ்டம் செய்துவிடப் போகிறாரா திருமாவளவன் ? வீட்டிலும் வெளியிலும் தெலுங்கு பேசும் தலித்களின் நிலமை என்ன ? அவர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசாவிட்டால் அவர்களை தலித்களுக்குள்ளேயே தமிழ் பேசா தலித் என்று தள்ளி வைக்கப் போகின்றாரா ?

4. சூழ்நிலை மாறும்போது கூட்டணி மாறலாம். இங்கே என்ன சூழ்நிலை மாறியது ? தலித்கள் மீது வன்னியர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ரவிக்குமார் சொன்னமாதிரி ராமதாஸ் பொதுமன்னிப்பு கேட்டாரா ? கொலையாளிகளைப் பிடித்துத் தர உதவினாரா ? மாறாக, தைலாபுரத்தில் திருமாவளவனை மட்டும் கவனித்துக் கொண்டதால் திருமாவளவன் சமாதானமடைந்து வன்கொடுமைகளையும் கொலைகளையும் மறந்து தமிழார்வத்தில் திளைத்துவிட்டாரா ?

5. தமிழின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதற்கு நெஞ்சில் அடித்தவர்களுடன் சேர்ந்து கொள்கிற அளவுக்குத் தலித்துகளின் வாழ்க்கையும் பொருளாதாரமும் முன்னேறி விட்டதா ? தமிழா தலித்தா என்று வந்தால் தமிழையே தேர்ந்தெடுப்பேன் என்று சொல்கிறாரா திருமாவளவன் ? தலித்களின் மீதுள்ள கொடுமைகள் எல்லாம் அகன்று சாதி பாரா சமுதாயம் உருவாகி, அங்கு தமிழ் மட்டுமே அழியும் சூழல் மட்டுமே நிலவுகிறதா என்ன ? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? எந்தக் கோரிக்கைக்கு இரண்டாம் இடம் கொடுக்க வேண்டும் என்பது கூட அறியாமலா தலித் மக்களின் தன்னிகிரில்லாத தலைவராக இருக்கிறார் திருமா ?

6. திருமாவளவனே உங்கள் விலை என்ன ? உங்களை நம்பி உங்கள் பின்னால் வந்த, வன்கொடுமைக்கு ஆளான, கொலையுண்ட, அடிபட்ட தலித் சகோதர சகோதரியரை மறந்து ராமதாசுடனும் சேதுராமனுடனும் சேரும் அளவுக்கு மொழிப்போர் முக்கியமா ? உண்மையின் விலை என்ன ?

7. தமிழுக்காகப் போராடுவதாகச் சொல்லும் திருமா அவர்களே, நீங்கள் தார் அடிக்கச் சொல்லும் பொழுது உங்களை நம்பி, தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத அப்பாவி தலித் இளைஞர்கள், அக்கினி நட்சத்திர வெய்யிலில், ஆயிரக்கணக்கில் தார் எடுத்து அழித்து,

போராடத் தெருவில் வந்து, போலீசால் அடிவாங்கி, உள்ளே சென்னரே, அவர்களின் எதிர்காலத்திற்கு உங்களிடமாவது, நீங்கள் தார் பூசி அழித்தனால் மட்டுமே வளரப் போவதாக ஊரை ஏமாற்றும் போலித் தமிழ் அரசியல் வியாபாரிகளிடமாவது ஏதாவது பதில் இருக்கிறதா ? அல்லது அதையெல்லாம் கேட்க முடியாமல் அந்த இளைஞர்களின் மூளைகளையும் தார் பூசி அழிக்கப் போகின்றீர்களா ? என்ன செய்யப் போகிறீர்கள் ? சொல்லி விட்டுச் செய்யுங்கள். வன்னியர்கள் அடித்தார்கள், தேவர்கள் எரித்தார்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் பாதிக்கப் பட்ட இனத்திற்கு ?

தமிழுக்காகப் போராடும் திருமாவுக்குத்தான், தலித்துக்களின் உண்மையான குமறல்களைக் கேட்க நேரமில்லை, போகட்டும், இந்தக் கேள்விகளை எல்லாம் ரவிக்குமார் திருமாவளவனிடம் கேட்டாரா என்று தெரியாது. அவர் தலித்துகளுக்கு இலக்கியம் தெரியாது என்ற பழி வந்துவிடாமல் இருக்க எழுதிக் கொண்டிருக்கிறார். ஆகவே அவருக்கும் நேரப் பற்றாக்குறை இருக்கலாம். இலக்கியம் தலித்கள் படும் வேதனைகளை மறக்க அடித்து இருக்கலாம். அதனால் நான் கேட்கிறேன். திருமாவளவன் ராமதாசுடனும் சேதுராமனுடனும் சேர்ந்து மொழிப்போரில் ஈடுபடுவது பற்றி ரவிக்குமார் என்ன நினைக்கிறார் ?

மொழியைப் பற்றி அம்பேத்கார் ஏதும் சொல்லவில்லையா ரவிக்குமார் அவர்களே ?

‘சுயநலம் முதன்மைபடுத்தப்படும்போது அறிவு தோற்றுப் போகும் ‘ என்று அம்பேத்கார் குறிப்பிட்டார். இது இந்துக்களுக்கு மட்டுமில்லை, தலித் மக்களுக்கும் பொருந்தக்கூடியதுதான் என்று ரவிக்குமார் ஒருமுறை எழுதினார்.

இப்போது அது திருமாவளவனுக்கும் பொருந்துகிறது என்ற குற்றச்சாட்டுகள் தலித்களால் முன்வைக்கப்பட்டால் ரவிக்குமார் என்ன எழுதுவார் ? திருமாவளவனை நியாயப்படுத்தியா ? ராமதாசை நியாயப்படுத்தியா ? தலித் முன்னேற்றம் தமிழ் மொழிப் போரில் இல்லை என்ற உண்மையைச் சொல்லியா ?

‘ஊர் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி ‘ என்ற ரவிக்குமாரின் வரிகளை திருமாவளவன் மிகவும் ரசித்தாராம். அதையே நானும் ரசித்ததால் விளைந்தது இந்தக் கட்டுரையின் தலைப்பு. தலைப்பு அளித்தற்கு நன்றி திரு.ரவிகுமார் அவர்களே.

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா