தமிழ் மதம் என்று உண்டா ?

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue

இந்திரா பார்த்தசாரதி


இந்தத் தடவை நான் எழுதப் போவது ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை. (பயப்படாதீர்கள்) இதற்குக் காரணம் இருக்கிறது. போனமாதம் நான் எழுதிய இலக்கியக் கட்டுரையை எதிர்த்து ஓர் அன்பர் மிகக் கோபமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ‘திராவிடச் சமுதாயத்தில் சாதிப்பிரிவுகள் இருந்திருக்கலாமென்று கூறியிருக்கிறீர்களே, இதுவே உங்களை ஆரியர் என்று சுட்டிக் காட்டிவிட்டது. சங்க காலத்தில் ஆரியக் கடவுள் வழிபாடோ அல்லது சாதி வேறுபாடோ இருந்ததில்லை… அது தூய தமிழ்ப் பண்பாடு செங்கோலோச்சிய காலம்… அக்காலத்தை நிகழ்காலமாகச் செய்வதற்குத்தான் டாக்டர் கலைஞர் முயன்று வருகிறார்….. ‘

‘கார்த் ‘ என்று கார்டூன் தொடர் கதையைச் சிறுவர்கள் விரும்பிப் படிப்பதுண்டு. ‘டைம்–மெஷின் ‘ மூலம், இறந்த காலத்துக்கோ அல்லது எதிர்காலத்துக்கோ நிகழ்கால மனிதன் செல்வதையும், இதனால் அவனுக்கு ஏற்படும் அநுபவங்களையும் விளக்கும் தொடர்கதை இது. டாக்டர் கலைஞர் தமிழில் விஞ்ஞானப் படைப்பிலக்கியங்கள் இல்லாத குறையைத் தீர்த்துவைக்க முயல்கிறார் என்பதை அறிய மகிழ்கிறேன்.

உலக நாகரிகங்கள் சரித்திரம் தொடங்கிய காலத்திலிருந்து ஒன்றையொன்று பாதித்து, பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எவ்வளவோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு இதைப் பற்றி உணர்ச்சி வயப்பட்டுப் பேசுவது சிறுபிள்ளைத் தனம். சந்திரனை அண்டைவீடாக்கிவிட்ட விஞ்ஞான யுகத்தில் இருக்கத் தகுதியில்லாதவர்கள் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவார்கள்.

‘கடவுள் ‘ என்ற கருத்தைச் சமய ரீதியாக அணுகாமல், சமுதாய உணர்ச்சியோடு நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு இனம், அது வாழும் பூகோள நிலைக்கேற்ப ‘கடவுளை ‘ உண்டாக்கிக் கொள்கிறது. பிறகு வெவ்வேறு இனங்களின் தொடர்பின் போது கடவுள் என்ற இக்கருத்து இன்னும் விரிவடைகின்றது.

தொல்காப்பியர் தமிழ் நிலத்தை வகைப்படுத்தி முல்லையைப் பற்றிக் கூறும்போது, இப்பிரிவின் கடவுளாக ‘மாயோனை ‘க் குறிப்பிடுகிறார். நச்சினார்க்கினியர் ‘மாயோன் ‘ என்ற சொல்லுக்குக் ‘கடல் வண்ணன் ‘ என்று பொருள் எழுதுகிறார். பதிற்றுப் பத்து ஏழாம் பத்து பதிகத்திலும், ‘மாயவண்ணன் ‘ என்ற சொற்றொடர் வருகின்றது. ரிக்வேதம், ‘ஆயர்களின் தலைவன் விஷ்ணு ‘ என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆயர்கள் மிகுதியான இடம் முல்லை. முல்லை நிலத்துக் கடவுள் ‘மாயோன் ‘ என்று தொல்காப்பியர் கூறுவதனால், ‘மாயோன் ‘ என்ற சொல் விஷ்ணுவைத்தான் குறிக்கின்றது என்பது வெளிப்படை.

‘இறைவன் ‘ என்ற தமிழ்ச் சொல், ‘விஷ்ணு ‘ வின் தமிழாக்கம். ‘இறு ‘ என்றால் ‘வியாபி ‘ என்று பொருள். எங்கும் வியாபித்திருப்பவன் இறைவன், ‘விஷ்ணு ‘ என்ற வடமொழிச் சொல்லுக்கும் இதே பொருள். Przylnski என்ற அறிஞர் ‘விஷ்ணு ‘ என்ற சொல்லே, தமிழ்ச் சொல் என்கிறார். (விஷ்ணு–விண்-விட்ணு- விஷ்ணு) நற்றிணையில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் விஷ்ணுவை, ‘வேத முதல்வன் ‘ என்று குறிப்பிடுகின்றது.

கிருஷ்ணன் விஷ்ணுவின் அவதாரம். ஆரிய — திராவிட இனக்கலப்பின் காரணமாகவே இது ஏற்பட்டிருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கண்ணன் ஆயர்குலத்தலைவர். ‘விஷ்ணு ‘ ஆரம்பத்தில் மிகப்பெரிய கடவுளாக ஆரியர்களால் கருதப்படவில்லை. பன்னிரண்டு ஆதித்தியர்களில் ஒருவனாகத்தான் அவன் இருந்தான். விஷ்ணுவை ஆயர்குலத்தோடு இணைத்துப் பேசியது, திராவிடத் தொடர்பினால் ஏற்பட்டிருக்கலாமென்று நினைக்க இடமிருக்கிறது.

இறைவழிபாட்டில் ‘பலி ‘க்குச் சிறப்பிடம் தந்த ஆரிய நாகரிகம், பூக்களைக் கொண்டு வணங்குதலாகிய பக்தி முறைக்கு மாறியதும் திராவிடத் தொடர்பினால்தான் என்று உறுதியாகக் கூறலாம். ‘பூஜா ‘ என்ற சொல் ‘பூ செய் ‘ (பூவை இட்டு வணங்கு) என்பதிலிருந்துதான் வந்தது என்பார் டாக்டர் சுநித்குமார் சாட்டர்ஜி. பூவைக் கொண்டு வணங்குதல் என்பது முல்லை நில நாகரிகம் என்பது தெளிவு. ஆகவேதான் விஷ்ணுவை முல்லை நிலக் கடவுளாக ஏற்றுக் கொண்டபோது கண்ணனையும் அவன் அவதாரமாகக் கருத தொடங்கினார்கள் என்று சொல்லலாம்.

கிருஷ்ணன் இருந்தது வடமதுரையில் (மத்ரா). இவனை ஏற்றுக் கொண்ட இனம் யாதவர்கள். ரிக்வேதம், யாதவர்களின் தலைவனாகிய யதுவை ஆரியரல்லாத இனத்தைச் சேர்ந்தவனாகக் குறிப்பிடுகின்றது. விருஷ்ணி, யாதவ இளவரசன் சாதவாகனின் வழித்தோன்றல். விருஷ்னி இனமக்கள் கறுப்பாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணன், ஆரியரல்லாத இவ்வினத்தைச் சார்ந்தவன் என்று கூறுவர். ஆரியர்கள் மற்றைய இனங்களோடு தொடர்பு கொண்டபோது, அவர்களுடைய மக்கள் தலைவர்களையும் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். அரசர்களைத் தெயவங்களாக வழிபடுவதைத் தொல்காப்பியம் ‘பூவைநிலை ‘ என்று கூறுகிறது.

கிருஷ்ணன் ‘விஷ்ணு ‘வின் அவதாரமாக மிகப் பிற்காலத்தில்தான் கருதப்பட்டான் என்று தெரிகிறது. மகாபாரதம் சபாபர்வத்தில் இடையனைத் தெய்வமாக ஏற்றிப் பேசுவதுபற்றிச் சிசுபாலன் ஏளனம் செய்வதாக ஒரு வரி வருகிறது. ஆரிய பிராம்மணர்களுக்கு எதிரிகளாகத் தங்களை விருஷ்ணி இனத்தார் கருதியதாக அரத்த சாஸ்திரத்தில் ஒரு குறிப்பு தென்படுகிறது. ‘கதாஜாதகம் ‘ மூலமாகவும் இக்கருத்து வலியுறுத்துகின்றது. ஆகவே ஆரியர்கள் மற்றைய இனங்களோடு சமரஸம் செய்துகொள்ளும் முயற்சியாக, ஆரிய இனமல்லாத கண்ணனைத் தங்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்லலாம்.

அவதாரம் என்ற கருத்து தமிழிலக்கியத்தில் தொன்று தொட்டே பேசப்பட்டு வருகிறது. ‘காமப்பகுதி கடவுளும் வரையார், ஏனோர் பாங்கினும் எம்மனார் புலவர் ‘ என்பது தொல்காப்பியம். கோபிகைகள் கண்ணன்பால் கொண்ட காதலினை விளக்கவே இச்சூத்திரம் எழுந்தது என்று கூறுவர் அறிஞர். பலராமருடைய கொடியாகிய பனையைச் சுட்டிக்காட்டவே தொல்காப்பியர் ஒரு தனிச்சூத்திரம் எழுதியிருக்கிறார் என்று கூறுகிறார் பேராசிரியர் மு.ராகவ அய்யங்கார்.

பதிற்றுப் பத்து இன்றைக்குக் கிடைக்கக் கூடிய தமிழ் நூல்களில் மிகப் பழமையானது என்று கருத இடமிருக்கிறது. அது திருவனந்தபுரத்திலுள்ள திருமால் கோயிலைக் குறிப்பிடுகிறது.

….கமழ் குரற் துழாஅய்

அலங்கல் செய்வன சேவத பரவி..(4-1-8,9)

இதைத் தவிர புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, பரிபாடல் ஆகிய சங்க நூல்களில் திருமாலைப்பற்றியும் குறிப்புக்களை பரக்கக் காணலாம். வியூகங்களைப்பற்றிப் பரிபாடல் கூறுகிறது. பஞ்சராத்ர வழிபாட்டு முறை தமிழ் நாட்டில் தொன்று தொட்டே இருந்திருக்கிறது என்பதை இது விளக்கிக் காட்டுகிறது. பரிபாடலில் வரும் சில வரிகள் (3,63–68) திருமால் அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையைக் கூறுவதால், வழிபாட்டு முறையோடு மட்டுமல்லாமல், உபநிடத நூல்களின் தேர்ச்சியும் தமிழகத்தில் மிகப் பழைய காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது எனபதை உணரலாம்.

‘பிறவா பிறப்பிலை பிறப்பித்தோ ரிலையே ‘

பிறப்பில் பல்பிறவிப் பெம்பான் ‘

என்ற பரிபாடல் வரிகள்,

‘அஜாய மானோ படுதா விஜாயதே ‘

என்ற புருஷ சூத்ர வரிகளின் மொழி ஆக்கம் என்று அறிஞர் கூறுவர்.

ஆகவே ‘ஆரியக் கடவுள் வழிபாடு தமிழகத்தில் சங்க காலத்தின்போது இருந்ததில்லை என்று கூறுவது தவறு. எது ஆரியக்கடவுள், எது திராவிடக்கடவுள் என்று வரையறுத்துக் கூறமுடியாது. இன்றைக்கு நாம் காணும் ஹிந்துமதம், பலவிதமான பண்பாட்டுகளின் சாரம். தமிழ் மதம் என்று எக்காலத்திலும் இருந்தது கிடையாது என்றுமட்டும் உறுதியாகக் கூறலாம்.

Series Navigation